Saturday, 23 May 2015

விவசாயிகள் அதிகமாக பயன்படுத்திய சேமிப்புக் கலன்கள்தான்...........!

குதிர்', 'தொம்பை', 'பத்தாயம்', 'குலுமை'...

இதெல்லாம் என்னவென்று யோசிக்கிறீர்களா? ஒரு காலத்தில் நம் விவசாயிகள் அதிகமாக பயன்படுத்திய சேமிப்புக் கலன்கள்தான்! தந்திரக்கார வியாபார உலகம், நம்மிடம் இருந்து பறித்தெடுத்த எத்தனையோ நல்ல விசயங்களில் இவையும் அடக்கம்! நம்முடைய பணத்துக்கு மட்டுமல்ல... சூழலுக்கும் வேட்டு வைக்காத இதுபோன்ற பொருட்களெல்லாம் நம்மைவிட்டு அகன்றதோடு, அவற்றின் பெயர்கள்கூட புழக்கத்தில் இருந்து மறைந்து கொண்டிருக்கின்றன!

இந்தச் சூழலில்... பாரம்பர்யத்தை மறக்காமல், இப்படிப்பட்ட சேமிப்புக் கலன்களை ஆங்காங்கே ஓரிருவர் பராமரித்துப் பயன்படுத்திக் கொண்டும் இருப்பது ஆறுதலான விசயம். அவர்களில் ஒருவர்... தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த நீலாவதி.

''ஒரு காலத்துல வீட்டுக்கு வீடு குதிர், அடுக்குப் பானையெல்லாம் கட்டாயம் இருக்கும். அடுக்குப் பானையிலதான், உப்பு, புளி, மிளகாய் போட்டு வெச்சுருப்போம். அது விதைகளைக்கூட சேமிச்சு வைக்கலாம். உப்பைப் போட்டு முட்டைகளை வெச்சா... கெட்டுப் போகாது. அப்படியே குளுகுளுனு இருக்கும். இப்பவெல்லாம் துருப்பிடிக்காத எஃகு பொருட்கள் வந்த பின்னாடி, அடுக்குப் பானையெல்லாம் போயே போச்சு.



அறுவடை பண்ணிட்டு வரும் நெல், தானியங்களைக் கொட்டி வைக்கிறதுக்கு குதிர் இருக்கும். ஒவ்வொண்ணும் பத்து, பன்ணெண்டு அடி உயரம் வரைகூட இருக்கும். வரகு வைக்கோல்ல களிமண்ணைச் சேர்த்து, ஊறவெச்சு குதிர் செய்வாங்க. அதுமேல சாணிப்பால் போட்டு மெழுகிடுவாங்க. அதுக்குள்ள தானியங்களைக் கொட்டி வெச்சா... வருசக் கணக்கா கிடக்கும். கூடவே வேப்பிலை, நொச்சியிலை இதையெயெல்லாம் போட்டு வெச்சுட்டோம்னா... பூச்சி, பொட்டு அண்டாது. அப்படித்தான் இந்த குதிர பராமரிச்சு பயன்படுத்திக்கிட்டிருக்கேன் பல வருசமா!

வீட்டுத் தேவைக்குதான் குதிர். பெரிய அளவுல அம்பது, அறுபது மூட்டைனு சேமிக்கணும்னா... பத்தாயம் கட்டி வெச்சுருப்பாங்க. மாம்பலகை மாதிரியான பலகைங்கள வெச்சு தயார் பண்ணியிருப்பாங்க. ஒவ்வொரு விவசாயி வீட்டுலயும் ஒண்ணு, ரெண்டு பத்தாயம் கண்டிப்பா இருக்கும். அறுவடை முடிஞ்சதும் அதுல நெல்லைக் கொட்டி வெப்பாங்க. வருசக் கணக்குல கிடக்கும். தேவைப்பட்டப்ப எடுத்துப் பயன்படுத்துவாங்க. இப்ப இதெல்லாம் கண்ணுல சிக்குறதேயில்லை'' என்று ஆதங்கப்பட்டார். 

திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு சே(ஜெ)யராமன், இப்போதும்கூட பாரம்பர்ய முறைப்படி விதைகளைச் சேமித்து வருபவர்களில் ஒருவர்.


''அறுவடை செய்யுறப்பவே விதைக்காகனு கொஞ்சம் கதிரை முத்த விடுவோம். அதை அறுத்து வெயில்ல காயவெச்சு, வைக்கோலுக்குள்ள சுத்தி, அதுக்குமேல சாணியைப் போட்டு மெழுகி பத்திரப்படுத்தி வெப்போம். இதுக்கு பேரு கோட்டை. அமாவாசை, இல்லனா... சிவராத்திரி அன்னிக்கு விதைநெல்லைக் காய வெச்சு, மறுநாள்தான் இப்படி கோட்டை கட்டுறது பழக்கம். இப்படிச் செய்யுறதால நெல்லோட முளைப்புத் திறன் அதிகமாகும். ஒரு வருசம் வரைக்கும் விதைநெல்லுக்கு வீரியம் குறையாது. இதுவே... 

பெரிய அளவுல விதைநெல் சேமிக்கணும்னா... அதுக்கு சேர் கட்டி வைக்கிறதுனு இன்னொரு முறையும் இருந்துச்சு. வீரிய விதை, அது, இதுனு வந்த பிறகு, காசு கொடுத்து சிறுகட்டு சிறுகட்டாக (packet) வாங்க ஆரம்பிச்சாங்க. கோட்டையைக் கோட்டை விட்டுட்டாங்க'' என்று உதட்டைப் பிதுக்கினார்.

பாரம்பர்ய வேளாண்மை முறைகள், சேமிப்பு முறைகள் பற்றி ஆய்வு செய்து வருகிறார் திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம் பல்கலைக்கழக வேளாண்மைப் புல இணைப் பேராசிரியர் சுந்தரமாரி. அவரிடம் பழங்கால சேமிப்பு முறைகள் பற்றிக் கேட்டபோது, ரொம்பவே சுவாரசியமாகிவிட்டார்.

''விதைக்காக சேமிக்கற தானியங்கள மணல் இல்லனா... சாம்பல் கலந்து வெக்கலாம். துவரையை செம்மண்ணோடு கலந்து வைப்பாங்க. பெரும்பாலும் அடுக்குப் பானையை அடுப்புக்கு மேலதான் தொங்க விட்டிருப்பாங்க. அடுப்புல வர்ற புகையே, பூச்சிவிரட்டியா பயன்படும். தரையில வட்டமாவோ, சதுரமாவோ குழியெடுத்து அதுல தானியங்களைக் கொட்டி, சாக்கு போட்டு, கல்லால் மூடி வெச்சு சேமிக்கிற பழக்கமும் இருந்திருக்கு.

இப்படி ஒண்ணொண்ணுக்கும், ஓரோரு யுக்தியைக் கண்டுபிடிச்சு பயன்படுத்தியிருக்காங்க நம்ம முன்னோருங்க. ஒவ்வொரு பகுதியிலயும் ஒவ்வொரு மாதிரியான சேமிப்புக் கலன்களையும் பயன்படுத்தியிருக்காங்க. ஆனா, அதுமாதிரியான சேமிப்புக் கலன்களையெல்லாம் வடிவமைக்கிறதுக்கு கூட இன்னிக்கு ஆளேயில்ல.

பெரும்பாலான விசயங்கள் கையை விட்டுப் போயிடுச்சு. மிச்ச சொச்சமிருக்கற விசயங்களும் போயிக்கிட்டே இருக்கு. இப்ப ஓரளவு விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கறதால... பழைய முறைகளையெல்லாம் கடைபிடிங்கனு விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்லிக்கிட்டிருக்கோம்'' என்றவர்,

''பார்ப்போம்... காலம்தானே எல்லாத்தையும் தீர்மானிக்கணும்!'' என்று எதிர்பார்ப்போடு முடித்தார்.
நன்றிகள்.