நீங்கள் தூங்கும் நேரம் போதுமானதா !

அது ஒரு கனாக் காலம் என்பது போல 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம் என்று வாழ்க்கைக்குரிய குறைந்தபட்ச அர்த்தத்துடன் வாழ்ந்து வந்தார்கள் நம் முன்னோர்கள். ஆனால் இன்றோ வாழ்க்கையில் தூக்கம் 6 மணி நேரம், வேலை 16 மணி நேரம் என்று மனிதர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
போதாக் குறைக்கு, 24 மணி நேரமும் ஓடுகிற தொலைக்காட்சி, தூக்கத்தில் கூட கைப்பேசியில் முகநூல் மேய்ச்சல், ஆரோக்கியமில்லாத உணவுப்பழக்கங்கள் என்று நம்மைத் தூங்கவிடாத விஷயங்கள் அதிகரித்துவிட்டன.
யாருக்கு எவ்வளவு தூக்கம் அவசியம்?
▶ பெரியவர்கள் அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம்.
▶ மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்குத் தூக்கத்தின் நேரம் கூடும்.
▶ புதிதாகப் பிறந்த குழந்தைகள் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் தூங்குகின்றன.
▶ பள்ளி செல்லும் குழந்தைகள் (நான்கு வயது வரை) 10 மணி நேரம் தூங்குவார்கள்.
▶ இளம்பருவத்தினருக்கு 8 மணி முதல் 9 மணி நேரத் தூக்கம் அவசியம்.
பிரச்சனைக்குக் காரணம் என்ன?
கல்வியமைப்பு மற்றும் நண்பர்களுடனான பிரச்சனைகள் போன்ற காரணங்களால் இப்போதெல்லாம் கல்வி பயிலுபவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை சிறு வயதிலேயே தொடங்கிவிடுகிறது.
தூக்கமின்மையால் அதிக அவதிக்குள்ளாகும் மற்றொரு பிரிவினர் முதுமையடைந்தவர்கள். முறையான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, முறையற்ற தூங்கும் நேரம் போன்றவற்றால் இவர்களுடைய இரவுத் தூக்கம் பாதிக்கப்படுகிறது.
சிலருக்கு 6 மணி நேரத் தூக்கம் சரியாக வரும். இன்னும் சிலருக்கு 8 மணி நேரத்துக்கும் அதிகமாகத் தூக்கம் தேவைப்படும்.
பாதிப்புகள் என்ன?
முறையான தூக்கம், தேவையான தூக்கம் இல்லையென்றால் கவலை, அதிகம் கோபப்படுதல், மன அழுத்தம், ஞாபக மறதி மற்றும் சக மனிதர்களுடனான தகவல் தொடர்புப் பரிமாற்றத்தில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். மேலும் தூக்கமின்மையால் செயல்பாட்டு திறன் பாதிக்கப்பட்டு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவையும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
அறிகுறிகள் என்ன?
குறட்டை விடுவது, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்வது, காலை நேரத் தலைவலி, ஞாபகமறதி, கவனமின்மை, அதிகம் கோபப்படுதல், மன அழுத்தம் மற்றும் அடிக்கடி மனநிலை மாறிக்கொண்டே இருப்பது போன்றவை சரியான தூக்கமின்மையின் அறிகுறிகளாகும்.
தூக்கமின்மையைப் போக்க வேண்டுமா?
▶ தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் விழித்துக்கொள்ளப் பழக வேண்டும்.
▶ தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே இரவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
▶ அதிகாலையில் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வது நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
▶ தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் நல்ல தூக்கத்தைத் தரும்.
▶ படுக்கச் செல்லும் முன் கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் !
8 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகின்றவர்களில் 58 சதவீதம் பேரின் வேலைகள் சரியான தூக்கம் இல்லாததால் பாதிக்கப்படுகின்றது.
இது பெரும்பாலும் 35 முதல் 65 வயது வரையுள்ளவர்கள் அதிகமாக உள்ளனர். பரபரப்பான வாழ்க்கை முறையை மாற்றி நிதானப்படுத்திக் கொண்டு மன அமைதிக்கான பயிற்சிகள், போதுமான உடற்பயிற்சி, சத்தான உணவுகள் போன்றவற்றை கடைபிடித்தால் அது இனிய தூக்கத்துக்கு வழிவகுக்கும்.
தூக்கமின்மை என்பது வியாதி கிடையாது. அது பல்வேறு வியாதி காரணமாக உண்டாகும் ஒரு அறிகுறிதான். அடிப்படை காரணத்தை அறிந்து நோயை கண்டறிந்து குணப்படுத்தினால் மட்டுமே தூக்கத்தை ஏற்படுத்த முடியும்.
நன்றிகள்.