Wednesday, 9 December 2015

தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்..........!.


பைபிளும், குரானும் குறிப்பிடும் ஏடன் தோட்டமெனும் சொர்க்கத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர், இனவாத, மதவாத சிந்தனைகள் துளியும் தலைகாட்டாத காலத்தில், உலகிலேயே உன்னத நாகரீகத்தைக் கட்டிய இனமாக வாழ்ந்திருந்தார்கள். ஒரு வேளை, அவர்கள் தமிழர்களாக வாழ்ந்திருக்க மாட்டார்கள். தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், மலையாளிகளுக்கும் மற்றும் பல திராவிட இனங்களுக்கும் பொதுவான "தாய் இனமாக", அது இருந்திருக்கும். அவர்கள் பேசிய மொழி கூட வேறாக இருந்திருக்கலாம்."கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்க் குடி" என்று பெருமை பேசித் திரியும் தமிழினம், தன்னோடு கூடி வாழ்ந்த சகோதர மூத்த குடிகளை மறந்து போனது அவப்பேறு. தமிழர்கள் மனதில் சர்வதேசிய சிந்தனைகள் மறைந்து, அந்த இடத்தில் சுயநலப் போக்குகள் தலை காட்ட ஆரம்பித்தன. தமிழினத்தின் வீழ்ச்சி அன்றே ஆரம்பமாகி விட்டது. 

இந்திய உப கண்டத்தை சூழவுள்ள கடற்பரப்பில், கடந்த பத்தாண்டுகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகள், பல மறைந்த நாகரீகங்களை வெளிப் படுத்தியுள்ளன. குச(ஜ)ராத் கரைக்கு அருகிலும், தமிழகத்திற்கு அருகாமையிலும், கடலில் மூழ்கிய நகரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. அதே போன்று, இலங்கையின் தென் கிழக்கு கடலடியிலும் மறைந்திருந்த நகரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இந்தக் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னர், உலக வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய தேவை எழுந்துள்ளது. மனித குலத்தின் தோற்றம் பற்றிய முந்திய ஆய்வுகளை மறுத்துரைக்கும், புதிய நிரூபணங்கள் கிடைத்துள்ளன. சங்க கால தமிழ் இலக்கியங்களில், கடல் கொண்ட குமரி கண்டம் பற்றிய தகவல் வருகின்றது. அந்த தகவலை மெய்ப்பிக்கும் அளவிற்கு, நவீன கண்டுபிடிப்புகள் உள்ளன. ஆயினும், இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. மறைந்த நாகரீகமான குமரி கண்டத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரும் தமிழர்களா?

குமரி கண்டத்தின் பரப்பளவு, இன்றைய இந்திய உப கண்டத்தை விடப் பெரியது. வடக்கே, குமரி முனையையும், இலங்கைத் தீவையும் இணைத்திருந்தது. மேற்கே மடகசு(ஸ்)காருடன், கிழக்கே அவுசுத்திரேலியாவுடன் தொடுத்திருந்தது. இந்த மிகப் பெரிய கண்டத்தில், "தமிழர்கள் மட்டுமே வாழ்ந்தார்கள்" என்பது சாத்தியமல்ல. முன் தோன்றிய மூத்த குடிகளான "ஆப்பிரிக்க" இனங்களில் ஒன்றாக தமிழினம் இருந்திருக்கும். இன்றைக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான உடற்கூற்று ஒப்பீடுகளும், கலாச்சார ஒப்பீடுகளும் இதனை நிரூபிக்கின்றன. அதே நேரம், ஆப்பிரிக்க இனங்கள் மட்டுமல்லாது, மத்திய அமெரிக்காவை சேர்ந்த மாயர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், அரேபியர்கள், மேலும் பல மேற்காசியப் பழங்குடி இனங்களும் குமரி கண்டத்தில் இருந்தே பிரிந்து சென்றிருப்பார்கள். அதற்கு என்ன ஆதாரம்? கடல் பெருக்கால் அழிந்த கண்டம் பற்றிய தகவல் பண்டைய தமிழ் இலக்கியங்களில் எழுதப் பட்டுள்ளது. தமிழர்கள் தமது மொழியில் அதனை குமரி கண்டம் என்று பெயரிட்டு அழைத்தார்கள். ஒரு வேளை, தமிழர்களின் நாடு இன்றைய குமரி முனைக்கு அருகில் இருந்திருக்கலாம்.

சிங்கள செவி வழி கர்ண பரம்பரைக் கதைகளும் கடலில் மூழ்கிய கண்டம் பற்றி நினைவு கூறுகின்றன. சிங்களவர்கள் அதனை "இரிசியாவா" என்ற பெயரில் அழைக்கின்றனர். கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ "அட்லாண்டிசு(ஸ்)" என்றொரு மறைந்த கண்டம் பற்றி எழுதியுள்ளார். இதே போன்று, எகிப்தியர்கள், மாயா இந்தியர்கள், பைபிள் கதையில் வரும் நோவாவின் மக்கள், என்று பல்லின மக்கள், இழந்த கண்டத்தை வெவ்வேறு பெயர்களில் நினைவுகூருகின்றனர். அதாவது, ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற மொழிகளைப் பேசும் மக்கள், தமது பூர்வீகம் பற்றி ஒரே மாதிரியான கதையை கொண்டுள்ளனர். சுருக்கமாக சொன்னால், தமிழில் குமரி கண்டம் என்று அழைக்கப்படும், இழந்த சொர்க்கத்தில் பல்வேறு சகோதர இனங்கள் வாழ்ந்துள்ளன. "முன் தோன்றிய மூத்த குடி, தமிழர்கள் மட்டுமே" என்ற கற்பிதம், ஐரோப்பியரின் பிரித்தாளும் சூழ்ச்சியாகவே தெரிகின்றது. நாகரீகமடைந்த பண்டைய சகோதர இனங்களை பிரித்து வைத்திருப்பதால் தான், இன்றைக்கும் ஐரோப்பிய மையவாத வரலாற்றுப் புரட்டுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தமிழர்களும், சகோதர மூத்தகுடி இனங்களும் தமது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை ஐரோப்பியரிடம் பறிகொடுத்து விட்டனர். நாகரீகமடைந்த புராதன இனங்களின் அறிவியலை அபகரித்த ஐரோப்பியர்கள், அதைக் கொண்டே உலகம் முழுவதும் அடிமைப் படுத்தினார்கள்.

குமரி கண்டத்தின் ஒரு பகுதியான இலங்கைத் தீவு, ஆதிகால மனிதர்கள் வாழ்ந்த மிகவும் பழமையான நிலப்பகுதி ஆகும். உலகின் முதலாவது மனிதனான "ஆதாம்", தென்னிலங்கையில் உள்ள சிவனொளிபாத மலையில் (ஆதாமின் மலை) தோன்றியதாக ஒரு செவி வழிக் கதை நிலவுகின்றது. (ஆதாம், சிவனொளிபாதமலை என்பன பிற்காலத்தில் சூட்டப்பட்ட பெயர்கள்.) முதல் மனிதனான "ஆதாம்", மலையில் இருந்து இறங்கி வந்தவிடத்தில், பூத கணங்களும், யானைகளும் இளைப்பாறிய இடத்தைக் கண்டதாகவும், அதுவே கதிர்காமம் என்றும் அந்தக் கதையில் சொல்லப் படுகின்றது. உண்மையில், "முதல் மனிதன், சிவனொளிபாத மலை, கதிர்காமம்" என்பனவற்றின் மூலக் கதை, பழங்குடி இனமான வேடுவர்க்கு உரியது. "கல் தோன்றா, மண் தோன்றாக் காலத்தில்" இருந்தே, சமுதாய அமைப்பையும், கலாச்சாரத்தையும் மாற்றிக் கொள்ளாத மூத்தகுடியான வேடுவர்கள், இலங்கையின் பூர்வீக மக்கள் ஆவர். பல ஆயிரம் வருடங்களுக்கு பின்னர் தான், சிங்களவர், தமிழர் என்ற மொழி அடிப்படையிலான பிரிவினை தோன்றியது. சிங்களவர், தமிழர் இரண்டுமே "இன அடையாளத்தை" குறிக்கும் சொற்கள் அல்ல. வேடுவர்கள் மட்டுமல்லாது, இயக்கர், நாகர் போன்ற பழங்குடி இனங்களும், இரண்டு மொழிச் சமூகங்களிலும் கலந்துள்ளன.

அண்மைய அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளின் பிரகாரம், குமரி கண்டத்தின் ஒரு பகுதியான இலங்கைத் தீவு, தற்போதுள்ளதை விட ஏழு மடங்கு அதிகமான பரப்பளவைக் கொண்டிருந்தது. இராவணனின் அரச வம்சம், அந்த நிலப்பரப்பை ஆயிரக் கணக்கான வருடங்களாக ஆண்டு வந்துள்ளது. இராவணன் ராட்சத இனத்தை சேர்ந்தவன். அநேகமாக, அது ஒரு கருப்பினமாக இருக்கலாம். இலங்கையில் இராவணனை தொடர்பு படுத்தும் இடங்கள் பொதுவாக இராமாயண அடிப்படையிலேயே ஊகிக்கப் பட்டன. இலங்கை மீது படையெடுத்து வந்து ஆக்கிரமித்த இராமனின் ஆரியப் படைகள், இலங்கையின் நகரங்களை எரியூட்டி அழித்து விட்டன. அப்போதே இலங்காபுரியின் தொன்மையான நாகரீகம் அழிந்து போயிருக்கும். இராமாயணம் வென்றவர்களின் பார்வையிலேயே எழுதப் பட்டிருப்பதால், பல உண்மைகள் மறைக்கப் பட்டன. இன்று எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விடயம் என்னவெனில், பல முக்கியமான கண்டுபிடிப்புகள் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளன. அதாவது, தமிழரோ, சிங்களவரோ அறிந்திராத தகவல்கள், சில ஆங்கிலேய ஆய்வாளர்களுக்கு தெரிந்துள்ளது. ஆப்பிரிக்க மக்களை அறியாமை இருளில் வைத்திருந்ததைப் போன்று தான், ஆங்கிலேயர்கள் எம்மையும் நடத்தி வந்துள்ளனர்.

ஆர்தர் சி. கிளார்க் என்றொரு பிரித்தானிய எழுத்தாளர், இலங்கையில் வாழ்ந்தார். உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர். அவர் எழுதிய நாவல்கள் பல வருங்காலத்தை பற்றிய கற்பனைகளை கொண்டிருந்தாலும், அவற்றின் கரு இலங்கையில் இருந்து கிடைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இலங்கையில் குடியேறி, இறக்கும் வரையில் இலங்கைப் பிரசையாகவே வாழ்ந்திருப்பாரா? ஆர்தர் சி கிளார்க், ஒரு சாதாரண எழுத்தாளரா, அல்லது பிரித்தானிய உளவாளியா? அவர் ஆழ்கடல் சுழியோடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். திருகோணமலைக்கு அருகில், கடலின் அடியில் மறைந்திருந்த பண்டைய நகரத்தின் இடிபாடுகளை கண்டுபிடித்திருந்தார். அதைவிட பல தகவல்களை அறிந்து வைத்துக் கொண்டு பகிரங்கப் படுத்தாமல் இருந்திருக்கலாம். அவரைப் போலவே காலனிய இலங்கையில் வாழ்ந்த ஆங்கிலேய ஆய்வாளர் ஒருவர், "இராவணணின் ஆகாய விமானம்" பற்றிய தகவல்களை சேகரித்து வைத்திருந்தார். இராவணன் புஷ்பக விமானத்தில் வந்து சீதையை கவர்ந்து சென்றதாக இராமாயணம் கூறுகின்றது. விமானம் பற்றிய மேலதிக விபரங்களை அங்கே, தேடினாலும் கிடைக்காது. அதனாலேயே, "அது ஒரு கற்பனை" என்று இன்றைக்கும் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், உண்மையிலேயே இராவணின் இராச்சியத்தில், ஆகாய விமானங்களின் பயன்பாடு இருந்துள்ளது. இராவணனின் நாடு, விமானம் தயாரிக்கும் அளவிற்கு தொழில்நுட்ப அறிவு படைத்த நாகரீகமடைந்த சமுதாயமாக இருந்தது. பொறாமை கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள், அந்த உன்னத நாகரீகத்தை அழிப்பதற்காகவே போர் தொடுத்திருப்பார்கள். இராவணன் காலத்தில் கட்டப்பட்ட விமானம் பறவையைப் போன்ற வடிவில் அமைக்கப் பட்டிருந்தது. சிறிய ரக கடல் விமானம் அளவிலானது. நமது காலத்து கடல் விமானம் போன்று நீரிலும் செல்லும், ஆகாயத்திலும் பறக்கும் வல்லமை கொண்டது. இரண்டு, மூன்று விமானிகள் ஓட்டும் விமானங்கள். யுத்தத்திலும் பயன்படுத்தக் கூடியதாக அமைக்கப் பட்டிருந்தன. விமானத்தை பறப்பதற்கான எரிபொருளாக பாதரசம் (மெர்குரி) பயன்படுத்தப் பட்டுள்ளது.

பண்டைத் தமிழகத்திற்கும், சீனாவுக்கும் இடையில் இருந்த நெருக்கமான உறவு. சித்தர்கள் அறிமுகப் படுத்திய பாதரசம். இவை பற்றி எல்லாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். போகர் சித்தர் கதிர்காமம் சென்றதையும், ஆகாய விமானம் தயாரிக்கும் செய்முறையை, சீனாவில் உள்ள சீடர்களிடம் கொடுத்த விபரத்தையும் எழுதியிருந்தேன். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேய ஆய்வாளர்கள் இலங்கையில் சேகரித்த தகவல்கள் அதனை உறுதி செய்கின்றன. விமானம் தயாரிக்கும் முறை, விமானிகளுக்கான உணவு, பறத்தல் நெறி முறைகள் போன்ற பல விபரங்கள் அவர்கள் கைகளுக்கு கிடைத்துள்ளது. தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்கள் போன்ற பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்த இனங்கள், பிற்காலத்தில் அவற்றை மறந்து விட்டன. அதற்கு காரணம், ஆட்சியாளர்கள் தமது பிராந்திய நலன் கருதி மட்டுமே ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் இனவுணர்வு கொண்டவர்களாக இல்லாவிட்டாலும், மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். மத நம்பிக்கை, பகுத்தறிவை ஒடுக்கியது. நமது காலத்தில் இந்த குறுகிய சுயநலம் பேணும் சிந்தனை, இனவுணர்வு என்ற வடிவம் பெற்றுள்ளது. 

மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்த தமிழரும், சீனரும்,பிற நாகரீகமடைந்த சமூகங்களுடனான தொடர்பு அறுந்ததையிட்டு கவலை கொள்ளவில்லை. அதைத் தேடித் பார்க்கும் ஆர்வமும் இருக்கவில்லை. தமிழர்கள் சர்வதேசிய கொள்கையை கைவிட்டதால், எவ்வளவு பெரிய இழப்பை சந்தித்துள்ளனர், என்பதையிட்டு இன்றைக்கும் யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. விமானம் செய்யும் தொழில்நுட்ப அறிவு, போகர் மூலம் கிடைத்திருந்தாலும், சீனர்களும் அதில் அக்கறை காட்டவில்லை. ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு பின்னர், சீனா வரை பரவிய இஸ்லாமிய சாம்ராசசியத்தில் அந்த தொழில்நுட்பக் குறிப்புகள் படிக்கப் பட்டிருக்கலாம். ஏனெனில், நவீன கால விமானம் பற்றிய சிந்தனை, மத்திய கால துருக்கியில் இருந்து தான் ஐரோப்பா சென்றது. இசுத்(ஸ்)தான்புல் நகர மத்தியில் உள்ள ஒரு கோபுரத்தில் இருந்து, சிறகு கட்டிப் பறக்கும் பரிசோதனை செய்யப் பட்டது. அந்த முயற்சியில் அவர்களுக்கு தோல்வி கிட்டியது. இசுலாமிய துருக்கியுடன் தொடர்பு வைத்திருந்த வெனிசு(ஸ்) (இத்தாலி) நாட்டு வர்த்தகர்களுக்கு, இந்த விபரங்கள் எல்லாம் ஏற்கனவே தெரிந்திருந்தன. 

இலங்கையில், இன்றைக்கு உள்ள கொந்தளிப்பான இன முரண்பாட்டு அரசியலை காணும் ஒருவருக்கு, அந்த நாட்டின் தொன்மையான நாகரீகம் கண்ணுக்குத் தெரியப் போவதில்லை. இன முரண்பாட்டை உருவாக்கி விட்ட ஆங்கிலேயர்களின் நோக்கமும் அதுவாகத் தானிருக்கும். சிங்களவனும், தமிழனும், நீயா, நானா என்று ஆக்ரோசத்துடன் மோதிக் கொண்டிருந்த தருணத்தை பயன்படுத்தி; ஆங்கிலேயர்கள் பல அறிவியல் செல்வங்களை திருடிக் கொண்டு ஓடி விட்டார்கள். இன்று வரையில் வெளியிடப் படாத பல இரகசிய ஆவணங்கள், லண்டனில் மத்திய ஆவணக் காப்பகத்திலும், பிரித்தானிய அருங்காட்சியகத்திலும் உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றை மீட்பதற்கான முயற்சிகளை யாரும் எடுக்கவில்லை. (அந்த ஆவணங்களை வெளியார் பார்வையிடக் கூட அனுமதியில்லை.) ஆங்கிலேயர்கள் எமது அறிவியலை அடிப்படையாகக் கொண்டு தயாரித்த பொருட்களை, எமக்கே விற்று காசாக்குகிறார்கள். நாம் எவற்றை எல்லாம் அந்நியரிடம் பறிகொடுத்துள்ளோம் என்பதை அறியாதவர்களாக, பழம்பெருமை பேசுவதில் காலத்தைக் கழிக்கின்றோம்.

இன்று கூட புலமைப் பரிசில் என்ற போர்வையில் வளர்முக நாடுகள் அனைத்தும் மூன்றாவது மண்டல நாடுகளின் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியைக் கொடுத்துவிட்டு அவரவர் நாடுகளில் தங்களின் துறையில் கருத்திட்டத்தின் ஆய்வினை மேற்கொள்ளுவித்து அவற்றை தமதாக்கிக்கொண்டு அவற்றை வைத்து பலவையான தயாரிப்புக்களை தயாரித்து மூன்றாவது மண்டல நாடுகளுக்கே விற்பனை செய்வதோடு, அந்தத் தயாரிப்புக்களுக்கான காப்புரிமையையும் தங்களின் சொந்தமாக்கிக் கொள்வதால் அப்படியான ஆய்வினை மேற்கொண்ட மாணவனால் அந்தத்துறையில் முன்னேற்றமோ தங்களின் பகுதி மக்களுக்கு உதவமுடிவதில்லை. தன்னுடைய உழைப்பிற்கான எந்தவொரு பலனையும் அனுபவிக்க முடியாதென்பதே நிதர்சனமான உண்மை. இப்படியான தவறு தொடருமானால் எந்தவொரு மூன்றாவது மண்டல எந்தவொரு இனத்தாலும் எந்தவொரு சாதனையை மேற்கொள்ள முடியாதென்பதே கசப்பான உண்மையாகும்.

நன்றிகள்.