Thursday, 30 May 2013

தமிழர்கள் பயன்படுத்திய காசுகள்...........!

தமிழர்கள் பயன்படுத்திய காசுகள் பற்றிய வரலாற்று தகவல்கள்...


மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும், விற்பதற்கும் பண்டமாற்று முறைதான் இருந்து வந்தது. இம்முறையில் ஒருவர் தம்மிடமிருந்த நெல்லைக் கொடுத்து மற்றொருவரிடமிருந்த பருப்பை வாங்கினார்.

பிறிதொருவர் தம்மிடமிருந்த மீனைக் கொடுத்துப் பால், தயிர் போன்றவற்றைப் பிறரிடமிருந்து வாங்கினார். இம்முறையில் மிகுதியான பொருட்களைப் பண்டமாற்றம் செய்கையில் அவர்களுக்கு இடர்ப்பாடு ஏற்பட்டது.

ஆதலால் ஒரு பொருளை மையப் பொருளாகக் கொள்ளத் திட்டமிட்டனர். தொடக்கத்தில் மாடு அம்மையப் பொருளாக இருந்தது. இந்தக் காலக்கட்டம் அரப்பன்நாகரிக காலமாக இருக்கலாம்.

அரப்பன் களிமண் முத்திரைத் தகடுகள் கூட அக்காலக் காசுகளாக இருக்கலாம். ஏனெனில் அரப்பன் களிமண் தகடுகளில் காளை உருவம்தான் மிகப் பெரியதாக காணப்படுகிறது.

மாடு மிகுந்த அளவில் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்பட்டது. குறைந்த அளவில் பொருள்கள் வாங்குவதில் இடர்பாடு ஏற்பட்டது. ஆதலால் - சோழிகளை - மையப் பொருளாகப் பின்னாளில் பயன்படுத்தினர்.

சோழிகளைக் கொண்டு குறைந்த அளவில் பொருள்கள் வாங்குவது எளிதாக இருந்தது. இம்முறையில் உயர்ந்த மதிப்பில் பொருள்களை வாங்க வேண்டுமானால் மூட்டை மூட்டையாகச் சோழிகளைத் தருதல் வேண்டும.

அது மட்டுமின்றி சோழிகள் எளிதில் உடைந்து போகக்கூடிய தன்மை கொண்டவை. இவ்வாறாக இருக்கும் நேரத்தில் உலோகம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆதலால் உலோகத் தகட்டை மையப்பொருளாகக் கொள்ள முடிவெடுத்தனர். அவ்வுலோகத்திலும் செம்பு மற்றும் தங்கத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். இரண்டுமே கடினமான பொருள்கள். ஆகையால் இவை அவர்களுக்கு நன்கு பயன்பட்டன.

செப்புத் தகட்டைச் சாதாரண பொருள்கள் வாங்குவதற்கும், தங்க உருண்டைகளை மதிப்பு மிகுந்த அறிய பொருள்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தினர்.

தங்க உருண்டைகள் வேப்பம்பழம் வடிவிலும், நெல்லிக்கனி வடிவிலும் நிறத்திலும் இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. இக்காசுகள் மக்கள் கூட்டு வாழ்க்கை நடத்தியபோது பயன் படுத்தப்பட்டவை.

பிறகு தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தபோது தங்களுக்கென சில குலச்சின்னத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அக்குழுக்கள் வெளியிட்ட காசுகளில் ஒவ்வொரு குழுவும் தங்கள் உண்மையே நிலைநாட்ட தங்களது குலச்சின்னத்தைச் செப்புத் தகட்டிலோ அல்லது வெள்ளித் தகட்டிலோ முத்திரையாகப் பதித்து வெளியிட்டனர்.

அப்பொழுதுதான் அவை தங்கள் பகுதிகளில் பயன்படுத்தப்படும் உரிமை பெறும். அத்தகைய காசுகள் முத்திரை பதிக்கப்பெற்ற காசுகள் என்று காசு இயல் வல்லுநர்களால் அழைக்கப்படுகின்றன.

அனைத்துக் குழுத்தலைவர்களுக்கும் தலைவனாக ஒருவன் உருவானான். அவனே வேந்தன் என்று அழைக்கப்பட்டான். அவ்வாறு உருவானவர்களே தமிழக மூவேந்தர்கள்.

அம் மூவேந்தர்களும் தங்களுக்கென சில காசுகளை வெளியிட்டார்கள் . அவை சதுரச் செப்புக் காசுகள் என்று வழங்கப் பெறுகின்றன.

சேரரது காசில் ஒரு பக்கம் யானை உருவமும் மறுபக்கம் வில் அம்பு உருவமும் அல்லது பனை மரம் உருவமும் இருக்கும்.

சோழரது காசில் ஒரு பக்கம் யானை உருவமும், மறுபக்கம் புலியினது உருவமும் காணப்படும்.

பாண்டியரது காசில் ஒருபக்கம் யானை உருவமும், மறுபக்கம் மீன் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும்.

குறுநில மன்னரான மலையமான் காசில் ஒரு பக்கம் குதிரைச் சின்னமும், மறுபக்கம் ஆற்றின் சின்னமும் காணப்படும்.

குறுநில மன்னரான அதியாமான் காசில் ஒரு பக்கம் நீண்ட கழுத்தையுடைய குதிரைச் சின்னமும், மறுபக்கம் ஆற்றின் கரைகள் சின்னமும் காணப்பெறும்.

மேற்குறிப்பிட்ட சதுரச் செப்புக் காசுகளின் காலம் இற்றைக்குச் சற்றேற குறைய 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும்.

இதற்கு அடுத்தகட்ட வளர்ச்சி செப்புச் சதுர மற்றும் ஈய முட்டை வடிவக் காசுகளில் பண்டைத் தமிழ் எழுத்தில் மன்னர் பெயர் பொறித்து வெளியிடப்பட்டவை ஆகும்.

இதுவரை பாண்டிய மன்னன் பெருவழுதி பெயர் பொறிக்கப்பட்ட காசும், அதிய மன்னன் - சேந்தன் அதினன் எதிரான் - பெயர் பொறிக்கப்பட்ட காசும் தொ¢ய வந்துள்ளன. அவை கி.மு 4-3 ஆம் நூற்றாண்டுகளில் வெளியிடப்பட்டவை.

காசு வெளியிடுவதில் இதற்கு அடுத்ததாக மன்னன் தலை உருவத்தோடு, மன்னரது பெயர் பொறிக்கப்பட்டு வெளியிடப் பெற்றிருப்பவை காணப்படுகிறது.

முதல் வகைக் காசில் ஒரு பக்கம் வாயிலில் நிற்கும் மன்னன் உருவமும், அவனைச் சுற்றிப் பண்டைத் தமிழ் எழுத்தில் கொல்லிப்புறை என்ற மன்னன் பெயரும் காணப்படுகின்றன. மறுபக்கம் வில் அம்பு உருவம்.

இரண்டாம் வகைக் காசில் மாக்கோதை என்று மன்னன் பெயர் பண்டைத் தமிழ் எழுத்தில் தலைப்பிலும், அதற்குக் கீழே மன்னனது தலை உருவமும் காணப்படுகிறது.

மூன்றாம் வகையில் குட்டுவன்கோதை என்று மன்னன் பெயர் பண்டைத் தமிழ் எழுத்தில் தலைப்பிலும், அதற்குக் கீழே மன்னனது தலை உருவமும் காணப்படுகிறது.

மூன்றுவகைக் காசுகளிலும் கோதை, பொறை, என்ற சேர அரசர்களின் பெயரொட்டுக்கள் காணப்பெறுவதால் இவை சேரர் காசுகள் என்பது தெளிவாகிறது. இக்காசுகளின் காலம் இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்

மலையமான் காசுகள் !!

திருக்கோவலூர் மலையமான் என்பவன் சங்ககால குறுநில மன்னர்களுள் ஒருவன். இவனது வம்சத்தினர் மலையமான் வம்சத்தினர் எனப்பட்டனர். இவர்கள் வெளியிட்ட செப்பு மற்றும் இருமபுக் காசுகள் கிடைத்துளன.

அதில் இவர்கள் ஆண்ட திருக்கோவலூர் ஊரின் பொன்னையாறு, மூன்று மலைகள் மற்றும் ஒரு பாதையும் காணப்படுகிறது. இவற்றின் காலம் கிபி 100 - 300 ஆகும்.

இப்போது நாம் பயன் படுத்தும் காசுகள் பல காலங்களையும் பல நாகரிகங்களை தாண்டி வந்து உள்ளது.
நன்றிகள்.