Monday, 12 November 2012

காற்றில் இயங்கும் மகிழுந்து...............!

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் காற்றில் இயங்கும் காரை இந்தியாவில் உள்ள தமிழக கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெட்ரோல் விலை உயர்வு, அதிக விலை, சுற்றுச்சூழல் மாசுபடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த காரை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து மாணவன் மதன்குமார் கூறியதாவது:

நானும், என்னுடன் இயந்திர பொறியியல் (Mechanical Engineering)இறுதியாண்டு படிக்கும் என் சக நண்பர்கள் ஆகிய 4 பேரும் படிப்பால் நமது வாழ்க்கை தரம் உயருவது மட்டுமின்றி, இந்த சமுதாயத்துக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தோம். இன்று உலகம் முழுவதிலும் மக்களை பெரிதும் பாதித்து வருவது சுற்றுச்சூழல் மாசடைதல் தான். 

மாசடைதலை குறைக்க நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இதற்காக காற்றில் இயங்கும் காரை மிகக் குறைந்த விலையில் தயாரிப்பதற்கான முயற்சியை கடந்த ஆண்டு மார்கழி மாத இறுதியில் தொடங்கினோம். இதற்கு கல்லூரி பேராசிரியர் மிகவும் உறுதுணையாக இருந்தார்.

மூன்று மாதம் இடைவிடாத முயற்சியின் காரணமாக ரூ.35,000 செலவில் ஒருவர் மட்டும் அமர்ந்து செல்லும் விதத்தில் ஒரு மகிழுந்தினை (Car) வடிவமைத்தோம். இந்த மகிழுந்தில் 300 இறாத்தல் (Lbs) காற்று கொள்ளளவு கொண்ட பெரிய கொள்கலன்(Tank)ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அதில் இருந்து அழுத்தத்துடன் வெளியேறும் காற்று இயந்திரத்தை இயக்கும். 

வழக்கமான மகிழுந்தினைப் போன்றே இதில் கியர், கிளட்ச், பிரேக் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இதில் இருந்து புகை வராது. எனவே சுற்றுச்சூழலும் மாசுபடாது. நாம் செல்லும் வழியில் எங்காவது காரை நிறுத்தி காரின் டேங்கில் காற்றை நிரப்பிக் கொண்டு நம் பயணத்தை தொடரலாம். இவ்வாறு மதன்குமார் கூறினார்.

நன்றிகள்.