Friday, 26 July 2013

பசியின்றி அவதிப்படுவர்கள் அதிகம்...........!

பசியால் அவதிப்படுபவர்களை விட பசியின்றி அவதிப்படுவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுக்கள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் பசி என்பதே சிலருக்கு ஏற்படுவதில்லை. இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை காலையில் மட்டும் கசாயம் செய்து குடித்து வந்தால் பசி நன்கு உண்டாகும்.


குடல் பூச்சி நீங்க

வயிற்றுப் பூச்சிகள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடல் தேறாமல் நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். வயிற்றுப் பூச்சி நீங்க நிலவேம்பு இலையை நீரில் கொதிக்க வைத்து கசாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலைவேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

உடல் வலுப்பெற

உடல் தேறாமல் மெலிந்து காணப்படுபவர்கள் நில வேம்பு சமூலத்தை கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

மயக்கம் தீர

சிலருக்கு அடிக்கடி மயக்கம் உண்டாகும். அதிர்ச்சியான நிகழ்வுகளைக் காணும்போது மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தீர நிலவேம்பு கசாயம் செய்து அருந்துவது நல்லது.

பித்த அதிகரிப்பைக் குறைக்க

பித்தம் பிசகினால் பிராணம் போகும்.

என்ற சித்தரின் வாக்குப்படி பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.

தலைவலி நீங்க

அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கசாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.

தடிமன் காய்ச்சல் குறைய

நிலவேம்பு 15 கிராம்
கிச்சிலித் தோல் 5 கிராம்
கொத்துமல்லி 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து 2 குவளை நீர்விட்டு கொதிக்க வைத்து அப்படியே மூடி வைத்து 1 மணி நேரம் கழித்து பின் வடிகட்டி நாள் ஒன்றுக்கு 30 மி.லி. என தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் தடிமன் காய்ச்சல் நீங்கும்.

குழந்தைகளுக்கு

வயிற்றுப் பொருமல் அல்லது கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்பின் இலையை சாறெடுத்து கொதிக்க வைத்து ஆறிய பின் 5 மி.லி கொடுத்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

நில வேம்பு சமூலம் (காய்ந்தது) 16 கிராம்
வசம்புத் தூள் 4 கிராம்
சதக்குப்பை விதைத் தூள் 4 கிராம்
கோரைக் கிழங்கு தூள் 17 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து 1 குவளை நீர்விட்டு கொதிக்க வைத்து அதை ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து வடிகட்டி தினமும் 2 அல்லது மூன்று வேளை அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். செரிப்பின்மை கோளாறுகள் நீங்கும்

நிலவேம்பு சமூலம் காய்ந்தது 34 கிராம்
கிராம்புத்தூள் 4 கிராம்
பொடித்த ஏலம் 4 கிராம்
இவற்றை 1 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அதை

6 மணி நேரம் ஊறவைத்து பின் வடிகட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் குடித்து வந்தால் விட்டுவிட்டு வரும் காய்ச்சல், குளிர்சுரம், கீல்பிடிப்பு, செரியாமை போன்றவை நீங்கும்.

தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கசாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும்.

அண்மையில் மக்களைத் தாக்கிய சிக்குன்குன்யா என்ற காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயத்தை அருந்துமாறு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதிலிருந்தே நிலவேம்பின் மகிமை உங்களுக்கு புரிந்திருக்கும்.

சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நிலவேம்பின் பயன்பாடு அதிகம். நிலவேம்பின் மருத்துவத் தன்மையைப் பயன்படுத்தி நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.
நன்றிகள்.