ஒரு நுண் சில்லு (Micro Chip) போதும்..அடிக்கடி மருந்துகள் விழுங்கத் தேவையில்லை.. விஞ்ஞான வளர்ச்சியும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மனித வாழ்க்கையை மேலும் மேலும் எளிமைப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. விளைவு, நேற்று வரை சிரமமாக இருந்த ஒரு விடயம் இன்று மிகவும் சுலபமாகி விடுகிறது.
உதாரணமாக மருத்துவத்துறையை எடுத்துக்கொள்ளலாம். மருந்தே இல்லாத பல நோய்களுக்கு இன்று மருந்து கிடைக்கிறது. ஆனாலும், புதிது புதிதாக தோன்றும் நோய்கள் மருத்துவத்துறைக்கு பெரிய சவாலாக இருக்கின்றன. மேலும், கொடிய நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றை சரியான அளவுகளில், வேளாவேளைக்கு தினமும் எடுத்துக்கொள்வது என்பது பல நோயாளிகளுக்கு பெரும் பிரச்சினையாகத்தான் இருக்கிறது.
நோயாளிகளின் இந்த தினசரி பிரச்சினையை தீர்க்க வந்துவிட்டது `நுண் சில்லில் ஒரு மருந்துக்கடை’. அதாவது, "கம்பியில்லா தந்தி" (`Wireless’) முறையில் இயங்கும் மருந்து தாங்கிய நுண் சில்லு (Micro Chip)!
அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி.யின் புற்றுநோய் ஆய்வு மையத்தின் பேராசிரியரான லாங்கர், சக ஆய்வாளரான பேராசிரியர் மைக்கேல் சிமாவுடன் இணைந்து, உடலுக்குள் மருந்துகளை செலுத்தும் திறனுள்ள நுண் சில்லின் முதல் மாதிரியை கடந்த 1990-ம் ஆண்டுகளிலேயே உருவாக்கினார்.
உடலுக்குள் பொருத்தப்படக்கூடிய இந்த நுண் சில்லு, நீண்டகாலம் தொடர்ச்சியாக மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமுள்ள நோயாளிகளுக்கு பயனுள்ளது. வலி ஏற்படுத்தாத இந்த கம்பியில்லா தந்தி முறையில் இயங்கும் மருந்து தாங்கிய நுண் சில்லு கருவிகளை உடலில் பொருத்திக்கொண்டு பொத்தான் (Button) அவ்வப்போது தட்டினால் போதும். தேவையான மருந்துகளை, சரியான அளவுகளில், சரியான நேரத்தில் உடலுக்குள் செலுத்துவது மிகவும் சுலபம் என்கிறார் லாங்கர்!
ஆமாம், இந்த கம்பியில்லா தந்தி முறையில் இயங்கும் மருந்து தாங்கிய நுண் சில்லு எப்படி இயங்குகிறது?
உயிருள்ள திசுக்களில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நுண் சில்லில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட சிறு சிறு குழிகள் இருக்கின்றன. குண்டூசி முனை அளவுள்ள இக்குழிகளில் மருந்துகள் நிரப்பப்படும். பின்னர், மிக மிக மெல்லிய பிளாடினம் (Platinum) அல்லது உலோக மூலத்தால் (Titanium) ஆன தகட்டினால் மருந்து நிரப்பப்பட்ட குழிகள் மூடப்படும்.
திட்டம் (Program) செய்யப்பட்ட நேரங்கள் அல்லது நோயாளி கட்டளையிடும் போது, உடலுக்கு வெளியே உள்ள வானொலி அதிர்வெண் கருவி (Radio Frequency Device) ஒன்று உடலுக்குள்ளே இருக்கும் மருந்து தாங்கிய நுண் சில்லுகளிற்கு சமிக்ஞைகளை அனுப்பும். இதற்கு ஏற்ப மருந்துக்குழிகளின் மூடியை உருக்கும் அளவுக்கு வெப்பத்தை செலுத்தி, குழிகளிலுள்ள மருந்துகளை உடலுக்குள் செலுத்தும். இந்த குழிகள் ஒன்றன்பின் ஒன்றாக உருகி மருந்துகளை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மருந்துக்குழிகளை மூடியிருக்கும் உலோகம் நானோ (Nano) அளவுகளில் இருப்பதால் அவை உடலில் நச்சுத்தன்மையை உருவாக்குவதில்லை. உடலுக்குள் இருந்துகொண்டு கம்பியில்லா தந்தி முறையில் இயங்கும், இந்த மருந்து செலுத்தும் பயிரிடு (Implant) கருவியிலுள்ள நுண் சில்லு, உடலுக்கு வெளியே இருக்கக் கூடிய ஒரு வாங்குபவர் (Receiver) கருவியுடன் பிரத்தியேகமான ஒரு அலைவரிசையில் தொடர்பு கொள்கிறது. இதன்மூலம் நுண் சில்லில் இருக்கும் தகவல்கள் அனைத்தையும் வாங்குபவர் மூலமாக கணினி (Computer) மற்றும் ஸ்மார்ட் போன் (Smartphone) கருவிகளுக்கு பதிவேற்றம் (Upload) செய்துகொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம்.
`ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்றழைக்கப்படும் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வயிற்றுக்குள் பொருத்தப்பட்டு பரிசோதிக்கப் பட்ட இந்த `நுண் சில்லுக் கருவி’ 20 முறை விழுங்கும் (Dose) மருந்துகளை கொண்டிருந்தது.
எலும்புருக்கி நோயாளிகள், இந்த நுண் சில்லை ஒரு வருடம் தங்கள் உடலில் பொருத்தியிருந்தனர். பரிசோதனையின் முடிவில், டென்மார்க்கில் மிகவும் பிரபலமாகிவிட்ட இந்த கருவி தங்கள் உடலில் இருந்ததே தெரியவில்லை என்று நோயாளிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த நுண் சில்லு மருந்து கருவியால் எந்தவிதமான பின்விளைவுகளும் ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி. முக்கியமாக, இந்த மருந்துக்கருவியை பயன்படுத்துவதன்மூலம் மருந்துகளை எடுத்துக்கொள்ள மறந்து போவது அல்லது அலட்சியப்படுத்துவது போன்ற சில பிரச்சினைகளும் தவிர்க்கப்படுகின்றன.
மிகவும் சுவாரசியமாக, மருந்தினை சரியான வேளைகளில், சரியான அளவுகளில் செலுத்தும் இந்த நுண் சில்லு கருவியில் ஒன்றுக்கு மேற்பட்ட
(Sensors) உணர்கருவிகளைப் பொருத்துவதன்மூலம், இதனை ஒரு `நோய் அறியும்’ கருவியாகவும் மாற்ற முடியும்!
(Sensors) உணர்கருவிகளைப் பொருத்துவதன்மூலம், இதனை ஒரு `நோய் அறியும்’ கருவியாகவும் மாற்ற முடியும்!
ஆக, `ஒரு நோயை கண்டறிந்து, பின் அதற்கான மருந்தினை செலுத்தி, அந்த நோயை முற்றிலும் குணப்படுத்தி விடும் ஒப்பற்ற ஒரு கருவியாக உருவெடுக்கும் பிரகாசமான எதிர்காலம், இந்தநுண் சில்லு மருந்துக் கருவிக்கு உண்டு’ என்று நம்பிக்கையளிக்கிறார் பேராசிரியர் ராபர்ட் லாங்கர்!
நன்றிகள்.