உங்களிடம் ஈகோ இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது
உடனடியாக தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்காமல் எல்லாம் எனக்கு தெரியும் என்று விட்டுவிட்டால் உங்களிடம் ஈகோ உள்ளது என்பதை உடனடியாக நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
ஈகோ….என்றால் என்ன?
ஈகோ என்பது என்ன?
தன்னைப் பற்றியே சிந்தித்தல், சுயநலம், வறட்டுக் கௌரவம், தலைக்கனம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய குணங்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகும். மனிதனுக்கு பணம், பதவி, அழகு, செல்வாக்கு கூடும் பொழுது, அதே நேரத்தில் படிப்படியாக மமதை, ஆணவம், செருக்கு, திமிர், கர்வம் சிலருக்கு கூடி விடுகிறது.
கடவுள் நம்மை விட்டு வெளியேறுவது என்பதன் சுருக்கம் தான் (Ending God out) ஈகோ என்பர்.
நமது பலவீனத்தை, தவறை யாராவது சுட்டிக் காட்டினால் ஈகோ விழித்துக் கொள்கிறது. மோதல் ஏற்படுகிறது.
ஈகோ மனிதர்களின் அடையாளம்:
நம்மிடம் வணக்கத்தை கட்டாயம் எதிர்பார்ப்பர், நன்கு தெரிந்தவர் என்றாலும், கண்டும் காணாதது போல நடப்பர். அதிகம் பேச மாட்டார். தம் இனத்துடன் மட்டும் பழகுவர். தம்மை நாடியே பிறர் வர வேண்டும் என்று இருப்பர். தன்னை விட மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என எதிர்பார்ப்பர். தான் மட்டும் தான் சிறந்தவர் என நம்புவர். ஈரமும், இரக்கக் குணமும் அற்றதன்மை பேச்சில் வெளிப்படும். மற்றவர் தன்னை மதிக்க வேண்டும், புகழ வேண்டும் என்பதில் தீராத ஆசை கொள்வர், தன்னை முந்தி செல்வோர் மீது பொறாமைபடுவர். தன் சுயநலத்திற்காக பிறரை சுரண்டுவர்.
தன்னைவிட குறைந்த படிப்பு, பதவி, சமுதாய நிலை உள்ளவர்களிடம் அதிகம் பேச மாட்டார்கள். தவறு செய்தால் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். தன்னை சாதாரண மனிதர்களாய் நினைத்து கொள்வதே கனவிலும் கற்பனை செய்து பார்க்க முடியாத காரியமாகும். பிறர் தன்னை மிகவும் குறைவாக மதிப்பிடுவார்கள் என்றநினைப்பில் தங்களை பெரிய ஆளாக காண்பிப்பதற்கு முயல்வர்.
எல்லா புனிதமான தோற்றத்திற்கு மறுபுறம் இன்னொரு மோசமான குரூரமான முகமிருக்கும். தகவல் தொடர்பு சரியான முறையில் இருக்காது. தெரியாதததைக் கேட்டு தெரிந்து கொள்ள தயங்குவர். அதிக முக்கியத்துவம் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பதில் தீவிரமாக இருப்பர். ஈகோ பிரச்சினையால் பல விசயங்களில் முரண்டு பிடிப்பது. முட்டுக்கட்டை போட்டு இழுத்தடிப்பது இவர்களது வழக்கமாக இருக்கும்.
ஈகோ மனிதர்களை சமாளிப்பது எப்படி?
நமது வாழ்க்கைத் துணையோ, நமது அதிகாரியோ, நண்பர்களோ உறவினர்களோ ஈகோ குணம் உடையவர்களாக இருந்து விட்டால் இவர்களிடம் சற்று விலகியே வாழ வேண்டும். இவர்களுக்கு எதிராக நாம் செயல்பட்டால் அது அவர்களின் ஈகோவைக் கூட்டிவிடும். முடிவில்லாத தொல்லைகள், மனஉளைச்சல் ஏற்படும்.
யார் பெரியவர் என்ற சிக்கலுக்கு என்னதான் வழி?
சிலர் இவர்களை விட்டு விலகி சென்று விடுகிறார்கள். இத்தகைய சூழல் அவர்களைக் காட்டிலும் மிகத் திறமையாக கையாண்டு சமாளிக்கிறவர்களும் உண்டு. சகித்துக் கொண்டு வேறு வழியின்றி அடிமையாக வாழ்க்கையை ஓட்டுகிறவர்களும் உண்டு.
இறைவனது படைப்பில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் எவருமில்லை?
அவரவர் திறமைக்கேற்ப வாழ்வில் உயரத்தை எட்டுகிறார்கள். வளர்ச்சி பெறுகிறார்கள். எல்லோரும் ஒரே மட்டத்தில் சம சமுதாய நிலை இருக்க முடியாது.
ஈகோ குணம் படைத்தவர்களை சமாளிப்பது மிகக் கடினம் தான். நமது ஒவ்வொரு நாள் அலுவலையும் நரகமாக்கி விடுவார்கள். நம்மைத் தீவிரமாக கண்காணிப்பார்கள். குறைச்சலாக பேசுவார்கள். மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். தங்கள் பணிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது. மனதில் வலியை உண்டாக்கும் நிகழ்வுகள் தொடர்கதை ஆகும். விலகிச் செல்லவும் முடியாது. இனிமையின்மை பட நேரிடும். பாதிப்பின் தாக்கத்தால், எதிலும் கவனம் செலுத்த இயலாது. இவர்களை விட்டு விலகினால்தான் அமைதி திரும்பும்.
ஈகோ மோதல்களும் விளைவுகளும்:
கூட்டு முயற்சியால் தொடர்ந்து வெற்றியும், வரவேற்பும் பெற்ற பலர் திடீரென ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பிரிந்த பின்னர் இருவருக்குமே பெரும் பாதிப்பு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் துறையே விட்டே ஒதுங்கும் நிலை பலரது வாழ்வில் ஏற்பட்டு உள்ளது. அரசியல், சினிமா, அலுவலகம், தொழில், கிரிக்கெட், உள்ளிட்ட பல துறைகளில் கூட்டு முயற்சியும் பங்களிப்புமே வெற்றிக்கு காரணமாக உள்ளது. கௌரவப்போட்டி பலரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. உரிய மரியாதை வழங்காததால் தொடர்ந்து பின்னுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் புறந்தள்ளப்பட்டவர்கள் பலர்.
இரண்டு ஆசிரியர்களுக்கு இடையே ஈகோ மோதல் ஏற்பட்டால் அது பல மாணவர்களின் கல்வியைப் பாதிக்கிறது. கணவன் மனைவி இடையே ஈகோ தகராறு ஏற்பட்டு வாழ்வில் விரிசல் விழுந்தால் பிள்ளைகளைப் பெரிதும் பாதிக்கிறது....
ஈகோ மனிதர்களை ஆட்டிப்படைக்கிறது. பிறந்த வீட்டில் மாப்பிள்ளைகளில் யாருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என சகோதரிகள் யுத்தம் செய்கின்றனர். நண்பர்கள் ஈகோ மோதலால் பிரிந்தால் அவர்கள் செய்த பல நன்மைகள் மறந்து விடும். சில தீமைகள் மட்டும் பெரிதாகத் தெரியும். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைந்திட ஈகோ தடுக்கிறது. இதனால் பாதகங்களை சந்திக்க நேரிடுகிறது. அவல நிலைக்கு தள்ளி விடுகிறது. அரிதான வாய்ப்புகள் வீணடிக்கப்படுகிறது.
ஈகோ பிரச்சினையால், வாழ்க்கையை தொலைக்கும் பெண்கள் பலருண்டு. எல்லோரும் உயிரோடு இருந்தும் எந்த உறவும் இல்லாமல் அநாதையாக இனிமையின்மைபடுபவர்கள் பலர். ஈகோவால் காதல், உறவு, நட்பு எல்லாம் நொறுங்கிப் போகிறது. அதிகமான குடும்ப உறவுக்கு ஈகோ தான் வேட்டு வைக்கிறது. வாழ்வில் வெற்றிக் கொடி நாட்டி முன்னணியில் இருந்தவர்கள் தடாலென சரிந்து விழுந்து சகதியில் புரண்டெதெல்லாம் ஈகோ என்கிற உயிர்கொல்லியால் தான். ஈகோவால் முகவரி இழந்து காணாமல் போனவர்கள் ஏராளம்.
உலக அளவில் இந்தியா சில துறைகளில் தலை நிமிரக் காரணமாக இருந்தவர்கள் கூட ஈகோ மனிதர்களால் அவமானங்களையும், வேதனைகளையும் சந்தித்து இருக்கிறார்கள். உறவுகளை அழிப்பதற்கு, பாழ்படுத்துவதற்கு, நாசம் செய்வதற்கு ஈகோ என்கிற ஒன்று மட்டும் போதுமானது.
அதிகப்படியான ஈகோ நமது திறமைகளை கொன்றுவிடுகிறது. உறவுகள் இயற்கையாய் இறப்பதில்லை. ஈகோவால் படுகொலை செய்யப்படுகிறது. ஈகோதான் மனிதனின் மிகவும் மோசமான எதிரியாகும்.
நம்முள் இருக்கும் ஈகோ என்கிற மிகப் பெரிய ஆயுதம் நம்மையே கீழே தள்ள நம்மாலேயே பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் உச்சக்கட்ட சோகம். தொழில் பங்குதாரர்களின் ஈகோ மோதல் வியாபாரத்தில் நஷ்டத்தை தருகிறது.
ஈகோ அற்றவர்களின் இயல்புகள்:
ஈகோ இல்லாத மனிதர்கள் பதவி கிடைத்து விட்டது என்று அதிகப்படியான அதிகாரம் செய்ய மாட்டார்கள். பதவி நிலையானது அல்ல என்பது அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். அழகு கூடுகிறது என கர்வம் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு தெரியும். ஒருநாள் உடல் அழகு மங்கப் போகிறது என்று. பணக்காரர் ஆனாலும் பகட்டாக இருப்பதில்லை. பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது என்பதை நன்கு உணர்ந்தவர்கள். அந்தஸ்து வந்தாலும், உடன்பிறந்தவர்களை முற்றிலுமாக பிரிந்து விட மாட்டார்கள். நட்பு கசந்து விடாமல், திருமண வாழ்க்கை சரிந்து விடாமல் கவனமாக நடந்து கொள்வார்கள்.
விட்டுக் கொடுப்பதால் குறைந்து போவதில்லை என்பதை உணர்ந்தவர்கள். நல்லது, கெட்டதை ஒதுக்கி வைக்காமல் முக்கிய குடும்ப நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்பவர்கள். தானாக முன்வந்து, தவறுக்கு வருத்தம் தெரிவிப்பார்கள். கணவன் மனைவிக்குள் சிறு சண்டை என்றால் ஈகோ பார்க்காமல் சரணடைந்து விடுவர். தாங்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள். நடுவில் யாரையும் நுழைய விட்டால் சிறிய பிரச்சனை பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு என்பதை நன்கு உணர்ந்தவர்கள். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாமல் தண்ணீரை ஊற்றி அணைப்பவர்கள் இவர்கள்.
பல நாடுகளை கைப்பற்றிய மன்னாதி மன்னர்களானலும் நோயுற்றபோது அவர்களது உயிரை மருத்துவர்களால் காப்பாற்றமுடியவில்லை. கோடி கோடியாய் குவிந்தவர்கள் ஒரு குன்றி மணிக்கூட தன்னுடன் எடுத்துச் செல்ல இயலாது. பூமிக்கு வரும் போது ஒன்றும் கொண்டு வரவில்லை. போகும் போது ஒன்றும் எடுத்து செல்வதில்லை.
பக்குவப்பட்ட மிகப்பெரிய மாமனிதர்கள் தன் மீதான தவறு சுட்டிக்காட்டப்படும் போது கொந்தளிப்பதில்லை. திருத்திக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள். தம்மை விட்டு சுற்றத்தார், தோழர்கள், பாசமானவர்கள், நம் மேல் அக்கறை கொண்டு உள்ளவர்களிடம் இருந்து பிரிந்து தனித் தீவாக இருக்க விரும்புவதில்லை. ஈகோ வாழ்வை நிர்மூலமாக்கிவிடும் என்பதை நன்கு உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். உயர்நிலைக்கு சென்றபின்பும் சாதாரணப் பணிகளைத் தயங்காமல் மேற்கொள்வர். மிகப்பெரிய சாதனை படைத்த மாமனிதர்கள் பேருந்தில், சைக்கிளில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பயணிக்கிறார்கள். மகாத்மா காந்தியடிகள் ரயிலில் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் மேற்கொண்டார். தொழில் அதிபர் ரத்தன் டாட்டா தனது கோப்புகளை தானே கை நிறைய எடுத்துக் கொண்டு இயங்கு ஏணியில், தனது அறைக்கு செல்லத் தயங்குவதில்லை.
ஈகோவை விட்டுவிட்டால் வாழ்வு லேசாகி விடும் என்பதை உணர்ந்தவர்கள். வானம், பூமி, ஆறு, கடல், மலை எல்லாம் இறைவன் தந்தது. நாம் உருவாக்கியது அல்ல. நமது சக்தி, பலம், முயற்சி நமக்கு செல்வத்தை தந்து இருக்கலாம். ஞாபகமிருக்கட்டும்.நமது திறமைகள் கடவுளால் நமக்குத் தரப்பட்ட கொடை.
மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கும் போது ஈகோ குறைந்து விடுகிறது. அறிவாற்றல் குறைந்தவர்களிடம் ஈகோ அதிகரிக்கிறது...
நன்றிகள்.