Tuesday, 18 June 2013

மொழி அடையாளம் பண்பாடு வாழ்வியல்...........!

மொழி எனப்படுவது என்ன? எழுத்து - சொல் – வாக்கியம் என அமைந்த இலக்கணமா? காதல் – வீரம் என்பதைக் கற்பனை நயத்துடன் விளக்கும் இலக்கியமா? அல்லது எண்ணங்களையும் ஏடல்களையும் பரிமாறிக்கொள்ள பயன்படும் தொடர்புக் கருவியா? இவற்றில் எதுவுமே இல்லை!

மொழி எனப்படுவது ஓர் இனத்தின் அடையாளம் – பண்பாடு – வாழ்வியல் – வரலாறு எல்லாமே! மொத்தத்தில் ஓர் இனத்தின் உயிரும் – உயிர்ப்பும் மொழியே ஆகும்.


ஓர் இனம் அழியாமல் இருக்க அந்த இனத்தின் மொழி உயிரோடும் - உயிர்ப்போடும் இருத்தல் வேண்டும். அந்த வகையில், பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு வகையான தடைகளைக் கடந்து தமிழ் இன்றளவும் உயிரோடு இருப்பதே நமக்குப் பெருமைதரக்கூடிய வரலாறாகும்.

காலத்தால் தொன்மையும் தெய்வத்தன்மையும் பெற்று இருப்பதால்தான், நாடோ - அரசோ - ஆட்சியாளரோ இல்லாத நிலையிலும் தமிழும் தமிழினமும் இன்றும் நிலைத்திருக்கின்றன.

உலகில் தோன்றிய பல பழம்பெரும் மொழிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ் மட்டுமே இன்றளவும் வளத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது வரலாற்று உண்மை.

4500 ஆண்டுகளுக்கு முன் பிரமிடுகளைக் கட்டிய எகிப்தியர்கள் பேசிய எகிப்து மொழி இன்று உலக வழக்கில் இல்லை.

3000 ஆண்டுகளுக்கு முன் மாபெரும் இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் எழுதப்பட்ட வட இந்திய மொழியாகிய சமசுக்(ஸ்)கிருதம் இன்று வழக்கில் இல்லை. தேவ மொழியாகப் போற்றப்பட்டாலும் சமசுக்(ஸ்)கிருதம் மக்கள் வழக்கிலிருந்து செத்தமொழியாகவே ஆகிவிட்டது.

இம்மொழியைப் பேசவோ எழுதவோ அல்லது புரிந்துகொள்ளவோ அது தோன்றிய இந்திய மண்ணிலேயே எவரும் இலர் என்றே சொல்லலாம்.

2800 ஆண்டுகளுக்கு முன் உரோமாபுரி மன்னர்கள் வளர்த்த தாய்மொழியும் ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் மூலமொழியுமாகிய இலத்தீன் மொழி இன்று இல்லை. மேலைநாட்டு அகராதிகளில் மட்டுமே இம்மொழியைக் காணலாம்.

2600 ஆண்டுகளுக்கு முன் புத்தர் பெருமான் பேசிய பாலி மொழி இன்று இல்லை. புத்த நெறி உலகின் பல பகுதிகளில் வாழ்ந்தாலும்கூட அந்தத் திருநெறி தோன்றிய பாலிமொழி உலக வழக்கிலிருந்து அழிந்துவிட்டது.

2300 ஆண்டுகளுக்கு முன் மாபெரும் எழுச்சியோடு உலகை ஆட்டிப்படைத்த மகா அலெக்சாந்தர் பேசிய மொழி; சாக்கிரட்டீசு, பிளாட்டோ முதலான உலகச் சிந்தனையாளர்களின் தாய்மொழியான கிரேக்க மொழி கிட்டதட்ட அழிந்துபோய், தற்போது கிரேக்க அரசினால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பெற்று வளர்க்கப்படுகிறது.

2006 ஆண்டுகளுக்கு முன் உலகில் தோன்றி அன்புவழி காட்டிய ஏசுபிரான் பேசிய அரமிக்–ஈபுரு மொழியும் கிட்டதட்ட அழிந்து போய்விட்டது. இசுரேல் என்றவொரு நாடு உருவானதும் யூதர்களின் எழுச்சி உணர்வு; மொழி உணர்வின் விளைவாக மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டும் வாழ்விக்கப்பட்டும் வருகின்றது.

மேற்குறிப்பிட்ட மொழிகளுக்கு முற்பட்ட மொழியாகக் கருதப்படும் சீன மொழி காலத்தால் பல்வேறு மாற்றங்களை அடைந்து இன்றைய நிலையில் சீன மக்களின் பேச்சு மொழிகள் வேறு வேறாகவும் எழுத்து மொழி மாண்டரின் மொழியாகவும் ஆகிவிட்டது. பழஞ்சீனம் இன்று எவருக்கும் புரிவதில்லை.

ஆனால்...இந்தப் பழம் பெரும் மொழிகள் வாழ்ந்த காலத்திலும் வளமாக வாழ்ந்து... இன்றும் இளமையோடு வாழும் ஒரே மொழி..

நம் தமிழ்மொழிதான். இந்த ஒரு காரணத்திற்காகவே தமிழைத் தாய்மொழியாகப் பெற்றதற்காக தமிழ் மக்கள் பெருமையடையலாம்.
நன்றிகள்.