மனித வாழ்வுக்கு சிறப்பு சேர்க்கும் எவ்வளவோ விசயங்களை தமிழகம் தமிழிற்கும், இந்த உலகிற்கும் அளித்துள்ளது. அதில் மிகவும் போற்றப்படக்கூடியதும், தனிச்சிறப்பு வாய்ந்ததும் ஒன்று உண்டு என்றால், அது பரதநாட்டியம்தான்.
எந்த மொழியை பேசும் மனிதர்களானாலும் ரசிக்கச் செய்யும் ஆற்றல் பரதநாட்டியத்திற்கு உண்டு. பரதநாட்டியம் தோன்றி சுமார் 3000 ஆண்டுகள் ஆகின்றன. இது தோன்றியது தமிழ்நாட்டில் தான்.
பத்தாம் நூற்றாண்டில், ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டில் இந்த பரதக்கலை செழுமைபடுத்தப்பட்டது. புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர்.
அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது . இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும், இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம்.
வரலாற்று நோக்கில், தென்னிந்தியாவின் திருக்கோவில்களில், இசைக்கலைஞர்களும், தேவதாசிகள் எனப்படும் நடனமாடும் மாதரும் இணைந்து இந்த அற்புதக்கலையை உருவாக்கினர் என கூறுவர்.
பாவம் எனப்படும் உணர்ச்சிகளை முகத்தில் வெளிப்படுத்தும் தன்மையும், ராகமும், லயமும், அங்கங்களை வில்லென வளைக்கும் நடனமும் இணைந்தது தான் பரதநாட்டியம்.
ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சி சுமார் இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் வரை நீடிக்கும். நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு விநாயக பெருமானுக்கு பாராட்டும் நன்றியும்தெரிவிக்கும் இறைவாழ்த்து பாடப்படும். இது மேலப்பிராப்தி என்று அழைக்கப்படுகிறது.
பரதநாட்டியம் ஆடும் கலைஞருக்கு இடப்புறத்தில், மிருதங்கம், வயலின், புல்லாங்குழல், வீணை ஆகியவற்றை இசைக்கும் கலைஞர்கள் அமர்ந்திருப்பர்.
நாட்டிய நிகழ்ச்சியின் முதல் அங்கமாக தொடய மங்கலமும், பின்னர் மலர்தூவி வணக்கம் (புஷ்பாஞ்சலி)யும் நிகழ்த்தப்படும் . அதன் பிறகு (சுஸ்)வரங்களும், ச(ஜ)தியும் பின்தொடரும். ஒவ்வொன்றும் சுமார் 10 நிமிடங்கள் நீடிக்கும்.
நிகழ்ச்சியின் மத்தியபகுதியில் முக்கியமானவர்ணம் எனப்படும் நடன வகை இடம் பெறுகிறது. உணர்ச்சிகளின் உச்சகட்டத்தை வெளிப்படுத்தும் இதன்உடல் அசைவுகளை ஒரு சிலரால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும்.
நடனமாடுபவரின் பயிற்சி, தயாரிப்பு நிலை ஆகியவை இந்த வர்ணத்தில் தெளிவாக வெளிப்படும். இதில் மற்றொரு முக்கிய கட்டம், இறைவன் மீது தனக்குள்ள காதலை வெளிப்படுத்தும் சி(ஸ்)ருங்கார பக்தியாகும்.
வாழ்க்கையின் பல்வேறுமனோபாவங்களை வெளிப்படுத்தும் சிறப்பு பரதநாட்டியத்திற்கு உண்டு.
பல தத்துவ கோட்பாடுகளையும் , சிந்தனை போக்குகளையும், பரதத்தில் நடனமாடுபவர்கள் காட்டும் ஓர் உடலசைவும், முகபாவமும் தத்ரூபமாக நமக்கு எடுத்துக்காட்டும்.
நடனத்தில் கடைசி அசைவு தில்லானா. இதில் நடனம் ஆடுபவர் இசையின் லயத்திற்கு தன்னை முழுவதும் அற்பணித்து நம்மை மதிமயங்க செய்வார். நடனத்தின் முடிவில் மங்களம் எனப்படும் முடிவைக் குறிக்கும் அசைவு இடம்பெறும்.
தமிழ்நாடு சிறப்புமிக்க பல கலை படைப்புகளை, இசைவடிவங்களை உலகிற்கு அளித்திருந்தாலும் பரதத்திற்கு இணையாக ஒன்றை கூறமுடியாது என்று வெளிநாட்டு அறிஞர்களும் கூறுகின்றனர்.
நன்றிகள்.