பலரும் தாங்கள் கருப்பாக இருக்கிறோம் என்று ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஏதோ வெள்ளையாக இருப்பவர்கள் மட்டும்தான் அழகாக இருக்கிறார்கள் என்றும், கருப்பு என்றால் வெறுப்பதற்கான நிறம் என்றும் கருதுகிறார்கள்.
இது மிகவும் தவறு. இதனை நாங்கள் கூறவில்லை. மற்றவர்களை அழகாக்கும் அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதாவே நம்மிடம் கூறுகிறார்.
எனவே நாம் கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவர்கள் தொடர்ந்து இந்த கட்டுரையைப் படிக்கலாம்.
மஞ்சு மாதா : பொதுவாக கருப்பாக இருப்பவர்கள் தாங்கள் கருப்பாக இருப்பதை நினைத்து கவலைப்படுவார்கள். ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால் கருப்பான தோலைக் கொண்டவர்கள் உண்மையில் சந்தோஷப்படத்தான் வேண்டும். ஏனெனில் நல்ல ஆரோக்கியமான தோல் கருப்புத் தோல்தான்.
கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பவர்கள் பலர் உண்டு. வெறும் வெள்ளை தோல் மட்டும் இருந்துவிட்டால் அழகாக இருக்க மாட்டார்கள். மேலும் அலங்காரங்கள் செய்வதிலும், நகைகளுக்கும் கருப்பானவர்களுக்குத் தான் அதிகமாக பொருந்தும்.
கருப்பாக இருக்கும் தோலிற்கு நல்ல தன்மை இருப்பதை நான் பார்த்துள்ளேன். பொதுவாக கருப்பு நிறம் கொண்டவர்களுக்கு அதிகமாக முகப்பருவும் வருவதில்லை. கருப்பாக இருப்பவரின் முகம் முழுக்க முகப்பருவாக இருப்பதை பொதுவாக பார்த்திருக்கவே முடியாது. வெள்ளையாக இருப்பவர்கள் பலரும், முகம் முழுவதும் முகப்பரு வந்து அவதிப்படுவதைப் பார்த்திருப்போம்.
கருப்பாக இருப்பவர்கள், அவர்களது நிறத்திற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய, உடல் வாகுக்கு பொருந்தும் ஆடைகளையும், அலங்காரத்தையும் செய்து கொண்டால் அவர்களை விட அழகானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
வெளிர் நிறத்திலான ஆடைகள், எளிய அலங்காரம் போன்றவை கருப்பானவர்களை அழகாகாக் காட்டும். மேலும், பொன் சிரிப்பும், பொன் நகையும் கூட அவர்களுக்குத்தான் இன்னும் அழகாகத் தோன்றும். வெள்ளைக் கல் பதித்த நகைகள், தங்க நகைகள் போன்றவை வெள்ளையானவர்களை விட, கருப்பானவர்களுக்குத்தான் எடுப்பாகத் தோன்றும். இது அனைவரும் அறிந்ததே.
அதேப்போல, வெள்ளையானவர்களின் முகத்தில் சிறு மறுவோ, கட்டி என எது வந்தாலும் அப்பட்டமாக வெளியேத் தெரியும். ஆனால் கருப்பானவர்களுக்கு அந்த பிரச்சினை இருப்பதில்லை. அவர்களை எப்போதும் அழகாக வைக்க இது ஒன்றே போதுமானது.
சில பெண்கள், அடுத்த மாதம் எனக்குத் திருமணம், நான் கருப்பாக இருக்கிறேன், ஏதாவது செய்து என்னை வெள்ளையாக்குங்கள் என்று கூறுவார்கள். இதுபோன்றவர்களுக்கு ஒன்று புரிய வைக்க விரும்புகிறேன். பிறக்கும் போதே கருப்பானவர்கள், ஒரு சில முறைகளால் லேசாக வெள்ளை ஆகலாம்.
ஆனால் அதுவும் அதிகம் எதிர்பார்க்க முடியாது. முகத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் பல சிகிச்சைகள் உள்ளன. திடீரென வெள்ளையாக்க எந்த முறையும் இல்லை. எனவே, உடனடியாக வெள்ளையாக்க வேண்டும் என்று எந்த அழகுக் கலை நிபுணரையும் நிர்பந்திக்க வேண்டாம்.
அதனால் ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும் முறைகளை உங்களுக்கு செய்து விட்டால் அது பிரச்சினையாக முடிந்து விடும். எனவே, நமக்கிருக்கும் அழகை மேலும் அழகாக்கும் பணியை மட்டும் அழகுக் கலை நிபுணரிடம் ஒப்புவிப்பது நல்லது. சில எளிதான முறைகளால் நமது சருமத்தை பாதுகாக்கலாம்.
நமது சருமத்திற்கும் உணவு தேவைப்படுகிறது. அது ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும். அதாவது, வாரத்தில் ஒரு நாளாவது சருமத்திற்கு முல்தானி மெட்டி, சந்தனம், தயிர், மஞ்சள், அரிசி மாவு, தக்காளிச் சாறு, எலுமிச்சை சாறு போன்ற எதையாவது ஒன்றை தடவி ஊற விட்டு கழுவி வந்தால் இயற்கையான முறையில் அதே சமயம் எளிய முறையில் உங்கள் அழகைப் பேணலாம்.
கருப்பான சருமம் என்று கவலைப்படாமல், ஆரோக்கியமான சருமம் என்று சந்தோசப்படுங்கள். அதுதான் உண்மை.
பிற்குறிப்பு
சில அழகுக் கலை நிபுணர்களே பெண்களின் நிறத்திற்கோ, முகத்திற்குப் பொருத்தமற்ற பல அழகுசாதனங்களை உபயோகப்படுத்துவதன் ஊடாக பணமீட்டுவதற்காக நீண்ட நேரம், பண விரயத்தை வாடிக்கையாளர்களிடம் மேற்கொள்கின்றனர்.
இவற்றைத் தவிர்த்தாலே இயற்கையாகவே அழகான பெண்களை அசிங்கமாகக் காண்பிப்பதைத் தவிர்த்து மிக அழகாகவே காண்பிக்கலாம்.
இவற்றைத் தவிர்த்தாலே இயற்கையாகவே அழகான பெண்களை அசிங்கமாகக் காண்பிப்பதைத் தவிர்த்து மிக அழகாகவே காண்பிக்கலாம்.
நன்றிகள்.