Friday, 2 August 2013

"ஒருவனுக்கு ஒருத்தி" எனும் நெறி பிறழாத வாழ்வை.......!

"வம்ச விருத்தி" மட்டுமே திருமணத்தின் நோக்கமல்ல. "ஒருவனுக்கு ஒருத்தி" எனும் நெறி பிறழாத வாழ்வைக் கடைப்பிடிப்பதற்காகவே திருமணங்கள் தேவைப்படுகின்றன.

பால்ய காலம் முதல், பாடையில் செல்லும் வரை மனிதனுடைய தேவைகள் காலத்திற்குக் காலம் வித்தியாசப்படுகிறதே இன்றி, ஒருபோதும் குறைவதே இல்லை.

ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் சேர்ந்தும், ஒருவரை ஒருவர் சார்ந்தும் வாழும் படி அமைக்கப்பட்டுள்ள நம் சமூகக் கட்டமைப்பு இரு மனம் ஒத்த திருமணத்தை வலியுறுத்துவது "திறன்மிக்க மனிதவளத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், சமூகக் குற்றங்களைக் குறைப்பதற்குமே".


பிறருடைய மனைவியை காமக் கண் கொண்டு நோக்காமல் இருப்பதே பேராண்மையிலும் சிறந்த ஒழுக்கம் என்கிறது குறள்.

ஆனால் இன்று வயது பேதமின்றி அனைவரையும் காமக்கண்களால் துகிலுரிப்பதும், மது மற்றும் போதையில் திளைப்பதையுமே ஆண்மையாகக் கொண்டு பலர் வாழ்கிறார்கள்.

இவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்வதுடன், தாம் சார்ந்து வாழும் குடும்பங்களையும் மீள முடியாத துன்பங்களுக்குள் தள்ளிவிடுகிறார்கள்.

கணவன்மார்களே,

உங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டியது உங்கள் கடமையே… அதே அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது உங்கள் மனைவி உங்களிடம் எதிர்பார்க்கும் அருகாமையையும், அன்பையும், விசுவாசத்தையும் அவர்களுக்கு உணர்த்துவது.

மனைவியர்களே,

குடும்பப் பொருளாதாரத்தில் நீங்கள் உதவினாலும், உங்களின் தேவைகளையும் நிறைவு செய்யும் பொருட்டே உங்கள் கணவன், உறக்கத்தை விற்றுக் கொண்டிருக்கிறான்…

உங்களுடைய கவர்ச்சியான தோற்றத்தை நாலுசுவருக்குள் உங்களுடைய கணவனுக்கே பகிருங்கள் அதுவே உங்களின் பாதுகாப்பிற்கு குடும்ப நலன்களுக்கும் உகந்ததாகும்.

நீங்கள் சிறந்த தாயாகவும், தாரமாகவும், விசுவாசமாகவும் இருப்பதே அவர்களுக்குச் செய்யும் கைமாறு.

தம்பதியர் இருவருக்கும்

தேவையற்ற ஆடம்பரங்களைக் குறைத்து பொருளாதார சிக்கல்களை மனைவியுடன் கலந்தாலோசித்து தமபதியர் இருவரும் நன்கு திட்டமிட்ட பொருளாதார சுமைகளை பங்கிட்டுக்கொள்ளலாம்.

இப்படிச் செய்வதால் தம்பதியினருக்கு எனச்செலவிடுவதற்கான நேரத்தை மீதப்படுத்தி குடும்பத்தை மகிழ்வாக வைத்திருக்கலாம்.  
நன்றிகள்.