Sunday, 15 July 2012

உண்ணும் உணவு...................!

நம் உடல் கூறுவதை சற்று கேளுங்கள் நண்பர்களே!!

நீங்கள் உண்ணும் உணவு எப்படிப் பயணிக்கிறது, எத்தகைய கட்டங்களை எல்லாம் கடக்கிறது என்பதை நீங்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.

அமைப்பு, வாயில் இருந்து ஆசனவாய் வரை 'ஒரு வழிப் பாதை’தான். எனக்குள் சென்ற உணவு, வாய் வழியாக ஒருபோதும் திரும்ப வராது.

அதற்குத் தக்க வகையில் சிறப்பான அமைப்பு முறையை இயற்கை எனக்கு வழங்கி இருக்கிறது. (சாப்பிட்ட உணவை நினைத்தபோது எல்லாம் வாய்க்குக் கொண்டுவந்து மாடு அசைபோடுகிறது அல்லவா?

அந்த மாதிரி மனிதர்கள் சாப்பிட்ட உணவை மறுபடியும் வாய்க்குக் கொண்டுவர முடியாது. மனிதனுக்கு ஒரே இரைப்பைதான். ஆனால், மாட்டுக்கு நான்கு இரைப்பைகள்).

என்னதான் நீங்கள் தலைகீழாக நின்றாலும் சிரசாசனமே செய்தாலும்கூட உங்களால் உள்ளே அனுப்பப்பட்ட உணவு கீழ் இருந்து மேலாக வருவதற்கு வாய்ப்பே இல்லை.

இது எப்படி சாத்தியம் என நீங்கள் நினைக்கலாம். உங்களுடைய வாழ்க்கை சுழற்சிமயமானது என்பது இயற்கைக்கு நன்றாகத் தெரிந்து இருக்கிறது.

தலைகீழாகத் தொங்கியபடி வித்தை காட்டும்ஏழைகளையும், உடலை வளைத்து வேலை பார்ப்பவர்களையும் ஒருகணம் நினைத்துப்பாருங்கள்.

என்னுடைய பாதை ஒரு குழாய் வடிவில் இருந்தாலும், தலைகீழாகத் தொங்கும்போதோ, உருண்டு புரளும்போதோ, உண்ட உணவு வெளியே வருவது இல்லை.

காரணம், எனது பாதையில் ஐந்து இடங்களில் வளையம்போல உள்ள சுருக்குத் தசைகள்தான்!

இந்த சுருக்குத் தசைகளின் அமைப்புகளையும், அதன் செயல்பாடுகளையும் கேட்டால், என்னை வடிவமைத்த இயற்கை பொறியிலாளரை நீங்கள் வியப்பீர்கள்.

உண்ட உணவு எனது பாதையின் வழியே வருகையில், ஐந்து இடங்களில் இருக்கும் சுருக்குத் தசைகளும் வேலை செய்யத் தொடங்கிவிடும்.

இந்தப் பணியை நம்முடைய கட்டுப்பாடு இல்லாமல், மூளையில் இருந்து கிடைக்கப்பெறும் சமிக்ஞைகள் (Signals) மூலமாகவே சுருக்குத் தசைகள் செய்யத் தொடங்கிவிடும்.

அதாவது, உணவு எந்த இடத்தில் பயணிக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள சுருக்குத் தசை விரிந்து, அந்த இடத்தில் உள்ள உணவுப் பாதையைத் திறந்து உணவை உள்ளே அனுப்பும்.

அடுத்த வினாடியே மூளையின் கட்டளைக்கு ஏற்ப சுருங்கி அந்த இடத்தை மூடிவிடும். சாப்பிட்ட மறு கணமே நீங்கள் தலை கீழாக நின்றாலும் உணவில் இருந்து துளி அளவுகூட வெளியே வராததற்கு இந்த ஆச்சரிய வடிவமைப்புதான் காரணம்.

சுருக்குத் தசைகள் இல்லாவிட்டால் என்னாகும் என்பதை நீங்கள் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. என்ன சாப்பிட்டாலும், அடுத்த கணமே வாந்தி, குமட்டலாக வெளியே வந்துவிடும்.

பிறந்த குழந்தைகள் தாயிடம் பால் குடித்த சில நிமிடங்களிலேயே வாந்தி எடுப்பது இதனால்தான். சுருக்குத் தசைகள் வலிமையோடு இல்லாத நிலையில்தான் தாயிடம் பால் குடித்ததும் குழந்தை உடனே அதனைக் கக்கிவிடுகிறது.

இதைத் தடுக்க தாய்மார்கள் குழந்தைக்குப் பால் கொடுத்த பிறகு தங்களின் தோளில் போட்டு முதுகைத் தட்டிவிடுவார்கள்.

சுருக்குத் தசைகளால் உருவான இந்த ஐந்து அடைப்பான்களும் எந்த இடங்களில் இருக்கின்றன என்பதையும் நீங்கள் தெரிந்துகொண்டால்தான் பலருக்கும் ஏற்படும் ஜி.இ.ஆர்.டி. (GERD) என்கிற பிரச்னையைப் பற்றி சுலபமாக விளங்கிக்கொள்ள முடியும்.

சாப்பிட்ட உடன் அமிலம் மேலே எழும்பி வருவதைத்தான் ஜி.இ.ஆர்.டி. என வைத்தியர்கள் சொல்கிறார்கள்.

உணவுக் குழாயில், வாயில் இருந்து இரைப்பைக்கு உணவைக் கொண்டு செல்லும் பாதையின் மேல் பகுதியிலும் முடிவுப் பகுதியிலும் இரண்டு அடைப்பான்கள் இருக்கின்றன.

மேல் பகுதி அடைப்பானுக்கு கிரைக்கோ பெரிஞ்சியஸ் (Crico Pharyngeus) என்று பெயர். வாயில் இருந்து உணவு செல்லும் பொதுப் பாதை, மூச்சுக்குழாயும் உணவுக் குழாயுமாகப் பிரியும் இடத்தில் இந்த முதல் அடைப்பான் இருக்கிறது.

இது மூச்சுக்குழாய்க்குள் நாம் உண்ணும் உணவை செல்லாமல் தடுக்கும் வேலையைச் செய்கிறது. உணவுக் குழாயின் முடிவுப் பகுதியில்...

அதாவது இரைப்பையின் ஆரம்பத்தில் இரண்டாம் அடைப்பான் (Cardiac Sphincter) இருக்கிறது. இது இரைப்பையில் உள்ள அமிலம் மேலே சென்று உணவுக் குழாய்க்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது (நமது உடலில் அமிலம் உற்பத்தி ஆகும் ஒரே இடம் இரைப்பைதான்).

அதேபோல இரைப்பையின் அமிலம் மென்மையான சிறுகுடலைப் பாதிக்காமல் இருக்க, இரைப்பையின் முடிவில்... அதாவது சிறுகுடல் ஆரம்பத்தில் பைலோரிக் அடைப்பான் (Pyloric Sphincter) என்கிற மூன்றாம் அடைப்பான் இருக்கிறது.

சிறுகுடலின் முடிவில், பெருங்குடலின் ஆரம்பத்தில்... அதாவது சிறுகுடல் - பெருங்குடல் சந்திப்பில் (Ileocaecal Junction) நான்காம் அடைப்பான் உள்ளது. இது, சிறிது சிறிதாக சிறுகுடலில் கூழ் போன்ற திரவ நிலையில் உள்ள செரிமானம் ஆன உணவு மீதத்தை, பெருங்குடலுக்கு அனுப்புகிறது.

இதனால், பெருங்குடல் அந்த உணவுப் பொருளில் உள்ள நீரை முழுவதும் உறிந்துகொள்ளவும், மலத்தைத் திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாற்றவும் செய்கிறது.

இதை இலியோகோலிக் ஸ்பிங்க்டர் (Ileocolioc Sphincter) என்பார்கள். ஐந்தாம் அடைப்பான் (Anal Sphincter) மிக மிக முக்கியமானது.

உணவின் எச்சமாய் வெளியேறும் மலத்தை விரும்பிய நேரத்தில் வெளியேற்ற உதவியாய் ஆசன வாயில் அமைந்திருக்கும் அடைப்பான் இது. வயிறு என்கிற எனக்குள் இத்தனை அமைப்புகளா என நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது.

நீங்கள் உண்ணும் உணவு இத்தகைய கட்டங்களை எல்லாம் கடந்துதான் சக்தியாகவும் கழிவாகவும் மாறுகிறது. என்ன நண்பர்களே!!

இப்படி ஒரு அற்புதப்படைப்பான நம் உடலை நாம் தான் தேவையற்ற உணவுகளை திணித்து நோய்களை வரவழைத்துக் கொள்கின்றோம்...

இனியாவது உணவு விசயத்தில் சற்று கவனமாக இருப்போம்............

நன்றிகள்.