Tuesday, 27 August 2013

பறக்கும் சொகுசு கப்பல்.....!


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள உலகளாவிய அம்புகள் சங்கம் என்ற நிறுவனம் (worldwide aeros corporation california)  இந்த பறக்கும் கப்பலை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் உலகிலேயே வானூர்தி தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


இராணுவம் மற்றும் தனி நபருக்கான வானூர்தி, சொகுசு வானூர்தி என்று பல நவீன ரக வானூர்திகளைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது இந்நிறுவனம்.
தற்போது தயாராகி வரும் பறக்கும் சொகுசு கப்பல் ‘பறக்கும் குயின் மேரி-2 என்று வர்ணிக்கிறார்கள்.

அதாவது தற்பொழுது உலகிலேயே பெரிய பயணிகள் சொகுசு கப்பலாக ‘குயின் மேரி-2′ உள்ளது இந்த கப்பல் பறந்தால் எப்படியிருக்குமோ அது போல இந்த நவீன வானூர்தி இருக்கும் என்பதால் இது இவ்வாறு வர்ணிக்கப்படுகிறது.

மோபி ஏர் (MobyAir) என்று பெயரிடப்பட்டுள்ள இதனுடைய அளவு என்ன தெரியுமா? சுமார் ஒரு ஏக்கர். அதாவது இரண்டு கால்பந்து மைதானத்தின் அளவிற்கு இது சமமானது.

இதனுடைய உயரம் 165 அடி. அதாவது சுமார் 8 மாடிக்கட்டிடம் உயரம் கொண்டது. அகலம் 244 அடி, நீளம் 647 அடி கொண்டது. 6ஆயிரம் மைல் தூரம் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது. ஒரே நேரத்தில் 250 பயணிகள் தங்கள் வீட்டில் இருப்பது போன்ற வசதிகளை அனுபவித்தபடி பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

இக்கப்பலை வடிவமைக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் இகோர் பாசுடர்னாக் கூறுகையில், “பயணிகள் கப்பலை தயாரிக்கும் பல நிறுவனங்கள் இப்பெரிய விமானத்தை தயாரிக்கும் திட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.
பல்லாயிரக்கணக்கான மைல்கள் செல்லும் இந்த பறக்கும் (கப்பல்) வானூர்தி மணிக்கு 174 மைல் வேகத்தில் செல்லக்கூடியது. 18 மணி நேரத்தில் அமெரிக்காவையே வலம் வந்துவிடும்” என்கிறார்.

8ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் போதே பயணிகள் முக்கிய நகரங்களையும், பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களையும், புகழ்பெற்ற வானுயர்ந்த கட்டிடங்களையும் கண்டுகளிக்கலாம்.

மேலும் வானூர்தியின் உள்ளேயே சொகுசு விருந்தினர்கள் அறைகள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் முதலியவை இருக்கும். இதில் பயணம் செய்யும் போது ஒரு உல்லாசக் கப்பலில் இருப்பது போன்ற உணர்வு தான் இருக்கும். இதனுடைய இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த மோபி ஏர் உலங்குவானூர்தி போலவே செங்குத்தாக மேலெழும்பவும், கீழிறங்கவும் கூடியது. இது புறப்பட ஓடுதளம் (RunWay) தேவையில்லை.

உள்ளே இருக்கும் பயணிகளுக்கு வானூர்தி பறக்கும் சப்தம் கேட்காத வகையில் உந்து சக்தி இயந்திரங்கள் வானூர்தியின் பின் புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வானூர்தி பறக்க ஐதரசன் எரிசக்தி பயன்படுத்தப்படுகிறது. உள்ளே பயணிகளின் நடமாட்டம் மற்றும் வானூர்தியின் வெளிப்புற காலநிலை மற்றும் அழுத்தம் இவைகளை ஈடுகட்டும் விதமாக நவீன தொழில் நுட்பத்துடன் மிதவை முறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பறக்கும்போது வானூர்தியின் எடையை சமாளிக்கும் விதமாக இதனுடைய தானியங்கி முறைகள் மூலம் வெளிப்புறத்திலிருந்து காற்றை உள்வாங்கி அதற்கேற்ப சுருக்கி வானூர்தி முழுவதும் கொடுக்கிறது. மேலும் இந்த வானூர்தியை அவசர காலத்தில் பனிக்கட்டி நிறைந்த தரையிலும், தண்ணீரிலும் தரையிறக்க முடியும்.
நன்றிகள்.