Monday, 28 May 2012

அகமனதைக் கண்டுபிடித்த...................!

 1990 ம் ஆண்டின் ஒரு நாள். திடீரென்று அவரது கைகால் உட்பட வலது பக்க உடல் முழுவதுமாக செயல் இழந்துவிட்டது. கூடவே அவருக்குப் பேச்சு சுத்தமாகவே வரவில்லை. ‘இனி அவ்வளவுதான். அவரால் எதுவும் செய்யமுடியாது.

எழுத முடியாது. இலக்கியம் பற்றி பேசமுடியாது. இருக்கும் காலத்தை பேசாமல் படுக்கையில் முடங்கியே கடத்த வேண்டியதுதான்’. இப்படித்தான் எல்லோரும் ஏளனம் செய்தார்கள்.

ஆனால் அவர் சிந்தித்தார். இன்னும் கூடுதலாக எழுதினார். கவிதைகள் வந்து கொட்டின. அவரது மனஉறுதியைக் கண்டு நாடே வியந்தது. 2004-ல் அவர் எழுதி வெளியிட்ட, ‘The great Enigma’ என்ற கவிதைத் தொகுப்பைக் கண்டு உலகமே எழுந்து நின்று அவருக்குத் தலை வணங்கியது (Salute).

மனிதர்களின் ஆழ்மனத்தில் உள்ள ரகசியங்களை யதார்த்தமாக வெளிப்படுத்தும் இவரது படைப்புகளுக்கு இன்று நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.

பெயர் தாமஸ் ட்ரான்ஸ் ரோமர். தாமஸ் 1931:04:15-ல் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பிறந்தவர். தந்தை பத்திரிகையாளர். தாய் ஆசிரியை. வழக்கமான மேற்கத்திய கலாச்சார பிரச்னை. தாயும் தந்தையும் விவாகரத்து பெறுகிறார்கள்.

சிறுவன் தாமஸ் தாயின் அரவணைப்பில் வளர்கிறார். அந்த பாதிப்பில் சிறுவயதிலேயே தன் சோகங்களை கவிதைகளாக வடிக்க ஆரம்பித்தார்.

23-ம் வயதில் ‘17 Poems’ என்ற அவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. ஸ்டாக்ஹோம் பல்கலையில் உளவியல் (Psychology) படித்து, ஒரு உளவியலாளர் (Psychologist) ஆகவே பணிபுரிந்தார்.

இதுதான் மற்றவர்களின் உள் உலகத் தைக் கண்டுபிடித்து, யதார்த்தமான கவிதைகளாக வெளியில் கொண்டு வர உதவியது.

1966-ல் அவர் வெளியிட்ட ‘விண்டோஸ் அண்ட் ஸ்டோன்ஸ்’ என்ற தொகுப்பு உலகப்புகழ் பெற்றது.

1954 முதல் 2004-ம் ஆண்டு வரையான அவரது படைப்புகளை ‘போனியர்ஸ்’ என்ற பதிப்பகம் அவரது 80ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன்தான் வெளியிட்டது.

இந்தத் தொகுப்புகள்தான் அவருக்குப் பிறந்தநாள் பரிசாக நோபல் பரிசையே பெற்றுத் தந்து விட்டன. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் சு(ஸ்)வீடனுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் தாமஸ்.

"என் நண்பர்களின் மொழிபெயர்ப்பு இல்லாவிட்டால் நோபல்பரிசு எனக்குக் கிடைத்தி ருக்க சாத்தியமில்லை" என்று எழுதிக் காட்டினாராம் தாமஸ். உண்மை தான் அமெரிக்கக் கவிஞரான ராபர்ட் பிளே, ராபின் ஃபஸ்டன், ராபின் ராபர்ட்ச(ஸ)ன் போன்ற கவிதை நண்பர்கள் இவரது கவிதைகளை மொழிபெயர்த்து உலக அரங்கிற்கு எடுத்துச் சென் றிருக்கிறார்கள்.

தாமஸ், 1984-ல் போபால் விசவாயுக் கசிவின்போது, இந்தியா வந்து, அந்த துயரச் சம்பவத்தை கவிதையாக வடித்தவர் என்பது கூடுதல் செய்தி. அப்போது இன்றைக்கு நோபல் பரிசை நழுவ விட்டதாகப் பேசப்பட்ட மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தனும் உடன் இருந்திருக்கிறார்..

நன்றிகள்.