வாழ்க்கை எப்பொழுதும் அழகானது. அந்த அழகான வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை. நித்தமும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இவ்வாறு மாறுகின்ற உலகில் மாறாமல் இருப்பது எது?. "அன்பு" மட்டுமே உலகில் மாறாமல் இருகின்றது.
அன்பில் கிடைக்கும் சக்திக்கு நிகரான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. அன்பு என்ற அந்த அற்புத மருந்து தான் இந்த உலகை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது .
அந்த அன்பின் அளவு என்று குறைகிறதோ அன்று இந்த உலகம் அழிந்துவிடும். "தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை". ஆம் ,தாயை விடச் சிறந்த கோவில் இல்லை, ஏனெனில் அன்பின் பிறப்பிடம் தாய்தான். உலகில் வாழும் எந்த சீ(ஜீ)வராசியாக இருந்தாலும் அன்னை இல்லாமல் உருவாக முடியாது.
நாம் முதன் முதலில் தாயிடம் இருந்துதான் அன்பைப் பெறுகிறோம். தாயின் அன்புக்கு ஈடு இணை இந்த உலகில் எதுவுமில்லை. நம் வாழ்க்கையில் ஆயிரம் உறவுகள் வரலாம், போகலாம். ஆனால், என்றென்றும் நிலையான அன்பு தாயிடம் இருந்து மட்டுமே கிடைக்கும். எந்த ஒரு சூழ்நிலையிலும் தன பிள்ளையை விட்டுக்கொடுக்காமல் வாழும் நடமாடும் தெய்வம்தான் " அன்னை".
அன்பு ஓர் உணர்வு எனச் சொல்வது தவறு. அன்பு என்பது இறைவனின் முகம். இறைவனை, அன்பின் மூலமே காண முடியும். "அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோருமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்" எனத் துவங்கும் குர் ஆன்-னும், "அன்பே சிவம் சிவமே அன்பு "எனும் சிவவாக்கியமும், "எளியவர்களுக்கு அன்பு செய்கிறவர்கள் எனக்கே அதைச் செய்கிறார்கள்" என்ற பைபிளின் வாசகமும் , இறைவனின் முகம் அன்பு என்பதற்கான ஆதாரங்கள்.
அன்புக்கு நோயைக் குணமாக்கும் சக்தி உண்டு . பல ஆராயச்சிகளுக்குப்பின் , "அன்புக்கு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு " என ஆதாரப்பூர்வமாக அறிவிக்கிறது , உடல் மன மருத்துவத் துறை ( Mind Body Medicine Department ). அன்னையின் முத்தம் , தோழியின் கைக்ர்ப்பு , மற்றவர்களின் அன்பு நிறைந்த வார்த்தைகள் , இதையெல்லாம் விட ஒரு குழந்தையின் பாசக்குரல் நம்முள் நல்ல மாற்றங்களை ஏற்ப்படுத்துகிறது .
அந்த மாற்றம் தான் அன்பின் மருத்துவ குணம் . அதனால்தான் எத்தனை சண்டைகள் இருந்தாலும் ஒரு குழந்தை இருக்கும் வீடு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அன்பைக் கொடுப்பதற்கும், அன்பைப் பெறுவதற்கும் நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருகின்றோம். அன்பைப் பணத்தால் வாங்க முடியாது. அது , தகுதியானவர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படுகிறது.
அன்பு, கொடுக்கக் கொடுக்கக் கூடும், அது என்றும் குறைவதில்லை. அன்பு குறையுமிடத்தில் தான் தவறுகள் பெரிதாகத் தெரிகின்றன. இன்று, மனிதன் இயற்கையின் மீது வைக்கும் அன்பு குறைந்து விட்டது. அதனால் தான் இன்று, சுனாமி, சூறாவளி, புயல் எல்லாம் அதிகரித்து விட்டது.
அன்பு உள்ளவரை மட்டுமே இந்த பூமி இயங்கும். பண, மத, அதிகார, இன பேதங்களை மறந்து அன்பு செய்வோம் வாருங்கள்.
சக மனிதனை
மனிதனாய் மதிப்போம் !
உயர்வோம். !.
அன்பு ஒன்று மட்டுமே உலகை வாழவைக்கும்!
நன்றிகள்.