Wednesday, 31 October 2012

அரவமும் வடுகும்!


சங்ககாலத்தில் தமிழகத்தில் இருபத்துநான்கு நாடுகள் இருந்தன. அவற்றில் வட ஆர்க்காடு செங்கல்பட்டு ஆகிய பிரதேசங்கள் அடங்கியது அருவாநாடு. 

அதற்கும் வடக்கே இருந்தது அருவா வடதலை நாடு என்பது. இதற்கும் வடக்கே இருந்தவர்கள் தெலுங்கர். அவர்கள் அறிந்த தமிழர்கள் அருவர்கள் அல்லது அரவர்கள்.

ஆகவே தமிழர்களுக்குப் பொதுவாக அந்தப் பெயர் தெலுங்கில் ஏற்பட்டது. நமக்கும் வடக்கே இருந்ததனால் அவர்கள் வடுகர். அவர்கள் பேசும் மொழியை 'வடுகு' என்று தமிழர்கள் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணியருக்கு நாம் வடக்கே இருப்பதால் நாம் அவர்களுக்கு வடக்கத்தியார்.

தஞ்சாவூர்க்காரர்களுக்கு மதுரை/திருநெல்வேலிக் காரர்கள் தெங்கணத்தார் -தென்கணத்தார்கள் என்றால் தெற்கில் உள்ளவர்கள்.

மதுரைக் காரர்களுக்குத் தெருநெல்வேலிக்காரர்கள் 'தெற்கத்தியான்'கள்.

நன்றிகள்.

அனைத்து திசைகளிலும் பயணிக்கும்...........!


அனைத்து திசைகளிலும் பயணிக்கும் வினோத சாதனம் பயணத்தை இலகுவாக்குவதற்கு உருவாக்கப்பட்டுள்ள சாதனங்கள் பொதுவாக முன் நோக்கியும், பின் நோக்கியும் நகரக்கூடியவாறு அமைக்கப்படும்.

ஆனால் தற்போது எல்லாத்திசைகளிலும் நகரக்கூடியவாறான இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. தனிநபர் ஒருவர் பயணம் செய்யக்கூடிய இந்த சாதனத்தை கொயோற்டா பல்கலைக்கழகத்தை சேர்ந்த கோமோறி மசாகா(ஹா)று என்பவர் அமைத்துள்ளார்.

நன்றிகள்.

Tuesday, 30 October 2012

நவீன கட்டிடக்கலை.............!


நன்றிகள்.

சூலம்புளி (மங்குசுத்{ஸ்}தான்) பழம் ..............!


நீண்ட கால இடைவெளி  அங்கு அடிப்பட்டு இப்போ புதுசான பழம்தான் இந்த மங்குசுத்(ஸ்)தான்(தீன்) பழம். மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர். 

இந்த பழமானது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். 

இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். இதன் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும். சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு.

இதன் மருத்துவ குணங்கள் சில

இதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும்(Infection), காளான்களையும்(Fungus) அழிக்க பயன்படுத்தினர். அதே போல் காயங்கள், நாட்பட்ட புண்கள், காய்சல், இரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவற்றிக்கு குணமாக்க பயன்படுத்தி வந்தனர்.

சமீபத்தில் வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தி, வயதாவதை நிதானப்படுத்தவும், தோல்களின் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா & வைரசுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது.

சீதபேதி இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு சூலம்புளி பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும். உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும்.

வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. கண் எரிச்சலைப் போக்க கணனியில் வேலை செய்பவருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும். இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

மூலநோயை குணப்படுத்த. நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது. அதோடு சூலம்புளி பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க சூலம்புளி பழம் உதவுகிறது. கிடைக்கும் காலங்களில் சூலம்புளி பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது சூலம்புளி பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சூலம்புளி தேநீர் செய்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும். 

சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற சூலம்புளி பழம் சிறந்த மருந்தாகும். அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும்,மாதவிடாய்  வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும், நாவறட்சியை தணிக்கும். 

சூலம்புளி பழத்தில்

நீர் (ஈரப்பதம்) - 83.9 கிராம்
கொழுப்பு - 0.1 கிராம்
புரதம் - 0.4 கிராம்
மாவுப் பொருள் - 14.8 கிராம்
பாஸ்பரஸ் - 15 மி.கி.
இரும்புச் சத்து - 0.2 மி.கி

சூலம்புளி தேநீர் : இதன் தோல் பாகத்தை இயற்கையான முறையில் காயவைத்து செய்யப்படுவதுதான் இந்த சூலம்புளி தேநீர். இந்த தேநீர் குடிப்பதனால் 35-40 வயதுக்கு மேல் முகத்தில் விழும் சுருக்கம் தடுக்கப்படும்.

நன்றிகள்.

Monday, 29 October 2012

உந்துகணை விமானம்.......!

விண்வெளிப் பயணங்கள் மனிதனுக்குச் சாத்தியமாகிவிட்ட போதிலும், அதற்கான செலவென்பது மிகமிக அதிகமானதாகவே காணப்படுகின்றது.

அதிகளவில் பணத்தைச் செலவிடவல்ல அரசாங்கங்களாலேயே, விண்ணோடங்களை விண்ணுக்கு அனுப்பும் செயற்பாடுகளை செய்ய முடிகின்றது.

இருப்பினும், குறைந்த செலவில் விண்ணோடங்களைத் தயாரிப்பதற்கும் குறைந்த செலவிலே விண்வெளிப் பயணங்களை மேற்கொள்வதற்குமான ஆராய்ச்சிகளை மனிதன் செய்யாமலில்லை.

இதற்கமைவாக, 2004 ஆம் ஆண்டில், குறைந்த செலவில் விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளவல்ல விண்வெளி கப்பல் ஒன்று (Space Ship One) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

விமானம் போன்று தரையிலிருந்து மேலெழவல்ல இந்த விண்விமானம், விண்வெளியில் பயணிக்கவல்ல உந்துகணை (rocket) ஒன்றை புவியிலிருந்து 46000 தொடக்கம் 48000 அடிகள் உயரம் வரை காவிச்சென்று பின் உந்துகணை விண்விமானத்திலிருந்து விடுவிக்கப்பட்டு விண்வெளிவினுர்டான மீதிப் பயணத்தைத் தொடரும்.

தொடர்ந்து அந்த உந்துகணை பயணித்து, மீண்டும் பூமிக்குத் திரும்பும்போது பூமியின் வளிமண்டலத்தினுட் பிரவேசித்து ஒரு மிதவைவானூர்தி (glider) போன்று பயணித்து புவியை அடையும்.

இவ்வாறில்லாது, உந்துகணை ஒன்று விமானம்போன்று தரையிலிருந்து மேலெழுந்து விண்வெளிக்குச் சென்று பின் திரும்பவும் விமானம் ஒன்றைப்போன்று தரையிறங்கவல்லதாக இருக்கவேண்டும் என்ற இலக்கை நோக்காகக் கொண்டு XCOR விண்வெளி என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதே இந்த EZ உந்துகணை (EZ Rocket) ஆகும்.

இந்த EZ உந்துகணையானது இன்னமும் பரிசேதனை நிலையிலேயே காணப்படுகின்றது.

2001 இல் முதலாவது பறப்பை மேற்கொண்ட இந்த EZ உந்துகணையானது. Rutan's விமானத்  தொழிற்சாலை இனால் தயாரிக்கப்பட்ட canard விமானம் என்றழைக்கப்படும் விமானத்தை மீள்வடிவமைப்புச்செய்யப்பட்டே உருவாக்கப்பட்டது.

இந்த மீள்வடிவமைப்புச் செய்யப்பட்ட விமானத்தில் உந்துகணை ஒன்றின் செயற்பாட்டுக்குரிய பின்வரும் அமைப்புக்கள் காணப்படுகின்றன.

விமானத்தின் பின்பகுதியில், சுழலி இயந்திரத்திற்கு மாற்றீடாக திரவ எரிபொருளில் இயங்கும் இரண்டு உந்துகணை இயந்திரங்கள் (Rocket engines) அழுத்தப்பட்ட திரவ எரிபொருளை (isopropyl alcohol) நிரப்பவல்ல எரிபொருட் தாங்கி.

திரவ ஒட்சிசனுடன் கூடிய இரண்டு தாங்கிகள். இந்த EZ உந்துகணையின் ஒவ்வொரு உந்துகணை இயந்திரமும் துலுர் 400 பவுண்ட்ஸ் உந்துவிசையினை (thrust) உற்பத்தி செய்யவல்லன.

இந்த இயந்திரங்களின் சுவர்ப்பகுதிகளினூடாக குளிர் நிலையிலுள்ள திரவ எரிபொருள் பாய்ச்சப்படுவதன் மூலம் இயந்திரத்தின் சுவர்ப்பகுதிகள் குளிர்விக்கப்படுவதுடன் அவை உருகாது தடுக்கப்படுகின்றன.

இந்த EZ உந்துகணையானது 3.5 நிமிடங்கள் பறப்பதற்குத் தேவையான எரிபொருளை மாத்திரமே காவிச்செல்லவல்லது.

தொடர்ந்து இந்த உந்துகணையின் தொழிற்பாடு பற்றிப் பார்ப்போம்.

விமானி இயந்திர இயக்கத்தை ஆரம்பித்ததும் உயர் அழுத்தத்திலுள்ள மதுசார (alcohol) எரிபொருள் இயந்திரத்தினுட் செலுத்தப்பட, திரவ ஒட்சிசன் ஆனது பம்பி (pump) ஒன்றின்மூலம் இயந்திரத்தினுட் செலுத்தப்படும்.

தொடர்ந்து மின்எரிபற்றி (electrical igniter) ஒன்றின் மூலமாக எரிபொருள் எரியூட்டப்பட்டு இயந்திரத்தின் செயற்பாடு தொடக்கி வைக்கப்படும்.

இயந்திரங்கள் இரண்டினூடாகவும் 800 பவுண்ட்ஸ் உந்துவிசை உருவாக்கப்படும். இவ்விசையின் காரணமாக இந்த EZ உந்துகணைகானது 20 செக்கன்களில் 1650 மீற்றர் தூரம் ஓடுபாதையில் ஓடி தரையிலிருந்து மேலெழும்.

இந்த EZ உந்துகணையானது சாதாரண விமானங்கள் போன்று மேலெழவோ அல்லது பறக்கவோ வல்லதாகக் காணப்பட்ட போதிலும், பின்வரும் வேக  விடையங்களில் சாதாரண விமானங்களிலிருந்து மாறுபட்டும் காணப்படுகின்றது.

இவ்விமானம் 2 நிமிடங்களில் 195 நொட்ஸ் வேகத்தை எட்டவல்லதாகக் காணப்படுகின்றது. (மிகையொலி வேகத்தாரை விமானங்கள் தவிர்ந்த சாதாரண விமானங்களால் இந்த வேகத்தை எட்ட முடியாது). ஒரு நிமிடத்தில் 10000 அடி உயரத்தை எட்டவல்லது.

ஆகக்கூடியது 10000 அடிகள் உயரம்வரை பறக்கவல்லது. பறந்துகொண்டிருக்கும் போது விமானி உந்துகணை இயந்திரத்தை நிறுத்தவோ மீண்டும் மறுபடி இயக்கவோ முடியும்.

எரிபொருள் தீர்ந்தபின்னர் இந்த விமானத்தால் மிதவை வானூர்தி போன்று தரையிறங்க முடியும்.

பல சோதனைப் பறப்புக்களை மேற்கொண்டுவிட்ட இந்த EZ உந்துகணை விமானத்தின் சோதனை மற்றும் மேம்படுத்தற் பணிகள் தொடர்ந்தவண்ணமேயுள்ளன.

இந்தப் பரிசோதனை முயற்சிகளின் இறுதி வெற்றியானது விண்வெளிப் பயண வரலாற்றின் அடுத்த படிக்கல்லாக இருக்கும் என்பதில் எவ்வித அய்யப்பாடுமில்லை.


நன்றிகள்.Saturday, 27 October 2012

இனி அரிசி சாத(க)ம் ...................!

சர்க்கரை நோயாளிகளுக்கு இனி அரிசி சாத(க)ம்!.

சர்க்கரை நோய் உள்ள 6 கோடி இந்தியர்கள் இனி தயங்காமல் அரிசி சாதம் சாப்பிடலாம். சர்க்கரை நோய், உடல் பருமன், அதிகப்படியான கொழுப்பு இப்படி எந்தப் பிரச்சினை வந்தாலும் முதலில் நாம் தவிர்க்க நினைக்கும் உணவு அரிசி.

ஆனால் ஒட்டுமொத்தமாக அரிசியை வில்லனாகப் பார்க்க வேண்டிய அவசியம் இனி நமக்கு இல்லை. ஏனென்றால் இந்தியாவில் விளையும் அரிசி, சர்க்கரை நோய்க்குப் பாதகமானது அல்ல என்று சர்வதேச ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் உள்ள 6 கோடி இந்தியர்கள் இனி தயங்காமல் அரிசி சாதம் சாப்பிடலாம்.

200க்கும் அதிகமான நெல் வகைகள் உலகம் முழுவதும் பயிரிடப்படுகின்றன. 

இதில் இந்தியாவில் விளையும் நெல் வகைகளிலிருந்து பெறப்படும் அரிசி உடல் பிரச்சினைகளுக்கு எதிரி இல்லை என்று சமீபத்தில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (International Rice Research Institute - IRRI ), ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செய்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

சாப்பிட்டவுடன் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் கிளைசீமிக் குறியீடு (Glycemic index - GI) இந்தியாவில் விளையும் அரிசியில் குறைவாகவே உள்ளது.

இந்த GI குறியீட்டை 3 பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள்.

55 அல்லது அதற்கும் குறைவான அளவில் உள்ளது முதல் வகை.

56லிருந்து 69 வரை உள்ளவை 2வது வகை.

கிளைசீமிக் அதிகமாக உள்ள 3 வது வகை 70க்கும் அதிகமாக GI குறியீடு உள்ளவை.

சுவர்ணா, சம்பாவில் மேம்படுத்திய மக்(ஹ்)சூரி போன்ற நாம் பயன்படுத்தும் பெரும்பாலான அரிசி வகைகளின் GI குறியீடு 55க்கும் குறைவாகவே உள்ளது.

அதேபோல பாசுமதி அரிசி 2வது பிரிவில் (gi 60) வருகிறது. அதுசரி, நாம் சாப்பிடும் உணவு உடல் பிரச்சினையை உண்டாக்குமா என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்?

உணவு சாப்பிட்டவுடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எவ்வளவு வேகத்தில் அதிகரிக்கிறது என்பதைப் பொறுத்து குறிப்பிட்ட உணவில் உள்ள கிளைசீமிக் அளவு (glycemic index GI கணக்கிடப்படுகிறது. உணவுப் பொருளில் உள்ள சர்க்கரைத் தன்மை கிளைசீமிக்.

குறிப்பிட்ட உணவை சாப்பிட்டவுடன் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரித்தால் அதில் GI அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம். ரத்த சர்க்கரையின் அளவு மிக மெதுவாக ஏறினால் அந்த உணவில் குறைந்த அளவு கிளைசீமிக் உள்ளது.

கிளைசீமிக் அளவு 55 அல்லது அதற்கு குறைவாக உள்ள உணவுகளே நல்லது. GI 55 அல்லது அதற்கு குறைவாக உள்ள உணவுகள் பெரும்பாலான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பருப்புகள், அவரை வகைகள் அனைத்தும்.

இந்த ஆய்வு குறித்து கோவை கே.ஜி.மருத்துவமனை மூத்த டயட்டீஷியன் சுபத்ரா சுந்தர் கூறும்போது, “இந்திய அரிசியில் கிளைசீமிக் குறியீடு குறைவாக உள்ளது என்பது நல்ல விசயம். குறைவாக உள்ளது என்பதற்காக 3 வேளையும் அரிசியையே சாப்பிடுவது கூடாது.

அவரவர்களின் உடல் உழைப்பைப் பொறுத்து தினமும் 1800லிருந்து 2400 கலோரி தேவை. 100 கிராம் அரிசி சாதத்தில் 360 கலோரி உள்ளது. ஒரு வேளை மட்டும் குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் 100 கிராம் சாதம் சாப்பிட்டால் போதும்.

நிறைய காய்கறிகள், கீரை, பழங்கள் என்று உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கைக்குத்தல் அரிசியில் (பிரவுன் ரைஸ்) வைட்டமின்கள் அதிகம் என்பதால் அதையும் அவ்வப்போது சாப்பிடலாம்.

திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, கேரட் போன்றவற்றில் GI மிகக் குறைவு. எனவே இவற்றை நிறைய எடுத்துக் கொள்ளலாம். அதேபோல கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள்.

கிளைசீமிக் அளவு குறைவாக உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் பருமன், ரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள் போன்ற பொதுவான உடல் பிரச்சினைகள் வராது.

உடற்பருமன் உள்ளவர்கள், கிளைசீமிக் குறைவாக உள்ள உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அதிகப்படியான உடல் எடை குறையும்.”

நன்றிகள்.

Friday, 26 October 2012

காற்று பதனாக்கி பொருத்திய ஆடைகள்...!


காற்று பதனாக்கி (Air Conditioner) பொருத்தப்பட்ட ஆடைகள் அணிய ஆசையா.? புவி வெப்பமடைதல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு இன்றி தவித்துக்கொண்டிருக்கிறது மனித இனம்.

இந்த புவி வெப்படைதலின் விளைவாக உலகம் பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடும் என்பது விஞ்ஞானிகளின் ஒரு பக்க எச்சரிக்கையாக இருக்கிறது.

எது எப்படியோ உலகம் இருக்கும் வரை சவால்களுக்கு முகம் கொடுத்து மனித இனம் வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்கின்ற கட்டாயப்பாட்டுடன் இயற்கையின் எதிர்ப்புக்களுக்கு தற்காலிக தீர்வு கண்டு மனித இனம் தப்பி பிழைத்துக்கொண்டிருக்கிறது.

இன்றைய உலகம் நவீனமயப்படுத்தப்பட்டது. மின்சாரம் இல்லாமல் ஒரு நாள் கூட எம்மால் நிம்மதியாக வாழமுடியுமா?

நமக்கு இந்த பிரச்சினை ஆனால் மேலைத்தேய நாடுகளில் காற்று பதனாக்கி பிரச்சினை. காற்று பதனாக்கி இல்லாமல் அவர்களுக்கு வாழப்பிடிக்காது. 

தாம் வசிக்கும் வீடு.. வேலைபார்க்கும் அலுவலகம்- பயணிக்கும் வாகனம் என போகும் இடம் எல்லாம்காற்று பதனாக்கி தான். இது இப்படி இருக்க இயற்கையின் வரவை யாரால் தடுக்க முடியும்.

என்னதான் காற்று பதனாக்கியில் வாழ்ந்தாலும் உடல் என்பது வியர்க்கத்தானே செய்யும். ஆடைகளை கழைந்ததும் சிறிய வியர்வை வாடை அடிக்கத்தானே செய்கிறது இதுக்கெல்லாம் என்ன செய்வது?

சரி காற்று பதனாக்கி பொருத்தப்பட்ட ஆடைகள் அணிந்தால் இதற்கு கொஞ்சம் தீர்வாக அமையும் அல்லவா?

என்ன ஆடைக்குள் காற்று பதனாக்கியா என நீங்கள் நினைக்கலாம். இப்படி நீங்கள் நினைத்தால் நாங்கெல்லாம் எவளவோ பண்ணிட்டம் இதைச் சீர்செய்ய மாட்டார்களா என ஏளனமாக சிரிப்பார்கள் விஞ்ஞானிகள்.

இப்போது கேட்டால் காற்று பதனாக்கி பொருத்தப்பட்ட ஆடையையே கையில் தந்துவிடுவார்கள். ஆமாம் கடந்த ஆண்டு இவ்வாறு கண்டுபிடிக்கப்படும் என அறிவித்திருந்தார்கள் கண்டுபிடிப்பாளர்கள்.

இன்று வெற்றியும் கண்டுவிட்டார்கள்.மேற்சட்டை,கால்முளுவதும் பாவிக்கும் காற்சட்டை (சேட்- ரவுசர்) என அணியும் ஆடைகள் எல்லாம் காற்று பதனாக்கி பொருத்தப்பட்டு விற்பனை ஆகிறது.

இதன் முதற்கட்டம்தான் மின்விசிறி பொருத்தப்பட்ட தலைக்கவசம் தற்போது காற்று பதனாக்கி பொருந்தப்பட்ட ஆடைகள்.

என்ன கேட்கவே குளிர்ச்சியாக இருக்கிறதல்லவா? ஆம் இதன் அடுத்த கட்டமாக பெண்கள் அணியும் மேற்சட்டைகளிலும் காற்று பதனாக்கி பொருத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
  நன்றிகள்.


தமிழுக்கு அமிழ்தென்று பெயர்......!
தமிழுக்கு அமிழ்தென்று பெயர்......!
அமிழ்துக்கு அமிழ்தென்றுதான் நிலைப் பெயர்.
தமிழுக்கும் அமிழ்தென்று பேர் என உவமையோடு தமிழை அமிழ்தாக்கி அதன் சுவையை உணர்வோடு ஊடுருவ விட்டார் பாவேந்தர் பாரதிதாசன். 

தமிழின் சிறப்பை நாம் அம்மொழியின் வழித்தோன்றலாக வந்ததனால் மட்டும் பெருமையோடு கூறவில்லை; அந்நியர்களாகிய அயிரோப்பியர்களும் ஆங்கிலேயர்களும் நம்மை அடிமை கொள்ள வந்த போது தமிழ் மொழியின் வளத்தையும், பொலிவையும் கண்ணுற்று வியந்து போற்றியுள்ளனர்.

தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களே அதன் சிறப்பை உணரச் செய்து, வட மொழித் துணையுடன் வளர்ந்தமொழி தமிழ் என்னும் தாழ்வு மனப்பான்மையை நீக்கவும் வழிகோலிய பெருமை, மேலை நாட்டு நல்லறிஞர்களையே சாரும்.

உலகோர் கருத்தினிலும் தமிழ் மொழியின் மேன்மையை இடம் பெற வைத்தனர்.

அவர்கள் சமயத்தைப் பரப்பத் தமிழகத்திற்கு வந்தவர்களாயிருப்பினும், தமிழ் மொழியின் இனிமை, மாட்சி, சிறப்பு, தொன்மை, எளிமை ஆகியவற்றைக் கற்றுணர்ந்து தங்கள் வாழ்நாளைத் தமிழுக்குத் தொண்டாற்றுவதிலேயே கழித்தனர்.

தமிழ் இலக்கியங்களில் கண்ட இயற்கை நலம், அறிவு விளக்கம், அன்பு வளர்க்கும் பண்பு ஆகியவற்றை கற்றுத் தெளிந்தனர்.

தமிழ்மொழியை முதன்முதலாக அச்சில் ஏற்றிப் பல நூல்களையும், சிற்றிதழ்களையும் வெளியிட்டனர். உரைநடையில் சொற்களைப் பிளந்து எழுத வழிகாட்டினர்.

மேல்நாட்டு மொழிகளுக்கொப்பத் தமிழ் அகராதியையும் இயற்றினர். அவர்கள் வரவு தமிழ்மொழிக்கே ஒரு மறுமலர்ச்சிக் காலம் எனக் கூறலாம். 

அவர்களுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் கடமைப்பட்டதாகும்.

சீகன் பால்கு 16831705 இல் கிறித்துவ சமயத் தொண்டாற்ற வந்தவர். தமிழ் மொழியின் இனிமை, தொன்மை, மேன்மை, எளிமை ஆகிய இயல்புகளிலும், தமிழ் இலக்கியம் கண்ட இயற்கைத் தன்மை, அறிவார்ந்த கூர்மை, அன்பு வளர்க்கும் மாண்பு, அறநெறியின் உயிரோட்டம் ஆகியவற்றால் கவரப்பட்டுத் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்வதிலேயே தம் காலத்தின் பெரும் பகுதியைக் கழித்தார்.

தமிழ் மொழியில் சமயம், மருத்துவம், வரலாறு முதலானவற்றில் உள்ள நாற்பதாயிரம் சொற்களைத் தொகுத்து ஒரு மொழி அகராதியை உருவாக்கினார்.

அவர் தொகுத்த செய்யுள் (சொல் பொருள் நூல் ) அகராதியில் பதினேழாயிரம் இலக்கிய வழக்குச் சொற்களும், மரபுத் தொடர்களும் இடம் பெற்றன. நீதிவெண்பா, கொன்றை வேந்தன், உலகநீதி ஆகிய செய்யுள்களை செருமானிய மொழியில்பெயர்த்துள்ளார்.

ஆசியாக் கண்டம் முழுதும் சுற்றிப் புகழோடு பிரிட்டன் நாட்டிற்குச் சென்றபோது, ஜார்ஜ் மன்னர் தலைமையில், நாட்டின் உயர் மதத் தலைவரான கான்டர்பரி ஆர்ச் பிஃஷப் இலத்தின் மொழியில் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அதற்கு சீகன்பால்கு என்னுடைய மறு மொழியை நான் ஒரு மொழியில் பேசப் பேகிறேன் அது இறைவனால் மனிதருக்கு அளிக்கப்பட்ட ஒப்பற்ற செல்வத்துள் முதன்மையானது. அதுவே தமிழ் மொழி எனக் கூறி தமிழின் பெருமையை அவர்கள் உணருமாறு செய்தார்.

கிரன்ட்லர் பாதிரியார் இவர்செருமனி நாட்டைச் சேர்ந்தவர். அக்காலத்தில் தமிழகத்தில் வழங்கிய மருத்தவ முறையின் தனிச்சிறப்பைப் பற்றி விளக்கும் ஒரு நூலை செருமானிய மொழியில் இயற்றினார். செருமானியப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கத்தக்க சிறப்பு வாய்ந்த மொழி தமிழ் எனவும் கூறினார்.

இதனால் தமிழரின் அறிவுத் திறன் மேல் நாட்டவரால் ஏற்கப்பட்டது.

மேலும் அந்நாட்டைச் சேர்ந்த சார்ல் கிரவுல் என்பவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் தமிழிலே உள்ள கைவல்ய நவநீதம், சிவஞான சித்தியார் போன்ற சில தத்துவ நூல்களைச் செருமானியிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். திருக்குறளையும் இலத்தின், செருமன் ஆகிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்தார்.

ராபர்ட டி நோபிலி இத்தாலி நாட்டைச் சேர்ந்த ராபர்ட் டி நோபிலி என்னும் பாதிரியார் சமயத்தைப் பரப்பத் தமிழகம் வந்து தமிழையும், வடமொழியையும் கற்றுக் கிறித்தவ சமய விளக்கம் செய்யும் உரைநடை நூல்கள் பலவற்றை இயற்றியும் போர்த்துக்கீசிய அகராதி ஒன்றைத் தொகுத்தும் உள்ளார்.

தத்துவ போதகர் என்னும் பெயருடன் தம்மை இத்தாலிய நாட்டு அந்தணர் எனக் கூறிக் கொண்டார். அதை மக்களிடம் காட்டிக் கொள்ள தலையிலே குடுமி, கையிலே கமண்டலம், காலிலே பாதக்குறடு, காது குத்திக் கொண்டு, நெற்றியில் சந்தனப் பொட்டு இட்டு தமிழகத் துறவியைப் போன்று ஒப்பனை செய்து கொண்டு தம்மை ஐயர் என்னும் நிலையைக் கொண்டிருந்தார். 

சமசுகிருதச் சொற்கள் கலவாத தொன்மை இலக்கியங்கள் இருந்தனவென்றும், வடமொழியின் துணையின்றித் தமிழ் இயங்க முடியும் என்பதையும் ஆய்ந்தளித்தார்.

வீரமாமுனிவர் இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டான்டைன் ஜோசப் பெசுகி 1711ம் ஆண்டு தமிழகத்துக்குச் சமயத் தொண்டு புரிய வந்தார். அவர் தமிழுடன் அந்த இனமொழிகளான தெலுங்கும் கன்னடமும் பயின்றதோடு வடமொழியும் கற்றுத் தேர்ந்தார்.

பின் வீரமாமுனிவர் என்னும் பெயர் கொண்டு தமிழிலே தேம்பாவணி என்னும் காவியத்தைப் படைத்தார். வடசொல் விரவிய மணிப் பிரவாள நடையை அறவே விலக்கித் தனித்தமிழ் உரைநடையைக் கொண்டு வந்தார். 

எனவே தமிழ் உரைநடையின் தந்தை என இவர் அழைக்கப்பட்டார். 

தொன்னூல் இலக்கணம் இயற்றி அதில் எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி ஆகிய ஐந்து கூறுகளையும் விளக்கியுள்ளார். சதுரகராதியையும் இயற்றியுள்ளார். தமிழ்எழுத்துச் சீர்திருத்தம் செய்துள்ளார். திருக்குறள் அறத்துப்பாலையும் பொருள்பாலையும் இலத்தினில் மொழியாக்கம் செய்தார்.

டாக்டர் வின்சுலோ கி.பி.பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையே தமிழகம் வந்த அமெரிக்க நாட்டு மொழியறிஞர். அவர் தமிழ் மொழியைக் கற்று அதன் சிறப்பை உணர்ந்து தமிழின் வேர்ச் சொற்களைக் கண்டு, அவற்றின் தனி இயல்பை ஆராய்ந்து காட்டி, தமிழ் ஒரு மூல மொழியாக ஒரு தனிப்பிரிவாகக் கொள்ளப்படவேண்டும் எனவும் வேற்று மொழியின் துணை இன்றித் தனித்து இயங்கும் ஆற்றலுடைய தமிழின் சிறப்பு வியப்பளிப்பதாகவும், சங்க இலக்கியம் தமிழுக்குப் பெருமையளிப்பவையாகும் எனவும், தமிழ் செய்யுள் வடிவிலும், நடையிலும் கிரேக்க மொழிச் செய்யுளைக் காட்டிலும் தெளிவுடையதாகவும், திட்ப, நுட்பமுடையது, கருத்தாழமுடையது எனவும், தமிழ் மொழி நூல் மரபிலும், பேச்சு வழக்கிலும் இலத்தின் மொழியைக் காட்டிலும் மிகுந்த சொல் வளம் கொண்டது எனவும் கூறிச் சிறப்பித்துள்ளார்.  

டாக்டர் கால்டுவெல் இவர் கி.பி. 1838 ல் சமயத் தொண்டு புரியத் தமிழகம் வந்து சேர்ந்தார். இவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். திராவிட மொழிகளாகிய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் ஓர் ஒப்பற்ற நூலை இயற்றியுள்ளார். வடமொழியின் துணையின்றித் தமிழ் மொழி இயங்காது என்னும் தவறான கொள்கையை உதறி எறியவும், எம்மொழியின் துணையுமின்றித் தனித் தியங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்னும் உண்மையை உலகுக்கு அறியச் செய்தவர் டாக்டர் கால்டுவெல் ஆவார். 

இவர் நிகழ்த்திய ஆய்வு நூலே வடமொழி ஆதிக்கத்தால் கேடடைந்த தமிழையும், தமிழறிஞர்களின் எண்ணங்களையும் மாற்றுவதற்குப் பெரிதும் அடிப்படையாகப் பயன்பட்ட நூலாகும்.

தமிழ்மொழி எம்மொழிக்கும் தாழ்ந்து வளையாது தலைநிமிர்ந்து நின்று, தனது தனித்தன்மை காத்து, தன்னை அழிக்க வந்த வடமொழியையும் வலுவிழக்கச் செய்து வாழ்ந்து வளர்கிறது என்னும் பேருண்மையை உலகுக்கு எடுத்துக் காட்டியவர் கால்டுவெல் ஆவார். தமிழ்நாட்டின் தென்பகுதியில் நெடுங்காலம் தங்கியிருந்து சமயத் தொண்டு புரிந்தார். 

இங்கு வாழும் மக்களைப் பற்றித் தமிழ் உரைநடையில் “ஞானக்கோயில்’, “நற்குணத்தியான மாலை’ போன்ற நூல்களை இயற்றினார். ஜியுபோப் இவர் வடஅமெரிக்காவில் உள்ள நோவாஸ் கோஷியா மாநிலத்தைச் சேர்ந்தவர். 


சமயப் பணிக்காக 1839 ம் ஆண்டு தமிழகம் வந்தார். இவர் சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் சமய நூல்கள், நீதி நூல்கள் ஆகியவற்றைப் பயின்றார். சைவ சித்தாந்த நெறி, திராவிட அறிவின் தேர்ந்த தெளிந்த நிலையின் பயன் எனப் பாராட்டியுள்ளார்.  

யாவும் ஆசிரியர்களின் அறிவின் பயன் என்று கருதிக் கிடந்த நாள்களில் அவை தமிழரின் அறிவிலே முகிழ்ந்தவை எனத் தெரிவிக்கப்பட்ட அக்கருத்து தமிழின் பெருமையை நிலை நிறுத்தத் துணையாயிற்று. 

சமசுகிருதத்திற்கு அப்பாற்பட்டுத் தனித்துத் தோன்றியது மட்டுமின்றி அதன் ஆதிக்கத்தை எதிர்த்துத் தனித்து நிற்பதுடன் பரந்து விரிந்த தன்மையும் உள்ளங்கவரும் திறமும் கொண்டது தமிழ் இலக்கியம் எனக் கூறியுள்ளார். 

இவர் தமது கல்லறையின் மீது இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் என்று செதுக்கி வையுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

கமில்ஸ் சுலபில் இவர் செக்கோசுலோவாகிய நாட்டைச் சேர்ந்த தமிழாய்ந்த அறிஞர். உலகில் எந்த மொழியின் வரி வடிவத்திலும் காணப்படாத தனிச் சிறப்புகளைத் தமிழ் வரிவடிவத்தில் காணலாம்.

ஆங்கிலத்தில் அத்தகைய அழகு கிடையாது. தமிழில் ஓர் எழுத்தினை உச்சரிக்கும்போது எழுதுகின்றஓசை நயத்திற்கேற்ப அதன் வரிவடிவமும் அமைந்திருக்கும் எனக் கூறியுள்ளார்.

இன்னும் மாச்சுமுல்லர், பெர்சிவல் பாதிரியார், டாய்லர் போன்ற மேனாட்டறிஞர்களும் கற்றுத் தேர்ந்து தமிழைப் போற்றியுள்ளனர். எனவே ஐரோப்பியர் ஆதிக்கத்தை தமிழகம் பெற்றாலும் அதற்கு முன்னர் நடந்த மொழியழிப்பு ஒழிந்து உள்ள நிலையிலிருந்து தமிழை ஓங்கி வளரச் செய்தனர்.

அவர்கள் வணிகத்தின் பொருட்டோ, தமது சமய வளர்ச்சி நோக்கத்தோடோ, மண்ணாசை எண்ணம் கொண்டோ வந்திருந்தாலும், அவர்களால் தமிழுக்கு விளைந்த நன்மை மிகுதி. வாழ்க அவர்கள் தொண்டு. ஐரோப்பியர்கள் வராதிருந்தால் தமிழகம் எப்படி இருக்கும்? ஒரு கணம் நினைப்போம்.

நம் மொழியும் பண்பாடும் எங்கோ அழிந்து நாம் எப்படியெப்படியோ செப்பிடு வித்தைகளால் சீரழிந்திருப்போம்.

நம் பெருமையைக் காக்க மொழி வளத்தைப் புதுப்பிக்க வந்தனன் அயலான் வாழியவே தமிழ். (தமிழ்மொழி வளர்ச்சிக்காக பாடுபட்ட மேலைநாட்டு அறிஞர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். இது பற்றி “தமிழ் இலெமுரியா’ மாத இதழில் (2010, மார்ச் 15 ஏப்ரல் 14) தமிழ் மொழி காத்த ஐரோப்பியர்கள் என்ற தலைப்பில் மணவை வே.வரதராசன் எழுதி வெளியாகியுள்ள கட்டுரையை இங்கே நன்றியுடன் அறியத் தருகிறோம்).

நன்றிகள்.

Thursday, 25 October 2012


பசும்பாலிலுள்ள சிறந்த பகுதி உயிர்கொல்லி நோய்க்கு (Aids) மருந்து என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு பசும்பாலிலுள்ள சிறந்த பகுதி உயிர்கொல்லி நோயை கட்டுப்படுத்துகிறது என அவுசுத்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பசும்பாலின் மருத்துவ குணம் தொடர்பாக அவுசுத்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மரிட் க்ரம்சுகி தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்காக கர்ப்பமாக இருந்த பசுவின் உடலில் ஏச்ஐவி (HIV) புரதம் அடங்கிய மருந்து செலுத்தப்பட்டு ஆய்வு நடைபெற்றது. பசு கன்று ஈன்ற பிறகு சுரக்கும் கொலசு(ஸ்)ட்ரம் என்ற பாலில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. 

இது கன்றுகளை நோய்தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. பசும்பாலில் உள்ள சிறந்த பகுதி உயிர்கொல்லி நோய்க்கு வைரசை தாக்கி அழிக்கும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உள்ளதும் இவற்றால் நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதும் உறுதியாகி உள்ளது என்று ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தொடர் ஆய்வு நடந்து வருகிறது.உயிர்கொல்லி நோய் தாக்குதல் எந்த நிலையில் இருந்தால் பாலிலுள்ள சிறந்த பகுதி கட்டுப்படுத்துகிறது.

எவ்வளவு பசும்பாலிலுள்ள சிறந்த பகுதி தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு முடிவில் தெரியவரும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

நன்றிகள்.

Tuesday, 23 October 2012

விமானத்துக்கு யாழ்ப்பாணம்.....!

மறைந்துபோன பல வரலாறுகளை நாம் திரும்பிப் பார்க்கும் காலகட்டத்தில் இருக்கிறோம். 2ம் உலகப் போர் நடைபெற்றவேளை, மலேசியாவில் வசித்த ஈழத் தமிழர்கள் பிரித்தானிய அரசுக்கு சாதகமாக செயற்பட விரும்பியுள்ளனர்.

இதனை அடுத்து அவர்கள் பணத்தை சேகரித்து, ஒரு போர் விமானத்தை வாங்கி அதனை பிரித்தானிய படைக்கு கொடுத்துள்ளார்கள்.

ஆனால் அந்த விமானத்துக்கு யாழ்ப்பாணம் என்று பெயர்வைக்கவேண்டும் என்றும் அவர்கள் அன்றைய தினம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1915ம் ஆண்டுமார்கழி மாதம் 22ம் திகதி, இந்த விமானத்தை பிரித்தானிய படையிடம் கையளித்துள்ளனர் ஈழத் தமிழர்கள்.

சுமார் 97 ஆண்டுகளுக்கு முன்னர் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கான ஆவணங்களும், புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது. 

பிரித்தானியர்களுக்கு தெரியாதா, மற்றும் அவர்கள் மறந்துபோன விடையங்கள் கூட தற்போது வெளியாகி தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது.

சுமார் 97 வருடங்களுக்கு முன்னர், யேர்மன் நாட்டுடன் பிரித்தானியா போரில் ஈடுபட்டவேளை, ஈழத் தமிழர்கள் பிரித்தானியாவுக்கு உதவியுள்ளார்கள் என்பது ஆதாரபூர்வமாக நிரூபனமாகியுள்ளது. 

இதேபோலவே இந்தியாவின் மாபெரும் புரட்சியாளரான சுபாசு சந்திரபோசு அவர்கள், இந்தியாவை விட்டு வெளியேறி மலேசியாவில், ஒரு இராணுவத்தைத் திரட்டினார்.

இதற்கு இந்திய தேசிய விடுதலை இராணுவம் என்று பெயர் சூட்டினார். இதில் வெளிநாட்டில் வசித்துவந்த பலர் இணைந்துகொண்டனர்.

ஆனால் இதிலும் மறைந்திருக்கும் உண்மை ஒன்று உள்ளது. இப் படையில் இந்தியர்கள் மட்டும் இணையவில்லை. இதில் ஈழத் தமிழர்கள் பலரும் இணைந்து போரிட்டுள்ளனர்.

அதாவது இந்திய விடுதலைக்காக ஈழத் தமிழர்களும் போராடியுள்ளனர் என்பதுதான் உண்மை.

இச் செய்திகள் மலேசியாவில் இருந்து தற்போது ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

நன்றிகள்.

Monday, 22 October 2012

பசி உண்டாக்கும் சீதாப்பழம்.................!


அசீரணத்தைப் போக்கி நன்கு பசி உண்டாக்கும். சீதாப்பழம் சாப்பிடுங்க.. ஆரோக்கியமா இருங்க...

கசுடர்டு ஆப்பிள் என்றும் பட்டர் ஆப்பிள் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் சுவை மிக்கது. குளூகோசு வடிவில் நிறைந்த அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது. வெப்பம் மிகுந்த பகுதிகளில் எளிதாக வளரும் சீதா சிறு மர வகையைச் சார்ந்தது. சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

இதன் தாவரவியல் பெயர் Annona squamosa. சீத்தாப்பழத்தில் நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, எரியம்(Phosphorus), இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. சீத்தாப்பழத்தை சாப்பிட்டால் செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

சீத்தாப்பழச் சதையோடு உப்பை கலந்து உடையாத தோலில் ஏற்பட்ட பருக்கள் மேல் பூசிவந்தால் பருக்கள் கொப்புளங்கள் பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டால் புண்கள் ஆறும். விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் முடி மிருதுவாகும். ஈரு பிரச்சினையிலிருந்தும் விடுப்படலாம். சீத்தாப்பழம் காய்ச்சலை குணப்படுத்தும்.

சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வந்தால் முடி உதிராது. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்தால் எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்தால் தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் நீங்கும்.

100 கிராம் சீதாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:

ஈரப்பதம்- 70.5%

புரதம்- 1.6%

கொழுப்பு- 0.4%

மணிச்சத்து- 0.9%

நார்ச்சத்து- 3.1%

கால்சியம்- 17 மி.கி

எரியம் (பாஸ்பரஸ்)- 47 மி.கி

இரும்புச்சத்து- 4.31 மி.கி

வைட்டமின் C-37 மி.கி

வைட்டமின் B சிக்கலான (Complex) சிறிதளவு

மாவுச்சத்து- 23.5%

கலோரி அளவு- 10.4%

(முடிந்தவரை தமிழாக்கம் செய்துள்ளேன்)
நன்றிகள்.

Sunday, 21 October 2012

வலிக்கும் மனதுக்கும் தொடர்புண்டா.........?

வலியில்லாத மனிதர்களைப் பார்க்கவே முடியாது. தலைவலி, முதுகு வலி, கை வலி, கால் வலி என ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வலி... இவர்களில் பெரும்பாலானோர் மருந்து, மாத்திரை என சிகிச்சைகளை மேற்கொண்டும் பலன் கிடைக்காமல் வலியைத் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கவில்லையே என்கிற வேதனை ஒரு பக்கம்... சதா சர்வ காலமும், வலி வலி எனப் புலம்புவதைக் கேட்கும் வீட்டாரும் உறவினர்களும், இவர்களைக் கிட்டத்தட்ட மனநோயாளிகளாகவே பார்க்கிற அவலம் இன்னொரு பக்கம் என வலியுடன் போராடும் வாழ்க்கை கொடியது.


தீராத, நாள்பட்ட வலி என்பது மன நோயின் அறிகுறியாக இருக்குமா? வலிகளுக்கும், மனதுக்கும் தொடர்புண்டா? விளக்கமாகப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார்.

‘‘எந்த நோயுமே நீண்ட நாள்களாக சரியாகாமல் கடினமாக இருந்தால், அது மன உளைச்சலை உண்டுபண்ணும். மற்றவர்களைப் போல இருக்க முடியவில்லையே என்கிற வேதனையுடன், எந்த சிகிச்சையில் வலி தீரும் என்கிற தேடலில் பணம் விரயமாகிற கவலையும் சேர்ந்து கொண்டு, அவர்களுக்கு ‘இரண்டாம் தர மன அழுத்தம்’(Secondary Depression) என்பதை உருவாக்கலாம்.

நோயின் காரணம் வேறாக இருக்கும். ஆனால், அதன் விளைவாக மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தத்தின் பாதிப்பால் அவர்களது நடவடிக்கைகளில் காணப்படும் மாற்றங்களை வைத்து, குடும்ப உறுப்பினர்கள் மனநோயாளி மாதிரி சித்தரித்துப் புறக்கணிப்பது மிகவும் தவறு.

நோய் குணப்படுத்தப்பட்டால், மன அழுத்தம் தானாக சரியாகி விடும். அடுத்தது, அதிக பதற்றம், மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவற்றால் பாதிக்கப்படுவோருக்குப் பலவித உடல் உபாதைகள் வரும்.

ரொம்பவும் பதற்றமாக இருந்தால் தலைவலியை உணர்கிறோம். சரியாகத் தூங்காவிட்டால் தலைவலியும் வயிற்றுவலியும் வருகிறது. 

எனவே, மன அழுத்தத்தினால் சில நோய்கள் - முக்கியமாக வலி நோய்களும் வரலாம். வலிக்கான காரணம் அறிந்து குணப்படுத்தாவிட்டால், நீண்ட நாள் வலியானது மன பாதிப்பை உண்டுபண்ணக்கூடும்.

வலியாலும், அது தரும் மன உளைச்சலாலும் அவதிப்படுவோர், முதலில் ஆரோக்கியமான மனநிலையில் இருக்கப் பழக வேண்டும். மருத்துவரின் அறிவுரையின் பேரில் மிதமான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதால், உடலில் சில உடல் உறுப்புகளை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கின்ற உட்சுரப்பு நீர் வகைகளில் ஒன்று சுரந்து, வலி குறையும்.

மன அழுத்தத்தை அலட்சியம் செய்தால், சாதாரண வலி கூட தீவிரமானதாகத்தான் தெரியும். எனவே சந்தோசமான மனதே, வலிக்கான முதல் மருந்து!’

நன்றிகள்.

Saturday, 20 October 2012

புன்னகை என்ன விலை....................?


பொன்னகைக்கு விலையுண்டு. புன்னகைக்கு? அதற்கு விலை எதுவும் இல்லை. ஆனால் அதுவோ விலை மதிப்பில்லாதது. புன்னகையை 'எந்தப் பிரச்னையையும் நேராக்கும் வளைந்த கோடு' என வரையறுக்கிறது ஒரு பொன்மொழி.

புன்னகையால் வசமாகாதவர்களே இருக்க முடியாது. நீங்கள் புன்னகையுங்கள், உலகமே உங்களுடன் புன்னகைக்கும்.

புன்னகை பூத்த முகமாக ஏன் இருக்க வேண்டும்? அதனால் என்ன பலன்?

சில காரணங்களைத் தெரிந்துகொள்வோம். புன்னகை நமது வெளியுலகத் தொடர்புகளை சீரான முறையில் வைத்திருக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. நம்மைக் கவர்ச்சியாக்குகிறது.

ஒருவர் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் கடுகடுவென்று முகத்தை வைத்திருப்பின் அவர்களுடன் பழகத் தோன்றுமா என்ன?

ஒரு புதிய அலுவலகத்துக்குள் நுழைகிறீர்கள். ஏதோ ஒரு தகவலை விசாரிக்கவேண்டும் என்றால் யாரை அணுகுவீர்கள்?

அங்குள்ளவர்களில் அழகிய தோற்றமுடையவரையா அல்லது சிரித்த முகத்துடன் இருப்பவரையா?

கண்டிப்பாக இரண்டாமவரைத்தான். ஏனெனில் அவர் முகத்தில் உள்ள புன்னகை உங்களை அவர்பால் ஈர்த்துவிடுகிறது. உண்மையா இல்லையா?

பிறரை வசீகரிக்க வேண்டுமானால், நம்மை உயர் ரக ஆடைகளாலும், அணிகலன்களாலும் அலங்கரித்தாக வேண்டுமென்பதில்லை. உதடுகளில் புன்னகையை மட்டும் அணிந்தாலே போதுமானது.

அது முன்பின் தெரியாதவர்களைக் கூட இணைக்கக் கூடிய கயிறு. 

அடுத்தமுறை சோர்வாக உணரும்பொழுது கண்ணாடி முன் நின்று புன்னகை செய்யுங்கள். உங்கள் சோர்வு எங்கே போயிற்று என்று தேடித்தான் பார்க்கவேண்டும். ஏனெனில் புன்னகை உங்கள் சோர்வை விரட்டி அடித்துவிடும். புன்னகை மன உளைச்சலைக் கட்டுப்படுத்தும் மிகச்சிறந்த காரணி.

ஏனெனில், நீங்கள் புன்னகைக்கையில் உங்கள் உடம்பில் 'எண்டார்பின்', 'செரோடினின்' மற்றும் சில இயற்கையான வலி நிவாரணிகள் சுரக்கின்றன. இவை உங்கள் உடல்வலியைக்கட்டுப்படுத்தக்கூடியவை. புன்னகை ஒரு இயற்கையான மருந்து.

உங்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கிறதா? அடிக்கடி புன்னகையுங்கள். இரத்த அழுத்தம் குறைவதைக் காண்பீர்கள். அது மட்டுமல்ல. புன்னகை உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துகிறது. எப்போதும் புன்னகைத்தவாறே இருப்பவர்களுக்கு உடல் நலப்பாதிப்பு அடிக்கடி ஏற்படுவதில்லை என்கிறது ஒரு ஆய்வு.

நாம் கோபப்படுகையிலும், அழுகும்போதும் நமது முகத்தில் உள்ள தசைகள் தளர்ந்துவிடுகின்றன. குறிப்பாக அழுகையில், கண்ணீர் அதிகம் சுரப்பதால் கண்கள் உப்பி அழகிழந்து விடுகிறது. அதிகம் கோபப்படுகிறவர்களும் எதற்கெடுத்தாலும் முகத்தை உம்மென்று வைத்திருப்பவர்களும் விரைவில் முதுமையடைந்து விடுகின்றனர்.

ஆனால் புன்னகைக்கிறபோது, முகத்தசைகள் தளர்வதில்லை. அதிக அளவான தசைகளும் பயன்படுத்தப் படுவதில்லை. அதனால் நம் தோற்றம் பொலிவு அடைகிறது. அதிகம் புன்னகை செய்பவர் இளமையான தோற்றத்தை தக்க வைத்துக்கொள்வார்.

முகம் பார்க்கும் கண்ணாடி முன் நில்லுங்கள். முதலில் அழுவது போல் பாவனை செய்யுங்கள். பின் கோபமாக இருப்பதுபோல். கடைசியில் புன்னகை செய்யுங்கள். உங்கள் முகம்தான். நீங்கள் பலமுறை கண்ணாடியில் பார்த்த முகம்தான். அதில்தான் எத்தனை வேறுபாடு?

மன உளைச்சலில் இருப்பவர்களுக்கும் புன்னகை ஒரு அருமருந்து.கண்களை மூடிக்கொண்டு உங்களுக்குப் பிடிக்காத, வருத்தத்தை உண்டாக்கக்கூடிய நிகழ்வுகளை, தகவல்களை நினைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது புன்னகைத்தவாறு கண்களை மூடிக்கொண்டு அதே நிகழ்வுகளை மீண்டும் எண்ணிப்பார்க்க முயலுங்கள். முடிகிறதா?

நினைவிருக்கட்டும். புன்னகை உங்கள் இதழ்களில் தங்கியிருக்கவேண்டும். உங்கள் மன நிலையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

முதலில் மிகுந்த துன்பத்தை ஏற்படுத்திய அதே நிகழ்வுகள் நீங்கள் மறுமுறை நினைக்கையில் அத்தனை வருத்தத்தைத் தருவதில்லை. சரிதானே?

அடிக்கடி புன்னகை செய்துகொண்டே இருங்கள். உங்கள் மனச் சோர்வு, மன அழுத்தத்திற்கு நீங்கள் வேறு மருந்து எதுவும் தேட வேண்டியதே இல்லை. 

புன்னகை ஒரு தொற்று நோய். காலையில் எழுந்ததும் உங்கள் குடும்பத்தினருக்கு புன்னகையுடன் காலை வணக்கம் தெரிவியுங்கள். அலுவலகத்தில் பார்க்கும் அனைவருக்கும் புன்முறுவலுடன் முகமன் கூறுங்கள். அது எல்லாத் திசைகளிலும் காற்று போல் பரவக்கூடியது.

எவ்வளவு கடுமையான பிரச்னையாக இருக்கட்டும். புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். அது எளிமையாக மாறிவிடும். எவ்வளவு கோபக்கார முதலாளியாக இருக்கட்டும். முறுவலுடன் தகவல் தொடர்பை மேற்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் கோரிக்கையில் வெற்றியடைவீர்கள். 

புன்னகை செய்யுங்கள்; உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. புன்னகை செய்யுங்கள்; உங்கள் மனதில் நேர்மறையான சிந்தனைகள் நிறைகின்றன.

புன்னகை உங்களை வெற்றியாளராக மாற்றும் ஒரு எளிய சாதனம். ஒரே நிறுவனத்தில் இரு விற்பனையாளர்கள் ஒரே கல்வித்தகுதி, அறிவுத்திறன் போன்ற காரணிகளில் ஒத்திருக்கலாம். ஆனால் ஒருவர் தமது விற்பனை இலக்கை எளிதில் எட்டிவிடுகிறார்.

மற்றொருவரால் அந்த இலக்கைத் தொட முடிவதில்லை. ஏன்?

அவர்கள் வாடிக்கையாளர்களை அணுகும் விதம்தான் காரணம். புன்னகையுடன் வாடிக்கையாளரை அணுகுபவர் தன்னம்பிக்கையுடன் பேசி அவர்களை வசமாக்குகிறார். மற்றவரிடம் அது இல்லாமலிருக்கக் கூடும். அது அவரை, அவரது இலக்கை அடைய விடாமல் தடுத்துவிடுகிறது.

நோயாளிகளிடம் சிரித்த முகத்துடன் பழகும் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் எளிதில் நோயைக் குணப்படுத்திவிட முடியும். நோயாளியை மருத்துவர் பார்க்கும்பொழுதே அவருடைய புன்னகை அந்நோயாளியைத் தொற்றிவிடுகிறது. அவர்கள் தமது நோய் குறித்து அவரிடம் வெளிப்படையாகவும் எளிதாகவும் உரையாடும் மன நிலையைப் பெறுகின்றனர்.

அம்மருத்துவர் தன்னையும் அறியாமல் அந்த நோயாளியின் நம்பிக்கையைப் பெற்றுவிடுகிறார். இதனால் அவருடைய மருத்துவம் வெற்றி பெறுகிறது. புன்னகைப்பவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும், நம்பிக்கையும் அதிகரிக்கும் என்று மேலே கண்டோம். உடல் குணமாக இவை இரண்டும் மிகவும் அவசியம்.

இவை அதிகரிக்கையில் நோயாளி நலம் பெறுவது எளிதாகி விடுகிறது. பலருக்கு முன் பேசப்போகிறீர்களா? சுவையான பேச்சைத் தயாரிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நீங்கள் சிரித்த முகத்துடன் பார்வையாளர்களை எதிர்கொள்வது. இதனால் பார்வையாளர்களுக்கும் உங்களுக்கும் ஒரு பிணைப்பு ஏற்பட்டு விடுகிறது.

சிலர் மிக நன்றாகப் படித்து இருப்பார்கள். ஆனால் தேர்வில் கேள்வித்தாளை வாங்கும் பொழுது பதற்றமடைந்து விடுவார்கள். இதனால் பல சமயம் நன்கு தெரிந்த விடைகள் கூட மறந்துவிடும். மாறாக, புன்னகையுடன் கேள்வித்தாளைப் புரட்டிப் பாருங்கள்.

பதட்டம் தணிந்து நினைவோட்டம் சீராகும். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் உடனிருப்பவர்களுக்கும் வெளிச்சம் கொடுக்கிறது, மகிழ்வூட்டுகிறது. எத்தகைய இறுக்கமான சூழலையும் தளர்த்திவிடுகிறது.

புன்னகையை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பரிசளிக்கலாம். எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம். அதற்கு செலவெதுவும் இல்லை. ஆனால் பலன்களோ ஏராளம்.

நன்றிகள்.

உயர்ந்த குறிக்கோள் ஒன்றை ...................!

உலகில் பிறந்த அனைவருமே வாழ்க்கையில் உயரவேண்டும், முன்னேற வேண்டும், வளர வேண்டும் என்று விரும்புகின்றனர். நீங்கள் முன்னேற, உயர, வளர விரும்பினால் உயர்ந்த குறிக்கோள் ஒன்றை வரையறுத்துக் கொண்டு, உழைக்கத் தயாராகி விடவேண்டும்.


ஆசை காரணமாக உயர்ந்த குறிக்கோளை வரையறுப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும். ஆனால், குறிக்கோளை நோக்கி உழைக்கத் துவங்கும் போது மலைப்பாகத் தோன்றும். மலைத்துப்போய் ஒதுக்கிவிடுவீர்களாயின் வாழ்க்கை முழுதும் ஆசைப்படுபராகவும், கனவு காண்பவராகவுமே கழிக்க வேண்டி நேரும்.

உங்கள் குறிக்கோளை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் முடியாது என்னும் எண்ணம் உடனே வந்து உங்களிடம் ஒட்டிக்கொள்ளும். முடியாது என்னும் எண்ணத்தைத் தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் கொண்டிருக்கும் குறிக்கோளை, பகுதி பகுதியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். பிரித்து எண்ணிப் பார்த்தால் மலைப்போ, திகைப்போ தோன்றாது.  

உங்களால் ஆயிரம் கி.மீ. நடக்க முடியுமா? என்று கேட்டால் முடியாது என்னும் பதிலை உடனே கூறி விடுவீர்கள்.

உங்களால் ஆயிரம் கி.மீ. தூரம் ஆயிரம் நாட்களில் நடக்க முடியுமா? என்று கேட்டால் ஏன் முடியாது? என்று உற்சாகமாக்க் கேட்பீர்கள். குறிக்கோளை அடைய முடியுமா? என்று ஒட்டுமொத்தமாக ஏன் சிந்திக்கிறீர்கள்?

உயர்ந்த குறிக்கோள்களை பத்து ஆண்டுகளில் அடைந்தாலே மாபெரும் வெற்றிதான். பத்து ஆண்டுகளில் 120 மாதங்கள் உள்ளன.

3650 நாட்கள் உள்ளன. உங்கள் செயல்திட்டத்தை உருவாக்கும் போது குறிக்கோளை 10 ஆண்டுப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு ஆண்டுப் பகுதியையும் 12 மாதப் பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதப் பகுதிகயையும் 30 நாட்பகுதியாகப் பிரித்துக் கொள்ளுங்கள்.

இப்போது எளிதாகத் தோன்றுகிறதா இல்லையா?

ரோம் நகரம் ஒரே நாளில் கட்டி முடிக்கப்படவில்லை, என்னும் பழமொழியைப் புரிந்து கொள்ளுங்கள்.

உலகம் பார்த்து வியக்கும் தாச்மகாலோ செங்கோட்டையோ பல ஆண்டுகள், பல மாதங்கள், பல்லாயிரம் நாட்கள் தொடர் உழைப்பில் உருவானவை தாமே!

பத்தடுக்கு மாளிகையேயாயினும் ஒவ்வொரு செங்கல்லாகவே அடிக்கப்படுகிறது. ஒவ்வொரு அடுக்காகவே உயர்ந்து மாளிகை ஆகிறது.

ஆகவே, நீங்கள் எடுத்துக்கொண்ட குறிக்கோள் அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும். தொடர் முயற்சியும், விடா முயற்சியும் வெற்றி என்னும் பெருமையைத் தரும்.

இதை நீங்கள் புரிந்து கொண்டால் உழைப்பின் மேன்மையை உணர்ந்து செயல்படுவீர்கள். உழைப்பின் வாரா நன்மைகள் உள்ளனவா?

உழைப்பதற்கு அஞ்சுபவர்களைப் பாருங்கள் அவர்கள் இரண்டு வகையினர், ஒருவகையினர் வறுமையிலும், பற்றாக் குறையிலும் பரிதவித்துக் கொண்டிருப்பர்.

இன்னொரு வகையினர் குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குள்ளநரிகளாக இருப்பர்.

முதல்வகையினர் சோம்பேறிகள், இரண்டாவது வகையினர் மோசடிப் பேர்வழிகள்.
சோம்பேறிகள் தங்கள் ஆசைகளை, கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள அதிட்டத்தை நம்பி இருப்பார்கள். லாட்டரிச்சீட்டு, குதிரைப் பந்தயம், சீட்டாட்டம் போன்றவைகளில் ஈடுபட்டு, மேலும் கடன்பாட்டு மனிதப் பிறவியை மாசுபடுத்திக் கொள்வார்கள்.

குறுக்குவழியினர் திருட்டு, ஏமாற்று, வாட்டி வதைத்து வட்டி வாங்குதல், கலப்படம், கள்ளச்சந்தை, கொள்ளை, கொலை, கொள்கையில்லா அரசியல், இலஞ்சம், ஊழல் போன்ற கொடுஞ்செயல்களால் பணம் சேர்க்க முயல்பவர்கள்.

இவர்கள் சேர்க்கும் செல்வம் களவினால் ஆகிய ஆக்கம்.
அது அளவிறந்து ஆவது போலக் கெடும்.
இந்த இருவகையிலும் சேராதவரா நீங்கள்? நல்லது.

இயற்கை தரும் தண்டைனைக்குத் தப்பி விட்டீர்கள். நீங்கள் செல்வம் சேர்க்க உழைப்பது நல்லது தான்.

ஆனால், இயற்கையுடன் முரண்பட்ட வழிகளில் முயன்றால், தற்காலிகமாக உயர்வது பொன்று தோற்றமளிப்பினும் முடிவு பரிதாபமாக இருக்கும். 

சட்டத்தின் பார்வையிலிருந்து ஒருவன் தப்பி விடலாம. இயற்கையின் பார்வையிலிருந்து எவரும் தப்ப முடியாது.

இயற்கை ஒழுங்கின்மையையோ, ஒழுங்கீனத்தையோ ஒருபோதும் சகித்துக் கொள்வதில்லை.

சரியான நேரத்தில், சரியான முறையில் இயற்கை தன் நியாயத்தீர்ப்பை நேர்த்தியாய் வழங்கிவிடும்.

நீங்கள் இயற்கையுடன் ஒன்றுபட்ட முறையில் உழைப்பீர்களானால் அதுவே உயர்வைத் தரும். ஊக்கமின்றிச் சோம்பி இருப்பீர்களானால் அதுவே தாழ்வே உருவெடுக்கும்.

இயற்கையுடன் ஒன்றுபடும் போது உங்கள் செயல் திட்டங்களில் உண்மையும், நேர்மையும் ஒளிரும்.

அப்போது இயற்கை அன்னை உங்கள் கரம் பிடித்து வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வான்.

இயற்கையின் உதவியோடு குறிக்கோளை அடைய செயல்திட்டத்தை வகுத்துவிட்டீர்கள். இனி தயக்கமோ, தாமதமோ இல்லாமல் முதல் அடியை எடுத்து வைத்து விடுங்கள்.

ஆயிரம் கிலே மீட்டர் பயணம் ஆயினும் அது ஓரடியில்தான் தொடங்குகிறது என்பது அற்புதமான மொழி.

வெற்றி கிடைக்குமா? என்று சந்தேகத்துடன் சிந்திக்க வேண்டாம். நான் நம்புவது நடந்தே தீரும் என்னும் எண்ணத்துடன் அடுத்த அடியை எடுத்து வையுங்கள்.

உங்களை உற்சாகப்படுத்தக்கூடிய சில உளவியல் சார்ந்த, அறிவியல் ரீதியான ஒரு செய்தியை அறிந்து கொள்ளுங்கள்.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் முன்னேற வேண்டும், உயர வேண்டும், வளர வேண்டும், விரும்புவதை ( வெற்றி ) அடையவேண்டும் என்றே இயற்கை விரும்புகிறது.

அதற்கேற்பவே மனிதனின் உடல் இயக்க விதிகளை இயற்றி வைத்திருக்கிறது. ஒரு குழந்தையின் பரிணாம வளர்ச்சியை உற்று நோக்கினால் இந்த உண்மை தெளிவாகும்.

தாய் ஒரு குழந்தையைப் பெறுகிறாள். பிறந்தபின் அதைக் கையில் எடுத்துச் சீராட்டாமல் உயிர் வாழ்வத்ற்குரிய உணவை ( பாலை ) மட்டுமை புகட்டிவந்தால் போதும், குழந்தை அழுது, அலறி, பசியாறி, உறங்கி மீண்டும் அழுது… உயிர் வாழும்.

மூன்று மாதங்கள் இப்படியே தொடர்ந்தாலும் குழந்தை ஒருநாளில் குப்புற விழும். மீண்டும் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவை மட்டும் புகட்டிக்கொண்டே வந்தா அது தானே எழுந்து அமரும்.

தொடர்ந்து உணவூட்டி வந்தால் ஒரு நாள் தானே எழுந்து நிற்கும், விழும், அழும், ஆனாலும் அடங்கி இராமல் மீண்டும் எழுந்து நின்று தன் முதலடியை முன்னோக்கி எடுத்து வைக்கும்.

அதுமட்டுமின்றி உடல் மேல் நோக்கி வளரும். தன் சூழ்நிலையிலிருந்து அடைய முயற்சித்து வெற்றி பெறும். குழந்தையால் எப்படி முடிகிறது. 

இயற்கை, தான் இயற்றி வைத்துள்ள சட்டங்களின்படி அதனோடு ஒத்துழைக்கிறது.

ஆகவே, நீங்கள் வாழ்வில் உயரவேண்டும் என்பதும், முன்னேற வேண்டும் என்பதும், வளர வேண்டும் என்பதும், விரும்புவதை ( வெற்றி ) அடையவேண்டும் என்பதும் இயற்கைச் சட்டம்.

இயற்கையுடன் கரம் கோர்த்துக் கொண்டால். நீங்கள் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம்.

இயற்கையுடன் கரம் கோர்த்துக் கொள்ளவதா?
எப்படி?
உங்கள் குறிக்கோள் என்ன?
அதை நிறை வேற்றுவதற்கு நீங்கள் வரையறுத்துள்ள ஆண்டு எது?
அதை அடைவதற்கு நீங்கள் தேர்வு செய்துள்ள தொழில், வணிகம் அல்லது விற்பனை எது?

அந்தத் தொழில், வணிகம் அல்லது விற்பனை தொடர்பான முதல் நடவடிக்கையை இன்றே, இப்பொழுதே தொடங்குங்கள்
ஒத்தி வைக்காதீர்கள்.

தள்ளிப்போடாதீர்கள் அடுத்த நாளில் இன்னொரு நடவடிக்கை, மறுநாள் அது தொடர்பான மேலும் ஒரு நடவடிக்கை.

ஒரு வாரத்தில் பொருத்தமான ஏழு செயல்கள், முன்னேற்றத்தை நோக்கி, மாதத்தில் முப்பது செயல்கள், ஒரு ஆண்டில் முந்நூற்று அறுபத்தைந்து செயல்கள், ஒரு ஆண்டில் முற்நூற்று அறுபத்தைந்து செயல்கள்.

ஒரு ஆண்டு முழுவதும் நீங்கள் தொடர்ந்து செய்த செயல்கள் தொழிலாக, வணிகமாக, விற்பனை வாய்ப்பாக உருவாகி இருக்கும் முந்நூறு அறுபத்தைந்து செங்கற்கள் சேர்த்த ஒரு சுவராவது போன்று.

இப்படியாக வளர்ச்சியை நோக்கி நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும், பல சுவர்களாக மாறி ஒன்றுக்கொன்று இணைந்து வெற்றி என்னும் மாளிகையாக மாறிவிடும்.

முயற்சியை நிறுத்தாமல் விடாமுயற்சி யாகவும் தொடர்முயற்சியாகவும் கைக்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியமனா இயற்கைச் சட்டம். 

தினமும் ஒரு சாதகமான நடவடிக்கை எடுக்கும் போது சட்டப்படி உங்களுக்கு வெற்றி உத்திரவாதம் ஆகிறது.

அதைவிடுத்து நேரம் கிடைக்கும் போதும், விருப்பம் ஏற்படும் போதும் மட்டும் உழைப்பது மற்ற நேரங்களில் சோம்பி இருப்பது, விட்டு விட்டு முயல்வது, ஏவராவது விரட்டினால் மட்டுமே உழைப்பது என்று நினைப்பவருக்கு வெற்றி எட்டாக் கனியாகும்.

வெற்றி செடி வேர்பிடித்து விட்டதா என்று பிடுங்கிப் பார்த்து நடவேண்டாம் உழைப்பு என்னும் நீரையும், நம்பிக்கை என்னும் உரத்தையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள்.

நாள்தோறும் ஒரு நடவடிக்கை என்னும் ஆலோசனையைத் தவறாமல் கடைப்பிடியுங்கள். கடைப்பிடிக்கும் போது இயற்கையின் கரத்தோடு உங்கள் கரம் இணைந்து விடுகிறது. இணையும்போது இயற்கையின் கரத்திலுள்ள வெற்றி மாலை உங்கள் கழுத்திற்கு வந்துவிடுகிறது.

உழைக்க உறுதி கொண்டவன் எதிலும் வெற்றி பெறுகின்றான். பொது வாழ்விலும் தனிமனித வாழ்விற்கும் உழைப்பே உயர்வு தரும்.

சோம்பல் ஒருவனை நரகத்திற்குத்தான் கொண்டு போய்ச் சேர்க்கும். உலகில் பிறந்த அனைவருமே வாழ்க்கையில் உயரவேண்டும் முன்னேற வேண்டும் வளர வேண்டும் என்று விரும்புகின்றனர்.

நீங்கள் முன்னேற உயர வளர
விரும்பினால் உயர்ந்த குறிக்கோள்
ஒன்றை வரையறுத்துக் கொண்டு
உழைக்கத் தயாராகி விடவேண்டும்.

ஆசை காரணமாக உயர்ந்த குறிக்கோளை
வரையறுப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும்.

ஆனால் குறிக்கோளை நோக்கி உழைக்கத் துவங்கும் போது மலைப்பாகத் தோன்றும். மலைத்துப்போய் ஒதுக்கி விடுவீர்கள்
ஆயின் வாழ்க்கை முழுதும் ஆசைப்படுபராகவும் கனவு காண்பவராகவுமே கழிக்க வேண்டி நேரும். 

நன்றிகள் 

வாசகர்களிற்கான விசேட படம்!.


இன் முகத்துடன் எட்டாயிரத்திற்கு ஆதரவு தந்த
பட்டதும்சுட்டதும் வாசகர்களிற்கான விசேட படம்!.
நன்றிகள்.

Thursday, 18 October 2012

பாரிய ஒலிம்பிக் கோபுரம்......................!

ஒலிம்பிக் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் போன்ற ஒரு கோபுரத்தை போட்டி நடைபெறவுள்ள மைதானத்திற்கு அருகிலேயே அமைத்திருக்கிறார்கள்.


376 அடி உயரத்தில் சுருள் வடிவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் இக் கோபுரத்திற்கு ஒலிம்பிக் கோபுரம் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. 455 சுருள் வடிவ படிக்கட்டுகள் இதில் காணப்படுகின்றன.

இங்கு விடுதி (Hotel) வசதியும் உள்ளது. இங்கிருந்து 24 மைல் தொலைவுக்கு லண்டன் நகரின் அழகை இரசிக்க முடியும். இந்தக் கோபுரம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள சுதந்திர தேவியின் சிலையை விட 22 அடி உயரம் அதிகமாகும்.

இந்தக் கோபுரத்தை வடிவமைத்திருப்பது வேறு யாருமல்ல. இந்திய ஓவியர் அனிசு(ஸ்) கபூர்தான்.

நன்றிகள்.

Wednesday, 17 October 2012

சமாதி அல்ல புராதன......... ...!

தாச்மகால், மும்தாசின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில்தான்! – அதிர்ச்சித் தகவல்

காதல் மனைவி மும்தாச் நினைவாக மாமன்னர் சாசகானால் கட் டப்பட்ட நினைவுச்சமாதி தான் தாச்மகால் என்றுதான் நாம் எல்லோரும் நம்பிக்கொண்டு இருக்கின்றோம். ஆயினும் இது ஒரு பழைய சிவன்கோவில் என்கிற அதிரடி உண்மை வெளிச்சத்துக்கு வந்து உள்ள து.

தாச்மகால் விடயத்தில் முழு உலகமும் ஏமாற்றப்பட்டுள்ளது, தாச்மகால் மும்தாசின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில் என்று ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றார் பேராசிரியர் பி.என். ஓக். முன்பு தேசோ மகாலையா (தேஜோ மஹாலயா) என்கிற பெயரால் தாச் மகால் அழைக்கப் பெற்றது என்கிறார்.

செய்ப்பூர் ராசா செய் சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை சாசக்கான் மன்னர் பிடுங்கிக்கொண்டார் என்றும் சாசக்கான் மன்னரின் சொந்த வாழ்க்கைக் குறிப்பான பாத்சா நாமாவில் ஆகராவில் மிகவும் அழகான மாளிகையை மும்தாசின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்ந்தெடு த்தமை குறித்து குறிப்புக்கள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறுகின்றார்.

இச்சிவன்கோவிலை கையளிக்க சொல்லி சாசக்கான் மன்னரால் செய் சிங் ராசாவுக்கு அனுப் பப்பட்ட இரு ஆணைகள் இன்றும் பத்திரமாகவே உள்ளன என்கிறார் பேராசிரியர். கைப்பற்றிக் கொள்கின்ற கோயில்கள், பெரிய மாளிகைகள் ஆகியவற்றில் முகாலய மன்னர்கள் மற்றும் இராணிகள் ஆகியோரின் உடல்களை வழக்கமாக புதைத்து வந்திருக்கின்றனர் முகாலய மன்னர்கள், கூ(ஹு)மாயூன், அக்பர், எத்மத் உத்தவுலா, சப்தர் யங் ஆகியோரின் உடல்க ள் புகைக்கப்பட்ட இடங்கள் இத ற்கு சான்று என்கிறார் பேராசிரியர். 

தாச் மகால் என்கிற பெயரை எடுத்துக் கொள்கின்றபோது ஆப்கானிசு (ஸ்)த்தான் முதல் அல்சீரியா வரையான எந்தவொரு இசுலாமிய நாட்டிலும் மகால் என்கிற பெயர் எக்கட்டிடத்துக்கும் கிடையாது, மும்தாசின் முழுப் பெயர் மும்தாச் உல் யமானி என்பது. மும்தாச் நினைவாக சாசக்கான் சமாதி கட்டி இருப்பாரானால் மும்தாச் என்கிற பெயரில் இருந்துமும் என்பதை அப்புறப்படுத்தி விட்டு தாச் என்பதை மாத்திரம் நினைவுச் சின்னத்துக்கான பெயரில் ஏன் பயன்படுத்தி இருக்க வேண்டும்? என்று பேராசிரியர் ஒரு நியாயமான கேள்வியை கேட்கின்றார்.

தாச் மகாலின் உண்மையான வரலாற்றை மறைக்க பிற்காலத்தி ல் புனையப்பட்ட பொய்தான் சாசக்கான் –மும்தாச் காதல் கதை என்கின்றார். நியூயோர்க்கை சேர்ந்த பேராசிரியரான மார்வின் மில்லர் தாச் மகாலின் மாதிரிகளை எடுத்து கார்ப ன் மூலம் காலஅளவை முறைப்படி தாச் மகாலின் ஆயுளை கணித்தா ர். மில்லரின் கருத்துப்படி தாச் மகாலின் வயது 300 வருடங் களுக்கு மேல். இதையும் பேராசிரியர் ஓக் ஆதாரமாக சொல்கின்றார். ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணியான அல்பேர்ட் மாண்டேசுலோ என்பவர் 1638 ஆம் ஆண்டு அதாவது மும்தாச் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் ஆக்ரா வந்திருந்தார். இவரது குறிப்புக்களில் ஆக்ரா பற்றி வியந்து எழுதப்பட்டு இருக்கின்றன, ஆனால் தாச் மகால் கட்டப்படுகின்றமை சம்பந்த மாக எக்குறிப்புக்களும் இடம் பெற்று இருக்கவில்லை.

ஆனால் மும்தாச்  இறந்து ஒரு வருடத்துக்குள் ஆங்கில பயணியான பீட்டர் மண்டி ஆக்ரா வந்தி ருந்தார். இவரது குறிப்புக்களில் தாச் மகாலின் கலை நயம் பற்றி வியந்து எழுதப்பட்டு இருக்கி ன்றது. ஆனால் இன்று சொல்லப்படுகின்ற வரலாற்றின்படி மும்தாச் இறந்து 20 வருடங்களுக்கு பிறகல்லவா தாச் மகால் கட்டப்பட்டு இருக்கின்றது? இவற்றையும் ஆதா ரங்களாக முன்வைக்கி ன்றார் பேராசிரியர் ஓக்.

தாச்  மகாலின் பெரும்பகுதி பொதுமக்களின் பாவனைக்கு இன்னமும் அனுமதிக்கப் படவில்லை, காரணம் கேட்டால் பாதுகாப்பு என்று சொல்லப்படுகின்றது, தாச் மகாலினுள் தலையில்லாத சிவன் சிலையும், இந்துக்கள் பூசைகளுக்கு பயன்படுத்துகின்ற பொருட்களும் இருக்கின்றன என்கிற பேராசிரியர் தாச் மகாலின் கட்டிட கலை நுட்பங்களை பார்க்கின்றபோதும் இது ஒரு இந்துக்கோவில் என்பது தெளிவாக தெரிகின்றது என்கிறார்.

பேராசிரியர் இவ்வளவு விபரங்களையும் தாச் மகால்–உண்மையான வரலாறு என்கிற தலைப்பில் புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கின்றார். ஆனால் அரசியல் காரணங்களுக்காக இவரது புத்தகம் இந்திரா காந்தி தலைமையிலான அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

உண்மை இனியாவது வெளிவர வேண்டுமானால் அ(ஐ)க்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் சர்வதேச நிபுணர் கொண்ட குழுவால் தாச் மகாலில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்கிறார் பேராசி ரியர்.

நன்றிகள்.

Tuesday, 16 October 2012

வாயுக்களின் இயக்கம்............!

நாடிகள் பத்து என்று உரைக்கப் பட்டதைப் போல, வாயுக்களும் பத்து என்பர். நாடிகளின் இயக்கத்துடன் இணைந்து வாயுக்களும் இயங்குவதால், நாடிகளைப் போல வாயுக்களும் சிறப்புடையவை யாகக் கருதப்படும். 

வாயுக்கள் பத்து வருமாறு பிராணன், அபானன், வியானன், உதானன், கூர்மன், தேவதத்தன், சமானன், நாகன், கிரிகரன், தனஞ்செயன் என்பனவாகும். வாயுக்களின் இயக்கம் நாடிகளைப் போல வாயுக்கள் உடலில் ஒவ்வோர் இடத்தில் அமைந்து இருப்பதுடன் ஒவ்வொரு தொழிலைச் செய்வதாகக் குறிப்பிடப்படுகின்றன.

வாயுக்களின் இயக்கம் விபரம்

1. பிராணன் – மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு இடகலை, பிங்கலை இவற்றின் நடுவாகச் சென்று சிரசை முட்டி, மூக்கின் வழியாக வெளியே பாயும். நெஞ்சில் நின்று ஓடும்.
2. அபானன் – மலநீர்களைக் கழிக்கும்.
3. வியானன் – உணவின் சாரத்தை உடல் முழுவதும் பரவச்செய்து வலிமையளிக்கும்.
4. உதானன் – கழுத்தில் நின்று உணவு, நீர் இவற்றின் சாரத்தை உடல் முழுவதும் பரவச் செய்து வளர்க்கும்.
5. கூர்மன் – கண்ணை இமைக்கச் செய்யும்.
6. தேவதத்தன் – கொட்டாவி, உடம்பு முறுக்கலை உண்டாக்கும்.
7. சமானன் – நாடியுடன் கூடிய உணவைச் செரிக்கச் செய்யும்.
8. நாகன் – மனத்தில் கலைகளை உண்டாக்கும்.
9. கிரிகரன் – தும்மலை உண்டாக்கும்.
10. தனஞ்செயன் – உயிர்போன பின்னரும் சிரசில் நின்று உடலை வீங்கச் செய்யும். இதுவே இறுதியில் மண்டை யைக் கிழித்துக் கொண்டு வெளியே போகும்.

பிராணன் என்னும் வாயு மூக்கின் வழியாக உள்ளே சென்று, சிரசில் முட்டி, நெஞ்சின் வழியாக மூலாதாரம் சென்று திரும்பி மீண்டும் மூக்கின் வழியாக வெளியே வரும்.

மூக்கின் வழியாக உள்ளே செல்லும் போது பன்னிரண்டு அங்குல மூச்சுக் காற்று உள்ளே செல்லும்; வெளியே வரும் போது நான்கு அங்குலம் பாழாகும் என்பர்.

இவ்வாறு, பிராணன் என்னும் வாயு நாழிகை ஒன்றுக்கு முன்னூற்று அறுபது முறையும், நாளொன்றுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு முறையும் மூச்சாக இயங்கும்.

இவ்வாறு இயங்கும் மூச்சுக் காற்றில் 7200 மூச்சு வெளியே வந்து பாழாகிப் போகிறது. இப்பாழ் நிகழாமல் மூச்சுப் பயிற்சியான பிராணாயாமம் மூலம் உள்ளே சென்ற மூச்சுக் காற்றை உள்ளே இருத்திக் கொண்டால் மரணமில்லை என்பர்.

நன்றிகள்.


ஈபிள் கோபுரத்தின் சிறப்பம்சங்கள்.................!

ஈபிள் கோபுரத்தின் சிறப்பம்சங்கள் பற்றி தெரிய வேண்டுமா?

பிரஞ்சு நாட்டில் உள்ள ஈபிள் கோபுரம் (Eiffel Tower) 1889 மார்ச் 31ஆம் தேதி திறக்கப்பட்டது. இது அகில உலகக் கண்காட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி நூற்றாண்டு நிறைவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது.

1887 இல் கட்டத் தொடங்கிய காலத்தில் இதனை 20 வருடம் கழித்து இடிக்கத் திட்டமிட்டனர். ஆனால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் தொடர்பான மேலும் சில முக்கிய தகவல்..

1. கோபுரத்தின் மொத்த உயரம் 984 அடி (324 மீட்டர்) நிலப்பரப்பு 2.5 ஏக்கர் (412 சதுர அடி, 100 சதுர மீட்டர்).

2. கோபுரம் முழுவதும் 18,038 சிறப்பு உருக்கு இரும்புத் துண்டங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துண்டங்கள் அனைத்தும் 2.5 மில்லியன் போல்ட்கள் (bolts) கொண்டு பொருத்தப்பட்டுள்ளன.

3. இந்தக் கோபுரத்தின் மொத்த எடை 10,100 டன்கள் எனவும் இதில் இரும்பு பாகத்தின் எடை 7,300 டன்களாகவும் உள்ளது.

4.இக்கோபுரத்திற்கு 7 வருங்களுக்கு ஒருமுறை தூரிகை உதவியுடன் வர்ணம் தீட்டப்படுகின்றது. இதுவரை வர்ணம் தீட்ட நவீன முறைகள் எதுவும் பயன்படுத்தப் படவில்லை.

5. வர்ணம் தீட்டுவதற்கு 60 டன் எடை உடையதும் மண் நிறம் கொண்டதுமான வர்ணக்கலவை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தப்படுகின்றது.

6. இக்கோபுரம் மொத்தமாக மூன்று தட்டுக்களாக அமைந்துள்ளது. இந்த அமைப்பில் உள்ள மொத்த படிக்கட்டுக்கள் எண்ணிக்கை 1,665 ஆகவும் இதற்குத் துணையாக 8 மின்தூக்கி (Elevator) வசதியும் உள்ளது .

இக்கோபுரம் ஒவ்வொரு தட்டுக்களிலும் உணவகம், கண்காட்சி மண்டபம், ஓய்வெடுக்கும் பகுதி, சுற்றுலா வெளி, தகவல் நிலயம் என்பவற்றைக் கொண்டுள்ளது.

இந்தக் கோபுரத்தின் உச்சி பகுதி 1909 ஆம் ஆண்டிலிருந்து வானொலி ஒலிபரப்பு தேவைக்கும் 1957-லிருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றது.

இத்துடன் கோபுரத்தின் கீழ்பகுதியில் சுரங்க வானொலி நிலையமும் இயங்குகின்றது.

7. இக்கோபுரம் 42 மைல் தூரத்தில் இருந்து தெளிவான காலநிலையில் கண்களுக்குத் தெரிகின்றது. பிரஞ்சு நாட்டின் 72 விஞ்ஞனிகள் பெயர்கள் கோபுரத்தின் அடிப்பாகத்தின் நான்கு முகப்புக்களில் ஒவ்வொன்றிலும் 18 பெயர் விகிதம் பொறிக்கப்பட்டுள்ளது. இதனை 121 வேலையாட்கள் 2 வருடம் 2 மாதம் கொண்ட காலத்தில் கட்டி முடித்தார்கள்.

8. கோடை வெய்யில் கோபுரத்தின் பக்கவாட்டில் படும் வேளையில் மொத்தக் கோபுரமானது அதிகபட்சம் 18 சென்டி மீட்டர் முன்நோக்கி வளைவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.


9. அசாதாரணக் காற்றின் சீற்றத்தில் சிக்கும் நேரங்களில் இதன் உச்சிப் பகுதி 15 சென்டி மீட்டர் பக்கம் பக்கமாக ஊசலாடுவது கண்டறியப்பட்டுள்ளது.

10. இக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் இருந்து 1930 ஆம் வருடம் வரை சுமார் 40 வருடங்கள் உலகின் மிகவும் உயரமான கோபுரம் என்கிற புகழைப் பெற்றிருந்தது.

11. இக்கோபுரம இதுவரை 243 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப் பட்டுள்ளது.

நன்றிகள்.

Monday, 15 October 2012

சுவாசிப்போம் தூய தமிழை...........!


"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த தமிழ் குடி" என்ற பெருமையைக் கொண்ட பெரும் இனத்தவர்கள் தமிழர்கள். அதாவது "உலகில் முதலில் தோன்றியது கல்தான். அப்படி தோன்றிய கல்லானது, காற்றிலும் மழையிலும் கரைந்து மண்ணானது.

அப்படி ஆகும் காலத்திலே, மண் உருவாவதற்கு முன்னரே, வாளோடு வீரத்துடன் தோன்றிய இனம் தமிழ் இனம்" என்பது ஒட்டக்கூத்தரின் விளக்கம். இத்தகைய தமிழ் குடியின் மரபு வழியாக வந்த தமிழை தாய்மொழியாகக் கொண்டு பேசுபவர்கள் நாம். தமிழ் மொழியின் வரலாறு அதற்கு சான்றாக உள்ளது.

கொடிய ஆழிப் பேரலைகளால் உலக வரைபடத்திலிருந்து மூழ்கடிந்த தமிழகத்தின் தென் பகுதியான 'குமரிக் கண்டம் (லெமூரியா கண்டம்)' தமிழர்கள் வாழ்ந்த பகுதி என்று தொல்லியல் துறையின் மூத்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

சங்ககால தமிழ் இலக்கியங்கள் இவற்றுக்கு சான்றாக உள்ளது. தமிழ்நாட்டில் பிறந்த அனைவரும் ஏதேனும் ஒரு தருணத்தில் எந்த வழியிலாவது குமரிக்கண்டம் என்ற வார்த்தையினை கேளாது இருந்து இருக்க முடியாது.

நாம் பேசும் தமிழ் மொழி உலகின் தொன்மை மிக்க பல மொழிகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் ஒன்று என்பது நாம் பெருமைப்படக்கூடியது.

எழுத்து வடிவத்தை தன்னகத்தே கொண்டில்லாத மொழி வரலாற்றில் சிறப்புத்துவம் அடைந்ததிலை. ஆனால் பிராமி மற்றும் வட்டெழுத்துக்கள் மூலம் தமிழ் எழுத்துக்கள் தோன்றியதன் வரலாறை அறியமுடிகிறது.

ஏற‌த்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பெருமைமிக்க பழந்தமிழ் மொழியை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்றால்(?) சட்டென்று 'பயன்பாட்டின் அளவு குறைவே' என்று சொல்லிவிடும் அளவிற்கு உள்ளது.

நாம் இங்கு பேசும் மொழியில் எவ்வாறு மற்ற மொழிகளின் தாக்கம் உள்ளது என்றால், ஆங்கில மொழியானது அவ்வினத்தவரின் கலாச்சாரக் கவர்ச்சி மோகம் நம்மை எவ்வாறு இழுத்ததோ, அதே போன்றே அவ்வினத்தவரின் மொழியும் நம்மை இழுத்துவிட்டது.

ஆங்கில மொழி சமுதாய மாற்றத்தை உருவாக்கியதென்றால, சம‌ஸ்கிருத மொழி ஆன்மீகத்தின் விளிம்பாக நுழைந்து கொண்டுள்ளது.

இங்கு பேசும் மொழி, தமிழ் மொழியில் இருந்து 40 சதவிகிதமும், சமஸ்கிருத மொழியில் இருந்து 25 சதவிகிதமும், ஆங்கில மொழியில் இருந்து 35 சதவிகிதமும் கலவைகளால் ஆன எழுத்துக்களையும், வார்தைகளையும் கொண்ட ஒரு புது மொழியாக உருவெடுத்துள்ளது.

இதைப் போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் என 90 சதவிகிதம் பிறமொழிச் சொற்களாகவே இருக்கின்றன. இந்த சூழலை நாம் வெகு மதிப்பாகவே இன்று கருதுகிறோம். நம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய இழுக்காகும்.

தற்பொழுது தமிழர் பயன்படுத்தும் பெயர்களில் இரண்டு சதவிகிதம் பெயர்கள் கூட பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களாக இருப்பதில்லை. பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களைச் சூடிக்கொள்ளச் சொன்னால் முகஞ்சுளிப்பவர் அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் பொருளை உணர்ந்திலர்.

தமிழர் தமிழ்மொழியிலே தம் பெயர்களைச் சூட்டிக்கொள்வதற்கு வேண்டிய தமிழ்ப்பெயர்களே இல்லை என்ற நிலை இங்கு இல்லை. மாறாக அறியாமையினாலே பிறமொழிப் பெயர்களைத் தமிழ்ப்பெயர்களென மயங்கிச் சூட்டிக்கொள்கின்றனர்.

இன்றைய மேலைநாட்டு நாகரீக கால ஓட்டத்தில் தமிழ்ப்பெயர்களை அடையாளங்காண்பது எளிதான ஒன்றே. மேலும், இதற்கு உதவியாக தமிழ்ப் பெயர்ப்பட்டியலை உருவாக்கும் முயற்சியில் தமிழ் ஆர்வலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கு முதலில் நாம் தமிழ் மொழியின் அறுசுவையை ருசித்துப் பார்க்க வேண்டும். சுவை அறிந்துவிட்டால் பின்னர் “ருசி கண்ட பூனையைப் போல்” தமிழையே சுற்றிச் சுற்றி வருவோம்.

உலக மொழிகளில் தமிழ் மொழி 12 உயிரெழுத்துக்களையும், 18 மெய் எழுத்துக்களையும், 216 உயிர்மெய் எழுத்துக்களையும் ஒரு 'ஃ' என்ற ஆய்த எழுத்தையும் கொண்டு மொத்தம் 247 எழுத்துக்களை கொண்டுள்ளது.

"தமிழ் மொழி மனிதனைப் போன்று உயிரையும், மெய்யையும் தன்னகத்தே உடையது. இங்கு எழுத்தானது உயிர் இல்லாமல் மெய்யில்லை, 

மெய்யில்லாமல் உயிரில்லை". இந்த இரண்டில் ஒன்று இல்லை என்றாலும் மொழியில்லை. சற்று உள்நோக்கிப் பாருங்கள் தமிழின் சுவையை உணர்வீர். வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் என்ற எழுத்துகளின் மென்மையை எடுத்துக்கூறும் ஒரே மொழி தமிழ்மொழியே ஆகும்.

ஆங்கில மொழியில் உள்ள வார்த்தைகள் இன்று நாம் பேசும் மொழியில் எவ்வளவு இணைந்துள்ளது என்பதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். 

ஆங்கிலம் பேசுவதை நாகரிக‌த்தின் விளிம்பாகக் கருதுவதே இதன் மூல காரணம். பிற மொழிகளை அனைவரும் நன்கு கற்க வேண்டும், பேச வேண்டும், அதில் புலமை பெற வேண்டும் என்ற கருத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, மேலும் அதனை முழுமையாக வரவேற்கிறோம். 

நம்மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களும், அயல் நாடுகளிலும் சென்று தொழில் செய்வதற்கு அது மேலும் வலு சேர்க்கும் என்பதில் எங்களுக்கு வேற்று கருத்தில்லை.

இன்று நாம் தாய்மொழி தமிழ் அல்லாதவர்களிடம் பேசும்பொழுது, அவர்களின் தாய் மொழியிலோ (தெரிந்திருக்கும் பட்சத்தில்) அல்லது உலக பொது மொழியான ஆங்கிலத்திலோ பேசுகின்றோமே அது எவ்வாறோ, அதே போன்று தாய் மொழி தமிழ் என்பவர்களிடத்தில் நாம் தமிழிலா பேசுகின்றோம் என்று சற்று யோசியுங்கள்(!) நிச்சயம் இல்லை. 

தமிழை நாம் முதன்மை மொழியாகக் கருதாமல் வேரு எவர் கருதமுடியும்(?) தமிழ் வார்த்தைகளை நாம் உபயோகிக்காமல் வேறு எவர் உபயோகிக்க முடியும்(?) உலகம் முழுவதும் உள்ள தமிழர்களில் 50 சதவிகித மக்கள் தமிழகத்தில் உள்ளனர். மற்றவர்கள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ், பர்மா போன்ற பல நாடுகளில் வசிக்கின்றனர்.

இங்கெல்லாம் வாழும் தமிழர்கள் தூய தமிழையும், தமிழ்ப் பெயர்களையும், தமிழ் வார்தைகளையும் நடைமுறையில் கொண்டுள்ளனர். பிற மொழி கலக்காத தூய தமிழ் மொழிக்கு முதன்மை தருகின்றனர்.

சிங்கப்பூர் விமான நிலையத்தின் நுழைவாயிலில் தமிழ்மொழிக்கு சிறப்பு தரும் வகையில் 'நல்வரவு' என்ற தமிழ் வார்த்தை இடம்பெற்றுள்ளது. மொரிசியஸ் நாட்டு உருபா தாள் மற்றும் நாணயங்களிலும் தமிழ் எண்களும், தமிழ் எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன.

நமது தமிழகத்திற்கு வெகு அருகாமையிலுள்ள இலங்கையின் தென் பகுதியில் வாழும் தமிழ் மக்கள் தமிழ் மொழிக்கு தரும் முதன்மையைக் கண்டால் நாம் தமிழர்கள்தானா என்ற ஐயம் ஏற்படும் அளவிற்கு உள்ளது. 

அவர்களின் பெயர்களிலும், புழக்கத்தில் சாலைகளின் பெயர்களிலும், அங்காடிகளின் பெயர்களிலும் தூய தமிழ் மட்டும் வாழ்ந்து கொண்டு உள்ளது.

மேலாக இவ்விரு நாட்டு மக்களின் தாய்மொழி தமிழாகினும்(!) அவர்கள் சந்தித்துப் பேசுமாயின் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் நிச்சயம் தேவை. சந்தித்துப் பேசியவர்களுக்கு அது நன்கு தெரியும்.

இங்கு அன்றாட வாழ்க்கையில் நாம் இல்லங்களிலும், பொது இடங்களிலும் உபயோகிக்கும் வார்த்தைகளைப் பாருங்கள்.

காலை முதல். . . குட்மார்னிங், டீ, பேப்பர், பேஸ்ட் பிரஷ், சோப்பு, டிபன், பஸ் ஸ்டாண்டு, டிக்கெட், ஸீட், ஸ்டாப்பிங், ஆபிஸ், லன்ஞ், ஸ்கூல், வாட்டர் பாட்டில், புக்ஸ், ரேஷன், மார்க்கெட், கடைகளின் பெயர்ப் பலகையில் ஆங்கிலம், நிறுவனங்களின் பெயர்கள் என்றெல்லாம் பட்டியல் நீள்கிறது.

ஈவ்னிங், டீ, டிவி, போன், ஃபேன், லைட், இறுதியாக குட் நைட் சொல்லிவிட்டு அத்தோடு குட் நைட்டையோ அல்லது ஆல் அவுட்டையோ பொருத்திக்கொண்டு உறங்குகிறது.

மறுநாள் 'தமிங்கில' வாழ்க்கை விடியலை நோக்கி... இந்த வாழ்க்கை சூழ்நிலையில் தமிழையோ, தமிழ் வார்த்தைகளையோ நினைக்ககூட நேரமில்லை. ஆம் அதுதான் உண்மை.

இத்துணை நிலையிலும் இன்று தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக உழைப்பவர்கள் எண்ணிக்கை சிறிதல்ல. இந்த எந்திர வாழ்க்கைக்கு மத்தியிலும் தமிழ் மொழிக்கு என்று ஒரு தனிச் சிறப்பை உருவாக்க அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் முயன்று வருகின்றனர்.

அவற்றுக்கு சான்றாக இன்றைய கணினித்துறையிலும், அலைபேசிகளிலும் தமிழ் மொழி கோலோச்சி உள்ளதே ஆகும். அவற்றின் மூலம் தமிழ் மொழியினை இன்றைய கணினித்துறையில் உள்ளவர்களும் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் இங்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் இணைந்து தமிழ் மொழியின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் வகையில் ஒன்றிணைந்துள்ளனர். அதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலை தூய தமிழை நம்மிடத்தில் துளிர்விட செய்துள்ளது.

எந்த ஒரு செயலும் நடைமுறையில் பயன்பாட்டிலும் ஈடுபாட்டிலும் கொண்டு வரும் பொழுது அது பழகிப்போன ஒன்றாகவே ஆகிவிடும் என்பது நாம் நன்கு அறிந்த ஒன்றேயாகும். மேலும் எந்த செயலின் துவக்கமும் முதலில் இல்லங்களில் வாயிலாக துவங்குமேயானால் வெற்றியின் விளிம்பை அடைவது உறுதி.

ஆகவே தூய தமிழ் வார்த்தைகளின் முக்கியத்துவத்தை முதன்மையாக்க ஒரு ஆழ்ந்த, நீண்ட சுவாசித்தல் மூலம் நிரப்புவோம் தூய தமிழை உள்ளங்களில்... அதே தருணத்தில் ஆழ்ந்து சுவாசித்த தூய தமிழை பேசி மகிழ்வோம் இல்லங்களில்...

நன்றிகள்.