Wednesday, 27 May 2020

வாழ்வாதாரம் கிடைக்காமலா போய்விடும்.!.....................

அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது.

கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன.

இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான காரியம் இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம்?

ஆச்சரியம் உண்டு! பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது!

கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்? அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன.


எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன.

பார்ன் சுவாலோ பறவைக்கு ஒரு சிறுகுச்சி 16,600 கி.மீ., பறப்பதற்கான வாழ்வாதாரமாக இருக்கிறது என்றால், கையும் காலும் ஐம்புலன்களும் ஆறறிவும் பெற்ற மனிதனுக்கு, வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வாழ்வாதாரம் கிடைக்காமலா போய்விடும்.!

                                                                                                                        நன்றிகள்.

Sunday, 29 March 2020

கரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்.........!.

இந்தப் புயலை நாம் கடந்து விடுவோம்; ஆனால் நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் நமது வருங்காலத்தைப் புரட்டிப் போடுவதாக இருக்கும்.

மனித இனம் உலகளாவிய ஒரு சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. அடுத்த சில வாரங்களில் அரசும் மக்களும் எடுக்கப்போகும் முடிவுகள் தான் நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றன. அவை நமது சுகாதார கட்டமைப்பை மட்டுமல்லாது, நமது பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் ஆகியவற்றையும் முடிவு செய்யும். நாம் விரைந்து, உறுதியாக முடிவெடுக்க வேண்டும். நமது செயல்களின் நீண்டகால விளைவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாற்று முடிவுகளைத் தேர்ந்தெடுக்கும் போது, தற்போதைய சிக்கலை எப்படித் தீர்ப்பது என்பதோடு, இந்தச் சிக்கல் முடிவடைந்த பிறகு எப்படிப்பட்ட உலகை நாம் அடையப் போகிறோம் என்பதையும் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். ஆமாம். இந்தச் சிக்கல் முடிவுக்கு வந்துவிடும்; மனித இனம் பிழைத்திருக்கும்; நம்மில் பலர் உயிரோடுதான் இருப்போம் – ஆனால் நமது உலகம் மாறிப் போயிருக்கும்.

அவசரகாலத்தின் பல திடீர் முடிவுகள் வாழ்நாள் வரை தொடரும். அவசர நிலையின் இயல்பு அதுதான். வரலாற்றுச் செயல்முறைகளை அவை விரைவு படுத்துகின்றன. சாதாரணமாக பல ஆண்டுகள் பிடிக்கும் முடிவுகள் சில மணி நேரங்களில் ஏற்கப்பட்டு விடும். ஒன்றும் செய்யாமல் இருப்பதன் பாதிப்பு பெரியது என்பதால், தேறாத, ஆபத்தான தொழில்நுட்பங்கள் கூட பயன்படுத்தப் பட்டுவிடும். ஒட்டு மொத்த நாடுகளே பெரிய அளவிலான சமூக ஆய்வுகளுக்கு சோதனை எலிகளாகப் பயன்படுத்தப்படும்.

எல்லோரும் வீட்டிலிருந்தே வேலை செய்து, தொலைத் தொடர்பு வழியாக மட்டுமே தொடர்பில் இருந்தால் என்ன ஆகும்? எல்லாப் பள்ளிகளும், கல்லூரிகளும் இணையதலம் வழியாக மட்டுமே செயல்பட்டால் என்ன ஆகும்? சாதாரண நேரங்களில் அரசோ, தொழில், கல்வி வாரியங்களோ இப்படிப்பட்ட சோதனைகளைச் செய்து பார்க்க உடன்படாது. ஆனால் இது சாதாரண நேரமல்ல.

சிக்கலான இந்த நேரத்தில், குறிப்பாக இரண்டு முக்கிய முடிவுகளை நாம் எதிர் கொண்டிருக்கிறோம். முதலாவது, சர்வ வல்லமை கொண்ட அரசின் கண்காணிப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறோமா அல்லது தன்னுரிமை கொண்ட மக்களாக வாழப் போகிறோமா என்பது. இரண்டாவது, தேசமாக நம்மைத் தனிமைப் படுத்திக் கொள்ளப் போகிறோமா அல்லது உலகமாக ஒன்றினையப் போகிறோமா என்பது.

உடலை ஊடுறுவும் கண்காணிப்பு 

தொற்று நோய்களைத் தடுக்க மக்கள் அனைவரும் சில வழிகாட்டுதல்களை ஏற்க வேண்டும். இதை அடைய இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. அரசு மக்களைக் கண்காணிப்பதும், விதி மீறுபவர்களைத் தண்டிப்பதும் முதல் வழி. மனித வரலாற்றில் முதன் முறையாக, இன்று எல்லோரையும் இடைவிடாது கண்காணிப்பதை தொழில்நுட்பம் சாத்தியமாக்கி இருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, ரஷ்ய உளவுத் துறையால் அந்த நாட்டின் இருபத்து நான்கு கோடி மக்களை நாள் முழுவதும் கண்காணிக்க முடியவில்லை; திரட்டப்பட்ட தகவல்களையும் முழுமையாக ஆராய்ந்து பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இப்போது மனிதர்களை நம்பி இருக்காமல், எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் அசைவை உணரும் கருவிகளையும் (sensors), கணிப்பு முறைகளையும் (algorithms) அரசுகள் பயன்படுத்துகின்றன.

கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் பல அரசுகள் ஏற்கனவே புதிய கண்காணிப்புக் கருவிகளை களமிறக்கியுள்ளன. இதில் சீனா செய்திருப்பது முக்கியமானது. மக்களின் நவீன செல்பேசிகளை(smart phones)க் கண்காணித்தும், முகங்களை அடையாளம் காட்டும் லட்சக்கணக்கான கேமராக்களைக் கொண்டும், மக்கள் தங்கள் உடல் வெப்பம், உடல்நிலை ஆகியவற்றைத் தெரிவிப்பதைக் கட்டாயமாக்கியும், கொரோனா வைரஸ் தொற்று கடத்தியாக செயல்பட்டவர்களை விரைவாக கண்டறிந்து, அவர்களது நடமாட்டத்தைக் கண்காணித்ததோடு, அவர்களோடு தொடர்பில் வந்த அனைவரையும் சீன அதிகாரிகள் அடையாளம் கண்டனர். தொற்றுநோய் பீடித்த ஒருவர் அருகில் வருகிறார் என்பதை எச்சரிக்க பல மொபைல் ஆப்-புகள் உருவாக்கப் பட்டன.


இத்தகைய தொழில் நுட்பங்கள் கிழக்கு ஆசியாவுக்கு மட்டும் உரியவை அல்ல. தீவிரவாதிகளுக்கு எதிராக போராட மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை, கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளைக் கண்டுபிடிப்பதில் பயன்படுத்த இஸ்ரேல் பாதுகாப்பு முகமைக்கு அனுமதி தந்தார் அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அதிகாரம் படைத்த நாடாளுமன்ற துணைக்குழு அதற்கு அனுமதி அளிக்க மறுத்த போது, நெதன்யாகு தனது ‘அவசர உத்தரவாக’ அதைச் செயல்படுத்தினார்.

இதில் புதிதாக ஒன்றும் இல்லையே என்று நீங்கள் கேட்கலாம். அண்மைக்காலங்களில் அரசாங்கமும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மக்களை கண்காணிக்கவும், தங்கள் விருப்பப்படி ஆட்டி வைக்கவும் புதிய புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. இப்போது நாம் கவனமாக இருக்காவிட்டால், கண்காணிப்பு வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக இந்தத் தொற்று மாறிவிடும். இதுவரை அதை ஏற்க மறுத்த நாடுகளிலும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது வழக்கத்திற்கு வந்துவிடும் என்பது மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக இதுவரை உடம்பின் மேல் புறத்தைக் கண்காணித்த நிலையில் இருந்து, உடம்பிற்குள் ஊடுறுவிக் கண்காணிக்கும் நிலைக்கு மாறுவதை அது குறிக்கிறது.

இதுவரை உங்கள் விரல்கள் செல்பேசித் திரையில் தொடும்போதும், இணைப்புகளை சொடுக்கும்போதும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பியது அரசு. கரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு, ஆர்வத்தின் மையம் மாறுகிறது. இப்போது அரசு உங்கள் விரலின் வெப்பத்தையும், உங்கள் தோலுக்கு அடியில் நிலவும் ரத்த அழுத்தத்தையும் தெரிந்துகொள்ள விரும்புகிறது.

உணவுக்காக அவசரநிலை

இனி வரும் ஆண்டுகளில் என்ன நடக்கப்போகிறது, எப்படி நாம் கண்காணிக்கப் படுவோம் என்று யாருக்கும் சரியாகத் தெரியாதது, அதைப்பற்றிய நம் நிலைப்பாட்டை முடிவுசெய்யத் தடையாக உள்ளது. கண்காணிப்புத் தொழில்நுட்பம் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் கதையில் வரும் சம்பவமாகத் தோன்றியது, இன்று பழைய செய்தியாகிவிட்டது.

எடுத்துக் காட்டாக, இதயத் துடிப்பையும் உடல் வெப்பத்தையும் இருபத்து நான்கு மணி நேரமும் கண்காணிக்க, பயோமெட்ரிக் கங்கனத்தை ஒவ்வொருவரும் கட்டிக்கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக்கொள்வதாக வைத்துக்கொள்வோம். அதிலிருந்து பெறப்படும் தகவல்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு, அரசின் அல்கிரிதம் ஆய்வு செய்கிறது. இப்போது, உங்கள் உடல்நிலை கெட்டிருப்பது உங்களுக்குத் தெரிவதற்கு முன்பே அரசுக்குத் தெரிந்துவிடும். நீங்கள் எங்கே போனீர்கள், யாரைப் பார்த்தீர்கள் என்பதும் அதற்குத் தெரியும். அதைக்கொண்டு நோய் பரவுவதை கடுமையாகக் குறைத்து விடலாம்; நோயே இல்லாமலும் செய்துவிடலாம். அப்படிப்பட்ட தொழில்நுட்பத்தால் தொற்று நோயைத் தடுத்து நிறுத்திவிட முடியும். பிரமாதம், இல்லையா?

இதன் குறைபாடு என்னவென்றால், அது ஆபத்தான கண்காணிப்பு முறையை நியாயப் படுத்துவதாக முடிந்துவிடும். உதாரணமாக, செய்திகளைத் தெரிந்து கொள்ள எந்தத் தொலைக்காட்சி சேனலை நான் தேர்ந்தெடுக்கிறேன் என்பதைக் கொண்டு, எனது அரசியல் நிலைப்பாட்டை அது கற்பிக்கும். எனது ஆளுமையைப் பற்றியும் அது சொல்லும். ஒரு வீடியோவை நான் பார்க்கும்போது, எனது உடல் வெப்பம், ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க முடிந்தால், என்னை சிரிக்க வைப்பது எது, அழ வைப்பது எது, கோபப்படுத்துவது எது என்று தெரிந்துகொள்ளலாம்.


காய்ச்சலையும் இருமலையும் போல, காதல், சலிப்பு, மகிழ்ச்சி எல்லாம் உயிரின் இயல்புகள் என்பதை நினைவில் கொள்வது அவசியம். இருமலை அடையாளம் கண்டுகொள்ளும் அதே தொழில்நுட்பத்தால் சிரிப்பையும் அடையாளம் கண்டுகொள்ள முடியும். வணிக நிறுவனங்களும் அரசும் நமது பயோமெட்ரிக் தரவுகளை மொத்தமாக அறுவடை செய்யத் தொடங்கினால், நமக்கு நம்மைப் பற்றித் தெரிந்திருப்பதை விட, அவர்களால் கூடுதலாகத் தெரிந்துகொள்ள முடியும். நமது உணர்வுகளைக் கணிக்க முடியும்; அவற்றை ஆட்டிப்படைத்து அவர்கள் விரும்பும் எதையும் – ஒரு அரசியல்வாதியையோ அல்லது பொருளையோநம்மிடம் விற்றுவிட முடியும். பயோமெட்ரிக் கண்காணிப்போடு ஒப்பிட்டால், இதற்கு முன் அதிகம் பேசப்பட்ட கேம்பிரிட்ஜ் ஆனாலிடிகாவின் உத்திகள் கற்கால முயற்சி போலத் தோன்றும். ஒவ்வொரு குடிமகனும் நாள்முழுவதும் பயோமெட்ரிக் கைக்கடிகாரம் கட்டிக்கொள்வது கட்டாயமாகப் போகும் 2030ஆம் ஆண்டின் வடகொரியாவை கற்பனை செய்து பாருங்கள். “பெருந் தலைவ”ரின் உரையைக் கேட்கும்போது உங்களுக்கு கோபம் வருவது போன்ற சிறு அதிர்வை உங்கள் கைக்கடிகாரம் கண்டறிந்தால், உங்கள் கதி அதோகதிதான்.

அவசர நிலையில் எடுக்கப்படும் தற்காலிக
நடவடிக்கை;

அவசரநிலை முடிந்ததும் அதுவும் முடிவுக்கு வந்துவிடும் என்று பயோமெட்ரிக் கண்காணிப்பை நீங்கள் நியாயப் படுத்தலாம். இன்னொரு அவசரநிலை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வந்து கொண்டிருக்கிறது என்ற நிலை எப்போதுமே நிலவும் சூழ்நிலையில் – தற்காலிக நடவடிக்கைகள் அவசர காலத்தைக் கடந்து நீடிக்கும் அசிங்கமான வழக்கம் கொண்டவை.

உதாரணமாக எனது தாய் நாடான இஸ்ரேல், 1948 ஆம் ஆண்டு சுதந்திரப் போரின் போது பிரகடனம் செய்த அவசரநிலை, உணவு செய்வதற்காக (நான் கிண்டல் செய்யவில்லை) நிலங்களைப் பறித்தது, பத்திரிக்கை தணிக்கை கொண்டுவந்தது உள்ளிட்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்தியது. சுதந்திரப் போர் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்ட போதும் , அவசர நிலை முடிந்து விட்டதாக இஸ்ரேல் இன்னும் அறிவிக்கவில்லை; 1948ல் எடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ளவில்லை (கருணையோடு உணவுக்கான அவசரநிலை உத்தரவு கடந்த 2011ல் விலக்கிக் கொள்ளப் பட்டது).


கரோனா வைரஸ் தொற்று முற்றிலும் முடிவுக்கு வந்தாலும், தரவுகளைத் திரட்டத் துடிக்கும் சில அரசுகள், கரோனா வைரசின் இரண்டாவது அலை பற்றிய அச்சம் இருக்கிறது, மத்திய ஆப்பிரிக்காவில் புதிய வகை எபோலா உருவாகி வருகிறது, இது வருகிறது, அது வருகிறது …. என்று எதையாவது சொல்லி பயோமெட்ரிக் கண்காணிப்பு தொடர வேண்டும் என்று வாதிடலாம் 

நமது அந்தரங்கத்தைக் காத்துக்கொள்ளும் உரிமை பற்றிய பெரும் யுத்தம் அண்மையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சிக்கல் அதில் ஒரு முக்கியப் புள்ளி – ஏனென்றால், உங்கள் அந்தரங்க உரிமையா அல்லது ஆரோக்கியமா இரண்டில் எது என்று கேட்டால் மக்கள் இப்போது ஆரோக்கியத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். 

சோப்புக் காவலர்கள் 

அந்தரங்க உரிமையா ஆரோக்கியமா என்று மக்களைக் கேட்பதுதான் உண்மையில் பிரச்சனையின் ஆணி வேராக இருக்கிறது; ஏனென்றால் இது ஒரு தவறான கேள்வி. நாம் அந்தரங்க உரிமை, ஆரோக்கியம் ஆகிய இரண்டையும் பெற வேண்டும். சர்வ அதிகாரம் கொண்ட கண்காணிப்பு அரசை நிறுவாமல், குடிமக்களை அதிகாரம் பெற்றவர்களாக ஆக்குவதன் மூலம் – நமது உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ளவும் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கவும் நாம் முடிவு செய்யலாம். சில வாரங்களுக்கு முன்பு, கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் ஆசிய நாடுகள் முன் வைத்துள்ளன. கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை ஓரளவு பயன்படுத்தினாலும், அவை பரவலாக மருத்துவப் பரிசோதனைகளைச் செய்வது, நேர்மையான அறிக்கைகளை வெளியிடுவது, அனைத்துத் தகவல்களையும் மக்களுக்குத் தெரிவித்து அவர்களே விரும்பி ஒத்துழைக்கச் செய்வது ஆகியவற்றை நம்பியிருந்தன.

மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு, கடுமையான தண்டனைகள் ஆகியவை மட்டுமே, மக்களை நன்மை தரும் வழிகாட்டு முறைகளை ஏற்கச் செய்வதற்கான முறைகள் அல்ல. அறிவியல் உண்மைகளை மக்களுக்குத் தெரிவித்தால், அதிகார அமைப்புகள் உண்மையைத்தான் சொல்கின்றன என்று மக்கள் நம்பினால், அவர்களை பெரிய அண்ணன் (Big Brother) கண்காணிக்காத போதும் அவர்கள் சரியான செயல்களைச் செய்வார்கள். கட்டுக் காவலில் வைக்கப்படும் அறிவில்லாத மக்களைவிட, அனைத்துத் தகவல்களையும் அறிந்த, தானே முன்வந்து ஏற்று நடக்கும் மக்கள்தான் வீரியமும் செயல்திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள்.


உதாரணமாக, உங்கள் கைகளை சோப்பு போட்டு கழுவுவதை எடுத்துக்கொள்ளுங்கள். மனிதர்களின் தன்சுத்தத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றங்களில் இதுவும் ஒன்று. இந்தச் சாதாரண செயல் ஆண்டுதோறும் பல லட்சம் உயிர்களைக் காப்பாற்றுகிறது. நம் தலைமுறைக்கு அது பெரிதாகத் தெரிவதில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் சோப்பு போட்டு கை கழுவுவதன் முக்கியத்துவத்தை அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்தார்கள். அதற்கு முன்பு, மருத்துவர்கள் கூட ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அடுத்தது என்று கையைக் கழுவாமல்தான் செய்தார்கள். இன்று கோடிக்கணக்கான மக்கள் கைகளை தினமும் சோப்பு போட்டுக் கழுவுகிறார்கள் என்றால் அவர்களுக்கு உண்மை தெரிந்திருப்பதால்தானே தவிர, அது சோப்பு போலீஸ் மீது உள்ள பயத்தால் அல்ல. வைரஸ், பாக்டீரியா ஆகியவை பற்றி நான் கேள்விப் பட்டிருப்பதால், அந்த நுண்ணுயிரிகள் நோயை உண்டாக்கும் என்று புரிந்திருப்பதால், சோப்பு அவற்றை நீக்கும் என்று எனக்குத் தெரிந்திருப்பதால், நான் சோப்பு போட்டு கை கழுவுகிறேன். 

அந்த அளவுக்கு ஒத்துழைப்பும் ஏற்பும் கிடைக்க நம்பிக்கை ஏற்பட வேண்டும்; மக்களுக்கு அறிவியல் மீதும், அதிகார அமைப்புகள் மீதும், ஊடகங்கள் மீதும் நம்பிக்கை ஏற்பட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக பொறுப்பற்ற அரசியல்வாதிகள் வேண்டுமென்றே அறிவியல் மீதும், அதிகார அமைப்புகள் மீதும், ஊடகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை குலைத்திருக்கிறார்கள். இப்போது அதே பொறுப்பற்ற அரசியல்வாதிகள், மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள் என்று நம்ப முடியாது என்ற வாதத்தை முன்வைத்து, சர்வாதிகாரத்திற்கான பாதையைத் தேர்ந்தெடுக்கத் துடிக்கிறார்கள்.


சாதாரணமாக, பல ஆண்டுகளாகவே இழந்துவிட்ட நம்பிக்கையை ஓர் இரவில் சரிக்கட்டி விட முடியாதுதான். ஆனால் இது அசாதாரண நேரம். சிக்கலான நேரத்தில், மனங்களும் விரைவாக மாறலாம். உங்கள் சகோதரர்களோடு பல ஆண்டுகளாக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுவரும் நீங்கள், ஒரு அவசர நிலை ஏற்பட்டால் கண்ணுக்குத் தெரியாத நம்பிக்கையும் நட்புணர்வும் உங்களிடையே நிலவுவதைக் கண்டு கொள்வீர்கள். ஒருவருக்கு ஒருவர் உதவ ஓடுவீர்கள்.

கண்காணிப்பு ஆட்சிக்கு மாற்றாக, மக்களுக்கு அறிவியலின் மீதும், அதிகார அமைப்புகளின் மீதும், ஊடகத்தின் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்த காலம் கடந்து விடவில்லை. நாம் புதிய தொழில்நுட்பங்களையும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும், ஆனால் அந்தத் தொழில் நுட்பங்கள் மக்களுக்கு அதிகாரம் தருபவையாக இருக்க வேண்டும். எனது உடல் வெப்பத்தையும் ரத்த அழுத்தத்தையும் கண்காணிப்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்வேன். ஆனால் அந்தப் புள்ளி விவரங்களை சர்வ வல்லமை படைத்த அரசை உருவாக்கப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, நான் அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுக்கவும் அரசாங்கத்தை அதன் செயல்களுக்கு பொறுப்பேற்கச் செய்யவும் அது எனக்கு உதவ வேண்டும்.

எனது உடல்நிலையைப் பற்றிய தகவல்கள் இருபத்து நான்கு மணி நேரமும் எனக்கு கிடைக்குமென்றால், என்னால் அடுத்தவர்களின் உடல் நலத்திற்குப் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை மட்டுமல்ல, என் உடல்நிலை கெடக் காரணமான நடத்தை எது என்றும் தெரிந்து கொள்வேன். கரோனா வைரஸ் பரவுவது பற்றிய நம்பத்தகுந்த புள்ளிவிவரங்களை அணுகவும் ஆராய்ந்து பார்க்கவும் முடியுமானால், அரசு உண்மையைச் சொல்கிறதா, தொற்றைக் கட்டுப்படுத்த சரியான திட்டங்களைச் செயல்படுகிறதா என்பதை நான் எடைபோட முடியும். கண்காணிப்புத் தொழில்நுட்பத்தைப் பற்றிப் பேசும்போது, அரசுகள் தனி மனிதர்களைக் கண்காணிக்க மட்டுமல்ல, தனிமனிதர்கள் அரசுகளைக் கண்காணிக்கவும் அவற்றைப் பயன்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆகவே, கரோனா வைரஸ் தொற்று, குடியுரிமைக்கு வந்த ஒரு முக்கியமான சோதனை. வரும் நாட்களில் நாம் ஒவ்வொருவரும், தன்னலம் பிடித்த அரசியல்வாதிகளையும், சதித்திட்டம் பற்றிய அடிப்படை ஆதாரமில்லாத கதைகளையும் நம்பாமல், அறிவியல் புள்ளிவிவரங்களையும், மருத்துவ நிபுணர்களையும் நம்பவேண்டும். சரியான முடிவை நாம் எடுக்கத் தவறினால், நமது உடல்நலத்தைப் பாதுகாக்க இதுதான் ஒரே வழி என்று நினைத்து, மிக அரிதான நமது சுதந்திரங்களை எழுதிக் கையெழுத்து போட்டுக் கொடுத்து விடும் நிலைமை ஏற்படலாம்.

உலகளாவிய திட்டம் 

தேவை நாம் எதிர்கொள்ளும் இரண்டாவது முடிவு தனித்து நிற்கும் தேசியமா அல்லது உலக ஒற்றுமையா என்பது. நோய்த்தொற்று, அதனால் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் ஆகிய இரண்டுமே உலக அளவிலான பிரச்சனைகள். உலக அளவிலான ஒத்துழைப்பின் மூலம்தான் அவற்றை வெற்றிகரமாக தீர்க்க முடியும்.

முக்கியமாக, வைரசைத் தோற்கடிக்க முதலில் உலக அளவில் நாம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்; அதுதான் வைரசோடு ஒப்பிடும்போது மனிதர்களுக்கு இருக்கும் அனுகூலம். சீனாவில் இருக்கும் ஒரு கரோனா வைரசும் அமெரிக்காவில் இருக்கும் ஒரு கரோனா வைரசும், மனிதர்களை எப்படித் தாக்குவது என்ற யோசனைகளைப் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் கரோனா வைரஸ் பற்றி கற்றுக்கொண்ட பாடங்களையும் அவற்றை சமாளிக்கும் முறைகளையும் சீனா அமெரிக்காவுக்குக் கற்றுத் தரலாம். காலையில் மிலன் நகரில் ஒரு இத்தாலிய டாக்டர் கண்டுபிடித்த ஒரு தகவலைக் கொண்டு, மாலையில் டெஹ்ரான் நகரில் பல உயிர்களைக் காக்க முடியும். பல்வேறு மருத்துவ கொள்கைகளுக்கு இடையில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தயங்கும் பிரிட்டிஷ் அரசு, ஒரு மாதத்திற்கு முன்பு அதே சிக்கலை எதிர் கொண்ட கொரியாவிடம் இருந்து ஆலோசனை பெறலாம். ஆனால் அப்படி நடக்க, உலக அளவிலான கூட்டுறவும் நம்பிக்கை உணர்வும் தேவை.


நாடுகள் தகவல்களை வெளிப்படையாகப் பரிமாறிக் கொள்ளவும், இணங்கி ஆலோசனை பெறவும் முன்வரவேண்டும். அவை பெறுகின்ற தரவுகளையும் விளக்கங்களையும் நம்பி ஏற்கும் நிலை உருவாக வேண்டும். மருத்துவ உபகரணங்களை, குறிப்பாக சோதனைப் பெட்டிகளையும், சுவாசக் கருவிகளையும் தயாரிக்கவும் விநியோகிக்கவும் உலக அளவிலான முயற்சி தேவை. ஒவ்வொரு நாடும் உள்நாட்டிலேயே அதை உற்பத்தி செய்யவும், கிடைக்கும் கருவிகளை பதுக்கி வைத்துக் கொள்ளவும் முயலாமல், உலக அளவில் கூட்டு முயற்சி செய்தால், உற்பத்தி துரிதமாவதோடு உயிர்காக்கும் கருவிகளை நியாயமான முறையில் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப் படுவதையும் உறுதி செய்யலாம். போரின்போது நாடுகள் தொழிற்சாலைகளைத் தேசியமயமாக்குதைப்போல, கரோனா வைரசுக்கு எதிரான மனிதர்களின் போரில், உற்பத்தி வசதிகளை மனிதாபிமானம் கொண்டதாக மாற்றுவதற்கான தேவை ஏற்படலாம். கரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ள ஒரு பணக்கார நாடு, தனக்குத் தேவையானபோது மற்ற நாடுகள் உதவும் என்ற நம்பிக்கையில், தொற்று அதிகமுள்ள ஒரு ஏழை நாட்டுக்கு விலைமதிப்பில்லாத கருவிகளை அனுப்ப முன்வரவேண்டும். 

மதுத்துவ நிபுணர்களைத் திரட்டவும் அப்படிப்பட்ட உலகலாவிய ஒரு முயற்சியைப் பற்றியும் யோசிக்கலாம். அதிகம் பாதிக்கப்படாத நாடுகள் தங்கள் மருத்துவர்களை அதிகம் பாதிக்கப் பட்டுள்ள நாடுகளுக்கு அனுப்பினால், உதவியாக இருப்பதோடு, தொற்றைப் பற்றிய அனுபவம் பெறவும் உதவும். பிறகு, தொற்று இடம் மாறினால், உதவிகளும் மறுபுறத்தில் இருந்து வரத் தொடங்கலாம்.

பொருளாதாரம் சார்ந்தும் உலக ஒத்துழைப்பு தேவைப்படும். சங்கிலித் தொடராகப் பிணைக்கப் பட்டிருக்கும் உலகப் பொருளாதாரத்தின் தன்மையால், மற்ற நாடுகளைக் கணக்கில் கொள்ளாமல் ஒவ்வொரு நாடும் தனித்துச் செயல் படத் தொடங்கினால், பொருளாதாரச் சிக்கல் தீவிரமடைவதோடு, குழப்பமும் ஏற்படும். நமக்கு உலகம் தழுவிய செயல்திட்டம் தேவை; அதுவும் விரைவாகத் தேவை.


பயணம் குறித்த உலக ஒப்பந்தமும் தேவைப் படுகிறது. பன்னாட்டுப் பயணங்களை மாதக் கணக்கில் நிறுத்தி வைப்பது பெரும் சிரமங்களைத் தரும்; கரோனா வைரசுக்கு எதிரான போரில் பின்னடைவை ஏற்படுத்தும். விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள் போன்ற மிக அவசியமான சிலரையாவது அனுமதிக்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். பயணிகளை அவர்களது நாடுகளிலேயே சோதித்து அனுப்புவது குறித்து ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். கவனமாக பரிசோதித்த பயணிகள்தான் விமானத்தில் ஏற அனுமதிக்கப் படுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் உங்கள் நாட்டில் அவர்களைத் தாரளமாக ஏற்கலாம்.

கெடுவாய்ப்பாக, தற்போது நாடுகள் இவற்றில் எதையும் செய்யவில்லை. ஒரு முடக்குவாதம் உலக சமுதாயத்தைப் பீடித்திருக்கிறது. பக்குவம் பெற்றவர்கள் யாரும் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை. சில வாரங்களுக்கு முன்பே உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி பொதுவான செயல்திட்டத்தை வகுத்திருப்பார்கள் என்று நாம் எதிர்பார்த்திருக்கலாம். ஜி-8 நாடுகளின் தலைவர்கள் இந்த வாரம்தான் காணொலி மூலம் சந்தித்தார்கள் – ஆனால் அவர்கள் செயல்திட்டம் எதையும் வகுக்கவில்லை.

இதற்கு முன்பு, 2008-ல் நிதிச் சிக்கல் ஏற்பட்ட போதும், 2014-ல் எபோலா தொற்று ஏற்பட்ட போதும், அமெரிக்கா தலைமைப் பொறுப்பை ஏற்றது. ஆனால், தற்போதைய அமெரிக்க நிர்வாகம் தலைமைப் பொறுப்பை ஏற்கவில்லை. மனித இனத்தின் எதிர்காலத்தைவிட, அமெரிக்காவின் பெருமைதான் முக்கியம் என்று அது தெளிவுபடுத்தி விட்டது. அதன் நெருக்கமான நட்பு நாடுகளையும் அது கைவிட்டுவிட்டது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது பயணத் தடை விதிப்பதற்கு முன்பு, அவற்றோடு கலந்து பேசுவதைப் பற்றியோ, முன்னெச்சரிக்கை செய்வதைப் பற்றியோ அது கவலைப்படவில்லை. கோவிட் -19 தடுப்பு மருந்தை தயாரிக்கும் தனி உரிமையை வாங்க ஒரு ஜெர்மன் நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் டாலர் கொடுக்க முன்வந்ததன் மூலம், ஜெர்மனியை அது அவமதித்து விட்டது. தற்போதைய தலைமை அதன் போக்கை மாற்றிக் கொண்டு உலக அளவிலான செயல்திட்டத்தை முன்வைத்தாலும், பொறுப்பை ஏற்க முன்வராத, தனது தவறுகளை ஒப்புக் கொள்ளாத, வழக்கமாகவே வெற்றியைத் தனதாக்கிக் கொண்டு, தோல்விக்கான பழியை மற்றவர்மீது போடும் தலைமையை யாரும் ஏற்க மாட்டார்கள்.


அமெரிக்கா காலியாக விட்டுள்ள வெற்றிடத்தை மற்ற நாடுகள் நிரப்பாவிட்டால், தற்போதைய நோய்த் தொற்றைத் தடுப்பது சிரமம் என்பதோடு, இனி வரும் ஆண்டுகளில் அதன் தொடர்ச்சி சர்வதேச உறவுகளையும் கெடுக்கும். இருந்தாலும் ஒவ்வொரு சிக்கலும் ஒரு வாய்ப்புதான். உலக ஒற்றுமையின்மையின் ஆபத்தை மனித இனம் உணர்ந்துகொள்ள நடப்பு நோய்த் தொற்று உதவும் என்று நம்பலாம். 

மனித இனம் எதைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுக்க வேண்டும். ஒற்றுமையற்ற வீழ்ச்சிப் பாதையில் பயணிப்பதா அல்லது உலக ஒற்றுமை வழியை தேர்ந்தெடுப்பதா? ஒற்றுமை இன்மையைத் தேர்ந்தெடுத்தால், தற்போதைய சிக்கலை நீடிக்கச் செய்வதோடு, வருங்காலத்தில் இன்னும் மோசமான பேரழிவுகளைச் சந்திப்பதிலும் முடியலாம். உலக ஒற்றுமையைத் தேர்ந்தெடுத்தால், அது கரோனா வைரசுக்கு எதிராக மட்டுமல்ல இனி வரப்போகும் தொற்றுகளுக்கும், இருபத்தோறாம் நூற்றாண்டில் மனித இனத்தைத் தாக்கப் போகும் சிக்கல்களுக்கும் எதிரான வெற்றியாக இருக்கும்.

யுவல் நோவா ஹராரி – சேப்பியன்ஸ், ஹோமோ தியஸ், 21ஆம் நூற்றாண்டுக்கு 21 பாடங்கள் ஆகிய நூல்களின் ஆசிரியர். 

தமிழில்: மா.அண்ணாதுரை

                                                                                                                            நன்றிகள்.

Tuesday, 25 February 2020

உரிமை மனு.............!.

சட்டமெய்யியல், சட்டம் ஆகியவற்றில், உரிமை என்பது, ஒரு பண்பட்ட சமுதாயத்தில், சட்டப்படி அல்லது ஒழுக்கநெறிப்படி; செயல், பொருள், ஏற்றுக்கொள்ளல் என்பவை தொடர்பில்; செய்தல் அல்லது செய்யாமல் இருத்தல், பெறுதல் அல்லது பெறாமல் இருத்தல் என்பவற்றுக்கான உரித்து ஆகும். 

உரிமைகள் மக்களிடையேயான தொடர்பாடலுக்கான விதிகளாக அமைவதால், அவை தனிமனிதர் மீதும், குழுக்கள் மீதும் கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றன. 

எடுத்துக் காட்டாக ஒருவருக்கு வாழும் உரிமை உண்டெனில், மற்றவர்களுக்கு அவரைக் கொல்லும் சுதந்திரம் கிடையாது. 

உரிமைகள் குறித்த மிகப் பிந்திய கருத்துருக்கள், எல்லாம்தழுவிய சமத்துவ நோக்கம் கொண்டவை. 

அதாவது, எல்லோருக்கும் சம உரிமை என்பவை. 

உரிமைகள் தொடர்பாக தற்காலத்தில் இரண்டு முக்கியமான கருத்துருக்கள் நிலவுகின்றன. 

ஒன்று, இயல்புரிமை என்னும் கருத்துரு ஆகும். 

இது, சில உரிமைகள் இயற்கையாக அமைந்தவை அதில் எந்த மனித சக்தியும் முறையாக மாற்றம் செய்ய முடியாது என்கிறது. 

இரண்டாவது, சட்ட உரிமை என்னும் கருத்துரு. 

இது, உரிமை என்பது சமுதாயத்தால் ஆக்கப்படுவதும், அரசுகளால் நடைமுறைப்படுத்தப்படுவதும், மாற்றங்களுக்கு உட்படக் கூடியதுமான மனித உருவாக்கம் என்கிறது. 

மாறாக, பெரும்பாலான முற்காலத்து உரிமை தொடர்பான கருத்துருக்கள் படிமுறை அமைப்புக் கொண்டவை. 

இவற்றின்படி, தகுதி அடிப்படையில் மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. 

சிலருக்கு மற்றவர்களிலும் அதிகமான உரிமைகள் வழங்கப்பட்டன.

                                                                                                                              நன்றிகள்.

எண்ணெய் குளியல் என்றால்...............!.

பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகிறது. அதாவது அதிகமான அமிலத்தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகிறது. கொதிக்கிற தண்ணீரில் ஓர் உயிர் எப்படி வாழும்? 

உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டது. இன்றோ... அதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம்! நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. 

எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு முறை உண்டு. 

1 குழிக்கரண்டி நல்லெண்ணெயில் 1 தேக்கரண்டி சீரகம், கால் தேக்கரண்டி புழுங்கலரிசி, 2 பல் பூண்டு சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டவும். அதைத் தலை, தொப்புள், அடி வயிறு, கால் கட்டை விரல் என உச்சி முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவும். 

பிறகு ஷாம்பு குளியல் எல்லாம் வேலைக்கு ஆகாது. பஞ்சகற்பம் (கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வேப்பம் விதை, வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய ஐந்தும் சேர்த்தரைத்த பொடி) சிறிது எடுத்து, பசும்பால் விட்டுக் கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். 

கர்ப்பப்பை என்பது மண் என்றால், விந்து என்கிற விதை அதில் விழுந்து, வளர மண் வளமாக இருக்க வேண்டுமில்லையா? 

மண் உவர்ப்புத்தன்மையுடன் இருந்தால், விதை, துளிர்க்காது. உடலை சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க இன்னொரு அவசிய சிகிச்சை உண்டு. 50 மி.லி. விளக்கெண்ணெயை, 25 மி.லி. நீராகாரத்துடன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 

இது இயற்கையான பேதி மருந்து. 6 மாதங்களுக்கொரு முறை இப்படிச் செய்தால், ஒட்டுமொத்த உடலும் சீராகும். நீங்கள் அணிகிற உடைக்கும், கர்ப்பம் தரிக்கிற தன்மைக்கும் தொடர்புண்டு என்றால் நம்புவீர்களா? 

‘கூபகப் பகுதி’ எனப்படுகிற இடுப்பெலும்புப் பகுதி இடர் இல்லாமலும், காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும் என்றுதான், அந்தக் காலத்தில் பாவாடை, புடவை போன்ற உடைகள் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. 

பாவாடையின் மடிப்பும், புடவையின் கொசுவமும், கூபக அறைக்கு, திரைச்சீலை மாதிரி பாதுகாப்பு தரும்படி வடிவமைக்கப்பட்டவை. 

கர்ப்பப்பை மற்றும் பெண் உறுப்பின் இயற்கைத்தன்மையை பாதிப்பதுடன், கருத்தரிக்காமல் செய்வதற்கும், ஜீன்ஸ் பேன்ட், டிரவுசர் போன்ற நவீன உடைகள் காரணம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. அடுத்ததாக குதிகால் உயர்ந்த காலணிகள். 

குதிகாலை உயர்த்தி, விரல் பகுதியை அழுத்தியபடி நடக்க வைக்கிற அந்தக் காலணிகளைத் தொடர்ந்து அணிவதால், கர்ப்பப்பையானது, கருவாயின் வழியே கீழ்நோக்கி சரியத் தொடங்கும். விந்து தங்காதபடியான ஒரு வடிவமைப்பை தானே ஏற்படுத்தி விடும். 

ஆரம்பத்தில் குழந்தையின்மைக்குக் காரணமாகிற இந்தச் சின்ன விஷயம், பிற்காலத்தில், கர்ப்பப்பை அடித்தள்ளல் பிரச்னை வரை கொண்டு போய் விடும். 

இன்றைய பெண்களில் எத்தனை பேருக்கு மஞ்சள் பூசிக் குளிப்பது தெரியும்? ஹார்மோன் இம்பேலன்ஸ் எனப்படுகிற கோளாறுகளை ஓட ஓட விரட்ட வைப்பதில், மஞ்சளின் மகிமை பற்றி அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. 

தோலில் தடவும் மஞ்சள்தான். குறிப்பாக, உள் உறுப்புகளில் தடவுவதன் மூலம், ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய தொற்றுக்கிருமிகள் தவிர்க்கப்படும். 

ஹார்மோன் கோளாறுகள் சரியாகும். அதன் காரணமாக தடைப்பட்டுப்போன கர்ப்பம் கை கூடும். களிங்காதி எண்ணெய், ஆற்றுத்தும்மட்டி எண்ணெய் என சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். 

மாதவிடாயின் முதல் 3 நாள்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த எண்ணெயை சாப்பிட்டால், கரு தங்கி நல்ல முறையில் வளரும். 

விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், சின்ன வெங்காயச் சாறு, மலை வேப்பிலைச் சாறு, ஆற்றுத்தும்மட்டிக்காய் சாறு எல்லாவற்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி, மாதவிடாயின் 3 நாள்களிலும் எடுத்துக் கொண்டால், கர்ப்பப்பை பலம் பெறும். பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்கட்டிகளும், சாக்லெட் சிஸ்ட் பிரச்னையும் தன்னால் நீங்கி, கர்ப்பம் தங்கும். 

சினைப்பையில் இருந்து சினைமுட்டையானது, கர்ப்பப்பைக்கு முதிர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவும் உதவும். 

                                                                                                                               நன்றிகள்.

திருமணத்தின்பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா...........?.

திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..? 

பிரம்மிப்பூட்டும் இரகசியம்..! 

பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும். கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம். 

அந்த நேரங்களில் பெண்ணே ஒருபசு மாடு எப்படி விசத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விசம் இராதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விசம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும். 

வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தரவேணும் என குறிக்க பழமும் தருவர். 

மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால், 

ஏ! மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும் உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும். 

வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல் இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம் அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள். 

திருமணத்தில் பால் பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல. ஒவ்வொரு செயலிலும் ஓர் அர்த்தம் உள்ளது.
               
                                                                                                                                    நன்றிகள்.

இரண்டே வேட்கைகளில் சண்டை நடக்கிறது.............!.

பசி எடுத்தால் உணவு, இச்சை பிறந்தால் இணை என்ற இரண்டே வேட்கைகளில் தான் அதற்க்குள் சண்டை நடக்கிறது. 

அது மிருக இனம் பிழைத்திருப்பதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்க்கும் இயற்க்கை விதித்திருக்கும் விதி. மற்ற‌படி மிருகங்கள் ஒன்றை ஒன்று பார்த்து, பொறாமைப்படுவது இல்லை, வஞ்சம் கொள்வது இல்லை, சதிச் செயல்களில் ஈடுபடுவது இல்லை மனிதன் தான் இயல்பை உணராமல் தடுமாறுகிறான். 

ஆரம்பத்தில் அவனும் தன் உணவுக்காக, உடைக்காக, உறைவிடத்திற்க்காக சண்டை போடத்துவங்கினான். 

பிற்பாடு நாகரீகம் வளர வளர அவனுடைய தேவைகளும் பெருகிவிட, கூடுதலான வசதிகளுக்காகவும் தன் பெருமைகளுக்காகவும் போரிடும் குணம் அவன் அடிப்படை குணம் ஆகிவிட்டது. 

அதை மறைத்து தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ளும் முனைப்பு அவன் இயல்பு ஆகிவிட்டது. சட்ட திட்டங்களால் ஆளப்படுவதால் மட்டுமே எந்த சமூகமும் நாகரீகம் அடைந்து விட்டதாக சொல்ல முடியாது. 

லண்டன், பாரீஸ், மும்பை, நியூயார்க் என இன்றைக்கு மிக நாகரீக நகரம் என்று நீங்கள் கருதும் எந்த நகர‌த்தை வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள் அங்கே சட்டத்தை விலக்கி காவல்த்துறையை கலைத்து விட்டு பாருங்கள்....

மூன்றே நாளில் எல்லாம் தலைகீழாகிவிடும். மிக நாகரீகமான மனிதன் என்று நீங்கள் கருதியவர் கூட குகை மனிதனை விடக் கேவலமானவனாக நடந்து கொள்வதை நீங்கள் பார்க்கலாம். 

நாகரீகம், கல்வி உங்களின் மிருக குணங்களைப் பின்னிழுக்க வைத்து உங்களை போலியாக வெளியுலகில் காட்டிக் கொள்ளத் தூண்டுகின்றன. 

எப்பொழுதெல்லாம் நாகரீகமும், கல்வியும் மறந்து போகின்றதோ அப்பொழுதெல்லாம் உங்களின் அடக்கி வைத்த குணம் தன்னை முன் தள்ளி வெடித்துக் கிளம்புகின்றது. 

ஒரு ஆணும் பெண்ணும் விரும்பி தங்களுக்கிடையில் பாலியல் தேவைகளைபூர்த்தி செய்து கொள்வதை நான் எந்த தருணத்திலும் எதிர்க்க மாட்டேன். ஆனால், அதனை நான்கு சுவர்களுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
                                                                                                                       
                                                                                                                        நன்றிகள்.

மற்றவர்களைத் திருத்துவதா.............. ?.

ஒவ்வொருவரையும் திருத்திக் கொண்டிருப்பது நம்முடைய வேலை அல்ல. 

அது சாத்தியமுமில்லை. நம்முடைய நேரம்தான் வீணாகும். 

நம்முடைய குறைபாடுகளே நிறைய இருக்கும்போது, அவற்றை திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் மற்றவர்களை விமர்சிப்பது வீண் வேலை.
                                                                                                                                   நன்றிகள்.
                                                                                                    

எங்கே இருக்கிறது திருப்தி............... ?.

“திருப்தி என்பது என்ன?

பணத்தால் திருப்தி ஏற்பட்டு விடுமா…? 

பத்தாயிரம் ரூபாய் கையிலிருந்தால், இருபதாயிரம் ரூபாய் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். 

ஒரு வீடு சொந்தமாக இருந்தால், இன்னொரு வீடு எப்போது வாங்கலாம் என்கிற ஆசை பிறக்கும். இல்லாவிட்டால் இந்த வீட்டை மேலும் விரிவுபடுத்தலாம் என்கிற ஆசை பிறக்கும். 

எல்லா வசதிகளுமே இப்படித்தான். 

திருப்தி என்பது தொடுவானம் போன்றது. 

நெருங்க நெருங்க தூர விலகிச் சென்று கொண்டே இருக்கும்.

                                                                                                                                                                                                                                                                                                         நன்றிகள்.

பிறர் விவகாரத்தில் பொறுமை...........!.

நாம் விரும்புகின்ற விவகாரங்களே நம்மைச் சுற்றி நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது? 

இருப்பதை அல்லது நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டால் பொறுமையினை இழக்க வேண்டிய அவசியமே இருக்காது. 

சுலபத்தில் கோபப்படுகிறோம், வெறுப்படைகிறோம். 

இது தேவைதானா என்று சில வினாடிகள் யோசித்துப் பார்த்தால், எவ்வளவு அற்பமான காரியங்களுக்கெல்லாம் நாம் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோம் என்பது புரியும். 

பொறுமை இல்லாமல் போனால் வாழ்க்கையே ஏமாற்றம் நிறைந்ததாகி விடும். மற்றவர்களின் செயல்களைக் கண்டு பொறுமை இழக்காதீர்கள். 

அவர்கள் செய்வது அறியாமையின் விளைவு என்று நீங்கள் நினைத்தால், பொறுமை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது.

                                                                                                                                      நன்றிகள்.

நம்முடைய மனம்தான் காரணம்...............!.

எந்த சின்ன விவகாரம் நமக்கு ஓர் நெருக்கடியாகி விடுகிறது. வாழ்க்கையில் எல்லாமே நமக்கு எதிராக இருப்பதைப்போல எண்ணத் தொடங்குகிறோம். 

கொஞ்சம் நிதானமாக யோசித்தால், நாம் பெரிதுபடுத்திய பல விவகாரங்கள் அற்ப விவகாரங்கள் என்பது புலனாகும். எதையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டால் வாழ்க்கை எளிமையாகி விடுகிறது. 

கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விவகாரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்ற மனோபாவம் வந்து வெற்றிப் பாதையை அமைத்துக்கொடுத்து விடும். 

சின்ன விவகாரங்களைச் சின்ன விவகாரங்களாக நாம் பார்க்க முடியாதபோது இனிய உறவுகளைக்கூட அவை பாதித்து விடுகின்றன. நாம் சிறு விவகாரங்களை அலட்சியப்படுத்தத் தொடங்கிவிட்டால், 

அவை சக்தி இழந்து செயலற்றுப் போய் விடுகின்றன. 

யோசித்துப் பார்த்தால் எல்லாமே சின்ன விவகாரங்கள்தான். 

ஒரு விவகாரத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் தன்மையும் அமையும். 

எல்லாவற்றுக்கும் நம்முடைய மனம்தான் காரணம். 

வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல இடர்ப்பாடுகளுக்கும் நம்முடைய தவறான மனோபாவங்களே காரணமாகின்றன.

                                                                                                                                     நன்றிகள்.

விரும்புவது கிடைக்காவிட்டால்..............!.

நாம் விரும்பியது கிடைக்காமல் போகும் சந்தர்ப்பங்கள் இருக்கத்தான் செய்யும். 

அதற்காக அதையே நினைத்துக் கொண்டு வாழ்க்கையை வீணாக்கி விடவும் முடியாது. 

எது கிடைக்கிறதோ, அதை விரும்ப கற்று கொள்ள வேண்டும். விரும்புகின்றபடியே எல்லாம் நடக்காது என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு நமக்குக் கிடைத்ததை விரும்புகின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் வாழ்க்கை இலகுவாகி விடும்.

                                                                                                                                                                                                                                                                                                              நன்றிகள்.

யார் சரி ? யார் சரியில்லை............... ?.

எப்போதுமே நீங்கள் நினைப்பது சரியாகவே இருக்கும் என நிரூபிப்பது அவசியமா ? 

என்கிற இரண்டு நிலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவசியம். பல சந்தர்ப்பங்களில் இரண்டும் ஒரே சமயத்தில் நடப்பதில்லை. 

நம்முடைய அளவுகோல்களை வைத்துக் கொண்டு மற்றவர்களைத் திருத்துகின்ற வேலையில் நாம் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. 

மற்றவர்கள் அபிப்ராயங்கள் நம்மைப் பாதிக்காதவரை அதை மறுக்க வேண்டிய அவசியமில்லை. 

அந்த நிலை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்குமானால், அதைக் கெடுக்காமல் அந்த மகிழ்ச்சியில் நாமும் பங்கு பெறலாம்.

                                                                                                                                                                                                                                                                                                              நன்றிகள்.

Tuesday, 4 February 2020

குப்பை எண்ணங்கள் வேண்டாமே................. !.

எதிர்மறையான, பலவீனமான எண்ணங்கள் மன அமைதியைத் தகர்த்து சீர்குலையச் செய்யும் சக்தி படைத்தவை. 

இதுபோன்ற எண்ணங்கள் குமுறிக் கொப்பளிக்கிறபோது அசாத்தியமான மனஇறுக்கத்தை நீங்கள் அசைபோடுகின்றபோது எவ்வளவு மோசமான மனநிலைக்கு ஆளாகி இருக்கிறீர்கள் என்பதையும் எண்ணிப் பாருங்கள். 

ஒரு எதிர்மறை எண்ணம் இன்னொரு எதிர்மறை எண்ணத்துக்கு உங்களை இட்டுச் சொல்கிறது. 

விளைவாக குழப்பமான போராட்டத்தை மிக்க மனநிலைக்கு நீங்கள் ஆளாகிப் போகிறீர்கள். 

இதுபோல் எதிர்மறை எண்ணம் என்கிற குப்பை தொடர்ந்து மனதுக்குள் சேர ஆரம்பிக்கிறது. 

விளைவு என்ன ? 

மனம் கவலை களும் வேதனைகளும் நிரம்பிய குப்பைத் தொட்டியாகி விடுகிறது. எதிர்மறை எண்ணங்கள் அல்லது கவலைகள் மனத்தில் வேகம் பெறுவதற்கு அனுமதிக்காதீர்கள். 

பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைப்பதற்குப் பதிலாக, பிரச்னைகள் பற்றிய கவலைகளே அதிகமாகி மனத்தில் பாரம் அதிகரித்து விடுகிறது.

                                                                                                                                         நன்றிகள்.

Sunday, 2 February 2020

பிறருடன் பேசும்போது….......!.

ஒருவருடன் பேச ஆரம்பிக்கும்போது, அவர் பேசுவதை முழுமையாகக் கேட்பது என்று முடிவு செய்து கொள்ளுங்கள். 

குறுக்கிட வேண்டும் என்று தோன்றினாலும் குறுக்கிடாதீர்கள். 

அவர் சொல்வதை நீங்கள் முழுமையாகக் கேட்ட பிறகு, நீங்கள் என்ன சொல்ல வேண்டுமென்பதைத் தீர்மானித்துத் தெளிவாகப் பேசுங்கள். 

இதைக் கடைபிடிக்க ஆரம்பித்தால் கருத்துப் பரிமாற்றம் எளிதாகும். 

மற்றவர்கள் அன்பும் சுலபமாகக் கிடைக்கும். 

மற்றவர்களை நீங்கள் பேச அனுமதித்து அக்கறையுடன் கவனிக்கின்றபோது, நீங்கள் சொல்வதையும் கவனிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கும் தானாகவே ஏற்பட்டு விடும்.

                                                                                                                                          நன்றிகள்.

Saturday, 1 February 2020

சாதிக்க வேண்டுமென்றால்............!.

சாதிக்க வேண்டுமென்றால் …

மன அமைதியே மனித ஆற்றலின் ஊற்றுக் கண்ணாகவும் விளங்குகிறது. 

அமைதி நிலையில்தான் ஆற்றலை முழுமையாக ஒருமுகப் படுத்தவும் முடியும்.  

எனவே, மன அமைதிக்கு முதலிடம் கொடுங்கள். 

சாதனைகள் தாமாகவே தொடரும்.

                                                                                                                                                                                                                                                                                                            நன்றிகள்.
                                                                                                                                       


                                                                                                                   

Thursday, 30 January 2020

அம்மாவுக்கு நிகர் இந்த உலகில் யாருமில்லை......!.

மனைவி இறந்த பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்..

"உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி" என்று. அப்போது அந்த மகன் சொன்னான்.

"என் அம்மா என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தால்.

ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவளாய் இல்லை" இதைகேட்ட தகப்பன் கேட்டான்.

"அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னாள்?"

அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் ..... 

"நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள் ,எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று .ஆனால் கொஞ்சநேரம் ஆகும்போது என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி ,நிலாவைக்காட்டி கதைசொல்லி அவள் தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய பாசம் இருக்கும்..

ஆனால்..

"இப்போதைய அம்மா, நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் "உனக்கு சோறு தரமாட்டேன் என்று."..

இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகிறது அம்மா சொன்னவார்தையை நிறைவேற்றிவிட்டாள்.".!

அம்மாவுக்கு நிகர் இந்த உலகில் யாருமில்லை...

இந்த உலகில் என் கண்களால் நான் கண்ட கடவுள் என் அம்மா மட்டுமே....

என் உயிர் என் அம்மாதான்.!.
   
                                                                                                                                     நன்றிகள்.

Friday, 28 September 2018

மாதங்களின் பெயர்க்காரணம்...............!.

12 மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த 12 மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு பெயர் எப்படி வந்தது என்பதற்கான காரணத்தைப் பற்றி காண்போம். 

ஜனவரி :

ஜனவரி மாதத்தின் பெயர் ஜனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால் அமைந்தது. ஜனஸ் என்ற ரோமானிய கடவுளுக்கு கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தைக் குறிக்கும் இரண்டு தலைகள் இருக்கின்றன.

பிப்ரவரி :

மாதங்களில் இரண்டாவது மாதத்தின் பெயர் பிப்ரவரி ஆகும். ரோமானியர்கள் இந்த மாதத்தின் 15ம் நாளை புனிதமாகக் கருதி பெப்ருய என்று பெயரிட்டு அழைத்தனர். பெப்ருய என்பதற்கு தூய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள். அதைக் குறிக்கும் வகையில் பெப்ருரியவஸ் என்று பெயரிட்டனர். இதுவே பிப்ரவரி என மாறியது.

மார்ச் : 

மார்ச் என்ற பெயர் மார்ஸ் என்ற ரோமானிய போர்க்கடவுள் மற்றும் விவசாயக் கடவுளின் பெயர் ஆகும். இந்த மார்ஸ் கடவுள் ஈட்டி, கேடயத்துடன் காட்சியளிக்கும். மார்ஸ் என்ற கடவுளின் பெயரால் தோன்றியதுதான் மார்ச் மாதம் ஆகும். 

ஏப்ரல் : 

ஏப்ரல் என்ற பெயர் ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு திறந்து விடு எனப்பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழிபிறக்கும் மாதம் என்பதால் இந்தச் சொல்லில் இருந்து ஏப்ரல் மாதம் தோன்றியது. 

மே : 

இந்த மாதத்திற்கு மே என்று பெயர் வரக் காரணம், உலகத்தை சுமக்கும் அட்லஸின் மகளின் பெயர் மையா என்ற தேவதை. மையாவின் பெயரால் தோன்றிய மாதமே மே மாதம் ஆகும். 

ஜூன் : 

ரோமானியர்கள் ஜுனோ என்னும் தேவதையை இளமையின் சின்னமாக வழிபட்டு வந்தனர். அந்த தேவதையின் பெயரால் வந்தது தான் ஜுன் ஆகும். 

ஜூலை : 

மாதங்களில் ஏழாவது மாதத்தின் பெயர் ஜூலை ஆகும். இம்மாதம் ஆரம்ப காலத்தில் ஐந்தாவது மாதமாக இருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர். மார்க் ஆண்டனி இந்தப்பெயரை மாற்றி ஜுலியஸ் சீசரின் பெயரால் ஜுலி என்று பெயர் சூட்டினார். 

ஆகஸ்ட் : 

ஆகஸ்ட் மாதமானது ஆரம்பத்தில் இது ஆறாவது மாதமாக இருந்தது. ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்ற கிரேக்க மொழியில் அழைத்தனர். ஜுலியஸ் சீசர் இந்த மாதத்தை எட்டாவது மாதமாக்கிய பிறகு ரோமானியர்கள் தங்கள் மன்னரான அகஸ்டஸை பெருமைப்படுத்தும் விதத்தில் அகஸ்ட்ஸ் என பெயரிட்டனர். அதுவே பிறகு ஆகஸ்ட் என மருவியது. 

செப்டம்பர் : 

ஏழு என்ற எண்ணை ரோமானிய மொழியில் செப்டம் என்றனர். மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில் செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஆனால், புதிய அமைப்பின்படி ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட பழைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது. 

அக்டோபர் : 

அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக இருந்தது. அக்ட்டோ என்றால் எட்டு. இதுவும் பெயர் மாற்றம் செய்யப்படாமல் எட்டாவது மாதத்திலிருந்து பத்தாவது மாதமாக மாறிவிட்டது. 

நவம்பர் : 

நவம்பர் மாதத்தில் முதல் மூன்று எழுத்துக்களான நவம் என்றால் ஒன்பது என்று அர்த்தம். இந்த நவம்பர் மாதத்தை ஆரம்பத்தில் ஒன்பதாம் மாதமாக கணித்தனர். இந்த மாதம் பதினொன்ராவது மாதமாக மாறிய பிறகும் இந்த மாதத்தின் பெயர் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை. 

டிசம்பர் :

டிசம்பர் மாதத்தில் முதல் மூன்று எழுத்துக்களான டிசம் என்றால் பத்து என்று அர்த்தம். இதனால் டிசம்பர் என்று அழைக்கப்பட்டது. பத்தாம் மாதமாக இருந்த டிசம்பர், பன்னிரென்டாம் மாதமாக மாறிய பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

                                                                                                                                                                                                                                                                                                              நன்றிகள்.

Thursday, 27 September 2018

அந்தக் காலத்தில் மழைமானி.....................!.

அந்தக் காலத்தில் மழைமானி பற்றி தெரியாத தகவல்.

உரல் உணர்த்தும் உண்மை.ஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல. அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். . 

முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர் நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர். 

மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை செவி அல்லது பதினு எனப்படும். .இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர். 

அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை பதினு மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு அணியமாவார்கள். மழை என்பது மழைத்துளிகளின் தொகுப்பு என்பதை அறிவோம். 

அதன் அடிப்படையில் அதன் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது. அவற்றைக் காண்போம் 

தூறல் – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும். 

சாரல் – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும். 

மழை – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும். 

பெருமழை – நீர்நிலைகள் நிரம்பும். 

அடைமழை – ஐப்பசியில் பெய்வது 

கனமழை – கார்த்திகையில் பெய்வது 

இதையே அறிவியல் வேறுவகையில் கூறுகிறது. 

மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல். 

அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை. 

4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின் விட்டம் இருக்குமானால் அது கனமழை.யாகும். 

மழையைப் பற்றித் திருவள்ளுவர் நிறையப் பேசியிருப்பதை நாம் அறிவோம்.அவற்றில் வியக்க வைக்கும் செய்தி 20ம் நூற்றாண்டின் அறிவியல் உண்மையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பேசியிருப்பது. 

இந்த உலகம் தோன்றிய போது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். 

திருவள்ளுவர் இதை ‘மாறா நீர்’ என்று உரைத்திருக்கிறார். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார். கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி - (குறள் 701) இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று குறிப்பிடுவார்.

பழ. கோமதிநாயகம். நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே பிறிதோர் குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு (குறள் 452) எனவே வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது.

                                                                                                                               நன்றிகள்.

Wednesday, 26 September 2018

அது என்ன கூப்பிடு தூரம்.......................................?.

அது என்ன கூப்பிடு தூரம்? 

’இன்று தான் தெரிந்தது. 

கூப்பிடு தூரம் 

அது எவ்வளவு தூரம் என்பதைப் பார்ப்போம். 

வீரசோழிய உரையில், ‘முழ நான்கு கோல்; அக்கோலைஞ்ஞூறு கூப்பீடு’ 

என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

முழநான்கு கொண்ட கோல் = 6 அடி நீளமுள்ள கோல் 

இந்தக் கோலால் 500 = 500 X 6 = 3000 அடிகள். 

கிட்டத்தட்ட முக்கால் மைலுக்குச் சற்றுக்குறைவான தூரம். 

இன்னொன்று ‘யோசனை’ எனப்படும். இதன் அளவுகள் ஒன்றுடன் 

ஒன்று மிகவும் வித்தியாசப்படும். 

பொதுவாக இது நான்கு காதம் கொண்டது. 

அப்படியானால் 

12000 நீட்டளவு (Yard) X 4 = 48000 நீட்டளவுகள் கொண்டது. கிட்டத்தட்ட 30 மைல் என்று கொள்ளலாம். 

ராமாயணத்தில் எல்லாமே யோசனைக் கணக்கில்தான் இருக்கும். 

நூறு யோசனை நீளம், நூறு யோசனை உயரம், நூறு யோசனை அகலம் என்று இப்படி. நாட்டுக்கு நாடு பல அளவைகள் இருந்திருக்கின்றன. 

பொதுவான வழக்கில் இருந்ததைச் சொல்கிறேன். 

இந்த வாய்ப்பாடுகளையெல்லாம் எங்காவது சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். 

உங்கள் கொள்ளுப்பேரப்பிள்ளைகளிடம் நீங்கள் கதை சொல்லும் போது, “இப்படியெல்லாம் அளந்து விட்டிருக்கிறாங்கப்பா, நம்ப ஆளுங்க”, என்று அளந்துவிடலாம். 

8 நெல் = 1 விரக்கடை (0.75 inches) 

12 விரக்கடை = 1 சாண் (9 inches) 

2 சாண் = 1 முழம் (18 inches) 

2 முழம் = 1 கஜம் (3 feet = 36 inches) 

4 முழம் = 1 பாகம் ( 6 feet) 

6000 பாகம் = 1 காதம்(12000 கஜம்) 

1 காதம் என்பது கிட்டத்தட்ட 7 மைல். 

கீலோமீட்டராக்க 7 X 8 / 5 செய்துகொள்ளுங்கள். 

இதனை ‘ஏழரை நாழிகை வழி’ என்றும் சொல்வார்கள். 

ஏழரை நாழிகை என்பது 3 மணி நேரம். 

ஒரு சராசரி மனிதன் 3 மணி நேரத்தில் பொடிநடையால் கடக்கும் தூரமாக இதைக் கருதினார்கள். 

சரிதானே? மூன்று மணி நேரத்தில் 7 மைல். ஒரு மணிக்கு ஒன்றே முக்கால் மைல். 

மனிதனே மூன்று மணி நேரத்தில் காத தூரம் போகிறான். 

ஆனால் ஒரு குறிப்பிட்ட குதிரை அப்படியல்ல. 

காளமேகப்புலவர் சொல்கிறார் கேளுங்கள்: 

முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்க 

பின்னே இருந்திரண்டு பேர்தள்ள – எந்நேரம் 

வேதம்போம் வாயான் விகடராமன் குதிரை 

மாதம்போம் காத வழி! 

விகடராமன் என்பவனுடைய குதிரை ஒரு காதம் செல்வதற்கு 

ஒரு மாதம் பிடிக்குமாம். அதுவும் முன்னாலிருந்துகொண்டு மூன்று பேர் கடிவாளத்தைப் பற்றியிழுக்க, பின்னாலிருந்துகொண்டு இரண்டு பேர் தள்ளினால்தான் அந்த வேகமும்கூட. 

சிவகங்கைப் பக்கத்தில் ராசசிங்கமங்கலக் கண்மாய் என்றொரு பேரேரி இருக்கிறது. 

ராசசிம்ம பாண்டியன் காலத்தில் கிபி 800 வாக்கில் வெட்டப்பட்டது. 

அதற்கு நாற்பத்தெட்டுக் கலிங்குகள் இருந்தனவாம். 

ஒரு காதத்துக்கு ஒரு கலிங்கு வீதம் கட்டியிருக்கிறார்கள்.

அதையொொட்டி ஒரு பெயர் அந்தக் கண்மாய்க்கு ஏற்பட்டிருக்கிறது. 

‘நாரை பறக்காத நாற்பத்தெட்டுக் காதவழி’. 

நாரைகள் ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து நவம்பர் டிசம்பர் மாதத்தில் தெற்கு நோக்கி பறந்துவரும். 

ஆங்கில V எழுத்து அமைப்பில் அவை கூட்டங்கூட்டமாகப் பறந்துவந்து தமிழக நீர்நிலைகளில் நிலை கொள்ளும்.

நாரை அடாது விடாது நீண்ட தூரம் பறக்கக்கூடியது. அப்பேர்ப்பட்ட நாரையும்கூட ராசசிங்கமங்கலத்துக் கண்மாயின் நாற்பத்தெட்டுக் கலிங்குகளையும் ஒரே வீச்சில் பறந்து கடக்கமாட்டாதாம்.

                                                                                                                                       நன்றிகள்.

Sunday, 23 September 2018

தொப்புளில் ஏன் எண்ணெய்விட வேண்டும்.................?

நம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்துள்ள அற்புத பரிசு. 62 வயது முதியவர் ஒருவருக்கு இடது கண் பார்வை மிக மோசமாக இருந்தது.

இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டார். கண் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு அவரது கண்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும் ஆனால் கண்களுக்கு இரத்தம் கொண்டு வரும் நரம்புகள் வறண்டுவிட்டதால் மீண்டும் பார்வை ஒருபோதும் வராது என்றும் கூறிவிட்டார்....

அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான். தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது.

நமது தொப்புள் உண்மையிலே ஆச்சரியப்படும் ஒன்று தான். அறிவியல் படி, ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம்.

காரணம் ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும்.

முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் ஆகின்றன.

நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும் கூட.

தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன. நமது உடம்பில் உள்ள இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை புவியின் இரு மடங்கு சுற்றளவிற்குச் சமம்.

தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்றத் தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு, முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

கண்கள் வறட்சி நீங்க குறைந்தபார்வை சரியாக பளபளப்பான தலைமுடி பெற மெருகூட்டப்பட்ட சருமம் பெற இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும். முழங்கால் வலி குணமடைய இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி விளக்கெண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும். 

நடுக்கம் மற்றும் சோர்வு, மூட்டுவலி மற்றும் வறண்ட சருமத்திலிருந்து நிவாரணம் பெற இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி கடுகு எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரைஇன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும். 

தொப்புளில் ஏன் எண்ணெய்விட வேண்டும்? 

எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும். அதனால் தொப்புள் அந்த எண்ணெயைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பி திறக்கச் செய்கிறது. 

சிறு குழந்தைக்கு வயிறு வலியென்றால், பெரியவர்கள் காயப்பொடியுடன் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம். சில நிமிடங்களில் குணமாகும். எண்ணெயும் அவ்வாறே வேலை செய்கிறது.

                                                                                                                             நன்றிகள் .

Thursday, 20 September 2018

விலை மதிப்பற்ற செல்வம் ..............!.

மனிதனுக்கு இந்த உலகில் விலை மதிப்பற்ற செல்வம் அறிவு..!

பலமான ஆயுதம் பொறுமை..!

மிகச்சிறந்த பாதுகாப்பு உண்மை..!

அற்புதமான மருந்து புன்னகை..!

சிந்தித்து செயலாற்றுங்கள்.

                                                                                                                நன்றிகள்.

மகனி்ன் திகைப்பு.................!.

தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான். 

அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன். 

அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன் 

தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள். 

அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும். நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்? 

இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான். தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள். ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய், மகனிடம், 

சரி…..நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். அதை நிறைவேற்றினால் போதும் – என்றாள். 

மகனுக்கு ஒரே மகிழ்ச்சி. 

அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் – என்றான் மகன், 

ஒன்றுமில்லை மகனே, நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு – எனக் கூறினாள் தாய். 

அம்மா, நீ கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான். 

தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள். தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான். அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள். மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான். சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக, 

என்ன அம்மா செய்கிறாய்… தூங்க கூட விட மாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் – எனக் கேட்டான் மகன். 

அப்போது தாய் அமைதியாக சொன்னாள்: 

மகனே.. அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய். நீ குழந்தையாக இருக்கும்போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா? – என்றாள் தாய் 

மகன் திகைத்து நின்றான். 

இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன் – என்றாள் தாய். 

நண்பர்களே, உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம். தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது. தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்? நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை என்பதை நினைவில் கொள், ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை. 

எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான். அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்கள். என்னைப் பொறுத்தவரை, அன்பே தாய் என்பது தான் நிதர்சமான உண்மை. 

நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான். 

பாசம் உங்களை இழக்கலாம் ஆனால் நீங்கள் பாசத்தை இழக்காதீர்கள்.....!

                                                                                                                                                                                                                                                                                                             நன்றிகள்.

Saturday, 15 September 2018

அப்பாவுக்கு மகள் எழுதும் மனம் கவர்ந்த கவிதை.................!.

நான் முதன் முதலாக நேசித்த என் காதலன் நீ.. எப்பொழுது நேசிக்க தொடங்கினேன் என்ற கேள்வியை மட்டும் கேட்காதே அப்பா.. 

அம்மாவின் அடிவயிற்றில் கைவைத்து என்னுடன் பேசினேயே!! அப்பொழுதே நிகழ்ந்து இருக்கக்கூடும்... 

இல்லையேல்...கொடி கூட அவிழாத நிலையில் உன் கையில் ஏந்தி உச்சிநுகர்ந்து முத்தம் பதித்தாயே!

அப்பொழுது நிகழ்ந்து இருக்கக்கூடும்... 

ஆயிரம் ஆயிரம் கதைகளை சொல்லி அன்னை உறங்க வைத்த பொழுதிலும் உன் மார்பில் தூங்கிய சுகம் வருமா?! 

கண் எரியாமல் நீராட செய்வதும் ஒரு கலையாகும் அதில் தாயை விட நீ தேர்வு பெற்றதாலோ என்னவோ..? 

உன்னை மட்டுமே தேடி அழுதேன் குளிக்கும் வேளையில்.. நடைபழகும் வேலையை விடுத்து என் பாதங்கள் தரையில் ஊன்றியதாய் நினைவில்லை..

உன் தோள் மீது அமர்ந்து என் கொலுசோடு உரசிய உன் சட்டை பொத்தான்கள் மட்டுமே நியாபகம்.. சின்ன சின்ன மணிகளை வைத்து தைத்த பாவாடை சட்டை அணிந்த பொழுது "தேவதையே எனக்கு மகளாக பிறந்துவிட்டாள்!!"என்று கொண்டாடினாயே அதுவும் நினைவிருக்கிறது அப்பா... 

உலையில் கொதித்திட அரிசி இல்லை என்ற பொழுதிலும் நான் கேட்டேன் என்பதற்காக இனிப்புகளை வாங்கி தந்து தாயாரின் வெறுப்பை சம்பரித்துக் கொள்வாயே!

அது ஏன் அப்பா? மிரட்டலாக என்னை வகுப்பறையில் அமர்த்திவிட்டு கலகத்துடன் வெளியேறும் உன்னை யான் அறியாமல் யார் அறிவார்? 

தாவணியின் நுனியினை பிசைந்தார் வண்ணம் உன் முன் நானி நான் நிற்க.. உன்னை விட்டு விலகிச்செல்ல வெகு நாட்கள் இல்லை என்று நினைத்தாய் போலும்! 

கண்களில் துளிர்த்த நீரை யவருக்கும் தெரியாமல் துடைத்துக்
கொண்டாய்.. பலவாறாக தம்மிடம் நான் வாதாடினாலும் உன் ஒரு சொல்லுக்கு கட்டு படாமல் நான் இருந்ததில்லை அப்பா.. 

நான் சமைத்த உணவை நா கூசாமல் புகழ்ந்து தள்ளுவாயே...! உன் பொய்யிற்க்கும் ஒரு காதல் உண்டு அப்பா... என் விழி அசைவினில் என் தேவைகளை பூர்த்தி செய்யும் உன்னை தெய்வத்திற்கு ஈடாக பார்க்க முடியுமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன்... 

பக்தி இருந்தால் ஒழிய கிடைக்கும் தெய்வத்தின் வரம்.. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை காக்கும் நீயே ஒரு வரம் அல்லவா? 

மலையளவு துன்பத்தை கூட திணையளவும் பொருட்படுத்தாத நீ.. என் கண்களில் நீரை கண்டால் உடைந்துப் போவது ஏனோ? 

நான் விரும்பாததை நீ என்னிடம் புகுத்தியதும் இல்லை.. என் விருப்பத்தை நீ வெறுத்ததும் இல்லை... என் ஒரே ஒரு கவலை என்னை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு கண்ணீர் விடும் உன்னை தேற்ற என்னை அன்றி எவருக்கு தெரியும் என்பதே?! 

என் கணவனை எந்நாளும் உன்னுடன் ஒப்பிட மாட்டேன்.. எனக்கு நன்றாகவே தெரியும் என்னை முழுதாக நேசிக்கும் ஒரே ஒரு ஆடவன் நீ மட்டும் தான் என்று... 

இனி ஒரு ஜென்மம் வேண்டும் என்று எண்ணியதில்லை.. 

ஆனால் அவ்வாறு நிகழ்ந்தால் மறுபடி உன் மகளாக பிறக்கும் வரம் மட்டும் போதும் அப்பா.... 

மகளை பெற்ற மகாதேவர்களுக்கு சமர்ப்பணம். *( யாரோ எழுதி எனக்கு வந்ததை கண்களில் கசிந்த கண்ணீரோடு வாசித்து, பின் பகிர்ந்துள்ளேன் ) 

எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட (FOEWARD TO ALL LOVABLE) அப்பாக்களுக்கு.

                                                                                                                                      நன்றிகள்.