Saturday, 20 October 2012

புன்னகை என்ன விலை....................?


பொன்னகைக்கு விலையுண்டு. புன்னகைக்கு? அதற்கு விலை எதுவும் இல்லை. ஆனால் அதுவோ விலை மதிப்பில்லாதது. புன்னகையை 'எந்தப் பிரச்னையையும் நேராக்கும் வளைந்த கோடு' என வரையறுக்கிறது ஒரு பொன்மொழி.

புன்னகையால் வசமாகாதவர்களே இருக்க முடியாது. நீங்கள் புன்னகையுங்கள், உலகமே உங்களுடன் புன்னகைக்கும்.

புன்னகை பூத்த முகமாக ஏன் இருக்க வேண்டும்? அதனால் என்ன பலன்?

சில காரணங்களைத் தெரிந்துகொள்வோம். புன்னகை நமது வெளியுலகத் தொடர்புகளை சீரான முறையில் வைத்திருக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. நம்மைக் கவர்ச்சியாக்குகிறது.

ஒருவர் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் கடுகடுவென்று முகத்தை வைத்திருப்பின் அவர்களுடன் பழகத் தோன்றுமா என்ன?

ஒரு புதிய அலுவலகத்துக்குள் நுழைகிறீர்கள். ஏதோ ஒரு தகவலை விசாரிக்கவேண்டும் என்றால் யாரை அணுகுவீர்கள்?

அங்குள்ளவர்களில் அழகிய தோற்றமுடையவரையா அல்லது சிரித்த முகத்துடன் இருப்பவரையா?

கண்டிப்பாக இரண்டாமவரைத்தான். ஏனெனில் அவர் முகத்தில் உள்ள புன்னகை உங்களை அவர்பால் ஈர்த்துவிடுகிறது. உண்மையா இல்லையா?

பிறரை வசீகரிக்க வேண்டுமானால், நம்மை உயர் ரக ஆடைகளாலும், அணிகலன்களாலும் அலங்கரித்தாக வேண்டுமென்பதில்லை. உதடுகளில் புன்னகையை மட்டும் அணிந்தாலே போதுமானது.

அது முன்பின் தெரியாதவர்களைக் கூட இணைக்கக் கூடிய கயிறு. 

அடுத்தமுறை சோர்வாக உணரும்பொழுது கண்ணாடி முன் நின்று புன்னகை செய்யுங்கள். உங்கள் சோர்வு எங்கே போயிற்று என்று தேடித்தான் பார்க்கவேண்டும். ஏனெனில் புன்னகை உங்கள் சோர்வை விரட்டி அடித்துவிடும். புன்னகை மன உளைச்சலைக் கட்டுப்படுத்தும் மிகச்சிறந்த காரணி.

ஏனெனில், நீங்கள் புன்னகைக்கையில் உங்கள் உடம்பில் 'எண்டார்பின்', 'செரோடினின்' மற்றும் சில இயற்கையான வலி நிவாரணிகள் சுரக்கின்றன. இவை உங்கள் உடல்வலியைக்கட்டுப்படுத்தக்கூடியவை. புன்னகை ஒரு இயற்கையான மருந்து.

உங்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கிறதா? அடிக்கடி புன்னகையுங்கள். இரத்த அழுத்தம் குறைவதைக் காண்பீர்கள். அது மட்டுமல்ல. புன்னகை உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகிறது. எப்போதும் புன்னகைத்தவாறே இருப்பவர்களுக்கு உடல் நலப்பாதிப்பு அடிக்கடி ஏற்படுவதில்லை என்கிறது ஒரு ஆய்வு.

நாம் கோபப்படுகையிலும், அழுகும்போதும் நமது முகத்தில் உள்ள தசைகள் தளர்ந்துவிடுகின்றன. குறிப்பாக அழுகையில், கண்ணீர் அதிகம் சுரப்பதால் கண்கள் உப்பி அழகிழந்து விடுகிறது. அதிகம் கோபப்படுகிறவர்களும் எதற்கெடுத்தாலும் முகத்தை உம்மென்று வைத்திருப்பவர்களும் விரைவில் முதுமையடைந்து விடுகின்றனர்.

ஆனால் புன்னகைக்கிறபோது, முகத்தசைகள் தளர்வதில்லை. அதிக அளவான தசைகளும் பயன்படுத்தப் படுவதில்லை. அதனால் நம் தோற்றம் பொலிவு அடைகிறது. அதிகம் புன்னகை செய்பவர் இளமையான தோற்றத்தை தக்க வைத்துக்கொள்வார்.

முகம் பார்க்கும் கண்ணாடி முன் நில்லுங்கள். முதலில் அழுவது போல் பாவனை செய்யுங்கள். பின் கோபமாக இருப்பதுபோல். கடைசியில் புன்னகை செய்யுங்கள். உங்கள் முகம்தான். நீங்கள் பலமுறை கண்ணாடியில் பார்த்த முகம்தான். அதில்தான் எத்தனை வேறுபாடு?

மன உளைச்சலில் இருப்பவர்களுக்கும் புன்னகை ஒரு அருமருந்து.கண்களை மூடிக்கொண்டு உங்களுக்குப் பிடிக்காத, வருத்தத்தை உண்டாக்கக்கூடிய நிகழ்வுகளை, தகவல்களை நினைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது புன்னகைத்தவாறு கண்களை மூடிக்கொண்டு அதே நிகழ்வுகளை மீண்டும் எண்ணிப்பார்க்க முயலுங்கள். முடிகிறதா?

நினைவிருக்கட்டும். புன்னகை உங்கள் இதழ்களில் தங்கியிருக்கவேண்டும். உங்கள் மன நிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

முதலில் மிகுந்த துன்பத்தை ஏற்படுத்திய அதே நிகழ்வுகள் நீங்கள் மறுமுறை நினைக்கையில் அத்தனை வருத்தத்தைத் தருவதில்லை. சரிதானே?

அடிக்கடி புன்னகை செய்துகொண்டே இருங்கள். உங்கள் மனச் சோர்வு, மன அழுத்தத்திற்கு நீங்கள் வேறு மருந்து எதுவும் தேட வேண்டியதே இல்லை. 

புன்னகை ஒரு தொற்று நோய். காலையில் எழுந்ததும் உங்கள் குடும்பத்தினருக்கு புன்னகையுடன் காலை வணக்கம் தெரிவியுங்கள். அலுவலகத்தில் பார்க்கும் அனைவருக்கும் புன்முறுவலுடன் முகமன் கூறுங்கள். அது எல்லாத் திசைகளிலும் காற்று போல் பரவக்கூடியது.

எவ்வளவு கடுமையான பிரச்னையாக இருக்கட்டும். புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். அது எளிமையாக மாறிவிடும். எவ்வளவு கோபக்கார முதலாளியாக இருக்கட்டும். முறுவலுடன் தகவல் தொடர்பை மேற்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் கோரிக்கையில் வெற்றியடைவீர்கள். 

புன்னகை செய்யுங்கள்; உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. புன்னகை செய்யுங்கள்; உங்கள் மனதில் நேர்மறையான சிந்தனைகள் நிறைகின்றன.

புன்னகை உங்களை வெற்றியாளராக மாற்றும் ஒரு எளிய சாதனம். ஒரே நிறுவனத்தில் இரு விற்பனையாளர்கள் ஒரே கல்வித்தகுதி, அறிவுத்திறன் போன்ற காரணிகளில் ஒத்திருக்கலாம். ஆனால் ஒருவர் தமது விற்பனை இலக்கை எளிதில் எட்டிவிடுகிறார்.

மற்றொருவரால் அந்த இலக்கைத் தொட முடிவதில்லை. ஏன்?

அவர்கள் வாடிக்கையாளர்களை அணுகும் விதம்தான் காரணம். புன்னகையுடன் வாடிக்கையாளரை அணுகுபவர் தன்னம்பிக்கையுடன் பேசி அவர்களை வசமாக்குகிறார். மற்றவரிடம் அது இல்லாமலிருக்கக் கூடும். அது அவரை, அவரது இலக்கை அடைய விடாமல் தடுத்துவிடுகிறது.

நோயாளிகளிடம் சிரித்த முகத்துடன் பழகும் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் எளிதில் நோயைக் குணப்படுத்திவிட முடியும். நோயாளியை மருத்துவர் பார்க்கும்பொழுதே அவருடைய புன்னகை அந்நோயாளியைத் தொற்றிவிடுகிறது. அவர்கள் தமது நோய் குறித்து அவரிடம் வெளிப்படையாகவும் எளிதாகவும் உரையாடும் மன நிலையைப் பெறுகின்றனர்.

அம்மருத்துவர் தன்னையும் அறியாமல் அந்த நோயாளியின் நம்பிக்கையைப் பெற்றுவிடுகிறார். இதனால் அவருடைய மருத்துவம் வெற்றி பெறுகிறது. புன்னகைப்பவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும், நம்பிக்கையும் அதிகரிக்கும் என்று மேலே கண்டோம். உடல் குணமாக இவை இரண்டும் மிகவும் அவசியம்.

இவை அதிகரிக்கையில் நோயாளி நலம் பெறுவது எளிதாகி விடுகிறது. பலருக்கு முன் பேசப்போகிறீர்களா? சுவையான பேச்சைத் தயாரிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நீங்கள் சிரித்த முகத்துடன் பார்வையாளர்களை எதிர்கொள்வது. இதனால் பார்வையாளர்களுக்கும் உங்களுக்கும் ஒரு பிணைப்பு ஏற்பட்டு விடுகிறது.

சிலர் மிக நன்றாகப் படித்து இருப்பார்கள். ஆனால் தேர்வில் கேள்வித்தாளை வாங்கும் பொழுது பதற்றமடைந்து விடுவார்கள். இதனால் பல சமயம் நன்கு தெரிந்த விடைகள் கூட மறந்துவிடும். மாறாக, புன்னகையுடன் கேள்வித்தாளைப் புரட்டிப் பாருங்கள்.

பதட்டம் தணிந்து நினைவோட்டம் சீராகும். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் உடனிருப்பவர்களுக்கும் வெளிச்சம் கொடுக்கிறது, மகிழ்வூட்டுகிறது. எத்தகைய இறுக்கமான சூழலையும் தளர்த்திவிடுகிறது.

புன்னகையை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பரிசளிக்கலாம். எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம். அதற்கு செலவெதுவும் இல்லை. ஆனால் பலன்களோ ஏராளம்.

நன்றிகள்.