பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் 1934ம் ஆண்டு கார்த்திகை மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியில் பிறந்தார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை பருத்தித்துறை கா(ஹா)ட்லிக் கல்லூரியிலும் பயின்றார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை பருத்தித்துறை கா(ஹா)ட்லிக் கல்லூரியிலும் பயின்றார்.
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியற் கற்கை நெறியை நிறைவு செய்தார். அன்றைய காலத்தில் கொழும்பில் இயங்கிய இலங்கைப் பல்கலைக்கழகத்திலேயே பொறியியற்பீடம் இயங்கியது.
தன்னுடைய பட்ட மேற்படிப்பை கேம்பிறிச்(ஜ்) பல்கலைக் கழகத்தில் 1962ம் ஆண்டு கலாநிதிப் பட்டத்துடன் நிறைவு செய்தார். ‘துரை விதி’ என்னும் மணல் துறை சார்ந்த விதி ஒன்றையும் நிறுவினார். இன்றும் கூட குடிசார் பொறியியலில் கற்பிக்கப்படும் கேம்-களிமண் நியமப்பாதை (Cam- clay locus) ஆனது துரை விதியிலிருந்தே பெறப்பட்டது.
தொடர்ந்து இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கப்பட்டதும் அங்கும் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக பொறியியற்பீட பீடாதிபதியாகவும் கடமையாற்றினார்.
பின்னர் 1988ம் ஆண்டு புரட்டாதி மாதத்திலிருந்து 1994ம் ஆண்டு சித்திரை மாதம் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தராக கடமையாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஒன்று நிறுவப்படும் என்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுதி மொழியையடுத்தே பேராசிரியர் யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தரானார். ஆனால் இன்று வரை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கப்படவேயில்லை. எனினும் தற்போது அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் ‘அக்பர் பாலம்’ பேராசிரியரினால் நிர்மாணிக்கப்பட்டது. சிங்களப் பேராசிரியர் ஒருவரின் சவாலை ஏற்று மகாவலி ஆற்றில் ஒரேயொரு தூணை மட்டும் நிறுவி இப்பாலம் கட்டப்பட்டது. ‘துரைராசா பாலம்’ என அழைக்கப்பட வேண்டிய அந்தப் பாலம் இன்று ‘அக்பர் பாலம்’ என்றே அழைக்கப்படுகிறது. தமிழர்களாகிய எங்கள் பலருக்கே இந்த விடயம் தெரியாது.
நாங்களாவது அந்தப் பாலத்தின் பெயரை ‘துரைராசா பாலம்’ என அழைப்பதன் மூலம் பேராசிரியரின் திறமைகளை மறைக்காமல் நினைவு கூறப்பட வேண்டியவரை நினைவு கூர்ந்து உண்மைகளை அடுத்த சந்ததியினருக்கு கடத்துவோம்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கடமையாற்றிய போது உடுப்பிட்டியிலிருந்து ஏறக்குறைய முப்பது கிலோ மீற்றர்கள் தூரமுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு துவிச்சக்கர வண்டியிலேயே சென்று வந்தார்.
போர் மேகங்கள் வடமராட்சிப் பகுதியை அதிகமாகச் சூழ்ந்திருந்த அந்தக் காலப்பகுதியிலும் வல்லை வெளியினூடாகப் பயணம் செய்து தன்னுடைய பணியைத் தவறாது செய்தார். மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். எல்லோரிடமும் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் ஒழுக்க சீலர். அதனால் எல்லோருக்குமே பேராசிரியர் துரைராசாவை மிகவும் பிடிக்கும்.
அளப்பரிய சேவைகள் செய்த பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் நோயின் கொடிய பிடியில் சிக்கி 1994ம் ஆண்டு ஆனிமாதம் 11ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.
நன்றிகள்.