இன்றைய உலகில் அன்பு என்ற சொல் கொச்சைப்படுத்தப் படுகின்ற அளவு மற்ற சொற்கள் கொச்சைப்படுத்தப்படுவதில்லை என்று சொல்லலாம். அன்பு என்பதே நமக்கு வேண்டியது போல அடுத்தவர்கள் இருப்பது, நாம் விரும்புவதை அடுத்தவர்கள் செய்வது என்று பலரும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள்.
நமக்கு அனுகூலமாக அடுத்தவர் நடப்பதையோ, இருப்பதையோ நிறுத்தும் போது அது அன்பின்மையின் அடையாளமாக காணப்படுகின்றது. அதே போல் நம் கருத்துக்கு எதிரான கருத்து இருக்குமானால் அதையும் பல அன்பாளர்களால் ஏற்க முடிவதில்லை.
அன்பை இப்படி வரையறுப்பதின் விளைவே நம் வாழ்வில் அன்பை அதிகமாகக் காணாதிருக்கக் காரணம் என்றால் அது மிகையாகாது. நீ என்னை நேசிப்பது உண்மையானால் அப்படிச் செய், இப்படி இரு என்று அடுத்தவரை தம் விருப்பப்படி மாற்ற முனைவது உண்மையான அன்பா?
பலனை எதிர்பார்த்து எதைச் செய்தாலும் அது ஒருவித வாணிபமே அல்லவா? நான் இதைச் செய்கிறேன் நீ அதைச் செய் என்பதும், நான் இதைத் தருகிறேன் நீ அதைக் கொடு என்பதும் கொடுக்கல் வாங்கல் என்றால், நான் உன்னிடம் அன்பு செலுத்துகிறேன், பதிலுக்கு இப்படி இரு, அப்படி மாறு என்று கூறுவதும் வியாபார ஒப்பந்த வரிகளாக அல்லவா உள்ளது?
என்னை போலவே இரு, என்னைப் போலவே நினை, எனக்காகவே வாழ் என்று சொல்வதெல்லாம் அன்பு அல்ல. வடிகட்டிய சுயநலம். சிலர் சொல்லலாம் "நாங்கள் எதிர்பார்ப்பதே அன்பின் மிகுதியால் தான், அவர்களுக்கு நல்லதற்காகத் தான்" என்று. காரணம் என்னவாக இருந்தாலும் பதிலுக்கு ஒன்றை எதிர்பார்க்கையில் அன்பு தொலைந்து போகிறது என்பதே உண்மை.
எனக்கு நன்றாகத் தெரிந்த பெண்மணி ஒருவர் மகனிடம் சொன்னார். "நீ அம்மாவை நேசிப்பது உண்மையானால் புகை பிடிப்பதை நிறுத்து". மகனிடம் சத்தியமும் வாங்கிக் கொண்டார். சில மாதங்கள் மகன் புகை பிடிக்காமல் சமாளித்தான்.
ஒரு சந்தர்ப்பத்தில் அது முடியாமல் போய் இப்போது தாயாருக்குத் தெரியாமல் ரகசியமாகப் புகை பிடிக்கிறான். அவனுக்குத் தாய் மேல் பாசம் இல்லாமல் இல்லை. தாயாரும் அவன் நலத்திற்காகத் தான் அப்படி சத்தியம் வாங்கிக் கொண்டார்.
ஆனாலும் அன்பிற்கும் அந்தப் பழக்கத்திற்கும் முடிச்சுப் போட்டது மகனை மாற்றுவதற்குப் பதிலாக அவனை ஏமாற்றத் தான் தூண்டியது.இதே போல் சில வீடுகளில் "எங்களை நேசிப்பது உண்மையென்றால் கல்வியில், ஒழுக்கத்தில் சமூகத்தில் மென்மையாக இருக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் சொல்லி பெற்றோர் இலக்குகள் நிர்ணயிப்பதும் அபத்தமே. குழந்தைகளிடம் எதிர்பார்ப்பதும், ஊக்குவிப்பதும் தவறல்ல.
ஆனால் அன்புக்கே அடையாளம் இது தான் என்று சில இலக்குகளை தீர்மானிப்பது தான் அபத்தம். கொடுத்துக் கொண்டே இருப்பது, சொன்னதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டே இருப்பது, எல்லாமே எனக்கு நீ தான் என்பது, சதா கூடவே இருப்பது என்று இன்னும் எத்தனையோ அளவுகள் அன்பின் பெயரால் புழக்கத்தில் இருக்கின்றன.
ஆனால் உண்மையான அன்பு இது எதுவும் அல்ல. சரி எது தான் உண்மையான அன்பு? உலகத்தில் அன்பைத் தொலைத்துவிட்டு. இவ்வுலகில் எவ்வித எதிர்பார்ப்பையும் எதிர்பாராத எந்த உறவுமுறையையும் இப்போது காணமுடியாது.உலகை சூன்யமாக்கி மனிதசடங்களாக தூயஅன்பிற்காக ஏங்கித் தவிக்கின்றனர். நாம் இப்போது தூய அன்பைச் செலுத்துகிறோமா