Thursday, 26 July 2012

கைவிளக்கு ஏந்திய காரிகை.................!



















செவிலியர்கள் என அழைக்கப்படும் தாதியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூரும் வகையில் உலக செவிலியர் தினம் வருடாந்தம் மே மாதம் 12ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

உலக செவிலியர் தினம் (International Nurses Day)தோன்றிய வரலாறு.

உலக செவிலியர் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மே 12ஆம் தேதி இந்த நாளை 1965ஆம் ஆண்டிலிருந்து நினைவுகூருவது வழக்கம்.

1953ஆம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்காவின் அரச சுகாதாரத் துறையைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் என்பவர் இந்த நாளை செவிலியர் நாளாகப் பிரகடனப்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்தார். எனினும் அவரது வேண்டுகோள் அன்று நிராகரிக்கப்பட்டது.

1974 ஆம் ஆண்டு ய(ஜ)னவரி மாதம் நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்சு(ஸ்) நைட்டிங்கேள் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது. அன்றைய நாளை உலக செவிலியர் தினமாக கடைப்பிடிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படியே வருடாந்தம், மே மாதம் 12ஆம் திகதி உலக செவிலியர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய நர்சிங் முறை 19ம் நூற்றாண்டில் தான் துவங்கியது என்றாலும் ரோமானியர்கள் காலத்தில் காயங்களுக்கு கட்டுப் போடும் வேலையில் பெண்கள் அமர்த்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது. "நர்சிங்'("Nursing") என்ற வார்த்தை "நியுடிரிசியா' ("Niyutiriciya") என்ற லத்தீன் சொல்லில் இருந்து தான் வந்தது.

இதற்கு "உணவு மற்றும் மருந்து வகைகளை அன்புடன் நமக்கு ஊட்டி ஊக்கப்படுத்துபவர்!' என்று பொருள். உலகில், நர்சுகளுக்காக முதன் முதலில் ஒரு பயிற்சி பள்ளியைத் துவங்கியவர் இத்தாலியை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல்.

தன் 17வது வயதில் கல்லூரி படிப்பை முடித்தார் நைட்டிங்கேல். அவருக்கு ஊர் சுற்றுவதில் அலாதி பிரியம் இருந்தது. அதேசமயம் அரசியல் மற்றும் சமூக சேவையிலும் நாட்டம் இருந்தது. ஆனால், அவருடைய பெற்றோர் அவரை மருத்துவ துறையில் ஈடுபடுத்தவே விரும்பினர்.

1847ல் சுகாதார சீர்திருத்தங்கள் பற்றிய படிப்பை படித்தார் நைட்டிங்கேல். அதில் மேலும் பயிற்சி பெற, பெர்லின் மருத்துவமனைகளுக்கு சென்று பார்வையிட்டார். யெர்மனியில் உள்ள கெய்சர்வெர்த் மருத்துவமனையில் 1850ல் இருவாரங்கள் தங்கி பயிற்சியில் நைட்டிங்கேல் ஈடுபட்ட போது தான் அவருக்கு செவிலியர் தொழில் மீது ஆர்வம் வந்தது.

அதன்பின் செவிலியர் பயிற்சி தான் தன் லட்சியம் என உறுதி கொண்டு, பெற்றோர் சம்மதத்துடன் 1852ல் பாரீசி(ஸி)ல் உள்ள "அற சகோதரி" ("Sister of charity')யில் தாதிப்(Nursing) பயிற்சி பெற்றார்.

இங்கிலாந்தும், பிரான்சும் சேர்ந்து ரசியாவிற்கு எதிராக 1854ல் நடத்திய கிரீமியன் போரில் அடிபட்ட ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஈடுபட்டிருந்த கிங்காலேஜ் மருத்துவமனையின் தலைமை பொறுப்பில், காயம்பட்ட வீரர்களுக்கு நேரம், காலம் பார்க்காமல் முழு ஈடுபாட்டுடன் செய்தார் நைட்டிங்கேல்.

இதனால், அவர் பெயர் உலகெங்கும் பரவியது. பின்னர், இங்கிலாந்து திரும்பிய நைட்டிங்கேலை இங்கிலாந்து மக்கள் கவுரவபடுத்த விரும்பினர். அதனால், ஏகப்பட்ட பரிசுகளை பொன்னும், பொருளாக வழங்கினர். தனக்கு கிடைத்த பணத்தின் மூலம் ஒரு தாதிப்பள்ளி துவங்க நைட்டிங்கேல் விரும்பினார். 

இதற்கிடையில் இங்கிலாந்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கு தாதிப் பிரிவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் நைட்டிங்கேல். 1858ல் நைட்டிங்கேல் "தாதிகளின்' (Nursing) விதிமுறைகளையும், பாட திட்டங்களையும் பற்றிய இரு நூல்களை எழுதினார்.

அதுவே, பின் உலகெங்கும் தாதிகள் பற்றிய படிப்பிற்கு மூல நூலாக இன்று வரை இருந்து வருகிறது. நைட்டிங்கேலின் லட்சிய கனவான உலகின் முதல் தாதிகளின் பள்ளி 1860ல் யூன் மாதம் லண்டனில் தேம்சு(ஸ்) நதிக்கரையில் 15 பயிற்சியாளர்களுடன் துவங்கப்பட்டது.

இரண்டு வருட தாதிப் பயிற்சியில் மருத்துவ அறிவு, சேவை மனப்பான்மை முதலியவை சொல்லி கொடுக்கப்பட்டது. அதன்பின் அம்முறை உலகெங்கும் 1860 முதல் 1893 வரை பரவி உலகெங்கும் தாதிப் பள்ளிகள் துவங்கின. 

இந்தியாவில் முதன், முதலாக தாதிகளின் கல்லூரி சென்னை பொது மருத்துவமனையில் 1871ல் துவங்கப்பட்டது. இங்கிலாந்திலிருந்து தாதிப் பயிற்சி தர தாதிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஆறு பேருக்கு இந்தியாவில் தாதிப் பயிற்சி அளித்து சான்றிதழ்கள் வழங்கினர்.

கஸ்தூரிபாய் கணபத் எனும் பெண்மணி, இந்தியாவில் முதன் முதலாக தாதிப்பயிற்சியை 1891ல் அளித்தார். இவர் தான் முதன் முதல் இந்திய தாதிப் பயிற்சியாளர். மும்பையில் 1909ல் முதன் முதலாக தாதிப் பயிற்சி சங்கம் (Association) துவங்கப்பட்டது.

பிளாரன்சு நைட்டிங்கேலின் செவிலியர் சேவையைப் பாராட்டி இங்கிலாந்து அரசு அந்நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் மெரிட்டை (Oder of Merit) 1907ல் எட்வர்ட் மன்னர் மூலம் அவருக்கு வழங்கியது. இங்கிலாந்தில் இவ்விருதை பெற்ற முதல் பெண்மணி நைட்டிங்கேல் தான்.

இவருக்கு "கைவிளக்கு ஏந்திய காரிகை' என்ற சிறப்பு பட்டத்தை வழங்கியவர் ஒரு நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது. பிளாரன்சு நைட்டிங்கேல் லண்டனின் ஆபே எனுமிடத்தில் ஆக., 13, 1910ல் காலமானார்.

டாக்டர் பட்டம் பெறுபவர்கள் மருத்துவ துறையின் தந்தை ஹிப்போகிரேட்ஸ் பெயரில் சத்திய பிரமாணம் எடுத்து கொள்வர். நர்சிங் தொழில் செய்பவர்கள் பிளாரன்சு நைட்டிங்கேலின் பெயரில் சத்திய பிரமாணம் எடுத்து கொள்வர்.

நன்றிகள்.