Wednesday, 14 November 2012

சிறுநீரிலிருந்து மின்சாரம் சாதனை.....!


சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைசீ(ஜீ)ரிய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். நைசீரியா பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடு. இங்கு மின்சாரம் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் 14 வயதான டூரோ அய்னா அடிபோலா, அகின்டேல் அபியோலா, பேலகே வொலுவடோயின் மற்றும் 15 வயதான பெல்லோ எனியோலா ஆகிய மாணவிகள் சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.

லாகோசில் நடந்த ஆப்பிரிக்க சிறு முதலீட்டாளர்கள் மாநாட்டில் தங்களது கண்டுபிடிப்பை அவர்கள் காட்சிக்கு வைத்தனர். முதலில் இவர்கள் சிறுநீரை நைட்ரசன், தண்ணீர் மற்றும் கைட்ரசனாக பிரிக்கின்றனர்.

அதன் பின்னர் கைட்ரசனை ஒரு நீர் வடிகட்டிக்குள் அனுப்பி சுத்திகரிக்கின்றனர். அது பின்னர் ஒரு எரிவாயு உருளைக்குள் போகிறது. அங்கு ஐதரசன் போராக்சு(ஸ்)(Hydrogen Poraks) திரவமாக மாறி பின், அதிலிருந்து ஐதரசன் வாயு தனியாக பிரிக்கப்படுகிறது.

அந்த சுத்திகரிக்கப்பட்ட ஐதரசன் வாயு, எரிபொருளினால் இயங்கும் மின்பிறப்பாக்கிக்கு போய் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. ஒரு முகத்தல் அளவையலகு (Liter) சிறுநீரைப் பயன்படுத்தினால் 6 மணி நேரத்திற்குத் தேவையான மின்சாரம் கிடைக்கிறதாம்.

உலகத்தின் பல்வேறான இடங்களில் மின்தடை பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த மாணவிகள் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றிகள்.