சர்க்கரை நோயாளிகளுக்கு இனி அரிசி சாத(க)ம்!.
சர்க்கரை நோய் உள்ள 6 கோடி இந்தியர்கள் இனி தயங்காமல் அரிசி சாதம் சாப்பிடலாம். சர்க்கரை நோய், உடல் பருமன், அதிகப்படியான கொழுப்பு இப்படி எந்தப் பிரச்சினை வந்தாலும் முதலில் நாம் தவிர்க்க நினைக்கும் உணவு அரிசி.
ஆனால் ஒட்டுமொத்தமாக அரிசியை வில்லனாகப் பார்க்க வேண்டிய அவசியம் இனி நமக்கு இல்லை. ஏனென்றால் இந்தியாவில் விளையும் அரிசி, சர்க்கரை நோய்க்குப் பாதகமானது அல்ல என்று சர்வதேச ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய் உள்ள 6 கோடி இந்தியர்கள் இனி தயங்காமல் அரிசி சாதம் சாப்பிடலாம்.
200க்கும் அதிகமான நெல் வகைகள் உலகம் முழுவதும் பயிரிடப்படுகின்றன.
இதில் இந்தியாவில் விளையும் நெல் வகைகளிலிருந்து பெறப்படும் அரிசி உடல் பிரச்சினைகளுக்கு எதிரி இல்லை என்று சமீபத்தில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (International Rice Research Institute - IRRI ), ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செய்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
சாப்பிட்டவுடன் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் கிளைசீமிக் குறியீடு (Glycemic index - GI) இந்தியாவில் விளையும் அரிசியில் குறைவாகவே உள்ளது.
இந்த GI குறியீட்டை 3 பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள்.
55 அல்லது அதற்கும் குறைவான அளவில் உள்ளது முதல் வகை.
56லிருந்து 69 வரை உள்ளவை 2வது வகை.
கிளைசீமிக் அதிகமாக உள்ள 3 வது வகை 70க்கும் அதிகமாக GI குறியீடு உள்ளவை.
சுவர்ணா, சம்பாவில் மேம்படுத்திய மக்(ஹ்)சூரி போன்ற நாம் பயன்படுத்தும் பெரும்பாலான அரிசி வகைகளின் GI குறியீடு 55க்கும் குறைவாகவே உள்ளது.
அதேபோல பாசுமதி அரிசி 2வது பிரிவில் (gi 60) வருகிறது. அதுசரி, நாம் சாப்பிடும் உணவு உடல் பிரச்சினையை உண்டாக்குமா என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்?
உணவு சாப்பிட்டவுடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எவ்வளவு வேகத்தில் அதிகரிக்கிறது என்பதைப் பொறுத்து குறிப்பிட்ட உணவில் உள்ள கிளைசீமிக் அளவு (glycemic index GI கணக்கிடப்படுகிறது. உணவுப் பொருளில் உள்ள சர்க்கரைத் தன்மை கிளைசீமிக்.
குறிப்பிட்ட உணவை சாப்பிட்டவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரித்தால் அதில் GI அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம். ரத்த சர்க்கரையின் அளவு மிக மெதுவாக ஏறினால் அந்த உணவில் குறைந்த அளவு கிளைசீமிக் உள்ளது.
கிளைசீமிக் அளவு 55 அல்லது அதற்கு குறைவாக உள்ள உணவுகளே நல்லது. GI 55 அல்லது அதற்கு குறைவாக உள்ள உணவுகள் பெரும்பாலான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பருப்புகள், அவரை வகைகள் அனைத்தும்.
இந்த ஆய்வு குறித்து கோவை கே.ஜி.மருத்துவமனை மூத்த டயட்டீஷியன் சுபத்ரா சுந்தர் கூறும்போது, “இந்திய அரிசியில் கிளைசீமிக் குறியீடு குறைவாக உள்ளது என்பது நல்ல விசயம். குறைவாக உள்ளது என்பதற்காக 3 வேளையும் அரிசியையே சாப்பிடுவது கூடாது.
அவரவர்களின் உடல் உழைப்பைப் பொறுத்து தினமும் 1800லிருந்து 2400 கலோரி தேவை. 100 கிராம் அரிசி சாதத்தில் 360 கலோரி உள்ளது. ஒரு வேளை மட்டும் குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் 100 கிராம் சாதம் சாப்பிட்டால் போதும்.
நிறைய காய்கறிகள், கீரை, பழங்கள் என்று உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கைக்குத்தல் அரிசியில் (பிரவுன் ரைஸ்) வைட்டமின்கள் அதிகம் என்பதால் அதையும் அவ்வப்போது சாப்பிடலாம்.
திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, கேரட் போன்றவற்றில் GI மிகக் குறைவு. எனவே இவற்றை நிறைய எடுத்துக் கொள்ளலாம். அதேபோல கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள்.
கிளைசீமிக் அளவு குறைவாக உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் பருமன், ரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள் போன்ற பொதுவான உடல் பிரச்சினைகள் வராது.
உடற்பருமன் உள்ளவர்கள், கிளைசீமிக் குறைவாக உள்ள உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அதிகப்படியான உடல் எடை குறையும்.”
நன்றிகள்.