Thursday, 11 October 2012

கறுப்பு விளக்கு/மின்குமிழ்...................!

பொதுவாக மின்விளக்குகள் அல்லது மின்குமிழ்கள் இருளினைப் போக்குவதற்கே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் விசேட வகைக்குள் அடங்கும் விளக்குகள் சில பல்வேறுபட்ட சிறப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறான சிறப்பு வகையினைச் சேர்ந்த கறுப்பு விளக்கு/மின்குமிழ் தொடர்பாகவே இங்கு பார்க்கவிருக்கின்றோம்.


இருளான அறை ஒன்றினுள் மின்குமிழ் ஒன்று ஒளிர விடப்படும்போது அந்த மின்குமிழில் இருந்து வெளிப்படும் ஒளியினை நாம் எமது கண்களால் பார்க்க முடியும். இருப்பினும் அந்த மின்குமிழ் வெளியிடும் ஒட்டுமொத்த ஒளியினையும் நாம் பார்க்க முடியாது. அதாவது, எமது வெற்றுக் கண்களுக்குப் புலப்படும், கட்புலனாகும், ஒளியினை மட்டுமே நாம் பார்க்க முடியும். எமது வெற்றுக் கண்களுக்குப் புலப்படாத, கட்புலனாக, ஒளியினை நாம் பார்க்க முடியாது. 

மின்குமிழில் இருந்து வெளியாகும் சாதாரண கட்புலனாகும் ஒளியில், கட்புலனாகும் ஏழு நிறங்கள் கலந்திருக்கின்றன. இந்தக் கட்புலனாகும் வெள்ளொளியிலுள்ள நிறங்களினுள் அதிகூடிய அதிர்வெண் கொண்ட நிறமாக ஊதா நிறமே காணப்படுகின்றது.

வெள்ளொளிக் கற்றை ஒன்றினை நிறப்பிரிகை செய்யும்போது, இந்த ஊதா நிறமே எமது வெற்றுக் கண்களுக்குப் புலப்படும் இறுதி நிறமாகும். அதாவது, வெள்ளொளிக் கற்றை ஒன்றில், வெற்றுக் கண்களுக்குப் புலப்படும் அதிகூடிய அதிர்வெண் கொண்ட நிறம் ஊதாவாகும்.

ஊதா நிறத்திலும் அதிகூடிய அதிர்வெண் கொண்ட நிறமாக புறஊதாக் கதிர்கள் எமது வெற்றுக் கண்களுக்குப் புலப்படுவதில்லை. இந்த கறுப்பு மின்குமிழ்கள் ஒளிரும்போது இவ்வாறான கண்களுக்குப் புலப்படாத புறஊதாக் கதிர்களை வெளியிடுகின்றன.

இவை பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன. குழாய் வடிவிலமைந்த குழாய் வடிவ மின்விளக்கு (Tube Light)  ஒளியினை உருவாக்கும் விதம் சாதாரண மின்குமிழ்கள் ஒளியினை உருவாக்கும் விதத்திலிருந்து வேறுபடுகிள்றன.

இந்த குழாய் வடிவ மின்குமிழ்கள், குழாயினுள் தாழ் அமுக்கத்தில் பாதரசத்துடன் கலந்திருக்கும் வாயுவினூடு மின்சாரத்தைப் பாய்ச்சுவதன் மூலம் ஒளியினை உருவாக்குகின்றன. பாதரச அணுக்களினூடு மின்வாரம் பாயும்போது அவ்வணுக்கள் ஒளித் துணிக்கைகளை உருவாக்குகின்றன. 

இவ்வொளித் துணிக்கைகளில் பெரும்பாலானவை புறஊதாக் கதிர்களாகவே காணப்படுகின்றன. இவ்வாறு வெளியேறும் புறஊதாக் கதிர்கள் கண்ணாடிக் குழாயின் உட்புறத்தே பூசப்பட்டிருக்கும் பொசு(ஸ்)பரசு பூச்சினால் உறிஞ்சப்பட்டு கட்புலனாகும் ஒளியாக வெளிவிடப்படுகின்றது.


 கறுப்பு மின்குமிழ்களும், குழாய் வடிவ மின்குமிழ்களில் ஒளி உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் முறையிலேயே ஒளியினை உருவாக்குகின்றன. இருப்பினும் கண்ணாடிக் குழாயின் உட்புறத்தே சிறப்பு வகையான பொசு(ஸ்)பரசு பூச்சுப் பூசப்பட்டு புறஊதாக் கதிர் உருவாக்கப்படுகின்றது.

இந்தச் சிறப்பு வகையான பொஸ்பரசு பூச்சு, மனிதர்களுக்கு ஆபத்து வளைவிக்கக்கூடிய UV-B மற்றும் UV-C வகைக் கதிர்களை வெளியேறாது தடுப்பதுடன் UV-A வகைக் கதிர்களை மட்டும் வெளிவிடுகின்றது. இதேபோன்று, தங்குதன் இழை மிக்குமிழ்களின் மூலமாகவும் புற ஊதாக் கதிர்களை உருவாக்க முடியும்.

அவ்வாறான மின்குமிழ்களிலே, மின்குமிழின் கண்ணாடி உடலின் உட்புறத்தே பூசப்பட்டிருக்கும் ஒரு சிறப்பு வகைப் பூச்சின் மூலமாக தங்குதன் இழையிலிருந்து புறப்படும் ஒளியிலுள்ள கட்புலனாகும் ஒளிக்கதிர்கள் தடுக்கப்பட்டு புறஊதா மற்றும் அகச்சிவப்பு கதிர்கள் மட்டும் வெளிவிடப்படுகின்றன.

கறுப்பு விளக்கின் மூலம் கிடைக்கும் புறஊதாக் கதிர் சிறப்பு வகை பூச்சுக்களால் வரையப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பொருட்களைப் பார்ப்பதற்கே பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக சாதாரண ஒளியில் கண்களுக்குப் புலப்படாத எழுத்துக்கள் அல்லது படற்கள் கறுப்பு விளக்கின் புறஊதாக் கதிரில் கண்களுக்குப் புலப்படும்.

நன்றிகள்.