Monday, 30 June 2014

கலை அடையாளம் சின்னமணி என்றால்....!.

வில்லிசைக் கலைஞர் சின்னமணி

சின்னமணி அச்சுவேலி கலை பண்பாட்டுப் பெருவிழாவில் அச்சூர்க்குரிசில் விருது பெறும் சான்றோன்.

சின்னமணி என உலகோரால் அறியப்பட்ட நாகலிங்கம் கணபதிப்பிள்ளை 30.03.1936 இல் வடமராட்சி மாதனையில் பிறந்தவர். 1960 இல் அச்சுவேலியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் அன்னமுத்துவை மணம் முடித்ததன் வாயிலாக அச்சுவேலியை தனது வாழ்பதியாக்கிக் கொண்டார்.

சின்னமணி கணபதிப்பிள்ளை அரச சேவையில் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1957 இல் ஆசிரிய நியமனம் பெற்று இரத்மலானை கொத்தலாவலபுரம் தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தமிழகத்தின் புகழ் பெற்ற நாடக மேதைகளான ரீ.கே.எஸ். சகோதரர்களுடன் இணைந்து நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற நாடக நிகழ்வுகளில் பங்கு கொண்டார்.

கொழும்பில் தங்கியிருந்து பணியாற்றிய காலத்தில் திரைப்படநடிகரும் வில்லிசையாளருமாகிய கலைவாணர் என்.எஸ்.கிருசு(ஷ்)ணனின் தொடர்பு இவருக்குக் கிட்டியது. நாடக உத்திகளையும் வில்லிசை நுட்பங்களையும் கலைவாணிரிடமிருந்து கற்றுக்கொண்ட இவர் வண்ணை. கலைவாணர் நாடக மன்றத்தின் உருவாக்க உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அக்காலத்தில் வில்லிசைத்துறையில் புகழ்பெற்றிருந்த திருப்பூங்குடி ஆறுமுகத்துக்குப் பக்கப்பாட்டுக் கலைஞராகவும் நகைச்சுவையாளராகவம் பணியாற்றிப் பின் அவரது ஆசீர்வாதத்துடன் 02.02.1968 இல் செல்வச்சந்நிதி சந்நிதானத்தில் தான் தலைமையேற்று முதல் வில்லிசை நிகழ்ச்சியை நடாத்தினார். தான் அமைத்த வில்லிசைக் குழுவுக்குத் தனது ஆதர்சக் கலைஞராகிய கலைவாணரின் பெயரைச் சூட்டினார்.

வில்லிசை என்றால் சின்னமணி என்னும் அளவிற்கு இவரது புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. தமிழ்ப் புராண, இதிகாச, காப்பியங்களில் இருந்து சமூகம் கற்க வேண்டிய செய்திகளை நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புக்களில் மேற்கொண்டுள்ளார். வில்லிசையின் ஊடாக ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டிருக்கிறார். படித்தவர்களும் பாமரர்களும் இரசிக்கும் படியாக வில்லிசை மூலம் கதை சொல்லக்கூடிய ஆற்றல் கொண்டிருப்பது இவரது பலம் ஆகும்.

வில்லிசையில் மாத்திரமன்றி மரபு வழி நாடகத்துறையிலும் ஆளுகை பெற்றுள்ளார். காத்தவராயன் கூத்து மற்றும் இசை நாடகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளைக் கண்டுள்ளார். சத்தியவான் சாவித்திரி இசை நாடகத்தில் இவர் ஏற்கும் இயமன் வேடத்தைக் கண்டு சபையோர் கலங்குவர். அவ்வளவிற்குத் தன்னை மறந்து கதாபாத்திரத்துடன் ஒன்றிக்கும் சுபாவம் கொண்டவராகச் சின்னமணியை இனங்காட்டலாம்.

சின்னமணி நா.கணபதிப்பிள்ளையின் கலைச்சேவைகளுக்காகக் கிடைத்த பட்டங்களும் விருதுகளும் எண்ணிலடங்காதவை. வில்லிசை வேந்தன், வில்லிசை மன்னன், வில்லிசைப் புலவர், முத்தமிழ் மாமணி, வில்லிசை அரசன், வில்லிசைக் கலைஞானசோதி, பல்கலைவேந்தன், மூதறிஞர், முத்தமிழ் வித்தகர், ஜனரஞ்சக நாயகன், கலாவினோதன் என்பன அவற்றுட் சிலவாகும்.

இவரது பெயரின் அடையாகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் கலாவினோதன் என்ற பட்டம் 30.06.2002இல் கனடாவில் வழங்கப்பட்டதாகும். 1998 இல் இலங்கை அரசின் கலாபூச(ஷ)ண விருதையும் 2003 இல் வடமாகாண ஆளுநர் விருதையும் பெற்றுள்ளார். சின்னமணியின் வாரிசுகள் இன்று எம்மண்ணில் வில்லிசைக் கலையை வளர்த்து வருகின்றனர். அச்சுவேலியின் கலை அடையாளம் சின்னமணி என்றால் மிகைப்படாது.
நன்றிகள்.

Saturday, 28 June 2014

தமிழ்நாட்டின் தலைசிறந்த கோட்டை.....!.

செஞ்சிக் கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ தொலைவில் அமைந்துள்ள இது ஒன்றியம் (Union) பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாசி(ஜி), "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர்.


முகலாயர்களால் பாதுசாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.

செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில் கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு சை(ஜை)னர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

பல்லவர் காலத்தில்(கிபி 600-900) சிங்கபுரதில் (சிங்கவரம்)ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சிக்குத் தெற்கே பனமலைப் பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது. அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது. இந்த இடம் செஞ்சியில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கி.பி.580-630 விசித்ரசித்தன் என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆளுகையில் செஞ்சி இருந்தது. மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில் இருந்ததாக சொல்லப்படுகிறது .

செஞ்சி கிழக்கு பகுதியில் காணப்படும் கல்வெட்டுகள், செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாகச் சொல்கிறது.871 முதல் 907 இரண்டாம் ஆதித்ய சோழன் முறையே ஆட்சி செய்திருகின்றனர். அவன் தம்பி ராசராசன் சோழன் (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில், சோழர் ஆட்சிக்காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இங்கே இருந்தது. 1014-1190 களின் செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்கிருந்த சிறிய நகரமான செஞ்சியைப் பாதுகாப்பதற்காக, விசயநகரப் பேரரசுக் காலத்தில், 13 ஆம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டது.

அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை வலிமை பொருந்திய கோட்டையாக மாற்றினர். 13 ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பெரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. குறிப்பாக, விசயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர். தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமை இடமாகவும் இது விளங்கியது.

வெளியார் படையெடுப்பை முறியடிப்பதற்கு உகந்த இடமொன்றாகக் கருதியே இவ்விடத்தில் இக்கோட்டை கட்டப்பட்டது. மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீச(ஜ)ப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாசி இதனை மேலும் பலப்படுத்தினார்.

ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாசியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராசாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை.

இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராசாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை கை(ஹை)தர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தார்.
நன்றிகள்.

Friday, 27 June 2014

வைரம் பற்றிய நாம் அறியா....!.

வைரம் பற்றிய நாம் அறியா சில தகவல்.....! இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வச்(ஜ்)ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது.


 இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் "வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்'' என்ற பழமொழியும் வந்தது.

வைரம் எப்படி உருவாகிறது? பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 அளவு (டிகிரி) சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கரிபொருள் (carbon) மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது. வைரம் உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

இன்றைக்கு நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 பத்து லட்சம் (million) ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. வைரம் ஏன் இவ்வளவு பிரகாசிக்கிறது?

வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை முழுமையான உள்பிரதிபலிப்பு (Internal Reflection TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர்.

அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் பிரகாசிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும். இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது. வைரத்தை ஏன் காரட்(Carat)முறையில் எடை போடுகிறார்கள் ?

இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்ப டுகிறது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர்.

ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை.இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது. ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம்.

அதாவது 5 காரட் 1 கிராம் எடை. சென்ட் என்பது எந்த எடையை குறிக்கும் ? ஒரு காரட் என்பது 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும். ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள். உம் : 10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட். நீலமான யா(ஜா)கர்(Blue Jager)வைரம் என்றால் என்ன?

தென் ஆப்பிரிக்காவில் யாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும். அதனால் தான் அந்த வைரங்களுக்கு நீலமான யாகர் (Blue Jager) என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை. வைரத்திற்கு இவ்வளவு விலை ஏன் ?

ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 பார எடை அலகு (ton 35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது. இந்தியாவில் எங்கு வைரம் கிடைக்கிறது?

இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது. பெல்சி(ஜி)யம் வெட்டு என்றால் என்ன ?

முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்சியம் நாட்டை சேர்ந்த லோடெவிச் (ஜ்)க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக பிரகாசிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்சியம் கட்டிங். வைரம் உலகிலேயே மிகவும் கடினமானது என்கிறார்களே ?

வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும். பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது.

இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை (Hardness) என்கிறோம். வைரம் என்னென்ன நிறங்களில் கிடைக்கிறது ? வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பழுப்பு நிற (brown), சாம்பல் நிறம் உடைய(gray) பச்சை, செம்மஞ்சள் நிறமான (orange), இளஞ்சிவப்பு (pink), நீலம், வெளிர்பச்சை, ஊதா வர்ணம் (violet) வர்ணங்களில் கிடைக்கிறது. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது. இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரம் எது ?

கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் இலண்டன் கோபரம் (Tower of London) என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது. இதுவரை உலகில் கிடைத்த மிகப்பெரிய வைரம் எது ?

தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டு விழா (Golden Jubilee) தான் மிகப்பெரியது இதன் எடை 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது.
நன்றிகள்.

Monday, 23 June 2014

நம்முடைய ஆற்றலை உறுதியான முறையில்.....!.

மனிதனுக்கு நேயஉணர்வு அவசியம். எப்படி தன்னிடம் உள்ள பழுத்த பழங்களை மரம் பிறருக்காக கொடுக்கிறதோ, அதுபோல ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுக்கும் குணமுடையவர்களாக இருக்க வேண்டும்.

எண்ணம் சக்தி வாய்ந்தது. ஆயுதத்தை விட மதிப்பு மிக்கது. எண்ணத்தில் இருந்தே செயலுக்கான தூண்டுதலை நாம் பெறுகிறோம். நல்ல எண்ணங்கள், நல்ல விளைவுகளைம், தீய எண்ணங்கள் தீய விளைவுகளையும் தத்தம் செயலின் வழியே கொண்டிருக்கும். எண்ணமே வாழ்க்கையை
வடிவமைக்கிறது.


கவலைகள் காளான்களாய் முளைக்கும். விட்டு வைத்தால் மலையாக மாறி நம்மை மலைக்கச் செய்யும்.

அனாவசியக் கவலைகளுக்கு இடமளிக்க வேண்டாம். அவை உங்கள் கனவுகளின் வண்ணங்களை இழக்கச் செய்யும். கவலை உங்களுடைய ஊக்கத்தை நலியச் செய்து விடும். ஊக்கத்தை இழந்தால் நீங்கள் வெற்றியில் இருந்து வெகுதூரம் விலகி நிற்கும்படியாகி விடும்.

இதை புரிந்து கொள்கிறவரை வாழ்க்கையில் உண்மையான எதிர்பார்ப்பு மற்றும் திருப்தி எது என்பதை நாம் உணர முடிவதில்லை.

நமக்கு மகிழ்ச்சி என்பது பொருட்களில் இல்லை. அவற்றை பெறுவதில் இருக்கிறது. அதனால் தான் நாம் கடைகடையாக ஏறி, நமக்கு பிடித்தமானதை வாங்குகிறோம். மகிழ்ச்சி எங்கெல்லாம் இருக்கிறது? ஒலிக்கின்ற அருவியில், உலவுகின்ற காற்றில், அழகு பூக்களில், கவலை சிறிதுமில்லாத குழந்தையின் முகத்தில்… இப்படி எண்ணற்ற இடங்களில் மகிழ்ச்சி பரவிக் கிடக்கிறது.

சவால் என்பது சாதாரணமல்ல… ஒரு சவாலை நீங்கள் எதிர்கொள்கிற போது அது உள்ளடக்கிய அநேக பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சவால்கள் வளர்ச்சிக்கு அவசியம். அவற்றை வெல்கிறபோது நீங்கள் வளர்ச்சி அடைகிறீர்கள் என்று அர்த்தம்..

நம்முடைய ஆற்றலை உறுதியான முறையில் பயன்படுத்துகிறபோது, நமது வாழ்விலும் அற்புதங்கள் நிகழும்.

நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள், நம்புகிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களுடைய வெற்றி நிர்ணயிக்கபடுகிறது. உங்களுடைய வழக்கமான சிந்திக்கும் முறைதான் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை உங்கள் மனதில் ஊன்றுகிறது.

வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படுவதற்கு, உங்களுக்குள் ஏராளமான திறன்கள் காத்திருக்கின்றன என்றாலும் அதை கண்டுகொள்ள வேண்டும், அதை கருத்தாய் வளர்க்க வேண்டும். நம்முடைய திறமையைக் கொண்டு பல உன்னதங்களை நாம் நிகழ்த்த முடியும் என்று நம்புங்கள்.

எதுவுமே இல்லாதிருப்பதை விட ஏதாவது ஒன்றை பெற்றிருபது மேலானது என்பார்கள். நம்பிக்கை என்பது விரும்பிய விதத்தில் எண்ணமிடுவது அல்ல, ஒன்றைத் திடமாக நம்புவது.

ஒரு எண்ணத்தை, ஒரு திட்டத்தை, ஒரு செயலால் உங்களால் உருவாக்க முடியும். பின்னணியில் வலுவான நம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம்.

ஒரு விதையளவு நம்பிக்கை இருந்தால் போதும். சிறிய விதைதான்… ஆனால் அது விதைக்கபட்டு விடுகிறபோது… அது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியைம் கொண்டுவந்து விடுகிறது.

மகிழ்ச்சியைப் பெருக்க நமக்குக் குறுக்கே நமது நாக்கு வந்து தடுக்கும். எடுத்த வீச்சுக்குச் சுடுசொல் பேசவைப்பதும் இந்த நாக்குத் தான். நரம்பில்லா நாக்கால கண்டபடி திட்டிக் கொட்டிப்போட்டு, உள்ள நல்லுறவுகளையும் முறித்துப்போட்டு ஈற்றில் துயருற்று என்ன பயன்?

நல்லுறவைப் பேண அமைதி (மௌனம்) பேணலாம். அதாவது வாய்க்குப் பூட்டுப் போடலாம். “அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்னும் முதுமொழிக்கமைய அன்பாகப் பேசி எதிரியையும் எம்பக்கம் இழுக்கலாம் என்றால் அன்பு மொழி பேசி நல்லுறவைப் பேணலாமே!

பேசுமுன் ஒன்றுக்குப் பலமுறை எண்ணி இன்சொல் பேசலாம்; பிறர் உள்ளம் நோகாது நல்லதைப் பேசலாம். எனவே, நாக்கை உள்ளத்தாலே கட்டுப்படுத்தலாம். வாய்ப் பூட்டு நல்ல இனிய உறவுகளைத் தரும். நாளெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் நீந்தலாம்.
நன்றிகள்.

Wednesday, 18 June 2014

கொப்பூழ்க் கொடி....!.

கொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது?

கருவுற்ற பெண் அல்லது பெண் விலங்கின் கருப்பையினுள் நச்சுக்கொடி (Placenta) ஒன்று உருவாகி குழந்தை பிறக்கும்வரை அதன் வழியாகக் குழந்தைக்கு ஊட்டச்சத்து தரப்படுகிறது. கருவிலுள்ள குழந்தையின் கொப்பூழுடன் நச்சுக்கொடி (placenta) கொப்பூழ்க் கொடியால் (umbilical cord) இணைக்கப்பட்டுள்ளது. இந்த நச்சுக்கொடி, தாய்-சேய் இணைப்பி எனவும் கூறப்படுகிறது.

குழந்தையின் உயிர்ப்பாதை (Life line) உயிர்வாழ்வதற்குத் தேவையான ஒவ்வொரு பொருளும் – காற்று, குருதி ஊட்டச்சத்து – கொப்பூழ்க் கொடி வழியாகவே குழந்தைக்குச் சென்றாக வேண்டும். அது ஓர் அங்குலம் (inch) அகலத்திற்கு மேற்படாத அகலமும் ஓர் அடி நீளமும் ஒரு வேளை கொண்டிருக்கலாம்.


குழந்தை பிறந்த பின் அந்தத் தாய்-சேய் இணைப்பி (placenta) கருவுற்றிருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட பணிக்காக இருந்த இக்கொடி – விலக்கீடு செய்யப்படும்.

பிறந்த குழந்தையின் வயிற்றிலிருந்து ஒரு சில அங்குலங்கள் (inches) தள்ளி கத்திரியால் கொப்பூழ்க் கொடி வெட்டப்படும் இது. இந்த வெட்டுதல்-வலியேதும் ஏற்படுத்தாது. ஏனெனில் கொப்பூழ்க் கொடியில் நரம்புகள் ஏதும் இல்லை. குழந்தை இப்போது தானாகவே மூச்சை இயக்கிக் கொள்ளும். 
நன்றிகள்.

Tuesday, 17 June 2014

எடையை குறைக்கும் பட்டை.....!.

எடையை குறைக்கும் பட்டை இஞ்சி தேநீர்!!...

எடையை குறைக்க பலர் காலை வேளையில் பல வழிகளை மேற்கொள்வார்கள். அப்படி காலை வேளையில் எடையை குறைக்க நீங்கள் முயற்சிப்பவரானால், பட்டை இஞ்சி தேநீர் குடியுங்கள். 


இதனால் உடல் எடையானது விரைவில் குறையும். மேலும் உடலும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்புடன் இருக்கும். இங்கு எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி தேநீரை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து காலையில் செய்து குடித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
பட்டை - 2 அங்குலம்
இஞ்சி - 1/2 அங்குலம் (துருவியது)
கறுப்பு தேயிலைகள் - 1 தேக்கரண்டி 
எலுமிச்சை - 2 துண்டுகள்
புதினா - 5-6 இலைகள்
தேன் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும். பின்பு தேயிலைகளை சேர்த்து, அடுப்பை அணைத்து, 3-4 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, பின் தேன் சேர்த்து கலந்து குடிங்கள்!. 
நன்றிகள்.

Sunday, 15 June 2014

ஒவ்வாமை வராமல் தடுக்க.....!.

ஒவ்வாமை(அலர்ஜி) வராமல் தடுக்க என்ன செய்யலாம் ?


ஒவ்வாமை பரவலாக காணப்படுகிறது. அவர்களுக்கு குறிப்பிட்ட சில பொருட்கள் ஆகாது. அப்படிப்பட்ட உணவு பொருட்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றில் இருந்து ஓதுங்கியிருந்தால் ஒவ்வாமை பிரச்சினையே இல்லை. பொதுவாக ஒவ்வாமையை சில அறிகுறிகளை வைத்து அடையாளம் காணலாம்.

உணவை வாயில் வைத்தவுடன் கூசுவதும், முகச்சுளிப்பு ஏற்படுவதும் கூட ஒவ்வாமையாக இருக்கலாம். மேலும், சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம். குரல்வளையில் ஒருவித மாற்றங்களை உணரலாம். வாந்தியும் ஏற்படும். அதோடு, அடிவயிற்று வலி வரலாம்.


மூச்சுவிடுவதில் சிரமம், பெருமூச்சு விடுதல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு நினைவு இழப்பும் ஏற்படுவது உண்டு. சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் ஒத்துக்கொள்ளாமல் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்விளைவை உண்டாக்கும்.


ஒவ்வாமை ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், ரத்த செல்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். நோய் தடுப்பு மண்டலமும் ஒவ்வாமையால் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு. பொதுவாக வேர்க்கடலை, பட்டாணிக்கடலை போன்ற பருப்பு வகைகள்தான் அதிக ஒவ்வாமையைத் ஏற்படுத்தக் கூடியவை. இவை இம்யுனோகுளோபின் என்ற ரசாயனத்தைச் சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்கிறது.

இதுதவிர, முட்டை, பால், வேர்க்கடலை, சோயா மொச்சை, கோதுமை, முந்திரிக் கொட்டை, பாதாம்பருப்பு, மீன், நத்தை உணவுப் பொருட்கள் 90 சதவீதம் ஒவ்வாமை ஏற்படுத்தும் பட்டியலில் உள்ளன. இவற்றில் வேர்க்கடலை, மீன், நத்தை, கொட்டை உணவு வகைகளில் ஒவ்வாமை ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும்.மற்ற உணவுகள் தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். சரி…


ஒவ்வாமை வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

ஒவ்வாமையை தடுக்க ஒரே வழி, அதை ஏற்படுத்தும் உணவுகளை உறுதியாகத் தவிர்த்து விடுவதுதான். வெளியில் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் புதிய உணவு வகைகளை சாப்பிட வேண்டாம். வறுக்கப்பட்ட உணவுகள், வேக வைக்காமல் மேல்புறம் மாவு சேர்க்கப்பட்ட உணவுகள், சுவையை அதிகப்படுத்தப் பயன்படும் வடிசாறு (soup), குழம்புகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

சாப்பிட்ட உடனேயே பழவகைகளை உண்ண வேண்டாம். மேலும், பாலிதீன் காகிதம் மற்றும் பிராணிகளின் ரோமம், தோலால் செய்யப்பட்ட பைகளில் உணவை பொட்டலத்தை கட்டிப் பயன்படுத்தக்கூடாது. அது இரசாயன மாற்றம் அடைந்து ஒவ்வாமையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
நன்றிகள்.

Tuesday, 10 June 2014

வழுக்கை தலையில் முடிவளர.....!

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

                                           

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.
நன்றிகள்.

Monday, 9 June 2014

தூக்கம் வராமல் அவதிப்படுபவரா.....!

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவரா நீங்கள் ?

இவ்வுலகில் தூக்கம் என்பது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. நிம்மதியான தூக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். இத்தகைய தூக்கப் பிரச்சனை வருவதற்கு காரணம், அதிக வேளைப்பளுவின் காரணமாக மனஅழுத்தம் தான். எனவே இத்தகைய தூக்கப் பிரச்சனையை நீக்க ஒரு சில செயல்களை செய்வதால், சரிசெய்யலாம்.

அதுவும் மருந்து மாத்திரைகள் இன்றி ஆழமான, ஆரோக்கியமான, நிம்மதியான தூக்கத்தை தூங்கவும், புத்துணர்ச்சியுடன் எழுந்து வேலைகளை செய்யவும் சில வழிகள் உள்ளன. இப்போது அந்த செயல்கள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


பொதுவாக தாமதமாக படுக்கைக்கு சென்று, தாமதமாக எழுந்திருத்தல் அல்லது சீக்கிரம் படுத்து, சீக்கிரம் எழுதல் என்பதை ஒரு முறையாக செய்தல் மிக அவசியம். அதிலும் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை பின்பற்றி வர வேண்டும். இதனையே வழக்கமாக தொடர்ந்தால், நன்றாக தூங்க வாய்ப்புள்ளது.

மேலும் எங்கு இடம் மாறி சென்றாலும், இந்த பழக்கத்தை தொடர வேண்டும். சிலருக்கு புது இடம் சென்றால் தூக்கம் வராது. ஆனால் நாம் சரியான நேரத்தில் தூங்க செல்வதாலும், சரியான நேரத்தில் எழுந்திருப்பதாலும், நாம் ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறலாம்.

காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தல் உடலுக்கு ஒருவகையான புத்துணர்ச்சியை கொடுக்கும். நடைபயிற்சி, ஓடுதல், வண்டியோட்டுதல் அல்லது பளு தூக்குதல் என்று வெறும் 20-30 நிமிடங்கள் ஏதாவது ஒரு வேலையை செய்தால், இரவில் உடலானது சோர்வடைந்து, நன்றாக தூங்க முடியும்.

அதே போல் நாம் இரவு தூங்கும் முன்னும், சாப்பிட்ட பிறகும் 20-30 நிமிடம் நடை நடத்தல், சூடான குளியல் போன்றவை அவசியம். இப்படி செய்வதால் உடல் தளர்த்து ஒரு விதமான புத்துணர்ச்சியுடன் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை.

இரவில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம். பகலில் அதிகம் தண்ணீர் குடிக்கவும். இரவில் அதிக தண்ணீர் குடிப்பதால், நள்ளிரவில் சிறுநீரகம் கழிக்க எழுந்திருக்க வேண்டியிருக்கும். அதனால் தூக்கம் பாதியில் கெட்டு மீண்டும் தூங்க நேரமாகும். மேலும் காலையில் நல்ல தூக்கம் வந்து, பின் எழுந்திருக்க முடியாமல், வேலைகள் அனைத்தும் சோம்பேறித்தனமாகவும், நம் உடல் சோர்வாகவும் இருக்கும்.

நல்ல தரமான தலையணை மற்றும் மெத்தையை வாங்கி தூங்க வேண்டும். இதனாலும் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

இரைச்சல் மற்றும் வெளிச்சம் தூக்கத்தை கெடுக்கும். எனவே உறங்கும் அறையில் வெளிச்சம் மற்றும் இறைச்சல் இல்லாதவாறு செய்து கொண்டு, பின் தூக்கத்தை தொடர்ந்தால், நல்ல தூக்கத்தை பெற முடியும். எனவே அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிகளைத் தேடவும்.

இரவில் மாச்சத்து (Carbohydrate) கொண்ட எளிதான உணவை சாப்பிடுவது நல்லது. பால் மற்றும் ஒரு சிறிய கிண்ணத்தில் தானியம், என்று இரவில் சாப்பிடுவதால் நிம்மதியான தூக்கம் நிச்சயம். இரவில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஏனெனல் அவை இரவில் செரிமானமாகாமல், தூங்க செய்யாமல் செய்துவிடும். எனவே இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்தால், நிம்மதியான மற்றும் அமைதியான தூக்கத்தைப் பெறலாம். வேறு ஏதாவது வழிகள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றிகள்.

Sunday, 8 June 2014

அதிகத் தூக்கமும்.....!.

அதிகத் தூக்கமும் ஆபத்துதான்!

சரியாகத் தூக்கம் வரவில்லை என்றால் மட்டும்தான் 'தூக்கப் பிரச்னை’ என்று நினைப்பது தவறு. 'அதிகமாகத் தூக்கம் வந்தாலும் அது பிரச்னைதான்!’ என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இரவுத் தூக்கத்தின்போது தூக்கத்தில் மூச்சுத்திணறலினால் (Sleep apnea), மூளைக்கு சரியான அளவில் பிராணவாயு செல்லாமல் ஏற்படும் பக்கவிளைவுகள் சங்கிலித் தொடராக நீள்கின்றன.

இதனால், கோபம், தலைவலி, சக்தி இல்லாமை, மறதி போன்ற பிரச்னைகளோடு தாம்பத்ய ஈடுபாடும் குறைந்துபோகக் கூடும். இன்னும் அழுத்தமாகச் சொல்வதானால், பகலில் வாகனம் ஓட்டுகிற முக்கியமான தருணத்தில்கூட தூக்கம் வரக் கூடிய அபாயமும் உள்ளது.

இது மட்டும் அல்ல... தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்னைக்குச் சரியான சமயத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாதபோது, ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை என்று அடுத்தடுத்தப் பிரச்னைகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.


நன்றிகள்.

Thursday, 5 June 2014

கண்களின் அழகைப் பராமரிக்க.....!

நம் அழகை அதிகப்படுத்தி காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். மகிழ்ச்சியோ, துக்கமோ எதுவானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும்.

மொத்தத்தில் கண்கள் உங்கள் அழகை தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள். கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால் தான் அழகு. சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்து விடும்.

உங்கள் கண்களின் அழகை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்…

தினசரி எட்டு மணி நேரத் தூக்கம், சத்தான உணவு, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும். கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம் பால், பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சி நிறப் பழங்கள் மற்றும் காய்கள் உட்கொள்ள வேண்டும்.

போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம். உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம். ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன.


கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மணிக்கூட்டின் திசையிலும் மற்றும் மணிக்கூட்டிற்கு எதிர்த்திசையிலும் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும். கிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்து விட்டு, உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்.

கட்டை விரலை நடுவில் வைத்துக் கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும். நீண்ட நேரம் கணனி போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம்.
நன்றிகள்.

Tuesday, 3 June 2014

தொப்பையை குறைக்க வழிகள்....!

உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற சக்தியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சிதான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.


எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு குவளை நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி தேநீரை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள். இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு குவளை சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க திட்ட உணவில் In Diet இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.தொப்பையை குறைக்க வழி.
நன்றிகள்.