உயர்திரு
தனிநாயகம் அடிகள்
யாழ்ப்பாணம்) உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்க அடிகோலியவர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கரம்பனில் பிறந்த தனிநாயகம் அடிகளின் இயற்பெயர் நாகநாதன். புகழ்பெற்ற இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் கிறிஸ்தவ சமயத்தை தழுவியபோது ஏற்றுக்கொண்ட பெயர் சேவியர் ஸ்தனிஸ்லாஸ் என்பதாகும்.
ஆரம்பக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் இடைநிலைக்கல்வியை 1920 முதல் 1922 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி்யிலும், கொழும்பில் சென்ட் பேர்னாட் செமினறியில் தத்துவவியலில் கலைமாணிப் பட்டத்தையும் (1934), தமிழ் நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் M.Litt பட்டத்தையும் பின்னர் லண்டனில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார்.
ஆசிரியப் பணி
தமிழ் நாட்டில் நெல்லை மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் புனித தெரசால் உயர்நிலைப்பள்ளியில் துணைத்தலைமையாசிரியராகப் பணியாற்றினார், இங்கு இருந்தபோது பண்டித குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் தமிழ் பயின்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
1961 இல் மலேசியா சென்று மலாயா பல்கலைக்கழகத்தில் 1969 வரை இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கிருந்து ஓய்வு பெற்றபின் ஓராண்டு காலம் பாரிசில் பிரான்சுக் கல்லூரியிலும், ஓராண்டு காலம் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
தமிழ்ப் பணி
கத்தோலிக்க துறவியாக தனது பணியை ஆரம்பித்த தனிநாயகம் அடிகள் தமிழை முறைப்படி கற்றுத் தேர்ந்து ஒரு தமிழ் வளர்க்கும், பரப்பும் தூதராகத் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. "தமிழ்க் கல்ச்சாரம்" (Tamil Culture) என்ற ஆங்கில காலாண்டிதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். அதன் மூலம் அகில உலகத்திலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்று சேர்க்க முற்பட்டு பெரும் வெற்றியும் கண்டார். 1961 இல் சென்னையில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (Academy of Tamil Culture) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களும் எழுதி வெளியிட்டார். தமிழ்த் தூது என்ற நூல் அடங்கலாக மொத்தம் 137 நூல்களை எழுதினார்.
தமிழாராய்ச்சி நிறுவன தோற்றுநர்
மலேசியாவில் பணி புரியும் காலத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவராக இருந்து செயற்பட்டார். அதன் முதல் மாநாட்டினை 1966, ஏப்ரல் 16 - 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார். பின்னர் சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மறைவு
அடிகளார் இறப்பதற்கு நான்கு மாதத்திற்கு முன்னர் ஏப்ரல் 1980 இல் தந்தை தந்தை செல்வா நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்தினார். அதே ஆண்டு மே மாதம் வேலணையில் பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் எழுதிய தமிழ்மறை விருந்து நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அதன்பின், பெரிதும் உடல் நலிவுற்றதனிநாயகம் அடிகளார், 1980 செப்டம்பர் 1 மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார்.
தனிநாயகம் அடிகள் பற்றி காரையூர் நா பொன்னையா
தனிநாயகம் அடிகளாரின் பெயரைக் கேட்கின்றபோதெல்லாம் எமக்கு நினைவில் வருவது தமிழ்க்கலாசாரம் என்னும் முத்திங்கள் ஏடும் 1968ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடுமே என்பதில் ஐயமில்லை. தமிழ்க் கலாசாரம் என்னும் தீன் சுவையை அந்நிய மொழியாகிய ஆங்கில மொழிமூலம் தமிழர்களது கலை இலக்கியம் பண்பாடு என்ப்னவ்ற்றை உலகிற்கு பறைசாற்றி வந்துள்ளார் என்பதை தமிழர்களாகிய நாமறிவோம்.
"தமிழ்க் கலாசாரம்" என்னும் முத்திங்கள் ஏடு தமிழர்களுடைய கலை, இலக்கியம், பண்பாடு என்பவற்றை பறைசாற்றி வ்ந்துள்ளது. இந்த ஏடு ஆற்றிவந்த அரும் பெரும் பணி மிகவும் மகத்தானது. இவ்வேடு உலகை வலம் வரச் செய்த பெருமை பிதா தனிநாய்கம் அடிகளாரையே சாரும். கத்தொலிக்க துறவியாக தனது பணியை ஆரம்பித்த தனிநாயகம் அடிகள் காலப்போக்கில் தமிழ் மீது தீராக் காதல் கொண்டு அதனை முறைப்படி கற்றுத் தேர்ந்து ஒரு தமிழ் வளர்க்கும் பரப்பும் தூதராகவும் தமிழ்க் கலாசாரம் ஏட்டின் ஆசிரியராகவும் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்க தொன்றாகும்.
தமிழ் மொழி இந்துக்களுக்கு மட்டும் உரியதன்று. அது சமணர், பௌத்தர், இசுலாமியர், கிறிசுத்தவர் என அனைத்து மதத்தவர்களுக்கும் உரிய தனித்துவமான மொழி என்று உலகம் முழுவதும் இதன் சிறப்பை தனிநாயகம் அவர்கள் எடுத்துரைத்தார்கள். இதனால் சமய சமரசம் நிலவியது. உலக ஒப்புரவு காணப்பட்டது. இயேசுநாதரின் பொறையும், புத்தரின் அகிம்சையும் நபிகள் நாயகத்தின் சகோதரத்துவமும் சைவரின் அன்பும், வைசுணவரின் சரணாகதிக் கோட்பாடும் தனிநாயகம் அடிகளாரிடம் மலிந்து காணப்பட்டன என்றால் மிகையொன்றும் இல்லை.
தமிழாரய்ச்சி ஆங்கிலேயர் காலத்திற்குப் பின் விருத்தியடைந்ததென்பது தப்பான கருத்தென்பதும் 1500 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தொல்காப்பியம், திருக்குறள் போன்ற நூல்கள் அதற்குச் சான்று பகர்கின்றன என்பதும் அடிகளாரின் துணிந்த கருத்தாகும். இந்நூலை எழுதிய அடிகளார் அவர்கள் இவ்வுலக வாழ்வை நீப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன் அவர் நிகழ்த்திய இரு விரிவுரைகளே இந்நூலாகும் என்பதையும் தமிழிலக்கியத்திற்கு அவர் கொடுத்த இறுதிச் சொத்தாகும் என்பதையும் இந்நூலைப் படிப்போர் அவதானிக்கக் கூடியதாகவிருக்கும்.
ஆதிகாலம், இடைக்காலம், நவீன் காலம் என்ற முக்காலங்களிலும் தமிநாராய்ச்சி எவ்வாறு தொழிற்பட்டிருகின்றதென்பதை அடிகளார் மிக விரிவாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளார். "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று அடிகளார் குறிப்பிடும் புறனானூறு அடிகளும் இங்கும் இடம் பெறுகின்றன. மிகத் தொன்மையான தமிழ் நாகரீகம் சிந்து வெளியில் ஆரம்பமாகி இந்தியாவிலும் இலங்கையிலும் பரவியிருந்தது என்ற அராய்ச்சிக் கருத்தை முன் வைத்தும் ஆதரித்தும் அதற்கான எடுத்துக்காட்டுக்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
1966-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாட்டின் பிரதம அதிதியாக வண தனிநாயகம் அடிகளார் கலந்து கொண்டமை இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு ஒரு பெருமையைத் தோற்றுவித்தது. அவ்வரங்கில் அடிகளார் சுறுசுறுப்பாகவும் விவேகமாகவும் செயற்பட்டு மாநாட்டின் முன்னோடியாகவும் திகழ்ந்தமையைப் பல வட்டாரங்களிலிருந்து கிடைத்த புகழாரங்கள் சான்று பகரும்.
தனிநாயகம் அடிகளார் ஓர் அறிவாளி, ஆன்மீகவாதி. அத்துடன் ஒரு செயல் வீரன். உலகில் உள்ள தமிழர்களை, தமிழறிஞர்களை ஒன்று இணைத்த மாவீரன்! பக்திச்சுவையும் மனிதாபிமானமும், பரந்தநோக்கும், தமிழிலுள்ள ஏனைய சிறப்புகள் என்றும் குறிப்பாக தேவார, திருவாசகங்களிலும் ஆழ்வார்களின் திருப்பாடல்களிலும் பொதிந்தும் மலிந்தும் கிடக்கும் பக்தியுணர்வை நாம் வேறெங்கும் காணமுடியாத பண்டம் என்று கூறுவார். பிதா தமிழ் இனத்தின் விடிவெள்ளி. அவர் ஓர் என்றும் அழியா ஓர் நினைவுச் சிலை எனலாம். தமிழர்களின் மனதில் பதிந்துள்ள அழியாச் சின்னம் என்றே கூறலாம்.
நன்றிகள்.