உலக அதிசயங்கள் பட்டியலில் இதற்கு முன் இடம் பெறாத ‘மச்சு பிச்சு’ நகரம் 15–ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருந்தாலும், 19–ம் நூற்றாண்டு வரை உலகத்தின் கண்களுக்கு புலப்படவே இல்லை. ‘இன்காக்களின் தொலைந்த நகரம்’ என்று பிற்காலத்தில் வரலாற்று ஆய்வாளர்களால் அழைக்கப்படும் மச்சு பிச்சு நகரம், தென் அமெரிக்க நாடான ‘பெரு’ நாட்டில் கடல் மட்டத்திலிருந்து 2800 மீட்டர் உயரத்தில் மூன்று புறங்களிலும் மலைகளால் சூழப்பட்ட உருபம்பா நதியிலிருந்து 400 மீட்டர் தூரத்தில் காடுகள் அடர்ந்த மலைப்பகுதியில் கற்களால் உருவாக்கப்பட்ட நகரம்.
இன்காக்கள் என்பவர்கள் 12–ம் நூற்றாண்டில் பெரு தேசத்தில் ஆந்திய மலைப்பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக வாழ்ந்து வந்த மலையின மக்கள். இயல்பாகவே கட்டிடக்கலையில் நுட்பமான அறிவும், நிர்வாகத் திறனும் மிக்க இன்காக்கள், 15–ம் நூற்றாண்டு வரை தங்களுக்கென்று ஒரு அரசை உருவாக்க முயற்சிக்கவில்லை.
எங்கு சென்றாலும் ஒற்றுமை உணர்வோடு வாழும் தன்மை பெற்ற அவர்களின் மொழி ‘கொச்சாவா’ என அறியப்படுகிறது. எழுத்து வடிவம் இல்லாத மொழியாக இருந்ததால் இன்காக்களின் கலாசாரம், பண்பாடு, கலை இலக்கிய படைப்புகள், விளையாட்டுக்கள் என்று எதைப்பற்றியுமே உறுதியாக அறிந்துகொள்ள முடியவில்லை.
1911–ல் கி(ஹி)ராம் பிங்காம் என்பவர் தான் முதன் முதலில் இப்படி ஒரு நகரம் இருந்தது பற்றியும், அங்கு காவல்கோட்டைகள் போல் அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் மற்றும் இன்றைய தொகுப்பு வீடுகள் போல் கட்டப்பட்டிருந்த அவர்களது குடியிருப்புகள் பற்றியும் விரிவாக வெளிக்கொணர்ந்தார்.
மச்சு பிச்சு என்றால் இன்காக்களின் மொழியில் ‘மூத்த மலை’ என்று பொருள். 1438 ஆம் வருடம் சாப்பா இன்கா (முதன்மையான அரசன்) என்று அழைக்கப்பட்ட இன்கா பாச்சாகுடெக் என்பவர் தான் கசுக்(ஸ்)கோ நகரை தலைமை இடமாகக்கொண்டு இன்கா வம்ச பேரரசை நிறுவினார். இன்காக்களின் ராணுவத் தலைநகர் விட்கோசு(ஸ்) என்றழைக்கப்பட்டது. பெருவின் மலைப்பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் (கிட்டத்தட்ட 1,50,00 மைல்கள்) அவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது.
அமேசான் காடுகளில் பதுங்கியிருந்த காட்டுமிராண்டி கூட்டங்கள் அவ்வப்போது கசுக்(ஸ்)கா நகருக்குள் புகுந்து அங்குள்ள மக்களைதாக்கி, சொத்துக்களை களவாடிச்செல்வதைத் தடுக்க அவரது ஆட்சிகாலத்தில் தான் மச்சு பிச்சு நகரம் நிர்மாணிக்கப்பட்டு, கோட்டை போல் கற்சுவர்கள் கட்டப்பட்டன.
ஆனால் அவரது ஆட்சிக்குப்பிறகு நிலையான ஆட்சியைத்தரும் வலு அவருக்குப்பின் வந்த இன்கா அரசர்களுக்கு இல்லை. கசுக்கா நகரைச்சுற்றி இருந்த அடஹுவால்பா மற்றும் ஹூவாஸ்கர் ஆகிய இரு பிரிவுகளுக்கு இடையே கசுக்காவை யார் நிர்வகிப்பது என்பது குறித்து நடந்த போர் காரணமாக இரு பிரிவுகளிலும் பலரும் பலியாயினர்.
தென்அமெரிக்க பகுதிகளில் முன்னேறிய இனமாக இருந்த ஸ்பானியர்கள், அருகிலிருந்த சிறிய அரசுகளை ஆக்கிரமித்து அங்கிருந்த பூர்வீகக் குடிமக்களை விரட்டி அடித்தனர். அவர்களது கண்களுக்கு புலப்பட்ட இன்காக்களின் நகரம் மிக பிரம்மாண்டமானதாய், பாதுகாப்பானதாய் இருந்தது. இன்காக்களின் இரு பிரிவுகளுக்குள் நடந்த அதிகாரப்போர் ஸ்பானியர்கள் உள்ளே நுழைய எளிதாக வழி வகுத்துவிட்டது.
எனவே அவர்களை விரட்டிவிட்டு இன்காக்களின் வீடுகளை, கோட்டைகளை ஸ்பானியர்கள் ஆக்ரமித்தனர். இன்காவின் கடைசி அரசன் சந்தடியின்றி, எங்கு சென்றான் என்று தெரியாதபடி கோட்டையை விட்டு ஓடிப்போனான். இதன் காரணமாக இன்காக்கள் காடுகளுக்குள் சென்று வில்காபம்பா என்ற இடத்தில் தஞ்சமடைந்தனர். வில்காபம்பாவிலும் தங்கள் வாழ்விடங்களை சிறப்பாக அமைத்துக்கொண்டனர்.
1875–ல் க(ஹ)வாய் தீவில் பிறந்த கி(ஹி)ராம் பிங்கம் என்பவர் பிற்காலத்தில் குறிப்பிடத்தக்க செல்வந்தராக உயர்ந்தார். வரலாற்று ஆய்வுகளிலும், சுற்றுப்பிரயாணங்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட பிங்காம், அமெரிக்காவின் கா(ஹா)ர்வர்ட் பல்கலைக்கழகத்தின் நூலகப்பிரிவில் பணியாளராக சேர்ந்தார்.
அங்கு தென் அமெரிக்க தொகுப்பு ஒன்றை உருவாக்கும் பணி அவருக்குத் தரப்பட்டது. அதற்கு முன் தென் அமெரிக்கா பற்றிய எந்த முறையான ஆய்வும் அந்த பல்கலைக்கழகத்தில் இல்லை. எனவே பிங்காம் பல நூல்களை தேடித்தேடி வாசிக்க வேண்டியிருந்தது. தென் அமெரிக்காவின் இணையற்ற போராளி என அறியப்பட்ட சைமன் பொலிவார் பயணித்த நாடுகளில் எல்லாம் தானும் பயணிக்க ஆசைப்பட்டார் பிங்காம்.
போசு (ஸ்)டன் வழக்கறிஞர் வில்லியம் ப்ரெங்காட் என்பவர் மெக்சிகோவிலும் பெருவிலும் நிகழ்ந்த வரலாற்று சம்பவங்கள் குறித்து எழுதிய கட்டுரைகளை பிங்காம் வாசிக்க நேர்ந்தது. 1906–ம் ஆண்டு தனது முதல் பயணத்தை துவக்கினார் பிங்காம். ஆனால் அந்த பயணம் பெரும்பாலும் வேட்டையாடுதல் அனுபவத்துக்காகவும், கொண்டாட்ட மனோபாவத்துக்காகவுமாக இருந்தது.
அமெரிக்கா திரும்பிய பிங்காம் யேல் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். அங்கு அவருக்கு கிடைத்த ஆய்வுக்கட்டுரைகள் அவருக்குப் புதிய பரிமாணத்தைத் தந்தது. மீண்டும் அவர் தனது பயணத்தை 1911–ம் ஆண்டு துவக்கினார். ஆய்வு நோக்கில் திட்டமிடப்பட்டாலும் பல்கலைக் கழகத்திலிருந்து எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை. அவருடன் பணியாற்றிய நண்பர்கள் சிலர் பொருளாதார உதவியும், உடன் வர சம்மதத்தையும் தந்தனர்.
கார்லோசு(ஸ்) ரொமிரோ என்கிற பெரு தேசம் பற்றி அதிகம் ஆய்வு செய்த மனிதரை பிங்காம் சந்தித்தார். இன்காக்களின் கடைசி சில நபர்களில் ஒருவரான திது குனியாசு(ஸ்) என்பவரிடமிருந்து பெறப்பட்ட சில தகவல்களைப் பற்றி அவர்தான் பிங்காமிடம் தெரிவித்தார். அதோடு துவக்க காலத்தில் பெருவில் பயணம் செய்த காம்டெ தெ சார்டிகசு(ஸ்) என்பவரின் குறிப்புகளும் பிங்காமுக்கு கிடைத்தன.
இதன் அடிப்படையில் பிங்காம், இன்காக்களைப் பற்றி தேட முயற் சித்தபோது மச்சு பிச்சு நகரத்தின் சிதிலமடைந்த பகுதிகளையும், கல் வீடுகளையும் கண்டுபிடித்தார். கசு(ஸ்)கோவிலிருந்து 50 மைல் தொலைவில் உள்ள இன்றைய அக்குவாசு(ஸ்) கலியந்திசு(ஸ்) என்ற ஊருக்கு அருகில் மச்சு பிச்சு நகரம் இருந்ததை அவர்தான் தோண்டி எடுத்து உலகுக்கு அறிவித்தார். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் அந்த இடங்களை சுத்தம் செய்வதற்கும், எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்துவதற்குமே செலவிட்டார். இன்காக்கள் வனப்பகுதிகளில் சென்று தங்கியபின் அவர்கள் உருவாக்கிய வில்காபம்பா நகரை 1964–ல் சே(ஜெ)னி சாவெ என்பவர் கண்டுபிடித்தார்.
இன்காக்கள் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை வணங்கி வந்திருக்கின்றனர். சில முடிச்சுகள் கொண்ட கயிறுகள் மூலம் கணக்கிடும் அவர்கள் முறையை பயன்படுத்தியதையும், அதற்குப்பெயர் கிப்பு என்பதையும் அவரது ஆய்வுகள் வழியே தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றபடி அவர்கள் எப்படி அத்தனை உயரத்துக்கு கற்களை கொண்டு சென்றார்கள், அவர்களது கட்டிடக்கலைத் தொழில் நுட்பம் எப்படியானது என்பது பற்றியும் விரிவாக அடுத்த தலைமுறை அறியமுடியாதபடி அவர்களது மொழி வளமற்றதாக இருந்திருக்கிறது.
பெரும்பாலான தேசங்களில் வாழ்ந்து வந்த பல்வேறு இன மக்கள் மருத்துவம், அறிவியல், கலை, வானவியல், இலக்கியம் ஆகியவற்றில் தன்னிகரற்ற அறிவும், சாகசமும், கடின உழைப்பும் மிக்கவர்களாக இருந்தாலும் வரலாற்றை பதிவு செய்யும் வழக்கமும், ஆர்வமும் இல்லாதவர்களாக இருந்ததால் அந்த நுட்பங்களை எல்லாம் மனித குலம் இன்று இழந்து நிற்கின்றது.
இன்கா மக்களின் மொழி, எழுத்து வடிவம் இல்லாததால் அவர்களது மேம்பட்ட ஞானம், திறன் ஆகியன அவர்களது இன மக்களோடு புதைந்தே போனது. ‘கரியமில வயது’(Carbon dating)போன்ற இன்றைய தொழில் நுட்பம் மூலம் அவர்கள் வாழ்ந்த வருடங்களை கணிக்க முடிந்ததே தவிர அவர்களது முழுமையான வரலாற்றை மீட்க முடியவில்லை.
1983–ல் யுனெசு(ஸ்)கோ அமைப்பு மச்சு பிச்சுவை புராதானச் சின்னமாக அறிவித்தது. சிலியின் புரட்சிகர கவிஞன் பாப்லோ நெரூடா மச்சு பிச்சுவின் வனப்பில் மயங்கி ஒரு கவிதைத் தொகுப்பையே எழுதி வெளியிட்டிருக்கிறார். வரலாற்றைப் பதிவதன் மூலமும், மீட்டெடுப்பதன் மூலமுமே மனிதகுலம் மேம்படையமுடியும்.
அதற்கு உலக அதிசயங்கள் போன்ற பட்டியல்களை உருவாக்குவது அதன் மீதான அக்கறையையும், கவனத்தையும் அதிகப்படுத்தும்.
நன்றிகள்.