பிணிபல நீக்கும் கற்பக மூலிகை தூதுவளை. சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர். மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோ அல்லது உலோக உபரச உப்பு பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்திபத்தியம் மேற்கொண்டு ஒரு மண்டலம்(நாட்கள்) சாப்பிட்டு வந்தால் பிணியில்லாப் பெருவாழ்வு வாழலாம் உடலை கற்பமாக்கும் இம் மூலிகைகள்தான் கற்ப மூலிகைகள்.
தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காயகற்ப மருந்துகள் சிறப்பானதாகும். காயகற்பம் = காயம்+கற்பம். காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலை நோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து. நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்து நீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும் தூதுவளை ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும்.
இதன் இலை கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும்.
தூதுவளை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது. சளி பிடிப்பதால் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளில் இருமலும் ஒன்று. சளி போனாலும் இருமல் போகாமல் பாடு படுத்தும்.
இருமலைப் போக்க எளிதான வழி உள்ளது. தூதுவளை இலையை 4 அல்லது 5 எடுத்து அதன் முட்களை நீக்கிவிட்டு கழுவிக் கொள்ளவும். இலைக்குள் 4 அல்லது 5 மிளகு வைத்து வெற்றிலைப் போல் மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிட இரண்டே நாளில் மார்புச் சளி போய், தொடர்ந்து வந்த குத்தல் இருமலும் காணாமல் போகும்.
தூதுவளையை உளுத்தம் பருப்பு, புளி வைத்து துவையல் செய்தும் சாப்பிடுவார்கள். சளி பிடித்தவர்களுக்கு இந்த துவையலை செய்து கொடுத்தால் எந்த மருந்துக்கும் அசராத சளியும் கரைந்து காணாமல் போய் விடும்.
தூதுவளை இலை உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும் என்பதால், சூட்டு உடம்புக் காரர்கள் அதிகமாக சாப்பிடக் கூடாது.
நன்றிகள்.