Sunday, 21 October 2012

வலிக்கும் மனதுக்கும் தொடர்புண்டா.........?

வலியில்லாத மனிதர்களைப் பார்க்கவே முடியாது. தலைவலி, முதுகு வலி, கை வலி, கால் வலி என ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வலி... இவர்களில் பெரும்பாலானோர் மருந்து, மாத்திரை என சிகிச்சைகளை மேற்கொண்டும் பலன் கிடைக்காமல் வலியைத் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கவில்லையே என்கிற வேதனை ஒரு பக்கம்... சதா சர்வ காலமும், வலி வலி எனப் புலம்புவதைக் கேட்கும் வீட்டாரும் உறவினர்களும், இவர்களைக் கிட்டத்தட்ட மனநோயாளிகளாகவே பார்க்கிற அவலம் இன்னொரு பக்கம் என வலியுடன் போராடும் வாழ்க்கை கொடியது.


தீராத, நாள்பட்ட வலி என்பது மன நோயின் அறிகுறியாக இருக்குமா? வலிகளுக்கும், மனதுக்கும் தொடர்புண்டா? விளக்கமாகப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார்.

‘‘எந்த நோயுமே நீண்ட நாள்களாக சரியாகாமல் கடினமாக இருந்தால், அது மன உளைச்சலை உண்டுபண்ணும். மற்றவர்களைப் போல இருக்க முடியவில்லையே என்கிற வேதனையுடன், எந்த சிகிச்சையில் வலி தீரும் என்கிற தேடலில் பணம் விரயமாகிற கவலையும் சேர்ந்து கொண்டு, அவர்களுக்கு ‘இரண்டாம் தர மன அழுத்தம்’(Secondary Depression) என்பதை உருவாக்கலாம்.

நோயின் காரணம் வேறாக இருக்கும். ஆனால், அதன் விளைவாக மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தத்தின் பாதிப்பால் அவர்களது நடவடிக்கைகளில் காணப்படும் மாற்றங்களை வைத்து, குடும்ப உறுப்பினர்கள் மனநோயாளி மாதிரி சித்தரித்துப் புறக்கணிப்பது மிகவும் தவறு.

நோய் குணப்படுத்தப்பட்டால், மன அழுத்தம் தானாக சரியாகி விடும். அடுத்தது, அதிக பதற்றம், மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவற்றால் பாதிக்கப்படுவோருக்குப் பலவித உடல் உபாதைகள் வரும்.

ரொம்பவும் பதற்றமாக இருந்தால் தலைவலியை உணர்கிறோம். சரியாகத் தூங்காவிட்டால் தலைவலியும் வயிற்றுவலியும் வருகிறது. 

எனவே, மன அழுத்தத்தினால் சில நோய்கள் - முக்கியமாக வலி நோய்களும் வரலாம். வலிக்கான காரணம் அறிந்து குணப்படுத்தாவிட்டால், நீண்ட நாள் வலியானது மன பாதிப்பை உண்டுபண்ணக்கூடும்.

வலியாலும், அது தரும் மன உளைச்சலாலும் அவதிப்படுவோர், முதலில் ஆரோக்கியமான மனநிலையில் இருக்கப் பழக வேண்டும். மருத்துவரின் அறிவுரையின் பேரில் மிதமான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதால், உடலில் சில உடல் உறுப்புகளை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கின்ற உட்சுரப்பு நீர் வகைகளில் ஒன்று சுரந்து, வலி குறையும்.

மன அழுத்தத்தை அலட்சியம் செய்தால், சாதாரண வலி கூட தீவிரமானதாகத்தான் தெரியும். எனவே சந்தோசமான மனதே, வலிக்கான முதல் மருந்து!’

நன்றிகள்.