தமிழை எளிமையாக கற்க 'ஐ' தமிழ்: மதன் கார்க்கியின் புது கருத்துப்படிவம்! (concept)!
இப்பொழுது நாம் எழுதி படித்துக் கொண்டிருக்கும் தமிழ் வடிவ மானது பண்டைய காலங்களிலிருந்து பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்தது. மொழியின் ஒலி மாறுவதில்லை. ஆனால் காலத்திற்கேற்ப எழுத்தின் வடிவம் மாறி வந்துகொண்டிருக்கிறது. கல்வெட்டில் இருந்த தமிழும், ஓலைச் சுவடிகளில் இருந்த தமிழும், அச்சகங்கள் வந்தபோது அதற்காக மாறிய தமிழ் எழுத்துக்களையும் நாம் அறிவோம்.
கடைசியாக எழுத்துக்களை சீரமைத்து கொடுத்தவர் பெரியார். சில காலமாகவே வா. செ. குழந்தைசாமி போன்ற அறிஞர்கள் எழுத்துச் சீரமைப்பை பற்றி பேசி வந்திருக்கிறார்கள். இப்போது இருக்கும் தமிழ் எழுத்து வடிவங்களை மேலும் எளிமையாக்க 'கார்க்கி ஆராய்ச்சி மையம்' மேற்கொண்டுள்ள முயற்சிதான் 'ஐ-தமிழ்’ கருத்துப்படிவம். இந்த மையத்தின் நிறுவனர் மதன் கார்க்கியை சந்தித்தோம்.
ஐ'னா அழகுன்னு அர்த்தம். உங்களோட இந்த கருத்துப்படிவம் தமிழுக்கு எந்த விதத்தில் அழகு சேர்ப்பதாக இருக்கும்?" ......
முதல் கேள்வியையே உற்சாகத்துடன் எதிர்கொண்டு பேச ஆரம்பித்தார் கணினிக் கவிஞர் கார்க்கி.
சில ஆண்டுகளாவே நான் யோசிச்சுகிட்டு இருந்த ஒரு விசயம்தான் இது. 247 எழுத்துக்கள் கத்துகிட்டா தான் தமிழ் கத்துக்க முடியும்னு குழந்தைகள பயமுறுத்துறோம். போன தலைமுறைக்கு இருந்த பொறுமையில் பாதி கூட இந்த தலைமுறை குழந்தைகளுக்கோ, பெற்றோர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ இல்லை. குழந்தைகளோட கவனத்த ஈர்க்க நூற்றுக் கணக்குல தொலைக்காட்சி அலைவரிசைகள், ஐஃபோன், ஐபேட், ப்ளே ஸ்டேஷன்னு எத்தனையோ விசயங்கள் இருக்கு. இதுக்கு நடுவி்ல் நாம் மொழியைக் கற்பிக்க வேண்டுமாயின் அந்த மொழி எளிமையாக மாறியமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கு.
இப்போ இருக்கின்ற தமிழைக் கற்பிக்க 107 குறியீடுகள் கற்றுக் கொள்ள வேண்டும். உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய்க் குறிகள், புள்ளி, அப்புறம் கு, கூ, மு, தீ கி போன்ற உகர, ஊகார, இகர, ஈகார எழுத்துக்கள். குழந்தைகளுக்கு தமிழ் மொழிய சொல்லிக் கொடுக்கும்போது தான் இதனுடைய சிரமம் புரியும். கால் எழுத்த மெய்யெழுத்துக்கு பின்னாடி போடணும், கொம்ப முன்னாடி போடணும், புள்ளிய மேல போடணும்ன்னு குழப்பங்களும் இதுல அடங்கும். பிரெஞ்சு, ஆங்கிலமா தமிழா எது படிக்க விருப்பம்ன்னு கேட்டா குழந்தைகள் எளிமையா இருக்குற ஆங்கிலத்தையோ அது போன்ற மொழியையோதான் தேர்வு செய்வாங்க.
தமிழ்ல படிச்சாதான் உனக்கு வேலை கிடைக்கும்னோ, தமிழ்ல படித்தால்தான் தனிச் சலுகைனோ அச்சுறுத்தியோ, லஞ்சம் கொடுத்தோ மொழிய படிக்க வைப்பது நல்ல முறை இல்லை. தமிழ் மொழிய நம்ம தமிழக் குழந்தைகள் இல்லை, உலகக் குழந்தைகள் எல்லாரும் படிக்க ஆர்வம் தூண்டும்படி அதை எளிமையாக மாற்றியமைத்துக் கொடுப்பதுதான் ஐ-தமிழ் திட்டத்தோட முதல் நோக்கம். ஐ-தமிழ்ல 43 குறியீடுகள் கத்துகிட்டா தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம். ஐ-தமிழ், உயிர்மெய் எழுத்து எழுதும் முறையில் மட்டும் மாற்றம் கொண்டு வரணும்னு கோரிக்கை வைக்குது.
இப்பொழுதுள்ள எழுத்துவடிவத்தில் 'க்' என்ற மெய்யெழுத்துடன் உயிரெழுத்து 'ஊ' புணரும்பொழுது வரும் உயிர்மெய் க்+ஊ-'கூ'(சுழியிட்டு வருகிறது).ஆனால் அதே போன்ற மெய்யெழுத்தான 'த்' உடன் 'ஊ' என்ற உயிரெழுத்து புணரும்பொழுது த்+ஊ-தூ என்று (துணைக்கால் சேர்த்து)குறியீடு வேறாக இருக்கிறது. இரண்டுமே மெய்யெழுத்தாக இருந்தாலும் அதனுடன் புணர்வது ஒரே உயிரெழுத்தாகத்தான் இருந்தாலும் புணர்வின் முடிவில் அதன் வடிவங்கள் வேறுபடுகின்றன. (ஒன்றுக்கு சுழித்தல், மற்றொன்றிற்கு துணைக் கால்). இதைப் புரிந்துகொள்வதும், மனப்பாடம் செய்வதும், எந்த இடத்தில் எப்படி சுழியிட வேண்டும், துணைக் கால் போட வேண்டும் என்பதே தமிழைப் புதிதாகக் கற்றுக்கொள்பவர்கள் மேற்கொள்ளும் சிரமம்.
இதனாலேயே தமிழ் எழுதக் கற்றுக்கொள்வதற்கு கடினமான மொழியாக உள்ளது. தமிழில் மாணவர்கள் தடுமாறுவதற்கும் இதுவே முக்கியக் காரணம்.'க' என்ற ஓர் உயிர்மெய் எழுத்தை அடிப்படையாக வைத்து அதற்கு முன்னும்(கே) பின்னும்(கா) அதன் மீதும்(கூ) எந்தக் குறியீடும் உபயோகிக்காமல் அந்த எழுத்தின் மேலேயே அதனுடன் புணரும் உயிரெழுத்துக்களின் ஓசைக்கு ஓர் குறியீடு கொடுத்து எழுத்து வடிவம் தருவதே 'ஐ-தமிழ்’ நோக்கம். அதாவது, உயிர்மெய் எழுத்தை மெய்ப் பகுதி, உயிர்ப் பகுதின்னு ரெண்டா பிரிச்சு, மெய்யெழுத்துக்கு மேல உயிர் குறியீட போடும் முறைதான் ஐ-தமிழ். ( www.karky.in/labs)
ஐ-தமிழின் பயன்கள் என்னென்ன? இதை எளிதில் கற்றுக்கொள்ளலாமா?
பல நன்மைகள் ஐ-தமிழ்ல இருக்கு. ஏற்கனவே தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள், 15 முதல் 20 நிமிடத்தில் ஐ-தமிழ் எழுத்தை எழுத பழகலாம். புதுசா தமிழ் எழுத கத்துக்குறவங்க இரண்டு இல்ல மூணு மாசத்துல தமிழ் எழுத்துக்கள கத்துக்கலாம். நாளைய தலைமுறை புது உயிர் எழுத்துக்களையோ, மெய் எழுத்துக்க ளையோ தமிழ்ல சேர்க்க விரும்பினா, ஐ-தமிழ் அந்த மீமேலாக்கத்தகவுக்கும் உகந்ததா இருக்கும். கணிப் பொறித் திரைகளோட அளவு சுருங்கிகிட்டே வருது. தொலைக்காட்சி பெட்டி மாதிரி இருந்த கணிப்பொறி இன்னிக்கு கைக்கடிகாரமா சுருங்கிடுச்சு.
இத்தனை சிறிய திரையில் தமிழ் சொற்களை போடும்போது நான்கு அல்லது ஐந்து எழுத்து சொற்களுக்கே திரை நிரம்பிவிடும். ஐ-தமிழ், இடத்தை சேமிப்பதன் மூலமா எளிதாக கூகுள் கண்ணாடி, ஆப்பிள் வாட்ச் மற்றும் இன்னும் வரப்போகும் தொலைதொடர்புக் கருவிகளுக்கு உகந்ததா இருக்கும்.
OCR எனப்படும் தொழில்நுட்பத்தின்படி சுவர் விளம்பரங்களையோ, கையெழுத்தையோ, நாளிதழில் அச்சடித்த எழுத்துக்களையோ, கணிப்பொறி படித்து எழுத்துக்களை உணரும் அந்த செயலிகளை துல்லியத்தோடு வடிவமைக்க ஐ-தமிழ் சரியான மாற்றமாக இருக்கும். புத்தகங்களில் அச்சாகும் சொற்களில் ஐ-தமிழ் 25-59 சதவிகிதம் வரை சேமிக்கிறது. இது மூலமா ஒரு ஆண்டுக்கு அச்சாகும் நூல்கள்ல ஐ-தமிழ் சேமிக்கும் இடம் மூலமா காகிதத்துக்காக வெட்டப்படும் முப்பதாயிரம் மரங்களை நாம காப்பாத்தலாம்.
இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து என்னவிதமான எதிர்வினை (Reaction) இருந்தது?
ஐ-தமிழ் திட்டத்திற்கு (Project) பலரிடமிருந்து எதிர்ப்புகள் இருக் கத்தான் செய்கின்றன. 'தாய்மொழி தாய் மாதிரி... அதில் குறை சொல்லக் கூடாது!' ன்னு சொல்றாங்க. நம் பாரம்பரியத்தை மாற்றக் கூடாது என்பதுதான் அவர்கள் கூறுவது. ஆனால் இத்தனை வருடம் தமிழ் மாறிக்கொண்டேதானே வந்திருக்கிறது. எப்படியானாலும் மாற்றங்களைத் தடுக்க முடியாது. அவர்களிடம் நான் முன் வைக்கும் கேள்வி, பாரம்பரியமாக நாம் பழகி வரும் இம்மொழியை பாதுகாத்து வைத்தல் முக்கியமா இல்லை, இன்னும் அதிகமாக மொழி பரவி பல நூற்றாண்டுகள் வாழவேண்டுமென்பது முக்கியமா? எங்களோட ஆராய்ச்சியில் அரசியல் இல்லை, வணிக நோக்கம் இல்லை, நடைமுறையையும் மொழி மேல் இருக்கின்ற காதல்லையும்தான் ஐ-தமிழ் திட்டத்தை நாங்க முன் வைக்குறோம்.
ஐ-தமிழ் பற்றி உங்க தந்தையிடம் சொன்னீர்களா? அவரிடமிருந்து வந்த விமர்சனம் என்ன?
அப்பா ரொம்பவே சந்தோசப்பட்டாங்க. "தமிழுக்கு இது நல்லதொரு மாற்றம். இது மாதிரியான விசயங்கள் தான் உன்னிடமிருந்து நான் எதிர்பார்த்தேன். ரொம்ப நல்லா பண்ணியிருக்க. இதை நடைமுறைப்படுத்த வாய்ப்புக்கள் நிறையவே இருக்கிறது. இது வரைக்கும் நீ தமிழ் சம்பந்தமாக எத்தனையோ ஆராய்ச்சிகள் பண்ணியிருக்க. ஆனால் அதை எல்லாம் விட என்னை ரொம்ப சந்தோசப்படுத்தியது இதுதான். நம் மொழிக்காக நீ செய்திருக்க இந்த நல்ல விசயத்தை ரொம்பப் பொறுமையா எடுத்துகிட்டு போ" ன்னு அறிவுரை கூறினார்.
உங்கள் குழு பற்றி...?
முனைவர் சுதர்சனன் நேசமணி, எஸ்.ஆர்.எம் கல்லூரியில் துணைப்பேராசிரியரா பணியாற்றும் தமிழ்ச் செல்வி. நாங்க மூணு பேரும் இது தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள எழுதிகிட்டு இருக்கோம். கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்துல என்னோட சேர்ந்து இளஞ்செழியன், ராஜபாண்டியன், தென்றல், ஆல்வின் வர்கீஸ், ஆர்த்தி, அனிதா ஆகிய ஆறு பேரும் முழு நேரமாக இந்தப் பணியிலும் மற்ற தமிழ் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
இது தவிர்த்து சூர்யா, தமிழ்ச்செல்வி பகுதி நேரமாக இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைவரின் பங்க ளிப்புடன்தான் இதை எழுதி தயாரித்துள்ளோம். நடக்கவிருக்கும் ஒரு தமிழ் மாநாட்டில் 'ஐ-தமிழ்' கட்டுரையை சமர்ப்பிக்க உள்ளோம்.
இதற்கு அரசாங்கத்தின் பங்களிப்பு எந்த அளவில் வேண்டும் ?
இப்பொழுது திரைத்துறையிலிருந்து வரும் என் வருவாயின் ஒரு பகுதி மூலமே என் ஆராய்ச்சிகளுக்கான செலவை கவனித்துக்கொள்கிறேன். நண்பர்கள் ஒரு சிலரும் அவ்வப்போது நன்கொடை வழங்கி வருகிறார் கள். எதிலும் இலாப நோக்கம் இல்லாமல் செய்து வருகிறோம். மொழிக்கு தேவையான மென்பொருட்கள் உருவாக்குவது, மொழியை கற்க தேவையான கருவிகளைச் செய்வது, மொழியறிவை மென்பொருள் மூல மாக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது, இதுவே எங்கள் முயற்சியும் நோக்கமும்.
இந்த இரண்டு ஆண்டுகளில் பத்து மென்பொருட்களை உருவாக்கி இலவசமாக இணையத்தில் எல்லோரும் பயன்பெறும்படி தந்திருக்கிறோம். இன்னும் பத்து ஆண்டுகளுக்கான திட்டப்பணியை தயார் செய்து வைத் திருக்கிறோம். மத்திய மாநில அரசுகளின் நிதியுதவி, கார்ப்பரேட் நிறுவனங்களும், பொது மக்களும் தமிழுக் காக நிதி கொடுக்க முன்வந்தால் நாங்கள் திட்டமிட்டு வைத்திருக்கும் அடுத்த பத்து வருடங்களுக்கான ஆராய்ச்சியை நிச்சயமாக நேர்த்தியான முறையில் தமிழுக்காக நடைமுறை படுத்த முடியும்.
ஐ-தமிழைத் தொடர்ந்து அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை 'அகராதி', அதைப் பற்றி கூறுங்களேன்?
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது நான், டாக்டர்.டி.வி.கீதா, டாக்டர் ரஞ்சனி ஆகிய மூவரும் சேர்ந்து தொடங்கியதுதான் அகராதி ப்ராஜெக்ட். 25000 சொற்களை வைத்து நாங்கள் தொடங்கிய 'அகராதி'யை அந்த பணியிலிருந்து நான் வெளிவந்த பின்னர் தொடர முடியவில்லை. 'கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்' தொடங்கியபின் அகராதியை எங்கள் நிறுவனத்தின் மூலம் எடுத்துக்கொண்டு தொடர ஆரம்பித் தோம். இப்பொழுது அகராதியில் 2,60,000 சொற்கள் உள்ளன. ஆன்லைன் அகராதியிலேயே அதிகம் தமிழ்ச் சொற்கள் கொண்ட
மருத்துவம், சட்டம், விலங்கியல், தாவரவியல், பொறியியல், கணிப்பொறி போன்று 33 பிரிவுகளிலுள்ள சொற்களை ஒருங்கிணைத்து அடக்கியுள்ளதுதான் இந்த 'அகராதி'. இதுவரை இணையதளமாக இயங்கிக் கொண்டிருந்த அகராதிக்கு இப்பொழுது தான் குறுஞ்செயலி 'ஆப்' வடிவம் கொடுத்திருக்கிறோம். கடந்த வாரம் வெளியீடு செய்யப்பட்ட அகராதி ஆப், 'ஆப்பிள்' தொலைபேசிகளில் இயங்கும். அடுத்த மாதத்திலிருந்து ஆண்டிராய்டு அலைபேசிகளுக்கும் வருகிறது.
நன்றிகள்.