Monday, 15 October 2012

சுவாசிப்போம் தூய தமிழை...........!


"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த தமிழ் குடி" என்ற பெருமையைக் கொண்ட பெரும் இனத்தவர்கள் தமிழர்கள். அதாவது "உலகில் முதலில் தோன்றியது கல்தான். அப்படி தோன்றிய கல்லானது, காற்றிலும் மழையிலும் கரைந்து மண்ணானது.

அப்படி ஆகும் காலத்திலே, மண் உருவாவதற்கு முன்னரே, வாளோடு வீரத்துடன் தோன்றிய இனம் தமிழ் இனம்" என்பது ஒட்டக்கூத்தரின் விளக்கம். இத்தகைய தமிழ் குடியின் மரபு வழியாக வந்த தமிழை தாய்மொழியாகக் கொண்டு பேசுபவர்கள் நாம். தமிழ் மொழியின் வரலாறு அதற்கு சான்றாக உள்ளது.

கொடிய ஆழிப் பேரலைகளால் உலக வரைபடத்திலிருந்து மூழ்கடிந்த தமிழகத்தின் தென் பகுதியான 'குமரிக் கண்டம் (லெமூரியா கண்டம்)' தமிழர்கள் வாழ்ந்த பகுதி என்று தொல்லியல் துறையின் மூத்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

சங்ககால தமிழ் இலக்கியங்கள் இவற்றுக்கு சான்றாக உள்ளது. தமிழ்நாட்டில் பிறந்த அனைவரும் ஏதேனும் ஒரு தருணத்தில் எந்த வழியிலாவது குமரிக்கண்டம் என்ற வார்த்தையினை கேளாது இருந்து இருக்க முடியாது.

நாம் பேசும் தமிழ் மொழி உலகின் தொன்மை மிக்க பல மொழிகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் ஒன்று என்பது நாம் பெருமைப்படக்கூடியது.

எழுத்து வடிவத்தை தன்னகத்தே கொண்டில்லாத மொழி வரலாற்றில் சிறப்புத்துவம் அடைந்ததிலை. ஆனால் பிராமி மற்றும் வட்டெழுத்துக்கள் மூலம் தமிழ் எழுத்துக்கள் தோன்றியதன் வரலாறை அறியமுடிகிறது.

ஏற‌த்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பெருமைமிக்க பழந்தமிழ் மொழியை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்றால்(?) சட்டென்று 'பயன்பாட்டின் அளவு குறைவே' என்று சொல்லிவிடும் அளவிற்கு உள்ளது.

நாம் இங்கு பேசும் மொழியில் எவ்வாறு மற்ற மொழிகளின் தாக்கம் உள்ளது என்றால், ஆங்கில மொழியானது அவ்வினத்தவரின் கலாச்சாரக் கவர்ச்சி மோகம் நம்மை எவ்வாறு இழுத்ததோ, அதே போன்றே அவ்வினத்தவரின் மொழியும் நம்மை இழுத்துவிட்டது.

ஆங்கில மொழி சமுதாய மாற்றத்தை உருவாக்கியதென்றால, சம‌ஸ்கிருத மொழி ஆன்மீகத்தின் விளிம்பாக நுழைந்து கொண்டுள்ளது.

இங்கு பேசும் மொழி, தமிழ் மொழியில் இருந்து 40 சதவிகிதமும், சமஸ்கிருத மொழியில் இருந்து 25 சதவிகிதமும், ஆங்கில மொழியில் இருந்து 35 சதவிகிதமும் கலவைகளால் ஆன எழுத்துக்களையும், வார்தைகளையும் கொண்ட ஒரு புது மொழியாக உருவெடுத்துள்ளது.

இதைப் போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் என 90 சதவிகிதம் பிறமொழிச் சொற்களாகவே இருக்கின்றன. இந்த சூழலை நாம் வெகு மதிப்பாகவே இன்று கருதுகிறோம். நம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய இழுக்காகும்.

தற்பொழுது தமிழர் பயன்படுத்தும் பெயர்களில் இரண்டு சதவிகிதம் பெயர்கள் கூட பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களாக இருப்பதில்லை. பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களைச் சூடிக்கொள்ளச் சொன்னால் முகஞ்சுளிப்பவர் அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் பொருளை உணர்ந்திலர்.

தமிழர் தமிழ்மொழியிலே தம் பெயர்களைச் சூட்டிக்கொள்வதற்கு வேண்டிய தமிழ்ப்பெயர்களே இல்லை என்ற நிலை இங்கு இல்லை. மாறாக அறியாமையினாலே பிறமொழிப் பெயர்களைத் தமிழ்ப்பெயர்களென மயங்கிச் சூட்டிக்கொள்கின்றனர்.

இன்றைய மேலைநாட்டு நாகரீக கால ஓட்டத்தில் தமிழ்ப்பெயர்களை அடையாளங்காண்பது எளிதான ஒன்றே. மேலும், இதற்கு உதவியாக தமிழ்ப் பெயர்ப்பட்டியலை உருவாக்கும் முயற்சியில் தமிழ் ஆர்வலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கு முதலில் நாம் தமிழ் மொழியின் அறுசுவையை ருசித்துப் பார்க்க வேண்டும். சுவை அறிந்துவிட்டால் பின்னர் “ருசி கண்ட பூனையைப் போல்” தமிழையே சுற்றிச் சுற்றி வருவோம்.

உலக மொழிகளில் தமிழ் மொழி 12 உயிரெழுத்துக்களையும், 18 மெய் எழுத்துக்களையும், 216 உயிர்மெய் எழுத்துக்களையும் ஒரு 'ஃ' என்ற ஆய்த எழுத்தையும் கொண்டு மொத்தம் 247 எழுத்துக்களை கொண்டுள்ளது.

"தமிழ் மொழி மனிதனைப் போன்று உயிரையும், மெய்யையும் தன்னகத்தே உடையது. இங்கு எழுத்தானது உயிர் இல்லாமல் மெய்யில்லை, 

மெய்யில்லாமல் உயிரில்லை". இந்த இரண்டில் ஒன்று இல்லை என்றாலும் மொழியில்லை. சற்று உள்நோக்கிப் பாருங்கள் தமிழின் சுவையை உணர்வீர். வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் என்ற எழுத்துகளின் மென்மையை எடுத்துக்கூறும் ஒரே மொழி தமிழ்மொழியே ஆகும்.

ஆங்கில மொழியில் உள்ள வார்த்தைகள் இன்று நாம் பேசும் மொழியில் எவ்வளவு இணைந்துள்ளது என்பதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். 

ஆங்கிலம் பேசுவதை நாகரிக‌த்தின் விளிம்பாகக் கருதுவதே இதன் மூல காரணம். பிற மொழிகளை அனைவரும் நன்கு கற்க வேண்டும், பேச வேண்டும், அதில் புலமை பெற வேண்டும் என்ற கருத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, மேலும் அதனை முழுமையாக வரவேற்கிறோம். 

நம்மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களும், அயல் நாடுகளிலும் சென்று தொழில் செய்வதற்கு அது மேலும் வலு சேர்க்கும் என்பதில் எங்களுக்கு வேற்று கருத்தில்லை.

இன்று நாம் தாய்மொழி தமிழ் அல்லாதவர்களிடம் பேசும்பொழுது, அவர்களின் தாய் மொழியிலோ (தெரிந்திருக்கும் பட்சத்தில்) அல்லது உலக பொது மொழியான ஆங்கிலத்திலோ பேசுகின்றோமே அது எவ்வாறோ, அதே போன்று தாய் மொழி தமிழ் என்பவர்களிடத்தில் நாம் தமிழிலா பேசுகின்றோம் என்று சற்று யோசியுங்கள்(!) நிச்சயம் இல்லை. 

தமிழை நாம் முதன்மை மொழியாகக் கருதாமல் வேரு எவர் கருதமுடியும்(?) தமிழ் வார்த்தைகளை நாம் உபயோகிக்காமல் வேறு எவர் உபயோகிக்க முடியும்(?) உலகம் முழுவதும் உள்ள தமிழர்களில் 50 சதவிகித மக்கள் தமிழகத்தில் உள்ளனர். மற்றவர்கள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ், பர்மா போன்ற பல நாடுகளில் வசிக்கின்றனர்.

இங்கெல்லாம் வாழும் தமிழர்கள் தூய தமிழையும், தமிழ்ப் பெயர்களையும், தமிழ் வார்தைகளையும் நடைமுறையில் கொண்டுள்ளனர். பிற மொழி கலக்காத தூய தமிழ் மொழிக்கு முதன்மை தருகின்றனர்.

சிங்கப்பூர் விமான நிலையத்தின் நுழைவாயிலில் தமிழ்மொழிக்கு சிறப்பு தரும் வகையில் 'நல்வரவு' என்ற தமிழ் வார்த்தை இடம்பெற்றுள்ளது. மொரிசியஸ் நாட்டு உருபா தாள் மற்றும் நாணயங்களிலும் தமிழ் எண்களும், தமிழ் எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன.

நமது தமிழகத்திற்கு வெகு அருகாமையிலுள்ள இலங்கையின் தென் பகுதியில் வாழும் தமிழ் மக்கள் தமிழ் மொழிக்கு தரும் முதன்மையைக் கண்டால் நாம் தமிழர்கள்தானா என்ற ஐயம் ஏற்படும் அளவிற்கு உள்ளது. 

அவர்களின் பெயர்களிலும், புழக்கத்தில் சாலைகளின் பெயர்களிலும், அங்காடிகளின் பெயர்களிலும் தூய தமிழ் மட்டும் வாழ்ந்து கொண்டு உள்ளது.

மேலாக இவ்விரு நாட்டு மக்களின் தாய்மொழி தமிழாகினும்(!) அவர்கள் சந்தித்துப் பேசுமாயின் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் நிச்சயம் தேவை. சந்தித்துப் பேசியவர்களுக்கு அது நன்கு தெரியும்.

இங்கு அன்றாட வாழ்க்கையில் நாம் இல்லங்களிலும், பொது இடங்களிலும் உபயோகிக்கும் வார்த்தைகளைப் பாருங்கள்.

காலை முதல். . . குட்மார்னிங், டீ, பேப்பர், பேஸ்ட் பிரஷ், சோப்பு, டிபன், பஸ் ஸ்டாண்டு, டிக்கெட், ஸீட், ஸ்டாப்பிங், ஆபிஸ், லன்ஞ், ஸ்கூல், வாட்டர் பாட்டில், புக்ஸ், ரேஷன், மார்க்கெட், கடைகளின் பெயர்ப் பலகையில் ஆங்கிலம், நிறுவனங்களின் பெயர்கள் என்றெல்லாம் பட்டியல் நீள்கிறது.

ஈவ்னிங், டீ, டிவி, போன், ஃபேன், லைட், இறுதியாக குட் நைட் சொல்லிவிட்டு அத்தோடு குட் நைட்டையோ அல்லது ஆல் அவுட்டையோ பொருத்திக்கொண்டு உறங்குகிறது.

மறுநாள் 'தமிங்கில' வாழ்க்கை விடியலை நோக்கி... இந்த வாழ்க்கை சூழ்நிலையில் தமிழையோ, தமிழ் வார்த்தைகளையோ நினைக்ககூட நேரமில்லை. ஆம் அதுதான் உண்மை.

இத்துணை நிலையிலும் இன்று தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக உழைப்பவர்கள் எண்ணிக்கை சிறிதல்ல. இந்த எந்திர வாழ்க்கைக்கு மத்தியிலும் தமிழ் மொழிக்கு என்று ஒரு தனிச் சிறப்பை உருவாக்க அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் முயன்று வருகின்றனர்.

அவற்றுக்கு சான்றாக இன்றைய கணினித்துறையிலும், அலைபேசிகளிலும் தமிழ் மொழி கோலோச்சி உள்ளதே ஆகும். அவற்றின் மூலம் தமிழ் மொழியினை இன்றைய கணினித்துறையில் உள்ளவர்களும் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் இங்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் இணைந்து தமிழ் மொழியின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் வகையில் ஒன்றிணைந்துள்ளனர். அதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலை தூய தமிழை நம்மிடத்தில் துளிர்விட செய்துள்ளது.

எந்த ஒரு செயலும் நடைமுறையில் பயன்பாட்டிலும் ஈடுபாட்டிலும் கொண்டு வரும் பொழுது அது பழகிப்போன ஒன்றாகவே ஆகிவிடும் என்பது நாம் நன்கு அறிந்த ஒன்றேயாகும். மேலும் எந்த செயலின் துவக்கமும் முதலில் இல்லங்களில் வாயிலாக துவங்குமேயானால் வெற்றியின் விளிம்பை அடைவது உறுதி.

ஆகவே தூய தமிழ் வார்த்தைகளின் முக்கியத்துவத்தை முதன்மையாக்க ஒரு ஆழ்ந்த, நீண்ட சுவாசித்தல் மூலம் நிரப்புவோம் தூய தமிழை உள்ளங்களில்... அதே தருணத்தில் ஆழ்ந்து சுவாசித்த தூய தமிழை பேசி மகிழ்வோம் இல்லங்களில்...

நன்றிகள்.

Friday, 12 October 2012

தமிழ் அவ்வளவு பரந்தது.................!

எமது தமிழினம் உலகத்தில் தலை சிறந்த இனமா? என்று நான் அடிக்கடி என்னுள் கேள்வி கேட்பதுண்டு! சில சமயங்களில் நாம் உயர்ந்த இனமாகவும், சில சமயங்களில் ஏதோ சில காரணங்களால் நாம் பின் நிற்பதாகவும் தோன்றுகிறது! இதுகுறித்து உங்களுடன் கலந்துரையாடினால் தான் தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்!


முதலில் எம்மை இந்த உலகத்தில் சிறந்தவர்களாக படம்பிடித்துக் காட்டும் இரண்டு காரணிகளைச் சொல்லுகின்றேன்! முதலாவது எமது மொழி! உலகில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலை சிறந்த மொழி தமிழ் என்று நாம் சொல்லுகிறோம்! எழுதுகிறோம்! பேசுகிறோம்!

ஆனால் இதனை அனுபவ ரீதியாக எப்போதேனும் உணர்ந்திருக்கிறோமோ? இல்லைத் தானே! நிச்சயமாக உலகில் தமிழ் சிறந்த மொழிதானா? அல்லது, தமிழராகப் பிறந்ததனால் இப்படிச் சொல்லிக்கொண்டு இருக்கிறோமா?

இப்படி ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டால் என்ன சொல்வீர்கள்? “காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே” ஆகவே எங்கள் மொழி எமக்குப் பெரிசுதான்! என்று கொஞ்சம் சோகம் கலந்த பதிலா சொல்லப் போகிறீர்கள்? அதற்கு அவசியமே இல்லை! அப்படி ஒரு கழிவிரக்கப் பதில் எமக்குத் தேவையுமில்லை! நிச்சயமாகவே தமிழ் உலகில் தலை சிறந்த மொழிதான்! தமிழின் இனிமையும், பழைமையும் வேறெந்த மொழியிலும் கிடையாது!

எம்மில் பலருக்கு ஆங்கிலம் தான் சிறந்த மொழி என்ற எண்ணம் இருக்கிறது! இன்னும் சிலருக்கு எமது தமிழை வளர்க்க வேண்டுமானால் ஆங்கிலத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது! இவை இரண்டுமே தப்பு! தன் தாய் மொழி அல்லாத இன்னொரு மொழியைப் பயின்றவனுக்கே நிச்சயமாக தனது தாய்மொழியின் அருமை புரியும்! 

இப்பதிவைப் படிக்கும் உங்கள் அனைவருக்குமே ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருக்கும் என்பது எனது நம்பிக்கை! சரி, தமிழ் சிறந்தது சிறந்தது என்று சும்மா சும்மா சொல்லிக்கொண்டிருந்தால் சரியா? உண்மையாகவே தமிழ் சிறந்ததுதானா?

ஒரு உதாரணம் பார்ப்போமா?

ஆங்கிலத்தில் Come என்ற சொல்லுக்கு ஒரே ஒரு அர்த்தம் மட்டும்தான் உள்ளது! அது “ வா” என்பதாகும்! ஆறுவயது சிறுவனுக்கும் வா தான்! அறுபது வயது தாத்தாவுக்கும் வா தான்! ஆனால் தமிழர்களாகிய நாம் “ வயதுக்கு மரியாதை செய்யும் பண்பு” கொண்டவர்கள் என்பதால், ஒரு பெரியவரைப் பார்த்து “ வா” என்று அழைப்பதில்லை! “ வாருங்கள்” என்றே அழைப்போம்!

இது ஒவ்வொரு பிரதேச வழக்கிலும் கொஞ்சம் கொஞ்சம் வேறுபடும்! சரி, Come இன் இறந்த காலமாகிய Came என்பதற்கு என்ன பொருள் சொல்லுங்கள் பார்க்கலாம்! வந்தான் என்று சொல்வீர்களா? வந்தாள் என்று சொல்வீர்களா? வந்தார் என்று சொல்வீர்களா? வந்தது என்று சொல்வீர்களா? பாருங்கள், ஆண்பால், பெண்பால், பலர் பால், பலவின் பால், ஒன்றன் பால் அனைத்துக்குமே ஒரே ஒரு சொல்லைத் தான் வைத்திருக்கிறார்கள்! எழுவாயைக் கொண்டு மட்டுமே நாம் Came யாரைக் குறிக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்!

உதாரணம்

She came - அவள் வந்தாள்! He came - அவன் வந்தான்! ஆகவே Came என்றால் என்னவென்று யாராவது கேட்டால் சட்டென்று உங்களால் பதில் சொல்லிவிட முடியாது! இது ஆங்கில மொழிக்கு பெருமை தரும் விசயம் கிடையாது!ஆனால் தமிழில் ஒரே ஒரு ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டு பல விசயங்களை எம்மால் கணிக்க முடியும்! 

உதாரணம்

வந்தாள் என்ற சொல்லைப் பாருங்கள்!
இதில் பால் வேறு பாடு தெரியும் -வந்தவள் பெண்!
இதில் எண் வேறுபாடு தெரியும்! வந்தவள் - ஒருத்தி காலம் தெரியும்!
இது இறந்தகாலம்! - அவள் வந்துவிட்டாள்!

என்ன ஆச்சரியமா இருக்கா?

எப்படி ஒரே ஒரு சொல்லிலேயே இவ்வளவற்றையும் கண்டுபிடிக்க முடிகிறது?

இதுதான் தமிழ்!

இதுதான் தமிழின் சிறப்பு!

இப்போது நான் சொன்னது ஏதோ புது விசயம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்!

ஆறாம் வகுப்பிலேயே சொல்லித் தருகிறார்கள்!

நாம் தான் கவனிப்பதில்லை!

இந்த ஒரு உதாரணம் மட்டுமல்ல!

தமிழ் உலகில் உள்ள ஏனைய மொழிகளைவிட உயர்ந்தது என்பதற்கு பல நூறு உதாரணங்கள் சொல்ல முடியும்!

ஆகவே, தமிழ் சிறந்தது, தமிழ் உயர்ந்தது என்று யாருமே வெறும் வார்த்தைக்குச் சொல்ல வேண்டாம்!

அல்லது காக்கைக்கும் தன்குஞ்சு என்ற ரீதியில் ஒருவித கழிவிரக்கத் தொனியில் பேச வேண்டாம்!

அதற்கெல்லாம் அவசியமே இல்லை!

நிச்சயமாகத் தமிழ் உயர்ந்ததுதான்!

தமிழோடு ஆங்கிலத்தை ஒப்பிடுவது எவ்வகையிலும் பொருத்தமற்றது! 

தமிழைக் கற்கின்ற பிற மொழி அறிஞர்கள் மூக்கில் விரலை வைக்கிறார்கள்!

தமது மொழியைவிட தமிழ் உயர்ந்திருக்கிறது என்று அவர்களுக்கு நிச்சயமாக உள்ளுணர்வு சொல்லிவிடும்!

இன்று பல மொழி அறிஞர்கள் தமிழை ஆய்வு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்!

அவர்களால் இன்னமும் தமிழைக் கற்று முடிக்க முடியவில்லை!

அவ்வளவு ஏன்? தமிழர்களாகப் பிறந்த எம்மால் கூட தமிழை முழுமையாகக் கற்றுமுடிக்க ஒருபோதுமே முடியாது!

தமிழ் அவ்வளவு பரந்தது!

சரி,இப்படியான அருமையான மொழி எமக்குத் தாய்மொழியாக வாய்த்திருப்பது எமக்கு பெருமை என்றாலும், அந்தப் பெருமையினை நாம் உணர்கிறோமா? என்பதை எமக்குள் நாமே கேட்டுக்கொள்ளலாம்!

இன்னொரு விசயம் தெரியுமா? தமிழுக்கு - ஆங்கிலம் அருகில் நெருங்கவே முடியாது!

ஆனால் தமிழோடு முட்டி மோதுவதற்கு என்றே ஒரு மொழி இருக்கிறது!

அந்த மொழி தமிழுக்குச் சவால் விட எத்தனிக்கிறது!

முயல்கிறது!

ஆனால் முடியவில்லை!

அது என்ன மொழி தெரியுமா?அதுதான் பிரெஞ்சு! 

பிரெஞ்சைப் படிக்கப் படிக்க இனிமை! இனிமை! இனிமை! அவ்வளவு அழகான மொழி!

ஆனால் தமிழை நெருங்குமா என்றால்.....? இல்லவே இல்லை!

இது ஃபிரெஞ்சுக்காரர்களுக்கும் நன்கு தெரியும்!
சரி, தமிழினம் உயர்ந்த இனமாக மதிக்கப்படுவதற்கு இரண்டு காரணிகள் இருப்பதாகச் சொன்னேன் அல்லவா? அதில் ஒன்றுதான் எமது மொழி!

தமிழ் மொழியின் பெருமைகள் பற்றி அடிக்கடி தமிழர்களுக்கு நினைவூட்ட வேண்டியிருப்பதும் ஒரு வகை சங்கடம் தான்!

சரி, உயர்ந்ததுதான்!
ஒத்துக்கொள்கிறோம்!

அப்படியானால் அந்த இன்னொன்று எது?
உலகம் தமிழர்களைப் பார்த்து வியக்கும் அந்த இன்னொரு காரணி எது?

தமிழனின் வீரமா?
தமிழனைப் பார்த்து இந்த உலகமே புருவத்தை உயர்த்தும் அந்த இன்னொன்று எது?

நன்றிகள். 

தமிழ் இனத்துக்கே பெருமை................!


உலகம் முழுவதும் பேசப்படும் 17 வயது தமிழ்ச் சிறுவன் புற்று நோயைக் குணப்படுத்துவானா? 

புற்று நோய் என்னும் உயிர் கொல்லி நோயை அழிக்கப் பிறந்த ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக. கனடாவில் வசிக்கும் வெறும் 17 வயதாகும் தமிழ் சிறுவன் ஒருவன் இன்று உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வருகிறார்.

அபிக்குமரன் அன்று அழைக்கப்படும் இச் சிறுவன் 17 வயதில் வாத்தியக் கலாவதி பட்டத்தைப் பெற்றது மட்டுமல்லாது புற்றுநோயைக் குணப்படுத்த ஒரு பொறிமுறையைக் கண்டறிந்துள்ளார்.

அதனை அவர் கனடாவில் உள்ள புற்றுநோய் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பிவைக்க அங்கே பணி புரியும் மூத்த ஆராட்சியாளர் ஒருவர் தலையில் கைவைக்கும் அளவு அந்தப் பொறிமுறை அமைந்திருந்தது.

சொல்லிப் புரியவைக்க முடியாத அந்தப் பொறிமுறையை விரிவாகப் பார்த்தால் அதன் மூலம் புற்றுநோய் கலங்களை அழித்து அந்நோயை முற்றாக குணப்படுத்த அது ஏதுவாக அமையும் என்பதனை அறிந்த மூத்த ஆய்வாளர் அபிக்குமரனை அழைத்து தனது ஆய்வகத்தில் வேலைசெய்ய அனுமதித்துள்ளார்.

இன்று கனடா முழுவதும் பேசப்படும் 17 வயது நிரம்பிய தமிழர் யார் என்று கேட்டால் இந்த அபிக்குமரன் தான்.

அவர் வளர்ந்துவரும் நிலையில் இன்னும் சில காலத்தில் அவர் உருவாக்கியுள்ள பொறிமுறையைக் கையாண்டால் புற்றுநோயை முற்றாக அழிக்க முடியும் என மூத்த ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

புற்றுநோய் என்னும் உயிர் கொல்லி நோயை அழிக்கப் பிறந்த ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக அபிக்குமரன் உள்ளார் என அவரை பாராட்டி புகழ்ந்து தள்ளியுள்ளனர் பல மூத்த ஆய்வாளர்கள்.

அச் சிறுவனிடம் புதைந்து கிடக்கும் அறிவும் ஆற்றலும் தம்மை பிரமிக்க வைப்பதாகவும் 30 ஆண்டுகளாக தாம் செய்திராத ஆராட்சிகளை அச் சிறுவன் வித்தியாசமாகவும் வேறு கோணத்திலும் சிந்தித்துச் செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர். அபிக்குமரனால் தமிழ் இனத்துக்கே பெருமை.

நன்றிகள்.

Thursday, 11 October 2012

கறுப்பு விளக்கு/மின்குமிழ்...................!

பொதுவாக மின்விளக்குகள் அல்லது மின்குமிழ்கள் இருளினைப் போக்குவதற்கே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் விசேட வகைக்குள் அடங்கும் விளக்குகள் சில பல்வேறுபட்ட சிறப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறான சிறப்பு வகையினைச் சேர்ந்த கறுப்பு விளக்கு/மின்குமிழ் தொடர்பாகவே இங்கு பார்க்கவிருக்கின்றோம்.


இருளான அறை ஒன்றினுள் மின்குமிழ் ஒன்று ஒளிர விடப்படும்போது அந்த மின்குமிழில் இருந்து வெளிப்படும் ஒளியினை நாம் எமது கண்களால் பார்க்க முடியும். இருப்பினும் அந்த மின்குமிழ் வெளியிடும் ஒட்டுமொத்த ஒளியினையும் நாம் பார்க்க முடியாது. அதாவது, எமது வெற்றுக் கண்களுக்குப் புலப்படும், கட்புலனாகும், ஒளியினை மட்டுமே நாம் பார்க்க முடியும். எமது வெற்றுக் கண்களுக்குப் புலப்படாத, கட்புலனாக, ஒளியினை நாம் பார்க்க முடியாது. 

மின்குமிழில் இருந்து வெளியாகும் சாதாரண கட்புலனாகும் ஒளியில், கட்புலனாகும் ஏழு நிறங்கள் கலந்திருக்கின்றன. இந்தக் கட்புலனாகும் வெள்ளொளியிலுள்ள நிறங்களினுள் அதிகூடிய அதிர்வெண் கொண்ட நிறமாக ஊதா நிறமே காணப்படுகின்றது.

வெள்ளொளிக் கற்றை ஒன்றினை நிறப்பிரிகை செய்யும்போது, இந்த ஊதா நிறமே எமது வெற்றுக் கண்களுக்குப் புலப்படும் இறுதி நிறமாகும். அதாவது, வெள்ளொளிக் கற்றை ஒன்றில், வெற்றுக் கண்களுக்குப் புலப்படும் அதிகூடிய அதிர்வெண் கொண்ட நிறம் ஊதாவாகும்.

ஊதா நிறத்திலும் அதிகூடிய அதிர்வெண் கொண்ட நிறமாக புறஊதாக் கதிர்கள் எமது வெற்றுக் கண்களுக்குப் புலப்படுவதில்லை. இந்த கறுப்பு மின்குமிழ்கள் ஒளிரும்போது இவ்வாறான கண்களுக்குப் புலப்படாத புறஊதாக் கதிர்களை வெளியிடுகின்றன.

இவை பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன. குழாய் வடிவிலமைந்த குழாய் வடிவ மின்விளக்கு (Tube Light)  ஒளியினை உருவாக்கும் விதம் சாதாரண மின்குமிழ்கள் ஒளியினை உருவாக்கும் விதத்திலிருந்து வேறுபடுகிள்றன.

இந்த குழாய் வடிவ மின்குமிழ்கள், குழாயினுள் தாழ் அமுக்கத்தில் பாதரசத்துடன் கலந்திருக்கும் வாயுவினூடு மின்சாரத்தைப் பாய்ச்சுவதன் மூலம் ஒளியினை உருவாக்குகின்றன. பாதரச அணுக்களினூடு மின்வாரம் பாயும்போது அவ்வணுக்கள் ஒளித் துணிக்கைகளை உருவாக்குகின்றன. 

இவ்வொளித் துணிக்கைகளில் பெரும்பாலானவை புறஊதாக் கதிர்களாகவே காணப்படுகின்றன. இவ்வாறு வெளியேறும் புறஊதாக் கதிர்கள் கண்ணாடிக் குழாயின் உட்புறத்தே பூசப்பட்டிருக்கும் பொசு(ஸ்)பரசு பூச்சினால் உறிஞ்சப்பட்டு கட்புலனாகும் ஒளியாக வெளிவிடப்படுகின்றது.


 கறுப்பு மின்குமிழ்களும், குழாய் வடிவ மின்குமிழ்களில் ஒளி உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் முறையிலேயே ஒளியினை உருவாக்குகின்றன. இருப்பினும் கண்ணாடிக் குழாயின் உட்புறத்தே சிறப்பு வகையான பொசு(ஸ்)பரசு பூச்சுப் பூசப்பட்டு புறஊதாக் கதிர் உருவாக்கப்படுகின்றது.

இந்தச் சிறப்பு வகையான பொஸ்பரசு பூச்சு, மனிதர்களுக்கு ஆபத்து வளைவிக்கக்கூடிய UV-B மற்றும் UV-C வகைக் கதிர்களை வெளியேறாது தடுப்பதுடன் UV-A வகைக் கதிர்களை மட்டும் வெளிவிடுகின்றது. இதேபோன்று, தங்குதன் இழை மிக்குமிழ்களின் மூலமாகவும் புற ஊதாக் கதிர்களை உருவாக்க முடியும்.

அவ்வாறான மின்குமிழ்களிலே, மின்குமிழின் கண்ணாடி உடலின் உட்புறத்தே பூசப்பட்டிருக்கும் ஒரு சிறப்பு வகைப் பூச்சின் மூலமாக தங்குதன் இழையிலிருந்து புறப்படும் ஒளியிலுள்ள கட்புலனாகும் ஒளிக்கதிர்கள் தடுக்கப்பட்டு புறஊதா மற்றும் அகச்சிவப்பு கதிர்கள் மட்டும் வெளிவிடப்படுகின்றன.

கறுப்பு விளக்கின் மூலம் கிடைக்கும் புறஊதாக் கதிர் சிறப்பு வகை பூச்சுக்களால் வரையப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பொருட்களைப் பார்ப்பதற்கே பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக சாதாரண ஒளியில் கண்களுக்குப் புலப்படாத எழுத்துக்கள் அல்லது படற்கள் கறுப்பு விளக்கின் புறஊதாக் கதிரில் கண்களுக்குப் புலப்படும்.

நன்றிகள்.

Wednesday, 10 October 2012

உலகின் அமைதியான நாடுகள் ...............!


உலகின் அமைதியான நாடுகள்பொருளாதார புலனாய்வு பிரிவு (Economist Intelligence Unit) என்ற அமைப்பு வெளியிட்ட புள்ளி விபரப்படி உலகின் அமைதியான நாடு என்ற பெருமையை நோர்வே பெற்றுள்ளது.

இப்பட்டியலில் கடைசி இடம் இராக்குக்கு. இராணுவச் செலவு, ஆயுதவிற்பனை, ஊழல், மனித உரிமை மீறல், சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, குற்றச் செயல்கள் உள்ளிட்ட 24 பிரிவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.

அந்தப் பட்டியலின்படி மிக அமைதியான பத்து நாடுகள், அமைதி குறைந்த பத்து நாடுகளின் வரிசை வருமாறு:

மிக அமைதியான நாடுகள்:
1. நோர்வே 2
2. நியுசிலாந்து
3. டென்மார்க்
4. அயர்லாந்து
5. யப்பான்
6. பின்லாந்து
7. சுவீடன்
8. கனடா
9. போர்த்துக்கல்
10. ஆசு(ஸ்)த்திரியா

அமைதி குறைந்த நாடுகள்:
1. இராக்
2. சூடான்
3. இசு(ஸ்)ரேல்
4. இரசி(ஷ்)யா
5. பிலிப்பைன்சு(ஸ்)
6. தென்னாப்பிரிக்கா
7. ஹோண்டுராசு(ஸ்)
8. இரான்
9. அமெரிக்கா
10. யேமன் 

நன்றிகள்.

Monday, 8 October 2012

இணைய உலக வரலாறு....................!

1957 இல் ரசியா "Sputnik" என்ற செயற்கை கோள் அனுப்பி வெற்றி கொண்டபின் அமேரிக்கா போட்டா போட்டியாக (பனிப் போர்) ஒரு இராணுவ ஆராச்சி மையத்தை ஆரம்பித்தனர் (ARPANET).

இந்த அமைப்பானது பல்வேறுபட்ட இராணுவ ஆய்வின் ஓர் அங்கமாக 1962-1969 இடைப்ட்ட கால பகுதியில் கண்டுபடிக் கப்பட்டது தான் இணைய தொழில் நுட்பமாகும்.

இந்த கண்டுபிடிப்பானது தகவல் தொழில் நுட்பத்தில் பெரும் புரட்சி மட்டுமல்லாமல் தனிமனித வாழ்வியலையே ஒரு மிக பெரிய மாற்றத்துக்குள் ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றது.

இணையம் பல பரிமானங்களில் பரிணாமம் அடைந்த வரலாற்றை பல நூறு பக்கங்களில் சொல்லும் அளவில் அதன் சாதனை விரிந்துள்ளது.

இருந்த போதிலும் இந்த தகவல் தொழில் நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்பது எதிர்வு கூறமுடியாத போதிலும் இதுவரை காலமும் கடந்து வந்த பாதையை மிக சுருக்கமாக ஆண்டு ரீதியாக குறிப்பிடத்தக்க சில வரலாற்று நிகழ்வுகளுடன் கீழே பார்ப்போம்.

"இணைய உலக வரலாறு"

1969 இல் இரு கணனிகளுக்கிடையில் உள்நுழைவு ("log-in") என்ற சொல்லே முதலில் அனுப்பி பரீட்சிக்கப்பட்ட செய்தியாகும்.

1971 முதலில் 23 இணைய இணைப்பு மூலமாக மிக பிரபல்யமான பல்கலைக்களகங்களை இணைத்தனர்.

1972 பொதுமக்களுக்காக முதல் முறையாக இந்த தொடர்பு சாதனம் இயக்கி காட்டப்பட்டது. இதே ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி முதலாவது மின்னஞ்சலை (e-mail) ஐ @ உடன் வடிவமைத்து வெற்றி கொண்டார்.

1973 ARPANET ஆனது DARPA என பெயர் மாற்றம் செய்ததோடு இணையம் பற்றிய பலரது கருதுகோள்கள் உயிரூட்டம் பெற்றது. இணைய தொடர்புகளுக்கான நியம கடைப்பிடிப்புக்கள் உருப்பெற்றன(TCP/IP).

1974 இணைப்புகள் 100 எண்ணிக்கையாக அதிகரித்தது.

1976 இல் முதலாவது மின்-அஞ்சல் (e-mail) பிரித்தானிய மகாராணியினால் அனுபப்பட்டது மட்டுமல்லாமல் இவரே முதலில் மின்னஞ்சல் (e-mail) அனுப்பிய அரச தலைவருமாவர்.

1982 முதல் முதலாக இணையம் ("internet") சொற்பிரயோகம் பிறந்ததுடன் டொற் (.) என்ற குறியீடு இணைக்கதொடங்கப்பட்ட வருடம்.

1984 இணையதள பெயர் பதிவு முறை (DNS) தொங்கியதுடன் 1000 இணைப்புக்களை எட்டிப்பிடித்தது.

1985 AOL, .com, .edu, .gov உதயம்.

1986 வலை (.net) அறிமுகம்.

1987 .org இணைய சுட்டி இணைப்பி அறிவிப்புடன் 28,000 இணைப்புகளுடன் பயணம் தொடர்ந்த ஆண்டு.

1988 இணைய சந்திப்பு (chat) உருப்பெற்றதோடு கணனிகளில் இணைய வழி வைரஸ் தாக்கமுடன் 60,000 இணைப்புக்களை தாண்டியது.

1989 இணைப்புக்களை 100,000 மேல் சென்ற நிலையில் world.std.com உதயம். Tim Berners-lee தனது இணைய ஆராச்சியின் விளைவாக கணனிகள் பேசும் இணைய மொழியை (HTML) வெளியிட்டதுமல்லாமல் WWW ஐயும் நிறுவினார். 

1990 இல் world.std.com தனது (dial-up) சேவை மூலமாக உலகின் முதல் வர்த்தக நோக்கிலான இனைய இணைப்பு தொடங்கியதோடு 300 ஆயிரம் இணைப்புகள் உலகளவில் இருப்பது கணக்கிடப்பட்டது.

1991 சர்வதேச வலைப்பின்னல் குறியீடு " w w w" நடைமுறைக்கு வந்த ஆண்டாகியது.

1992 இணைய சமூக அமைப்பு (ISOC) உருவாக்கத்துடன் ஒரு மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.

1993 இணைய வானொலி, இணையத்ள பேசுமொழி பரிமாற்ரி அமுலாக்கி (http) அறிமுகத்தோடு mosaic உதயம்.

1994 இணையம் பிறந்து 25 வருடம் பூர்த்தி கொண்டாட்டம்,அத்துடன் இணைய உலகின் பிரபல்யமான yahoo, amazon, w3c, netscape அவதரிப்போடு 6 மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.

1995 புகழ்பெற்ற கணனி இணைய இயக்கிகள் Internet Explorar, Mozilla வருகை. இணையவர்த்தகத்தில் அழியா புகழ் பெற்ற e-bay(இன்று வரை 223 மில்லியன் மேலான பதிவு செய்யப்பட்ட பாவனையாளர்கள்.) வெளியானதோடு java, java script அறிமுகமானது. இவற்றோடு Alta Vista, mp3 என பல புரட்சி வருகை கண்ட வருடம்.

1996 இணைய தொலைபேசி, இணைய தொலைக்காட்சி,இணைய உலகில் தகவல் பெற என்றும் தட்டப்படும் wiki, Alexa என்பவற்றின் வருகை. tv.com விற்க்கப்பட்டது ($15,000). இணைய உலகில் 1.7 மில்லியன் பாவனையாளர்களை உலகளவில் இணைய சேவை பெற்றது பதிவானது.

1997 தொடுப்பில்லா தொடர்பு (WAP) அறிமுகம். Business.com விலைபோனது ($150,000). இந்த ஆண்டு 19.5 மில்லியன் இணைப்புக்களை எட்டிப்பிடித்தது. Netscape மிகவும் குறைந்த விலையில் dmoz.org ஐ கொள்முதல் ($ஒரு மில்லியன்) செய்தனர்.

1998 மேலும் பல சாதனை கண்ட வருடமாக Google வருகையுடன் Netscape ஐ AOL மிகமிகப்பெரிய விலைக்கும் ($4.2 பில்லியன்கள் மில்லியன் அல்ல) Compaq நிறுவனம் AltaVista ஐயும் ($3.3 மில்லியன்) கொள்முதல் செய்தன.

1999 இந்த ஆண்டில் my space, paypal இவற்றின் வருகையுடன் "blog" என்ற சொற்பிரயோகம் நடைமுறைக்கு வந்தது. Alexa ஐ தனக்கு சொந்தமாக்க Amazone $250 மில்லியன்களை கொடுத்தது.

2000 சட்டவிரோத இணைய உடைப்பு கும்பல்களின் ஆதிக்கத்திற்குள் உலக இணையத்தளம் சிக்கிய வருடமாகியது (hack of the year). AOL $16 பில்லியன்களை கொடுத்து Time warner ஐ சொந்தமாக்கியது.

2001 மின் அஞ்சல்கள் வைரஸ் தாக்கத்திற்குட்பட்ட பிரபல்யமான ஆண்டானதுடன்(virus of the year) .biz, .info அறிமுகமானது. இது மட்டுமல்லாமல் கட்டற்ற கலைக்களஞ்சியமான wikipedia பிறந்ததும் இந்த ஆண்டில் தான்.

2002 உலகளாவிய இணைய பாவனையாளர் எண்ணிக்கை 544.2 மில்லியன்களை தாண்டியது. RSS, podcast, blog வருகையுடன் .name, .coop அறிமுகமானது.

2003 மேலும் இணையதள பெயர்களின் இணைப்பு சுட்டியான .pro உடன் iTune அறிமுகமானது.இந்த ஆண்டிலேயே பிரபல்யமான உரிமை மீறல் aol-microsoft தீர்ப்பானது. AOL இற்கு $750 மில்லியன் நஸ்டஈடா கொடுத்ததுடன் netscape இன் வீழ்ச்சிக்கான சூழ்ச்சி செய்த வருடம் இதுதான்.

2004 கணனி இணைய இயக்கி FireFox இன் வருகையும் பிரபல்யமான Facebook இணையத்தின் அறிமுகமும் நிகழ்ந்த வருடம். இணைய தளமூடான வர்த்தக வருவாய் $117 பில்லியங்களையும் தாண்டியது.

2005 இணைய உலகின் பெயர்பெற்ற video தளம் YouTube உருவானது.

2006 Google தனது இணைய ஆக்கிரமிப்பு போட்டியில் $1.65 பில்லியன்களை கொடுத்து YouTube ஐ சொந்தமாக்கியது. இணைய உலகத்தில் 92 மில்லியனுக்கு மேலான இணையதளங்கள் வலம் வந்தன.

2007 Facebook இற்கும் Microsoft இற்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சானது. இணையத்தில் web 2.0 தொழில்நுட்பம் அறிமுகம் , iPhone விற்பனைக்கு வந்தது. 

2008 Yahoo இற்கு Microsoft கொடுக்க சம்மதித்த 44.6 பில்லியன் டொலர் தோல்வியானது. உலக இணையத்தில் Facebook இல் பதிவுசெய்யப்பட்ட அங்கத்தவர் தொகை 100 மில்லியனை தாண்டியது. Chrome பிறப்பும் Netscape இறப்பும் நிகழ்ந்த ஆண்டாகியது.

2009 அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளின் படி உலக இணையதள பாவனையாளர்களின் எண்ணிக்கை 1,596,270,108 ஐயும் தாண்டி சாதனை தொடர்கிறது.

1.97 பில்லியன் - இணைய பயனர்களையும் தாண்டி உலகளவில் 2010 ஆண்டில்.

360,985,492 இணைய பயனார்களையும் தாண்டி உலகளவில் 2011 ஆண்டில்.


(கூடுதலானவரை தமிழாக்கம் செய்யப்பப்பட்டுள்ளது.)
நன்றிகள்.

அதிக காலம் உயிர் ...............!

உலகில் அதிக காலம் உயிர் வாழ்ந்த உயிரி. மிங் எனப் பெயரிடப்பட்டுள்ள சிப்பி சமீபத்தில் ஐசு(ஸ்)லாந்து நாட்டின் வடக்கு அத்திலாந்திக் பெருங் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒருவகையான சிப்பி, சுமார் 405 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

உலக வரலாற்றில், மிக அதிக நாள் உயிர் வாழ்ந்த உயிரினமாக இந்த கடற் சிப்பி கருதப்படுகிறது.

இத்தனை நாள் இந்த சிப்பி உயிர்வாழ்ந்தது எப்படி என்று விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்து வருகிறார்கள். இந்த ஆராய்ச்சியின் பயனாக மனிதன் உள்ளிட்ட மற்ற உயிரினங்களின் வாழ்நாளை நீட்டிப்பதற்கு வழி வகைகளை கண்டுபிடிக்க முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள்.

இந்த கடற்சிப்பிக்கு விஞ்ஞானிகள் 'மிங்' பெயரிட்டிருக்கிறார்கள். அதாவது, 1602 ஆம் ஆண்டு இந்த சிப்பி கடலில் பிறந்த போது, சீனாவில் ஆட்சியில் இருந்த அரச பரம்பரையின் பெயரை விஞ்ஞானிகள் இந்த சிப்பிக்கு சூட்டியிருக்கிறார்கள்.

இந்த சிப்பி பிறந்தபோது இங்கிலாந்தில் முதலாம் எலிசபெத் பேரரசி ஆட்சி செய்துகொண்டிருந்தார். இலக்கியவாதியான ஷேக்சு(ஸ்)பியர் தனது படைப்புகளை எழுதிக்கொண்டிருந்தார்.

இந்த சிப்பி பிறந்து 40 ஆண்டுகள் கழித்து தான் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் பிறந்தார். இப்படி உலக வரலாற்றின் பல முக்கிய நிகழ்வுகளை தனது வாழ்நாளில் கண்ட இந்த அதிசய சிப்பி, சுமார் எட்டரை சென்டிமீட்டர் நீளமுள்ள ஓட்டிற்குள் முடங்கியிருந்தது.

இந்த சின்னஞ்சிறிய ஓட்டில் இருக்கும் வளையங்களை வைத்து இதன் வயது கணக்கிடப்பட்டிருப்பதாக கூறுகிறார் கடலியல் பேராசிரியர் கிரிசு(ஸ்) ரிச்சர்ட்சன்.

சிப்பியின் ஓட்டின் மேலிருக்கும் இந்த வருடாந்த வளையங்கள், இதன் வளர்ச்சி பற்றியும், அதற்கு கடலில் கிடைத்த உணவு, கடல் சார் தட்ப வெப்பம் ஆகியவை எப்படி இதன் வளர்ச்சியை பாதித்தது என்பது பற்றியும் அறிவதற்கு உதவியாக இருக்கிறது.

கடலின் கடந்த கால தட்ப வெப்பத்தை மட்டுமல்லாமல், விலங்குகள் நீண்ட காலம் உயிர் வாழ்வது குறித்த ஆராய்ச்சிக்கும் இந்த சிப்பிகள் பயன்படும் என்கிறார் ரிச்சர்ட்சன்.

405 ஆண்டுகள் ஆழ்கடலில் அமைதியாக உயிர்வாழ்ந்த இந்த கடற்சிப்பி, கடந்த வாரம் கடலை விட்டு வெளியில் எடுக்கப்பட்டு ஆராய்ச்சியாளர்களின் விஞ்ஞானக்கூடத்தில் உயிர்விட்டது.

நன்றிகள்.


Sunday, 7 October 2012

பேசும்’ நீர்வாழ் உயிரினங்கள்................!


நீர்வாழ் உயிரினங்களில் சில பேசுகின்றன என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் உண்மையாகவே கடலின் அடியில் வாழும் திமிங்கலங்களும், சிலவகை மீன்களும் பேசுகின்றன. கடலின் அடியில் அமைதியில்லை. மாறாகப் பல ஒலிகள் இருந்து கொண்டே இருக்கின்றன. 

இந்த ஒலிகள் மனிதன் கேட்கும் சக்திக்கு அப்பாற்பட்டவை. இந்த ஒலிகளைத் தனியான கருவிகள் மூலம் பதிவு செய்கிறார்கள். நீரில் மீன்கள் ஏன் ஒலியை உண்டாக்க வேண்டும்?

வவ்வால்கள் ஏன் ஒலியை உண்டாக்குகின்றன என்று நீங்கள் சிந்தித்தால் இதற்கான விடை உங்களுக்குக் கிடைக்கும். மீன்களுக்கு நம்மைப் போல வெளிச் செவியில்லை. ஒலி அலைகள் அவற்றின் உடலின் ஊடாகச் சென்று அவற்றின் உட்செவிகளை அடைகின்றன.

திமிங்கலங்களுக்கு குரல்நாண்கள் இல்லாத போதும் அவை ஒன்றுக்கொன்று பேசிக் கொள்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

இவை `கிளிக்’… `கிளிக்’ என்று விட்டுவிட்டு ஒலி எழுப்புகின்றன. இந்த ஒலிகளின் எதிரொலியால் கடலில் சுற்றித் திரிகின்றன. இவை உண்டாக்கும் ஒலி வினாடிக்கு 50 ஆயிரம் அதிர்வுகளைக் கொண்டது.

இதேபோல் சில பறவைகளும் தங்கள் எதிரொலியின் மூலம் இடத்தை அறிந்துகொண்டு பறக்கின்றன. ஆந்தை தன் உணவை இந்த எதிரொலியின் மூலம்தான் பிடிக்கிறது.

பல பறவைகள், கேட்க முடியாத இந்த ஒலிகளின் மூலம்தான் வாழ்க்கையை நடத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

நன்றிகள்.

மார்பகப் புற்றுநோயும் வீட்டு வேலையும்......!


`இந்த வீட்டு வேலையில இருந்து ஒருநாளு கூட ஓய்வில்ல…’ என்று அலுத்துக்கொள்வது இல்லத்தரசிகளின் வழக்கம். ஆனால் குடும்பத் தலைவிகள் தொல்லையாகக் கருதும் வீட்டு வேலைகள், அவர்களுக்கு நன்மையே செய்கின்றன.

ஆம், எப்போதும் சுறுசுறுப்பாக வீட்டு வேலை செய்யும் குடும்பப் பெண்மணிகளுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் 13 சதவீதம் குறைகிறதாம்.  

வீட்டு வேலை, நடைப்பயிற்சி, தோட்ட வேலை, உடற்பயிற்சி என்று சுறுசுறுப்பாக ஏதாவது ஒன்றில் ஈடுபட்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் குறைகிறது என்கிறது, ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று.

இந்த ஆய்வுக்காக, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் பெண்கள் ஆராயப்பட்டனர். அவர்களின் உணவு, வாழ்க்கை முறை மற்றும் மார்பகப் புற்றுநோய்க்கு உள்ள தொடர்பு அலசப்பட்டது.

அப்போது, வேலை குறைந்த வாழ்க்கை முறையை வாழ்பவர்களை விட, எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் சற்றுக் குறைவு என்று தெரியவந்தது.

அதாவது, 13 சதவீதம். `கொஞ்சம்’ வேலை செய்பவர்கள் அல்லது மிதமாக வேலை செய்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் 8 சதவீதம் குறைகிறதாம்.

இதுதொடர்பாக இங்கிலாந்தின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த சாரா வில்லியம்ஸ் கூறுகையில், “தற்போதைய கண்டுபிடிப்பு, முற்றிலும் புதிதல்ல.

ஆனால், சுறுசுறுப்பான செயல்பாடு மார்பகப் புற்றுநோய் வாய்ப்பைக் குறைக்கும் என்ற முந்தைய ஆய்வு முடிவுகளை இது உறுதி செய்கிறது. 

இப்புதிய ஆய்வில் நல்ல விசயம் என்னவென்றால், இது `உடற்பயிற்சி நிலையங்களில் ’ செய்யும் உடற்பயிற்சியை மட்டும் கவனிக்கவில்லை, 

மாறாக, சுவாசத்தை அதிகப்படுத்தும் எந்த வேலையையும் கவனத்தில் கொண்டிருக்கிறது. அதனால் ஏற்படும் நன்மையைத் தெரிவித்திருக்கிறது” என்கிறார்.

நன்றிகள்.

Saturday, 6 October 2012

எளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின்.....!


மனித எண்ணங்களையும், உணர்வுகளையும் எடுத்துச் சென்று, வெளிப்படுத்தும் கருவியாக மொழியமைகிறது. மனிதன் முதலில் மொழியில் ஒழுங்கில்லாமல் தான் பேசிக்கொண்டு இருந்தான்.

நாளடைவில் அவன் மதி நுட்பத்திற்கேற்ப அவனைத் திருத்திக்கொண்டு மற்றவர்களுக்கும் கற்று கொடுக்கும் முயற்சியில் இறங்கினான். கற்றல், கற்பித்தல் தொடர்பான சிந்தனைகள் இந்தியப் பண்பாட்டில் வேத காலம் தொடங்கியே ஏற்பட்டுவிட்டது.

எந்த எழுத்தை எப்படி உச்சரிப்பது? தவறுதலாக உச்சரித்தால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை நமக்கு வேதங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஆசிரியர் மாணவர்களுக்கிடையேயுள்ள உறவுநிலையை உபநிடதங்கள் கூறுகின்றன.

கற்றல் கற்பித்தலில் முக்கிய பங்குவகிப்பவர்கள் மாணவரும் ஆசிரியருமே. எனவே கற்பித்தலை எளிமையாக்குவதின் மூலம் மாணவர்களின் திறன்களை எவ்வாறு வெளிக்கொணர முடியும் என்பதை ஆய்வுப் பொருளாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

கேட்டல் திறன்:

நான்குவகைத் திறன்களில் கேட்டல் திறனே மிகவும் இன்றியமையாத திறனாகும். இதனையேத் திருவள்ளுவர்,

"செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்
அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" (குறள்: 157

என்று குறிப்பிடுகிறார்.

ஒன்றைப் படித்துத் தெளிவதைவிட கேட்டு தெளிவதே பயனுள்ளதாக இருக்கும். குழந்தை வயிற்றில் இருக்கும்போதே கேட்கும் திறனைப் பெற்றுவிடுகிறது.

அந்தக் குழந்தை பேசுவதற்கு வேண்டுமேயானால் நாட்கள் ஆகுமே தவிர அதுவரை கேட்டல் என்ற ஒரு திறனை அது வளர்த்துக்கொண்டேதான் வரும்.

"ஆசிரியர் பேசும்போது மாணவர் கேட்கின்றனர். கேட்கின்றவர் எல்லோரும் மிகக் கவனமுடன் அல்லது கூர்மையுடன் கேட்பதாகச் சொல்ல இயலாது. ஏனெனில் ஆசிரியர் பேச்சின் கருத்து மிகக் கடினமானதாக அல்லது பேசப்படும் பொருள் மாணவர்களின் அனுபவத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம்.

எனவே கேட்பவரின் திறன் மாறுபட இடமுண்டு. அதோடு அறிவாற்றலுக்கு ஏற்பக் கேட்கும் திறனிலும் வேறுபாடு உண்டு" பிறர் படிக்கும் போதும் பேசும்போதும் என்ன என்பதை செவிமடுத்து ஒருவர் கேட்க முற்படும்போது அதுவே அவரின் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையாகும்.

எனவே இராமலிங்க வள்ளலார் படித்தாலும் படிக்கப் பக்க நின்று கேட்டாலும் இனிப்பவன் இறைவன் என்கிறார்.

ஆசிரியர்கள் வாசிக்கும் போது மாணவனைத் தன்வயப்படுத்தி எளிமையான சொற்களைச் சொல்லும்போது அவன் செவிமடுத்து கேட்பான். மாணவரின் புரிதல் திறனுக்கேற்ப பாடல்கள் பாடியோ அல்லது ஒரு சொல் சொல்லி அதற்கு எதிர்ச்சொல் என்னவாக இருக்கும் என மாணவனை யூகிக்க வைக்கவேண்டும்.

ஆசிரியர் மாணவர்களுக்கிடையே ஒரு தொடர்ச்சி சங்கிலிப் பிணைப்பு இருந்தால் தான் கேட்டல் திறன் முழுமைப்பெறும் என்பதில் ஐயமில்லை.

டாக்டர் எம்.எஸ். திருமலை கேட்கும் திறன் என்பது தனிப்பட்டவர்களின் மனநிலை, விருப்பு, வெறுப்பு, ஆர்வம் ஆகியவற்றைப் பொறுத்தும், தனிப்பட்டவர்களின் திறமை, அவர்களின் உடல், மனநிலையில் உள்ள குறைபாட்டைப் பொறுத்தும் உள்ளது என்கிறார்.

நல்ல மாணவனாக ஒருவன் திகழ்வதற்கு கேட்டல் திறனே முதல்படியாக அமைகிறது என்பது ஆய்வாளர்களின் ஒருங்கிணைந்த கருத்தாக அமைகின்றது.

வாசித்தல் பழக்கம்:

பாடத்திட்டத்தில் உள்ள பாடப்புத்தகத்தை மட்டும் படிக்கும் மாணவனை மற்றப் புத்தகங்களையும் படிக்க வைப்பதற்கு தூண்டுகோலாக ஆசிரியர் விளங்கவேண்டும்

கதைப்புத்தகங்கள், நாளிதழ்கள் போன்றவற்றை வாசிப்பதற்கு ஆர்வங்காட்டுவதால் மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்வதோடு, பிழையின்றி வாசிக்கவும், எழுதவும் முடிகிறது.

தினந்தோறும் வகுப்பிலேயே ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி இன்றையச் செய்திகளை வாசிக்க வைக்கும்போது மாணவர்களிடையே ஒரு உந்துதல் ஏற்பட்டு அவனைவிட நாம் நன்றாக வாசிக்க வேண்டும் என்று அறிவுப்போட்டி ஏற்படும்.

வாசித்தலின் போதே ஆசிரியர் எந்த இடத்தில் ஏற்றி இறக்கி வாசிக்க வேண்டும் என்று சொல்லும்போது மாணவரின் மனதிலும் நன்றாகப் பதியும். வாசிக்கும்போது சந்திப்பிழை, ஒற்று மிகுதல் ஒற்று மிகாதல் பேன்ற இலக்கண குறிப்புகளையும் ஆசிரியர் சொல்லிக் கொண்டே வந்தால் நாளடைவில் மாணவன் பிழையின்றி வாசிக்கவும் அதன்மூலம் எழுதவும் முடியும்.

நூல் வாசிக்கும் பழக்கம் இல்லையெனில் அவர்களது அறிவை விரிவுபடுத்த முடியாது. ஏதாவது ஒரு தலைப்பில் கட்டுரை எழுதச் சொன்னால் அவர்கள் வார்த்தையைத் தேடுவர். அவர்களிடத்தில் சொல்லாட்சித்திறன் இல்லாமல் போய்விடும்.

மாணவர்களிடத்தில் சொல் வளத்தைப் பெருக்குவதற்கு அவர்களுக்கு பிடித்தமான கதையைச் சொல்லி அதன் பின்பு அக்கதையின் சுருக்கத்தை எழுதச் சொல்லும்போது அவனுடைய சொந்த முயற்சி வெளிப்படும். எனவே ஆசிரியர் வாசித்தல் பழக்கத்தை ஏற்படுத்தும் போது சிறந்த மாணவனை உருவாக்க முடியும்.

இலக்கணம் கற்பித்தல்:

மொழியைப் பிழையின்றிப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் இலக்கணம் பயன்படுகிறது. சொற்களை விளக்கும் கருவியாக இலக்கணம் அமைகிறது.

"இலக்கணம் என்பது பழைய மொழிக்கு விளக்கம் கூறும் மரபிலக்கண நூற்களின் செய்திகள் மட்டுமல்ல. அன்றாடம் நாம் பேசும் எழுதும் மொழியின் அமைப்பையும் ஒழுங்கு நெறியையும் கூறுவதாகும்". இலக்கணத்தை கற்பிக்கும் ஆசிரியன் மாணவரிடத்தில் பயத்தை உண்டு பண்ணுதல் கூடாது.

இன்றைய சூழ்நிலையில் குருட்டு மனப்பாடம் செய்ய வைத்து அவர்களுக்கு புரிதல் திறனே இல்லாமல் செய்துவிடுகின்ற போக்கே நிலவி வருகின்றது.

இலக்கண ஆசிரியர் பாடம் கற்பிக்கும் போது அந்தக் கால மொழிச் சூழலை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து அதன்மூலம் அக்கால மொழிப் பயன்பாடு எவ்வாறு இருந்தது?

அந்த மொழிக்குரிய இலக்கணம் இவையென்று தெளிவுபடுத்த வேண்டும். காலந்தோறும் மொழியானது மாறுதலுக்குட்பட்டது. எனவே மரபிலக்கணத்தைச் சொல்லி கொடுக்கும்போதே, தற்போது மொழியின் நிலை என்ன என்பதையும் விளக்கி மாணவர்களுக்கு வேறுபாட்டை உணரும் திறனை ஏற்படுத்த முடியும்.

மரபிலக்கண நூல்கள் தம் காலத்திய பேச்சு வழக்கு, செய்யுள் வழக்கு ஆகியவற்றின் இலக்கணமே கூறுகின்றன. தொல்காப்பிய பாயிரத்தில் வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் என்ற தொடரால் குறிக்கின்றது.

இவைத் தவிர பல நூற்பாக்களின் செய்திகள் இக்காலத் தமிழுக்கும் பொதுவானவைகளாகவே காணப்படுகிறது. மொழியை பிழையின்றி உச்சரிப்பதற்கு முதலில் மாணவனுக்கு பிறப்பியல் செய்திகளைக் கூற வேண்டும்.

எந்த எழுத்து எந்த இடத்தில் பிறக்கிறது என்பதை மாணவனே அறிந்து உச்சரிப்பதற்கு ஆசிரியர் வழிகாட்ட வேண்டும். மேலும் மாணவர்களின் வயது வரம்புக்குத் தகுந்தவாறு இலக்கணம் அமைய வேண்டும்.

குறிப்பாகத் தொடக்கக் கல்வி மாணவனுக்கு பெயர்ச்சொல், வினைச்சொல்லுக்குரிய வரையறைத் தெரிந்தாலே போதுமானது. அதைவிடுத்து பெயரெச்சம், வினையெச்சம், முற்று போன்ற இலக்கணக் கருவிச் சொற்களை கற்றுத்தரும் பொழுது மாணவனுக்கு இலக்கணத்தின் மீதே கசப்பு ஏற்பட்டுவிடுகிறது.

எனவே இலக்கணம் பாடத்திட்டம் மாணவரின் புரிதல் திறனுக்கு ஏற்பவே அமைய வேண்டும். பாடத்தில் உள்ள உதாரணங்களை மட்டும் கூறாமல், மாணவனைச் சிந்திக்க வைத்து உ‘ரணங்கள் கூறிய பின் இத்தொடரில் பெயர்ச்சொல் எது வினைச்சொல் எது என அவர்கள் கண்டறிவதற்கு நாம் சோதனை நடத்த வேண்டும். 

கற்பித்தலின் தரம்:

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்பிக்கும்போது தெரிந்த ஒன்றைச் சொல்லி தெரியாதவற்றை எளிய சொற்களின் மூலம் விளக்குதல் வேண்டும். ஆசிரியர் குறிப்பிட்ட கால எல்லைக்குள் பாடத்திட்டத்தில் உள்ள பாடத்தை முடிக்கவேண்டும் என்று அவசர அவசரமாய்ச் செல்லாமல் மாணவரின் புரிதல் திறனுக்கேற்றபடி பாடத்தை நடத்திச் செல்ல வேண்டம்.

முதல் நாள் வகுப்பில் நடத்திய பாடத்தை மறுநாள் மாணவர்களுக்கு நினைவூட்டும் வகையில், அவர்களிடம் வினாக்களை எழுப்புவது, மாணவர்களுக்கு அந்தப் பாடத்தை பற்றிய அறிவு போதுமானதா இல்லையா என ஆசிரியர்கள் தீர்மானிப்பதற்கு வழி வகுக்கும்.

மேலும், மாணவனின் புரிதல் திறன் அதிகரிப்பதற்கு வண்ண எழுதுகோல்களினால் வரைந்த வரைபடங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றை ஆசிரியர் பயன்படுத்தலாம்.

மாணவன் பெரிய கவிஞனாக ஆகாவிட்டாலும் தமிழ்மொழியை பிழையில்லாமல் பேசவும் எழுதவும் கற்றுக் கொள்ளவேண்டும். மாணவன் படிக்கும், பயன்படுத்தும் மொழியில் சொல்வளம் அதிகமாக இருக்குமாறு பாடத்திட்டம் அமைய வேண்டும்.

சொற்களைக் கற்பிக்கும்போது அவன் வாழ்க்கையில் அன்றாடம் பயன்படக்கூடியவையாகவும், அனுபவத்திற்கு உட்பட்டவையாகவும் மொழி அமைய வேண்டும். மாணவனுக்கு சிறு சிறு கட்டுரை, கவிதை, சிறு நாடகங்கள் போன்றவற்றிற்கு வாய்ப்பு கொடுக்கும்போது அவனுடைய கற்பனையாற்றல் விரிவடைந்து எந்தச் சொல்லை எங்குப் பிரயோகிக்க வேண்டும் என்ற ஆற்றல் ஏற்படுகிறது.

இறுதியாக மாணவன் பிழையின்றி பேசவும், எழுதவும், அவனுடைய கற்பனைத்திறனை அதிகரிக்கவும் ஆசிரயரே முழுப்பங்கு வகிக்கிறார்.

ஏனெனில் பெயர்சொல்லின் தன்மையைக் கூறி இது பெயர்ச்சொல் என்று விளக்குவதற்குக் கருவிமொழியைப் பயன்படுத்தி வழக்குச் சொல்லுக்கும், எழுத்துச்சொல்லுக்கும் உள்ள வேறுபாட்டை தெளிவுபடுத்துகிறார்.

எனவே இலக்கணத்தை முழுமையாக கற்றுகொண்டோமேயானால் எந்த ஒரு மொழியையும் எளிமையாக பேச, எழுத நம்மால் முடியும் என்பதில் ஐயமில்லை.

நன்றிகள்.

Friday, 5 October 2012

கணனியுகத்தின் நேரங்கள்...........!


பொதுவாக கணனி, இணையத்தில் தகவல் பயணம் செய்யும் வேகமானது மிகச் சிறிய விநாடிகள் (Seconds)  பேசப்படும்.

மில்லி செக்கன் ( milli second) என்பதன் அர்த்தம் ஆயிரத்தின் ஒரு விநாடி (1/1000) என்பதை குறிப்பிடுகின்றனர்.

நுண் விநாடி (micro second) என்பதன் அர்த்தம் மில்லியனின் ஒரு விநாடி (1/1000000) என குறிப்பிடுவர்.

நனோ விநாடி (nano second) என்பதன் அர்த்தம் பில்லியனின் ஒரு விநாடி (1/1000000000 அல்லது ஒன்றின் கீழ் பத்தின் 9ம் அடுக்கு) கால அளவுகளை கொண்டதாகவும் இருக்கின்றது.

(இதேபோல் மற்றய மிகச்சிறிய விநாடி அளவுகளின் பெயர்கள் பத்தின் அடுக்கு எண்ணிக்கையுடன் மட்டும் கீழே தரப்படுகின்றன).

பிக்கோ விநாடி (pico second) (ஒன்றின் கீழ் பத்தின் 12ம் அடுக்கு).
பெம்ரோ விநாடி (femto second) (ஒன்றின் கீழ் பத்தின் 15ம் அடுக்கு).
அற்ரோ விநாடி (atto second) (ஒன்றின் கீழ் பத்தின் 18ம் அடுக்கு).
ஜொக்ரோ விநாடி (yocto second) (ஒன்றின் கீழ் பத்தின் 24ம் அடுக்கு).

நன்றிகள்.

Thursday, 4 October 2012

அரசியல் சொற் பதங்கள்...................!

உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
(உலக அரசியல் செய்திகளில் பாவிக்கப்படும் சொற் பதங்கள்.)

தாராண்மை வாதம் (liberalism )

தனிநபர்,அவர் சார்ந்த கலாச்சரம், நம்பிக்கை இவற்றின் மீது சாதகமான முடிவகளை எடுத்தல்.

சமதர்மம் (socialism)

அரசியல், பொருளாதார தத்துவார்த்த முறைமை. இதன் மையக் கருத்துப்படி உற்பத்தி, பங்கீடு, பரிமாற்றம் இவற்றின் சொந்தக் காரர்களக முழு சமூகமும் ஒத்து செயற்படும் அதே வேளை இவற்றை அரசாங்கம் ஒன்று நெறிப் படுத்தும் முறைமை சமதர்மம் எனப்படும்.

முதலாளித்துவம் (capitalism)

இது (முதலாளித்துவம் ) சோசியலிஸம் அமைப்பில் இருந்து சற்று வித்தியாசமானது. இங்கு சமூகத்திற்குப் பதிலாக தனி நபர் நலன் சார்ந்ததாக (தனியர் மயப்பட்ட) ஒவ்வொரு முடிவுகளும் இருக்கும்.

பொதுவுடைமை (communism)

சமூக வர்க்கத்தின் (வகுப்புக்களின்) கூட்டான கட்டமைப்பு. இங்கு தனியார் அல்லது அரசுத்தலைவர் என்ற பேச்சுக்கு இடமில்லை. இங்கு அனைத்து சொத்துக்களும் பொது சொத்து என்பதாக இருக்கும்.

மார்க்சியம் (marxism)

இதனை ஒரு இயக்கமாக கொள்ளலாம். அதாவது காஃர்ல் மாஃர்க்ஸ் (Karl Marx 1818-1893 ) இன் அடிப்படை தத்துவார்த்த கொள்கையை அப்படியே முன்னெடுப்பதாகும். காஃர்ல் மாஃர்க் அவர்கள் பொதுவுடைமை தந்தையாகவும் போற்றப்படுகின்றார்.

கொடுந்தேசிய வாதம் (fascism)

இது ராணுவ பலத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு அரசினால் நாட்டின் நலன் கருதி நடாத்தப்படும் தீவிர ஆட்சி அமைப்பு. இங்கு அரசு மகளை ராணுவ பலத்தினால் அடக்கி ஒரு சர்வாதிகார ஆக்கிரமிப்பு செய்வதாக இருக்கும். 

கொடும்பேரினவாதம் (nazism)

ஒரு இனம் நலன் மட்டும் கொண்ட கடுமையான இனவாத அமைப்பு. இது பாசிஸம் அமைப்பை தழுவியதாகவும் உள்ளது.

யூத எதிர்ப்பு (anti-Semitism)

யூத இனத்திற்கு எதிரானது எனும் அர்த்தம் கொண்டது. இன்றும் பல நாடுகளின் ஆட்சியாளர்,மக்கள் "யூத எதிர்ப்பு" கொள்கையை கடைப்பிடிக்கின்றனர் (முன்பு ஜேர்மன்-இப்போது ஈரான்).

பழமைவாதி (conservative)

பழைமை அல்லது பாரம்பரியத்தினை கட்டி காப்பதாகும்.

பழமைநெறிவாதம் (fundamentalism)

என்பது (அடிபடைவாதம்) ஒரு மதத்தி மதவாத கொள்கைகளை கடுமையாக கடைப்பிடிப்பது.

இடது சாரி (left-wing)

புரட்சி கரமான மாறுதல்களை அல்லது மறுமலட்சிகளை உருவாக்குதல். இது மேல் சொல்லப்ப்ட்ட லிபரலிஸம் சார்ந்ததாக இருக்கும். இங்கு அதிகாரப்பரவு (அதிகார பகிர்வு) எப்போதும் பேசப்படும்.

வலது சாரி ( right-wing)

இங்கு கொன்சவேட்டிவ் உயிர் மூச்சாகும். அத்துடன் அனைத்து அதிகாரமும் மத்தியில் மையப் பட்டிருக்கும்.

மேலும், கடுமையான இடது சாரி கொள்கை பொதுவுதமை தோன்ற வழி சமைக்கும். கடுமையான வலது சாரி கொள்கை கொடுந்தேசிய வாதம்  தோன்ற வழி சமைக்கும். (பொதுவுடமை கொள்கையாக அறிவிக்கப்பட்ட நாடுகளான சீனா, கியூபா, வட கொரியா, வியட்நாம், லாவோசு ஆகியவை எல்லாம் சர்வாதிகார அல்லது ஒரு கட்சி ஆட்சி நடைபெறும் நாடுகள் ஆகும்).

நன்றிகள்.

Tuesday, 2 October 2012

அதிசயமான பாடும் பறவை.............!

லைரே பறவை (Lyrebirds) பல் குரலில் பாடும் சக்தி கொண்ட அதிசயமான பறவையினம். லைரே பறவை (Lyrebirds) மிகவும் பிரமிக்கும் வகையில் தனது சூழலில் இருக்கக்கூடிய அனைத்து இசைகளையும் விகடம் (mimicry) செய்யும் ஆற்றல் படைத்தது.

இந்த பறவையினம் உலகிலேயே அவுசுத்தி(ஸ்)ரெலியாவின் கிழக்கு பகுதியில் தான் காணப்படுகின்றது (படத்தில் சிவப்பு மை பகுதி).

இந்த பறவைகள் மைலின் தோகையினையும் குயிலின் உடலினை ஒத்தும் காணப்படுகின்றன. இந்த பறவை வெப்ப பிரதேசங்களிலுள்ள ஈரவலைய அடர் காடுகளில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பறவையின் முக்கிய உணவாக உக்கிய மரப்பாகங்களில் காணப்படும் புழுக்களையும் , மற்றும் பூச்சிகளையும் உண்கின்றது.
மேலும் இந்த பல் குரல் பாடும் சக்தி ஆண் லைரே பறவைக்கு மட்டுமே உள்ளதுடன் இது தனது பெண் இனத்தினை கவருவதற்காக இந்த பல் குரல் விநோதம் செய்வது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த பறவையின் பெயர் ஒரு பழைமையான இசைக்கருவி லைரே (Lyre) காரணமாக சூட்டப்பட்டது இன்னுமொரு சிறப்பம்சமாகும்.

நன்றிகள்.

கீழாநெல்லி செடியின் மருத்துவ...........!

கீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள்.


இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மை உடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர்.

பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர் இதன் பயன்கள்:

மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற பல நோய்களுக்கும் கீழாநெல்லியானது சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

பயன்படுத்தும் முறைகள்

1. கீழாநெல்லி சமூலம் - கரிசலாங்கண்ணி, தும்பை - சீரகம் - பொன்னாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் விட்டு நன்றாக அரைத்து புன்னைக்காய் அளவு காலை மாலை மேற்கண்ட பாலில் ஏதாவது ஒன்றில் 7 நாட்கள் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.

வயதிற்கேற்ப மருந்தின் அளவை குறைத்து சிறுபிள்ளைகளுக்கும் கொடுக்கலாம். மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, புகை, புகையிலை, காரம், கொழுப்பு நீக்கிய மோர்சாதம், பால் சாதம், சாப்பிடுவது நல்லது. உப்பு வறுத்து சேர்க்கவும்.

2. கீழ்காய் நெல்லி சமூலம் - சீரகம், மஞ்சள் காரைவேர்பட்டை மூன்றும் சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து பசும்பால் அல்லது தேங்காய் பால் 300 மி.லி. கலக்கி தினம் காலை மாலை குடிக்க மஞ்சள்காமாலை நோய் குணமாகும்.

3. கீழா நெல்லி சமூலம், பேரம்மான் பச்சரிசி, சிற்றம்மான் பச்சரிசி, கரிசலாங்கண்ணி, வல்லாரை, பொன்னாங்கண்ணி இவைகளை சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து 3 நாள் 6 நேரம் எருமைத் தயிரில் கலந்து கொடுக்க இரத்தக்காமாலை உடனே குணமாகும்.

4. கீழா நெல்லியும் - கரிசலாங்கண்ணியும் சமஅளவு சேர்த்து நெல்லிக்காயளவு பாலில் சாப்பிட்டுவர பாண்டு, சோகை, இரத்தக் குறைவு மாறும்.

5. மாதவிடாய் அளவுக்கு மீறி போய்க்கொண்டிருந்தால் கீழ்க்காய் நெல்லி, அத்திப் பட்டை, அசோகப்பட்டை, அரசம் பட்டை, நாவல் பட்டை இவைகளை சமஅளவாக எடுத்து நன்றாக தூள்செய்து வைத்துக் கொண்டு தினம் ஒரு கரண்டி வீதம் தேன், வெந்நீர், பால் ஏதாவது ஒன்றில் மாறிமாறி சாப்பிட்டு வர கர்ப்பசாய நோய்கள் அனைத்தும் மாறி வெள்ளைப்பாடும் தீரும்.

6. கீழ்காய் நெல்லியை நன்றாக அரைத்து சொறி சிரங்கு படைகளில் போட உடனே மாறும்.

7. கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்தநோய்கள் அனைத்தும் தீரும்.

8. கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.

9. கீழாநெல்லிப்பொடி, நெல்லிக்காய்பொடி, கரிசாலைப் பொடி மூன்றையும் சமஅளவு எடுத்து தேனில் உண்டுவர அடிக்கடி வரும் சளித் தொல்லை, இரத்தக்குறைவு, இரத்தசோகை மாறி எதிர்ப் பாற்றல் பெருகும்.

10. கீழ்க்காய்நெல்லிச்சாறு, இளநீர், நெல்லிக்காய் சாறு, கரிசலாங் கண்ணி சாறு, பொன்னாங்கண்ணி சாறு இவைகள் ஒருலிட்டர் வீதமும், எலுமிச்சம்பழச்சாறு அரை லிட்டரும், பசும்பால் 5லிட்டரும், தூய நல்லெண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய் 5 லிட்டரும், மதுரம், கொட்டம், 

நற்சீரகம், மாயக்காய், கிராம்பு, ஏலம், நற்சந்தனம், வலம்புரி, சடமாஞ்சில் ஆகியவை வகைக்கு 40 கிராம் வீதம் வாங்கி, நன்றாக இடித்து பசும்பால் விட்டு அரைத்து சாறுகள், எண்ணெய், பால் எல்லாவற்றையும் எண்ணெய்ச் சட்டியில் விட்டு அரைத்த மருந்தையும் சேர்த்து, சிறுதீயாக எரித்து மருந்து முதிர் மெழுகு பருவம் வந்ததும் எண்ணெயை வடித்து கொள்ளவும். 

தினமும் இதை தலையில் தேய்த்து தண்ணீரில் குளித்து வந்தால் கண்நோய்கள், பித்த நோய்கள், மேக நோய்கள், மேக உஷ்ணம், வறட்சை, கணை, பெரும்பாடு, காமாலை நோய்கள் தீரும். மஞ்சள் காமாலை நோயாளிக்கு இது சிறந்த மருந்தாகும்.

11.கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ளமாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும். 

12.கீழாநெல்லிசாறு, உந்தாமணிச் சாறு, குப்பைமேனி சாறு சமன் கலந்து நல்லெண்ணெயில் எரித்து நசியமிடப்பீனிசம், ஓயாத்தலைவலி நீர் வடிதல் ஆகியவை தீரும்.

13.கீழா நெல்லியுடன் சமன் கரிசிலாகண்ணிச் சேர்த்து அரைத்து பசும் பாலுடன் 45 நாள்கள் சாப்பிடக் கல்லீரல் பழுது, பாண்டு, சோகை, இரத்தமின்மை தீரும்.

14.இதன் இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு சமன் கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காச்சி தலை முழுகபார்வை கோளாறு தீரும். 

15.கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் கொள்ள பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும்.

நன்றிகள்.

Monday, 1 October 2012

மின்னஞ்சலைக் (E - Mail) கண்டுபிடித்தவர் ஒரு தமிழர்!

மின்னஞ்சலைக் (E - Mail) கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்? 


மின்னஞ்சலைக்கண்டுபிடித்தவர்,உருவாக்கியவர் ஒரு தமிழர் (V.A. Shiva Ayyadurai,Inventor of EMAIL) இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்பனைகூடசெய்து பார்க்க முடியவில்லை அல்லவா…அந்த வசதியை அறிமுகப்படுத்தியவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?

ஆம்! அதுதான் உண்மை. இன்று உலகையே ஒருவலைக்குள் இணைத்த பெருமைக்குரிய இமெயில் வசதியை நம்மஊர் தமிழர் ஒருவர்தான் கண்டு பிடித்தார். அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார்.

அவர் பெயர் வி ஏ சிவா அய்யாத்துரை.


இன்றைக்கு முப்பதுவயது நிரம்பிய இவர், தனது 14வது வயதிலேயே இந்த மின்னஞ்சல் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திவிட்டார். 

மின்னஞ்சல் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From: ”, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.)அனைத்து பகுதிக ளையும் உள்ளடக்கிய தகவ ல் பரிமாற்றத்தை இவர்தான் கண்டுபிடித்தார்.

ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ , அவருக்கு முதலில் அந்த அங்கீகாரத்தை கொடுக்கவில்லை அமெரிக்கா.

அதனால்மின்னஞ்சலின் காப்புரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர். 

நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ.சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘மின்னஞ்சலை’ அங்கீகரித்து காப்புரிமையை வழங்கியது.

இவரது கண்டுபிடிப்புக்கு இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் ஆகின்றன. 

இதைக் கொண்டாடும் வகையில் ஒரு அர்த்தமுள்ள போட்டியை அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாத்துரை.

நியூ ஜெர்சசி மாகாணம் நேவார்க் நகரில் ‘இன் னோவேஷன்ஸ் கார்ப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர், அதன் சார்பில் இந்தப் போட்டியை அறிவித்துள்ளார்.

நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் புதிய கண்டு பிடிப்புகளுக்கு ஊக்கம், வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.

மாணவனாக இருந்தபோது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக் கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.

இன்று அமெரிக்காவில் பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம். ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார்.

சமீபத்தில் நடந்த வடஅமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா)வெள்ளி விழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது ‘மின்னஞ்சல்’ பயணத்தை http://www.inventorofe/ mail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

நன்றிகள்.

தலை நிமிர்ந்து தமிழன் .....................!

துப்பாக்கி, பீரங்கி இல்லாமல் வெறும் வாளும், வில்லும் கொண்டு இமயம் முதல் இன்றைய இந்தோனேசியாவான சுமத்திரை வரை கி.பி 1000 -ல் ஆண்ட ராசராச  சோழனையும், திறம் மிகுந்தநெடுஞ்செழியனையும், கரிகாலனையும் சொல்லி வளர்க்காமல் ஒன்றுக்கும் உதவாத முதலாம், இரண்டாம் உலக போர்களை அல்லவா சொல்லி வளர்த்தீர்கள்.

தமிழனின் சிறப்பை சொல்லி தமிழன் என்று பெருமை கொள்ளும்படி செய்து, மேற்கத்தியர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் மொழியற்று காட்டுவாசிகளாய் இருந்த போதே இங்கே கலாச்சாரம் தோன்றி சிலப்பதிகாரமும், குறளும் இயற்ற பட்டு விட்டன என்பதை சொல்லி வளர்த்திருந்தால் இன்று ஏன் இளைஞன் மேற்கு மோகம் கொண்டு அலைகிறான்?


இந்த கொடுமைகளுக்கு ஆங்கிலம் படிக்காவிட்டால் இன்றைய சூழ்நிலையில் எந்த துறையிலும் மின்ன முடியாது என்று பதில் வாதம் வைக்கிறார்கள்.இப்படி ஆதாயத்தை முன்னிலைபடுத்தி பற்றையும், பாசத்தையும் புறக்கணிப்பது என்ன நியாயம்?.

இந்த பாணியில் ஆதாய நோக்கில் வளரும் பிள்ளைகள் கடைசியில் உங்களை அதே வழியில் பாசத்தை மறந்து முதியோர் இல்லங்களில் தள்ளுகிறார்கள். தாய் மொழியை மதிக்காதவன் எப்படி தாயை மதிப்பான்.

நேர்த்தியான (Tie), செருப்பு (Shoe) நீங்கள் ஆரம்பித்து வைக்கும் கலாசாரம் இறுதியில் ஒருவகை இசை நடனத்துடன் போதையை தரும் பானங்கள்   விற்கும் (Disco Bar) இடத்தில் முடிகிறது. தமிழின் கழுத்தில் கயிரை சுற்றி, சுருக்கு போட்டு,தூக்கு மேடையில் ஏற்றி, எங்களிடம் கயிற்றை கொடுத்து இழுக்க சொல்லிவிட்டு நங்கள் இழுக்கும் நேரத்தில் கொல்கிறானே, கொல்கிறானே என வாயில் அடித்து கொள்வதில் என்ன பயன்.

ஒரு வகையில் ஆங்கிலமும் முழுதும் தெரியாமல் தமிழும் தெரியாமல் பல பேரை அரை வேக்காடுகளாக இரண்டும் கெட்டான்களாக அலையை விட்ட உங்களை அல்லவா நங்கள் குறை சொல்ல வேண்டும். பம்பாயிலிருந்து தமிழ்ப்படத்தில் கதாநாயகிகளாக நடிப்பதற்கு வேற்றுமொழி நடிகைகள்  தமிழகம் வந்ததும் கொச்சையாக, பிழைபிழையாக தமிழ் பேசுவது போல் தமிழ் பேசும் தமிழ்ப்பெண்கள், சுத்தமாக தமிழ் பேசும் பெண்கள் எத்தனை பேர். 

லண்டனிலிருந்து இப்பொழுது தன் இறங்கியவர்கள் போல் தமிழே வாயில் நுழையாத இளைஞர்கள் எத்தனை பேர்.வள்ளுவனும்,ஒளவையும் நல்லவேளை இன்று இல்லை இருந்திருந்தால் அவர்களையும் இவர்கள் கெடுத்திருப்பார்கள்.

அனைத்தையும் மீறி ஏழ்மையின் காரணமாக அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிப்போரின் நிலைமையோ இன்னும் பரிதாபகரமானது. ஐந்தாறு பயிற்சி வகுப்புக்களிற்குச் செல்லாமல் 1100 மதிப்பெண் பெற்றாலும் ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் உதாசீனபடுத்தப் படுகிறார்கள்.

"ஆங்கிலத்துக்கு வெட்டி - வெளியே (Cut - Out), தமிழுக்கு கிடைக்கும் -வெளியே (Get - Out)  " என்பதே நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் தமிழில் பட்டம் பெற்றால் அவன் நிலைமை என்ன என்பதை கற்றது தமிழ் படத்தை பார்த்தால் நன்கு புரியும்.ஏன்?,

மொழி, நாடு, சமுதாயம் என்று உயிரை விட்ட பாரதியையே நாம் அவன் இறந்த 10,20 ஆண்டகளுக்கு பிறகு தானே புரிந்து கொண்டோம். காக்கையும், குருவியையுமே தன் இனம், தன் உறவு என்று முழங்கியவனின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட உறவுகளே மொத்தம் 10 - 15 தானே.

இந்த பதிவை இதோடு நிறுத்தலாம் இனி சொல்ல என்ன இருக்கிறது?. ஆனால் அப்படி செய்தால் நானும் வெட்டியாக குறைகூறுவோர்களில் ஒருவனாகி விடுவேன். அதற்கு பதில் எனக்கு தெரிந்த வரை நாம் இதற்கு என்ன செய்யலாம் என கூறுகிறேன்.

முதலில் தமிழை பேசுவதால் மட்டுமே தமிழ் வளரும் என்ற எண்ணத்தை விடுத்து தமிழில் எழுதவும், படிக்கவும் குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டும். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள். அப்படி நாம் தொட்டிலான பள்ளி முதலே தமிழை கற்று கொடுக்க வேண்டும்.

சில வருடங்களுக்கு முன் குழந்தைகளுக்கு 5 வகுப்பு வரை தமிழ் கட்டாயம் படமாக இருக்க வேண்டும் என்று சட்ட மசோதா இயற்றப்பட்டது. நமது மெத்த படித்த மேதாவிகள் அன்று அதை எதிர்த்து ரத்து செய்தனர். அந்த சட்டம் மீண்டும் வர வேண்டும். தனியாக பிராத்மிக், மத்யமா என இந்தியும், தனியார் கல்வி நிறுவங்களில் பிரெஞ்சும், யே(ஜெ)ர்மனும் பயிலும் நீங்கள் தமிழ் படிக்க முடியாதா?.

என்னை கேட்டால், தமிழை 12-ம் வகுப்பு வரை கட்டாய படமாக மட்டும் வைக்காமல், முன்பு தொழில்கல்வி நுழைவுத்தேர்வுக்கு குறைந்தபட்ச கட்-ஆப் மதிப்பெண் முறை போல் தமிழில் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றால் தான் மேற்படிப்புக்கு தகுதி உண்டு என அறிவிக்கலாம்.

முன் சொன்னது போல் தமிழர்கள் உலகத்துக்கே முன்னோடிகளாய் எப்படி வாழ்ந்தனர் என்றும், மேற்க்கை விட தமிழும் தமிழ் கலாச்சாரமும் எவ்வளவு பழமையானது, உயர்ந்தது என்றும் சொல்லி வளர்க்க வேண்டும். 

சேக்சு(ஸ்)பியருக்கு நூறு மடங்கான வள்ளுவனும், கம்பனும்.... அலக்சாண்டருக்கும், நெப்போலியனுக்கும் எந்த விதத்திலும் குறையாத ராசா(ஜா) ராச(ஜ)னும், நரசிம்மனும் வாழ்ந்த பூமி இது என்று சொல்லி வளர்க்க வேண்டும். தான் எங்கிருந்து வருகிறோம், தனது பூர்வீகம் என்ன என்று தெரியாததால் தான் இளைஞர்கள் இப்படி இருக்கின்றனர்.

பாப்பம்பட்டி பழனிச்சாமி பேரனுக்கு இது போதும்" என்று என் நண்பன் அடிக்கடி சொல்லுவான். அப்படி குழந்தைகளை பாப்பம்பட்டி பழனிச்சாமி பேரனாக வளர்க்காமல், சே(ஷே)க்ஸ்பியர் பேரனாக விளைந்த கொடுமையே இது, இதை மாற்றி இனிமேலாவது சேக்சுபியர் பேரன்களாக குழந்தைகளை வளர்க்காமல் இருக்க வேண்டும்.

ஒரு மரத்தின் ஆயுளும், வலிமையும் அதன் கிளைகளிலே இல்லை அதன் வேரிலேயே இருக்கிறது. அப்படிப்பட்ட வேரான பூர்விகதையும், பண்பாட்டையும் புகட்ட பெற்றோர்களும், சமுதாயமும், பள்ளிகளும் முன் வர வேண்டும். ஆங்கிலத்தை முற்றும் புறக்கணித்து தமிழ் வழி கல்வியை நாட சொல்லவில்லை, குறைந்த பட்சம் தமிழை ஒரு மொழி பாடமாகவாவது கற்றுகொடுக்க வேண்டும் என்று சொல்கிறேன்.

இப்படி இறந்து கொண்டிருக்கும் தமிழை பேசி படித்து வாழ வைக்க நினைப்பது மரணபடுக்கையில் இருக்கும் ஒருவரின் வாயில் தண்ணீரை ஊற்றி பிழைக்க வைக்க முயற்சிப்பதை போன்றதாகும். எனக்கு தெரிந்து தமிழை பிழைக்க வைப்பதை விட எப்படி நாம் அதை செழித்து வாழ வைக்க போகிறோம் என்பதில் தான் நமது கவனம் இருக்க வேண்டும். அதில் தான் நமது வெற்றி இருக்கிறது.

மாறாக, தார் பூசுவதிலும், வள்ளுவனின் சிலை வைப்பதிலும்,செம்மொழி மாநாடுகள் நடத்துவதிலும் பயன் இல்லை. பாரதி கூறிய "போலி சுதேசிகள்" போன்று "போலி மொழி பற்றாளர்களாக" மேடைகளிலே மட்டும் தமிழ், தமிழ் என பேசுவதற்காக சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மற்றவரை குறை சொல்லி கொண்டிருக்காதீர்கள்.

அந்த பாரதியே ஆங்கில கவிஞன் செ(ஷெ)ல்லியின் பரம விசிறி என்பதையும் நாம் நினைக்க வேண்டும்.கண்மூடித்தனமாக சமுதாய கட்டாயங்களை மனதில் கொள்ளாமல் பிறரின் உணர்வுகளை புண்படுத்தாதீர்கள்.

முடிவில், தமிழ் கண் போன்றது, ஆங்கிலம் கண்ணாடி போன்றது. சில நேரங்களில் கண்ணாடியும் அணிய வேண்டி இருக்கிறது. அதற்காக கண்ணாடியையே கண்ணாக என்னும் மூடமையும் அனுமதிக்காமல் இருப்போம்.

தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம் தமிழை தலை நிமிர்ந்து நிற்க செய்வோம்.

நன்றிகள்.

Sunday, 30 September 2012

பதினென் பருவமும், மனோநிலையும்......!

பொதுவாக அலைபாயும் வயது என்பது பதினென் பருவத்தில் ஆண்,பெண் இருபாலருக்கும் இருக்கும். இந்தக் காலக் கட்டம் இரு பாலருக்குமே மிகவும் முக்கியமான காலம் ஆகும்.

பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தொடங்கி முதல் காதல், இனக்கவர்ச்சி, அதிகமான விசயங்களைக் கற்றுக் கொள்தல் அல்லது கற்றுக்கொள்ளத் துடித்தல், தேடல் ஆர்வம் போன்றவை 11 வயது தொடங்கி 22 வயதுக்குள் வரும்.

பெண்கள் எனில் பருவமடைதல் (பூப்பெய்தல்) நிகழ்வும் 11 வயதுக்குப் பிறகே நிகழக்கூடியது. மனோவலிமை குறித்த விசயத்தைப் பொருத்தவரை பெண்கள், ஆண்களைக் காட்டிலும் முதிர்ச்சியடைந்தவராக இருக்கிறார்கள்.

20 வயதுடைய ஆண்களையும், பெண்களையும் ஒப்பிடுகையில், ஆண்களை விடவும் பெண்கள் தெளிவான- உறுதியான மனோநிலையைக் கொண்டிருக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனதளவில் முதிர்ச்சி பெறும் வயது 11 – 20 என்பதால், பெற்றோர் இந்த வயதுடைய குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து பராமரித்தல் அவசியம்.

"தனிமையில் உட்கார்ந்து ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்களா என்பதை அறியவும். கூடிய வரை தனிமையில் இருப்பதை அனுமதிக்க வேண்டாம்".

பெண் குழந்தைகளாக இருப்பின் அவர்கள் உற்சாகமாக – மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என அறியவும். என்னதான் நெருங்கிய நண்பர்கள் – குடும்ப நண்பர்கள் என்றாலும், இந்த வயதுடைய பெண் குழந்தைகளை அவர்கள் பாதுகாப்பில் விட்டு வெளியில் செல்லாதீர்கள்.

முடிந்தால் உடன் அழைத்துச் செல்லுங்கள். அல்லது அவர்களை தனியாகவே செயல்பட அனுமதியுங்கள். இப்படிச் செய்வதால், அவர்களுக்கும் பொறுப்புணர்ச்சி அதிகரித்து, படிப்பு மற்றும் வேலைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கி விடுவார்கள்.

எனவே மனோநிலை முதிர்ச்சி என்பது பதினென் பருவத்தில் மிகமிக குறிப்பிடத்தக்கது என்பதை அறிந்து செயலாற்றுங்கள்.

நன்றிகள்.

Saturday, 29 September 2012

உலகில் தமிழ் மூளைக்கு மதிப்பு ................!



உலகச் சந்தையில் தமிழ் மூளைக்கு மதிப்பு அதிகம் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சிவராச்(ஜ்). எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு இயந்திரவியலில் (Automobile) துறையில் ஆர்வம் அதிகம்.

தற்போது இவர் கண்டுபிடித்துள்ள, எரிபொருள் (Petrol) தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எதிரொலி இலவச நம்பிக்கை’ (Echo Free Cape)தான் திருப்பூரின் சிறப்புக்கூறு (HighLight).

பார்க்க மூன்று சக்கர இரு சக்கர ஆள் இழுப்பு வண்டி (Rickshaw)போல இருந்தாலும் கிட்டத்தட்ட மகிழுந்தின் பணக்காரத் தோற்றத்தோடு (Rich Look of The Car) இருக்கிறது இந்த இரு சக்கர ஆள் இழுப்பு  வண்டி (Rickshaw).

புவி வெப்பமயமாதல் என்கிற அசுரப் பிடியில் சிக்கி இருக்கும் பூமிக்கு இவர் கண்டுபிடித்து இருக்கும் வாகனம் உண்மையில் ஒரு வரப்பிரசாதம்.

'இந்தியா பதிவுகளின் புத்தகம்’(Books of Records) இவருடைய கண்டுபிடிப்பை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் அங்கீகரித்து இருப்பது இன்னும் ஒரு சிறப்பு.

''நான் கண்டுபிடித்துள்ள 'எதிரொலி இலவச நம்பிக்கை’ பார்க்க இருசக்கர ஆள் இழுப்பு வண்டியின் தோற்றத்தில் இருக்கும். இதில் மூன்று பேர் வரை பயணிக்கலாம்.

சூரிய சக்தி, மின்கலம் (Battery), மனித சக்தி மூலம் இது இயங்குகிறது. மனித சக்தி என்றதும் கடின உழைப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். 

துவிச்சக்கரவண்டியை மிதிப்பது (Pedal Bicycle) போல் எளிதாகத்தான் இருக்கும். சூரிய ஒளியில் மூன்று மணி நேரம்  மின்கலத்திற்கு மின்னேற்றம் (Charge) செய்தால், சுமார் 150 கி.மீ. தூரம் வரை இதில் பயணிக்கலாம்.

மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். இந்தக் கண்டுபிடிப்பைச் செய்து முடிக்க எனக்கு மூன்று வருடம் உழைப்பு தேவைப்பட்டது. பலமுறை வடிவமைத்தும் திருப்தி ஏற்படவில்லை.

ஒன்று, மின்கலத்திற்கான மின்னேற்றம்  நடைபெறவில்லை. அல்லது மின்னேற்றத்தினால் சேமிக்கப்படும் சக்தி அது வண்டியின் ஓட்டத்துக்குப் பயன்படவில்லை.

இன்னொரு பக்கம் சரியான வடிவமைப்பு கிடைக்கவில்லை. ஏதாவது ஒரு சிக்கல் இருந்தது. ஆனாலும், விடாமுயற்சியுடன், நான்கைந்து முறை வடிவமைத்த பின்புதான் திட்டம் வெற்றி பெற்றது என்பதால், 
இலட்சக்கணக்கில் பணம் செலவானது.

ஆனால், இப்போது சரியான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதால், எளிதில் வடிவமைத்துவிடுவேன். இது சந்தைக்கு வரும்பட்சத்தில் விலை தோராயமாக (Approximately)ஒரு லட்சம் இருக்கும்.

ஆனால்,  எரிபொருள் (Petrol) செலவு, பராமரிப்புச் செலவு எதுவும் கிடையாது. தினமும் துடைத்து, சுத்தமாகவைத்து இருந்தாலே போதுமானது. என்னுடைய மூன்று வருட உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்து இருக்கிறது.

எங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்த சென்னை, கோவை போன்ற நகரங்களில் சில வண்டிகளை மட்டும் மக்கள் சேவைக்காக ஓட்டுனர்களை நியமித்து இயக்க இருக்கிறோம். இதற்காக வட்டாரப் போக்குவரத்துத் துறையினரிடம் பேசிவருகிறேன்.

இந்தக் கண்டுபிடிப்பை இணையத்திலும் வெளியிட்டு இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து நிறையப் பேர் தொடர்புகொண்டார்கள்.

எரிபொருள் விலை உயர்வு என்பதைத் தாண்டி எரிபொருள் பயன்பாட்டால் பூமி வெப்பமயமாதலைக் குறைப்பதில் இந்த வாகனம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று பாராட்டினார்கள். விரைவில் அரசின் அங்கீகாரம் பெற்று இந்த வாகனத்தை விற்பனைக்கு விட இருக்கிறேன்'' என்கிறார் உற்சாகத்துடன். 

இவருடைய இன்னொரு திட்டம் பெங்களூரில் இப்போது நான் வெற்றிபெற வேண்டும் (I want hit)பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களில் பிரமாண்டமான விளம்பரப் பலகைகள் வைக்கத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. 

அதனால், பெங்களூரில் இவருடைய வெப் சைட்டான ‘www.earnwhileyoudrive.in’-ல் மிகிழுந்து உரிமையாளர்கள் பதிவு செய்தால் போதும். அந்த காரின் நான்கு கதவுகளிலும் பிரபல வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை அழகான படங்களாக வைத்துக் கொள்ளலாம்.

இந்த விளம்பரங்களும் ' இலவச எதிரொலி ஓவியத்தில் (Echo Free Painting)' செய்யப்படுவதால் மகிழுந்தின் கதவுகளுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. மகிழுந்து உரிமையாளர் விரும்பும்போது விளம்பரத்தை மகிழுந்து கதவுகளுக்குப் பாதிப்பு இல்லாமல் அகற்றிக் கொள்ளலாம்.

மகிழுந்தின் உரிமையாளருக்கு மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை வாடகையும் கிடைக்கிறது. பெங்களூரில் இவருடைய எண்ணத்தை (Concept) பின்பற்றி பேருந்துகளும்  நிறைய ஓடுகின்றனவாம்.

இத்திட்டத்தால் பலரிற்கு பணத்தை ஈட்டும் வாய்ப்பு ஏற்படுவதால் மக்களிடமிருந்து அதிக வரவேற்பை எதிபார்க்கலாம்.

தமிழன் ஒருவனின் முன்னேற்றத்தில் எந்த அரசியல் நலனையும் புறம்தள்ளி அவருடைய கண்டுபிடிப்பிற்கான உரிமத்தை வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் எந்தவித எதிர்பார்ப்புக்களும் இன்றி ஊக்குவிப்பனர் என தமிழன் என்னும் வகையில் எதிர்பார்க்கின்றேன். 

நன்றிகள்.