அமிழ்துக்கு அமிழ்தென்றுதான் நிலைப் பெயர். தமிழுக்கும் அமிழ்தென்று பேர் என உவமையோடு தமிழை அமிழ்தாக்கி அதன் சுவையை உணர்வோடு ஊடுருவ விட்டார் பாவேந்தர் பாரதிதாசன். தமிழின் சிறப்பை நாம் அம்மொழியின் வழித்தோன்றலாக வந்ததனால் மட்டும் பெருமையோடு கூறவில்லை; அந்நியர்களாகிய ஐரோப்பியர்களும் ஆங்கிலேயர்களும் நம்மை அடிமை கொள்ள வந்த போது தமிழ் மொழியின் வளத்தையும், பொலிவையும் கண்ணுற்று வியந்து போற்றியுள்ளனர்.
தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களே அதன் சிறப்பை உணரச் செய்து, வட மொழித் துணையுடன் வளர்ந்தமொழி தமிழ் என்னும் தாழ்வு மனப்பான்மையை நீக்கவும் வழிகோலிய பெருமை, மேலை நாட்டு நல்லறிஞர்களையே சாரும். உலகோர் கருத்தினிலும் தமிழ் மொழியின் மேன்மையை இடம் பெற வைத்தனர்.
அவர்கள் சமயத்தைப் பரப்பத் தமிழகத்திற்கு வந்தவர்களாயிருப்பினும், தமிழ் மொழியின் இனிமை, மாட்சி, சிறப்பு, தொன்மை, எளிமை ஆகியவற்றைக் கற்றுணர்ந்து தங்கள் வாழ்நாளைத் தமிழுக்குத் தொண்டாற்றுவதிலேயே கழித்தனர்.
தமிழ் இலக்கியங்களில் கண்ட இயற்கை நலம், அறிவு விளக்கம், அன்பு வளர்க்கும் பண்பு ஆகியவற்றை கற்றுத் தெளிந்தனர். தமிழ்மொழியை முதன்முதலாக அச்சில் ஏற்றிப் பல நூல்களையும், சிற்றிதழ்களையும் வெளியிட்டனர். உரைநடையில் சொற்களைப் பிளந்து எழுத வழிகாட்டினர்.
மேல்நாட்டு மொழிகளுக்கொப்பத் தமிழ் அகராதியையும் இயற்றினர். அவர்கள் வரவு தமிழ்மொழிக்கே ஒரு மறுமலர்ச்சிக் காலம் எனக் கூறலாம். அவர்களுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் கடமைப்பட்டதாகும்.
சீகன் பால்கு
16831705 இல் கிறித்துவ சமயத் தொண்டாற்ற வந்தவர். தமிழ் மொழியின் இனிமை, தொன்மை, மேன்மை, எளிமை ஆகிய இயல்புகளிலும், தமிழ் இலக்கியம் கண்ட இயற்கைத் தன்மை, அறிவார்ந்த கூர்மை, அன்பு வளர்க்கும் மாண்பு, அறநெறியின் உயிரோட்டம் ஆகியவற்றால் கவரப்பட்டுத் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்வதிலேயே தம் காலத்தின் பெரும் பகுதியைக் கழித்தார்.
தமிழ் மொழியில் சமயம், மருத்துவம், வரலாறு முதலானவற்றில் உள்ள நாற்பதாயிரம் சொற்களைத் தொகுத்து ஒரு மொழி அகராதியை உருவாக்கினார். அவர் தொகுத்த செய்யுள் (சொல் பொருள் நூல் ) அகராதியில் பதினேழாயிரம் இலக்கிய வழக்குச் சொற்களும், மரபுத் தொடர்களும் இடம் பெற்றன.
நீதிவெண்பா, கொன்றை வேந்தன், உலகநீதி ஆகிய செய்யுள்களை செருமானிய மொழியில்பெயர்த்துள்ளார். ஆசியாக் கண்டம் முழுதும் சுற்றிப் புகழோடு பிரிட்டன் நாட்டிற்குச் சென்றபோது, ஜார்ஜ் மன்னர் தலைமையில், நாட்டின் உயர் மதத் தலைவரான கான்டர்பரி ஆர்ச் பிஃஷப் இலத்தின் மொழியில் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அதற்கு சீகன்பால்கு என்னுடைய மறு மொழியை நான் ஒரு மொழியில் பேசப் பேகிறேன் அது இறைவனால் மனிதருக்கு அளிக்கப்பட்ட ஒப்பற்ற செல்வத்துள் முதன்மையானது. அதுவே தமிழ் மொழி எனக் கூறி தமிழின் பெருமையை அவர்கள் உணருமாறு செய்தார்.
கிரன்ட்லர் பாதிரியார்
இவர்செருமனி நாட்டைச் சேர்ந்தவர். அக்காலத்தில் தமிழகத்தில் வழங்கிய மருத்தவ முறையின் தனிச்சிறப்பைப் பற்றி விளக்கும் ஒரு நூலை செருமானிய மொழியில் இயற்றினார். செருமானியப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கத்தக்க சிறப்பு வாய்ந்த மொழி தமிழ் எனவும் கூறினார்.
இதனால் தமிழரின் அறிவுத் திறன் மேல் நாட்டவரால் ஏற்கப்பட்டது. மேலும் அந்நாட்டைச் சேர்ந்த சார்ல் கிரவுல் என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் தமிழிலே உள்ள கைவல்ய நவநீதம், சிவஞான சித்தியார் போன்ற சில தத்துவ நூல்களைச் செருமானியிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். திருக்குறளையும் இலத்தின், செருமன் ஆகிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்தார்.
ராபர்ட டி நோபிலி
இத்தாலி நாட்டைச் சேர்ந்த ராபர்ட் டி நோபிலி என்னும் பாதிரியார் சமயத்தைப் பரப்பத் தமிழகம் வந்து தமிழையும், வடமொழியையும் கற்றுக் கிறித்தவ சமய விளக்கம் செய்யும் உரைநடை நூல்கள் பலவற்றை இயற்றியும் போர்த்துக்கீசிய அகராதி ஒன்றைத் தொகுத்தும் உள்ளார். தத்துவ போதகர் என்னும் பெயருடன் தம்மை இத்தாலிய நாட்டு அந்தணர் எனக் கூறிக் கொண்டார்.
அதை மக்களிடம் காட்டிக் கொள்ள தலையிலே குடுமி, கையிலே கமண்டலம், காலிலே பாதக்குறடு, காது குத்திக் கொண்டு, நெற்றியில் சந்தனப் பொட்டு இட்டு தமிழகத் துறவியைப் போன்று ஒப்பனை செய்து கொண்டு தம்மை ஐயர் என்னும் நிலையைக் கொண்டிருந்தார்.
சமசுகிருதச் சொற்கள் கலவாத தொன்மை இலக்கியங்கள் இருந்தனவென்றும், வடமொழியின் துணையின்றித் தமிழ் இயங்க முடியும் என்பதையும் ஆய்ந்தளித்தார்.
வீரமாமுனிவர்
இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டான்டைன் ஜோசப் பெசுகி 1711ம் ஆண்டு தமிழகத்துக்குச் சமயத் தொண்டு புரிய வந்தார்.
அவர் தமிழுடன் அந்த இனமொழிகளான தெலுங்கும் கன்னடமும் பயின்றதோடு வடமொழியும் கற்றுத் தேர்ந்தார். பின் வீரமாமுனிவர் என்னும் பெயர் கொண்டு தமிழிலே தேம்பாவணி என்னும் காவியத்தைப் படைத்தார். வடசொல் விரவிய மணிப் பிரவாள நடையை அறவே விலக்கித் தனித்தமிழ் உரைநடையைக் கொண்டு வந்தார். எனவே தமிழ் உரைநடையின் தந்தை என இவர் அழைக்கப்பட்டார்.
தொன்னூல் இலக்கணம் இயற்றி அதில் எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி ஆகிய ஐந்து கூறுகளையும் விளக்கியுள்ளார். சதுரகராதியையும் இயற்றியுள்ளார். தமிழ்எழுத்துச் சீர்திருத்தம் செய்துள்ளார். திருக்குறள் அறத்துப்பாலையும் பொருள்பாலையும் இலத்தினில் மொழியாக்கம் செய்தார்.
டாக்டர் வின்சுலோ
கி.பி.பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையே தமிழகம் வந்த அமெரிக்க நாட்டு மொழியறிஞர். அவர் தமிழ் மொழியைக் கற்று அதன் சிறப்பை உணர்ந்து தமிழின் வேர்ச் சொற்களைக் கண்டு, அவற்றின் தனி இயல்பை ஆராய்ந்து காட்டி, தமிழ் ஒரு மூல மொழியாக ஒரு தனிப்பிரிவாகக் கொள்ளப்படவேண்டும் எனவும் வேற்று மொழியின் துணை இன்றித் தனித்து இயங்கும் ஆற்றலுடைய தமிழின் சிறப்பு வியப்பளிப்பதாகவும், சங்க இலக்கியம் தமிழுக்குப் பெருமையளிப்பவையாகும் எனவும், தமிழ் செய்யுள் வடிவிலும், நடையிலும் கிரேக்க மொழிச் செய்யுளைக் காட்டிலும் தெளிவுடையதாகவும், திட்ப, நுட்பமுடையது, கருத்தாழமுடையது எனவும், தமிழ் மொழி நூல் மரபிலும், பேச்சு வழக்கிலும் இலத்தின் மொழியைக் காட்டிலும் மிகுந்த சொல் வளம் கொண்டது எனவும் கூறிச் சிறப்பித்துள்ளார்.
டாக்டர் கால்டுவெல்
இவர் கி.பி. 1838 ல் சமயத் தொண்டு புரியத் தமிழகம் வந்து சேர்ந்தார். இவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். திராவிட மொழிகளாகிய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் ஓர் ஒப்பற்ற நூலை இயற்றியுள்ளார்.
வடமொழியின் துணையின்றித் தமிழ் மொழி இயங்காது என்னும் தவறான கொள்கையை உதறி எறியவும், எம்மொழியின் துணையுமின்றித் தனித் தியங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்னும் உண்மையை உலகுக்கு அறியச் செய்தவர் டாக்டர் கால்டுவெல் ஆவார். இவர் நிகழ்த்திய ஆய்வு நூலே வடமொழி ஆதிக்கத்தால் கேடடைந்த தமிழையும், தமிழறிஞர்களின் எண்ணங்களையும் மாற்றுவதற்குப் பெரிதும் அடிப்படையாகப் பயன்பட்ட நூலாகும்.
தமிழ்மொழி எம்மொழிக்கும் தாழ்ந்து வளையாது தலைநிமிர்ந்து நின்று, தனது தனித்தன்மை காத்து, தன்னை அழிக்க வந்த வடமொழியையும் வலுவிழக்கச் செய்து வாழ்ந்து வளர்கிறது என்னும் பேருண்மையை உலகுக்கு எடுத்துக் காட்டியவர் கால்டுவெல் ஆவார். தமிழ்நாட்டின் தென்பகுதியில் நெடுங்காலம் தங்கியிருந்து சமயத் தொண்டு புரிந்தார். இங்கு வாழும் மக்களைப் பற்றித் தமிழ் உரைநடையில் “ஞானக்கோயில்’, “நற்குணத்தியான மாலை’ போன்ற நூல்களை இயற்றினார்.
ஜியுபோப்
இவர் வடஅமெரிக்காவில் உள்ள நோவாஸ் கோஷியா மாநிலத்தைச் சேர்ந்தவர். சமயப் பணிக்காக 1839 ம் ஆண்டு தமிழகம் வந்தார். இவர் சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் சமய நூல்கள், நீதி நூல்கள் ஆகியவற்றைப் பயின்றார். சைவ சித்தாந்த நெறி, திராவிட அறிவின் தேர்ந்த தெளிந்த நிலையின் பயன் எனப் பாராட்டியுள்ளார்.
யாவும் ஆசிரியர்களின் அறிவின் பயன் என்று கருதிக் கிடந்த நாள்களில் அவை தமிழரின் அறிவிலே முகிழ்ந்தவை எனத் தெரிவிக்கப்பட்ட அக்கருத்து தமிழின் பெருமையை நிலை நிறுத்தத் துணையாயிற்று. சமசுகிருதத்திற்கு அப்பாற்பட்டுத் தனித்துத் தோன்றியது மட்டுமின்றி அதன் ஆதிக்கத்தை எதிர்த்துத் தனித்து நிற்பதுடன் பரந்து விரிந்த தன்மையும் உள்ளங்கவரும் திறமும் கொண்டது தமிழ் இலக்கியம் எனக் கூறியுள்ளார்.
இவர் தமது கல்லறையின் மீது இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் என்று செதுக்கி வையுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
கமில்ஸ் சுலபில்
இவர் செக்கோசுலோவாகிய நாட்டைச் சேர்ந்த தமிழாய்ந்த அறிஞர். உலகில் எந்த மொழியின் வரி வடிவத்திலும் காணப்படாத தனிச் சிறப்புகளைத் தமிழ் வரிவடிவத்தில் காணலாம். ஆங்கிலத்தில் அத்தகைய அழகு கிடையாது.
தமிழில் ஓர் எழுத்தினை உச்சரிக்கும்போது எழுதுகின்றஓசை நயத்திற்கேற்ப அதன் வரிவடிவமும் அமைந்திருக்கும் எனக் கூறியுள்ளார்.
இன்னும் மாச்சுமுல்லர், பெர்சிவல் பாதிரியார், டாய்லர் போன்ற மேனாட்டறிஞர்களும் கற்றுத் தேர்ந்து தமிழைப் போற்றியுள்ளனர்.
எனவே ஐரோப்பியர் ஆதிக்கத்தை தமிழகம் பெற்றாலும் அதற்கு முன்னர் நடந்த மொழியழிப்பு ஒழிந்து உள்ள நிலையிலிருந்து தமிழை ஓங்கி வளரச் செய்தனர்.
அவர்கள் வணிகத்தின் பொருட்டோ, தமது சமய வளர்ச்சி நோக்கத்தோடோ, மண்ணாசை எண்ணம் கொண்டோ வந்திருந்தாலும், அவர்களால் தமிழுக்கு விளைந்த நன்மை மிகுதி. வாழ்க அவர்கள் தொண்டு. ஐரோப்பியர்கள் வராதிருந்தால் தமிழகம் எப்படி இருக்கும்?
ஒரு கணம் நினைப்போம். நம் மொழியும் பண்பாடும் எங்கோ அழிந்து நாம் எப்படியெப்படியோ செப்பிடு வித்தைகளால் சீரழிந்திருப்போம். நம் பெருமையைக் காக்க மொழி வளத்தைப் புதுப்பிக்க வந்தனன் அயலான் வாழியவே தமிழ்.
(தமிழ்மொழி வளர்ச்சிக்காக பாடுபட்ட மேலைநாட்டு அறிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். இது பற்றி “தமிழ் இலெமுரியா’ மாத இதழில் (2010, மார்ச் 15 ஏப்ரல் 14) தமிழ் மொழி காத்த ஐரோப்பியர்கள் என்ற தலைப்பில் மணவை வே.வரதராசன் எழுதி வெளியாகியுள்ள கட்டுரையை இங்கே நன்றியுடன் அறியத் தருகிறோம்).
நன்றிகள்.