Thursday, 28 February 2013

தமிழ் நாட்டின் பண்டைய ...!

பாம்படங்கள் தமிழ் நாட்டின் பண்டைய பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகும். 


இருபது வருடங்களுக்கு முன்பு கிராமத்தில் நம் எல்லார் வீட்டிலும் பாட்டிமார்கள் ..காது தொங்கும் நகைகளை அணிந்த வண்ணம் இருப்பார்கள் ..

இதனை நாம் தண்டட்டி ,பாம்படம் என்று அழைக்கிறோம் 

சிறுவயதிலேயே ....காதுகுத்தி ...மரத்துண்டு பயன்படுத்தி .அல்லது குச்சம் காளி தொங்க விட்டு .கொஞ்சம் கொஞ்சமாக காதை நீளமாக வடித்து .. தண்டட்டி ,பாம்படம் அணிந்து கொண்டனர் .

இதை அணிந்த பாட்டிமார்களை பார்க்கும்போது காது விழுந்து விடுமோ என்ற பயம் ஏற்படும் ..

பாம்படம் என்பது பந்து,கனசதுரம், வட்டங்கள் மற்றும் எதிர் எதிர் பக்கங்களும், கோணங்களும் ஒன்றாக இருக்கும் இணைவகவடிவங்கள் கொண்ட ஒரு வடிவியல் வடிவமைப்பில் செய்யப்படுபவை. ஒரு பறவை அல்லது ஒரு பாம்பு போல தோற்றம் அளிக்கும்.அரிதுளுவன் ..பன்னீர் செம்பு ..தாமரை கால் ,சுண்ணா கலயம் என்ற பல வகைகள் உண்டு ..

தண்டட்டி என்பது செவ்வகங்கள் மற்றும் முக்கோண வடிவங்கள், அரைவட்டம், கோளங்கள் கொண்ட ஒரு வடிவியல் அமைப்பைக் கொண்டது. இது முப்பரிமாண அமைப்பில் இருக்கும். ஒவ்வொரு வகையான வடிவங்களை உள்ளடக்கிய இந்த பாம்படங்களும் ஒரு அறிவியல் படைப்பே ஆகும். 

இந்த நகைகள் உள்ளீடற்ற ..இலகுவான அமைப்பில் செய்யப்படும் ..மெழுகு வார்த்து ...உட்பொருளாக சேர்கப்படும். 

அட்டியல் ,காசு மாலை ..போன்ற ஆபரணங்களையும் இப்போது காண முடியவில்லை .

இன்று வெகு சில பாட்டி மார்கள் மட்டுமே பாம்படம் அணிந்து நம்மோடு இருகிறார்கள் ..

இன்னும் சிலவருடங்கள் கழித்து நாம் புகைபடத்தில் மட்டுமே இதை காணமுடியும் .
நன்றிகள்.

Wednesday, 27 February 2013

நம் இனத்தாரும் நின்று இதை...........!

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது.


இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது யோகம் (அதிர்ஷ்டம்).

தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது.

எப்போதோ வந்த ஒரு  ஆழிப்பேரலையால் (சுனாமியால்) உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே ஆழிப்பேரலையால்  மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 ஆழிப்பேரலையால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே.

இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் ஆழிப்பேரலையின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது.


படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிசுத்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ),

அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது.

இந்த சங்க கால கட்டிடம் ஆழிப்பேரலையால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு ஆழிப்பேரலையால்   அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது.


அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது. "சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.

கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவலிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது.

இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும்.


அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும்.
நன்றிகள்.

Tuesday, 26 February 2013

ஒரு புரியாத புதிர்............. !

யாளி - ஒரு புரியாத புதிர் !


தென்னிந்தியக் கோவில் சிற்பங்களில் மட்டும் காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் சிலை என்பது தான் பலரது எண்ணம்.

சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கப்பெற்றுள்ளது.

சிங்கத்தின் தலை கொண்டதை " சிம்ம யாளி " என்றும், ஆட்டுத்தலை கொண்டதை " மகர யாளி " என்றும், யானை முகத்தை "யானை யாளி " என்றும் அழைக்கிறார்கள்.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சச உடல் அமைப்புடன் "டைனோசர்" என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் எலும்புகள், முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள்.

பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது. 

அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது.

சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள். அப்படியானால் இவை போருக்கு பயன்படுதப்பட்டிருக்குமா?

இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாளிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை "யாளி வரிசை " என்றே அழைக்கிறோம்.

ராச ராசன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை கோயிலில் கூட இந்த யாளிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்க முடிகிறது.

மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாளியின் சிலையும், அந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட யாளி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை.

குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாளி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம். அது தான் யாளி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை.

யாளிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன? யாளியில் எத்தனை வகைகள் உள்ளன? பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா?

யாளி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது? நமது சிறிய கோவில்களிலும் யாளியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா? யாளியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? யாளி என்ற உயிரினம் கற்பனையா? 

இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? யாளி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன?

குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்?

பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா?

எதற்குமே பதில் இல்லை !!! 
நன்றிகள்.

Monday, 25 February 2013

தமிழுக்கு ஏன் அந்த.............!

தமிழுக்கு ஏன் அந்தப் பெயர்?


உலகின் பழைய மொழிகள் ஏழு. அதில் இப்போதும் வழக்கில் இருக்கும் மொழிகள் மூன்றுதான். அதில் ஒன்று தமிழ்.

இடமிருந்து வலமாக எழுதப்படும் மொழிகளில் பழைய மொழி தமிழ் மட்டும்தான். அதாவது தமிழ் எப்படி எழுதப்பட்டதோ, அதே போல்தான் இன்று உலகின் பல மொழிகள் எழுதப்படுகின்றன.

இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டுப் பதிவுகளில் அறுபதாயிரத்திற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.

தமிழ் பிராமியில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் எகிப்து, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் கிடைத்துள்ளன. இவற்றின் வயது கி.மு.300. அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னரும் தமிழ் இருந்திருக்கிறது.

திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கும் முந்தையது. ஆனால், அதில் உள்ள சொற்களை நாம் இப்போதும் பயன்படுத்தி வருகிறோம். உதாரணம்:
‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு’

‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்’

தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தி எண்களும் எழுதப்பட்டன.

கோடிக்கு மேல் குறிப்பிடுவதானால், ஆங்கிலத்தில் பத்து கோடி, நூறு கோடி என்றுதான் எழுத வேண்டும். அவற்றிற்கென தனிச் சொற்கள் கிடையாது. ஆனால், தமிழில் உண்டு. கோடி கோடி என்பதை பிரமகற்பம் என்ற ஒரு சொல்லில் எழுதிவிடலாம். அதேபோல பின்னத்தில் 320ல் ஒரு பங்கைக் குறிப்பது வரை ஒரு சொல்லில் குறிப்பிட முடியும் (முந்திரி).

தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி என்பதைக் குறிப்பிடும் தம்-இழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று என்றும், தகுதியான பேச்சு முறை என்பதைக் குறிக்கும் தம் -மிழ் என்ற சொல்லே தமிழ் என ஆயிற்று எனவும் செக் நாட்டு அறிஞர் கமில் சுலவெபில் கருதுகிறார்.

வன்மையான ஓசை உடைய எழுத்துக்கள், மென்மையான ஓசை உடைய எழுத்துக்கள், இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசை உடையவை என்பதை உணர்த்தும் வகையில் தமிழின் மெயெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொன்றிலிருந்தும் ஓர் எழுத்தை எடுத்து (த-வல்லினம், மி- மெல்லினம், ழ்- இடையினம்), தமிழ் என மொழிக்குப் பெயரிடப்பட்டுள்ளது. உலகில் பெயரைக் கொண்டே மொழியின் தன்மையை அறியும் பெயர் வேறு எந்த மொழிக்கும் கிடையாது.

இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ்.

உலகில் நான்கு நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது. 
நன்றிகள்.

Sunday, 24 February 2013

கல்லிலே கலை வண்ணம்..............!


கல்லிலே கலை வண்ணம் கண்டான் தமிழன் !


யானையின் தும்பிக்கையும், கால்களும் கனமாக இருக்க வேண்டும் என்பதற்காக மங்கைகளின் இரண்டு கால்களும் ஆடைக்குள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும் போது கிடைக்கும் கனத்தை கச்சிதமாக பொருத்தியாகிவிட்டது,

தும்பிக்கையை தந்த படி நின்றுகொண்டிருக்கும் அந்த பெண், அந்த நிலையில் நிற்க முடியாது என்பதற்காக இன்னொரு பெண்ணை தாங்கியபடி நிற்கிறாள்.

யானையின் கண்ணிற்கு பெண்ணின் மார்பு , காது வளைவிற்கு ஒருவரை ஒருவர் தாங்கி நிற்கும் கைகள் !.

யானையின் கழுத்துப் பகுதி வளைவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெண் கால் நீட்டி உட்கார்ந்த நிலையில் இருக்கிறார், கால் நீட்டி இருப்பதால், குறுக்கில் இருக்கும் பெண்ணின் மீது தடுத்து, ஆடை சற்று விலகி அது யானையின் தந்தமாகிவிடுகின்றது !

யானையின் வாய் திறந்த நிலையில் இருப்பதை போன்று காட்ட ஒரே ஒரு பாதம் அந்த இடத்தில் கொடுத்தாகிவிட்டது.

கால் மடக்கி தொங்கிய நிலையில் அமர்ந்திருக்கும் பெண்,யானை நடந்து முன்னேறி செல்கின்றது என்பதையும் அழகாக காட்டுகிறது.

அதன் வால் பகுதி ஒரு மங்கையின் கால் பகுதி .

அடடா என்ன ஒரு கற்பனை திறன் இருந்திருக்க வேண்டும்!!!
நன்றிகள்.

Saturday, 23 February 2013

வாழ தமிழ் போதுமா..?

தமிழர் வாழ தமிழ் போதுமா..?


தமிழுக்கு மிகுந்த சோதனைகள் வாய்த்துள்ளதாகத் திரும்பத் திரும்பக் குரல் எழுப்பப்பட்டு வருகிற ஒரு காலகட்டத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். தமிழுக்கு  அப்படி என்னதான் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்று பார்ப்போம்.

ஒரு வகையில் பார்த்தால் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் தமிழ் பல ஏற்றங்களைக்  கண்டிருக்கிறது. உலகெங்கிலும் சுமார் எட்டு கோடித் தமிழர்கள் இன்று வாழ்கிறார்கள். இவர்கள் அனைவருமே தமிழ் பேசத் தெரிந்தவர்கள்.

பல தலைமுறைகளாக வெளிநாடுகளில் தங்கி அந்நாட்டு மொழியையும் வேறு மொழிகளையும் கற்றுக் கொண்டுவிட்டு, தமிழைப் பயன்படுத்தவே முடியாத சூழலில் தமிழ் பேசாத தமிழர்களும் இருக்கிறார்கள். அவர்களின் மொத்த எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தாண்டாது என்று கொள்ளலாம்.

இப்படியொரு அதிக அளவில் தமிழ் பேசத் தெரிந்தவர்கள் தமிழினம் தொடங்கிய காலம் முதல் இப்போதுதான் இருக்கிறார்கள். உலக மக்கள் தொகை பெருக்கத்தின் நேரடி விளைவாகவும் இதனைப் பார்த்தால் இதற்கு தனிச்சிறப்பு இருப்பதாகவும் கொள்ளமுடியாது.

ஆனால் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கையும் இப்பொழுது உள்ள அளவிற்கு இதுநாள்வரை  இருந்ததில்லை என்பதை ஒரு பலமாகவும் பார்க்கலாம். தமிழில் பத்திரிகைகள், புத்தகங்கள் எண்ணற்ற அளவில் ஆண்டுதோறும் பிரசுரமாகின்றன.

தமிழ்புத்தகங்களின் மொத்த ஆண்டு விற்பனைத் தொகை ரூ.80 கோடியைத் தாண்டிவிட்டது. எட்டு கோடி தமிழர்களின் புத்தகச் செலவு இதுதான் என்று பார்க்கும் பொழுது இந்த தொகை அவ்வளவு பொருட்படுத்தத்தக்கதாக இல்லை என்று கூறலாம்.

ஆனால் இவர்களில் ஆறரை கோடித் தமிழகத் தமிழர்கள்தான் புத்தகங்களை அதிகம் வாங்கியவர்கள். அது சுலபமான யூகம்தான். தமிழகத் தமிழர்களிலும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இருபது சதவிகிதத்தினருக்கு மேற்பட்டவர்கள்.

எழுதப் படிக்கத் தெரிந்தவர்களில் பலரும் புத்தகம் வாங்கும் பழக்கத்தை இன்னமும் கைக் கொள்ளாதவர்கள் என்றெல்லாம் பார்க்கும் பொழுது புத்தக விற்பனையின் ஏறுமுகம் நம்பிக்கை அளிப்பதாகவே உள்ளது. நூலகங்கள் தவிர ஒரு சிறுபான்மையினரே புத்தகங்கள் வாங்குகின்றனர் என்றாலும் தமிழ்ப் புத்தகம் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் பெருகி வருவதைக் கண் கூடாகப் பார்க்கலாம்.

தமிழ் நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்துள்ளது. கணினியிலும் தமிழ் காலந்தாழ்த்தாது நுழைந்து விட்டது.

ஆனால் தமிழைக் கல்வி நிலையங்களில் கற்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இளைஞர்கள் விருப்புடன் தமிழைக் கற்பதில்லை. மேடைகளில், தொலைக்காட்சிகளில் தமிழ் நிகழ்ச்சி நடத்துபவர்கள் தமிழ் சொற்களைச் சரியாக உச்சரிப்பதில்லை.

ஆங்கிலத்தை விரும்பி உபயோகிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இரண்டு தமிழர்கள் சந்தித்தால் அவர்கள் ஆங்கிலத்தில் உரையாடவே விரும்புகிறார்கள். தமிழ் மத்தியில் ஆட்சி மொழியாகவில்லை. தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்களில் தமிழ் போதிக்கப்படுவதில்லை.

அவ்வாறே போதிக்கப்படும் இடங்களிலும் மேல்நிலை வகுப்புகளில் தமிழ் இடம்பெறுவதில்லை. அங்கெல்லாம் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. குழந்தைகள் அப்பா அம்மா என்றெல்லாம் அழைக்காமல் டாடி, மம்மி என்று அழைக்கின்றனர். சுருங்கக் கூறினால் தமிழின் மிகப் பெரும் அச்சுறுத்தலாக ஆங்கிலம் கருதப்படுகிறது.

தனித்தமிழை வேண்டியவர்கள் வடமொழி மீதுதான் வெறுப்பு கொண்டிருந்தனர். ஆங்கிலத்தின் மீது அல்ல. இப்பொழுது குறைந்த அளவில் மட்டுமே வடமொழி தமிழுக்கு ஊறு விளைவிக்கும் மொழியாகக் கருதப்படுகிறது. வடமொழிச் சொற்களைத் தமிழில் கலக்கக்கூடாது என்பது பலரின் வேண்டுகோள்.

இந்த வேண்டுகோள் பெருமளவில் நிறைவேற்றப்பட்டதாகவே கொள்ளலாம். மணிப்பிரவாள நடை வழக்கொழிந்து போய்விட்டது. வட மொழிச் சொற்களுக்கு மாற்றான தமிழ்ச் சொற்களைப் பலரும் விருப்புடன் எடுத்தாளத் துவங்கிவிட்டனர். வட மொழியினால் தமிழுக்கு அபாயம் எதுவும்  இல்லை.

ஏனெனில் தமிழும் வடமொழியும் தனித்தனியேயான உள்ளார்ந்த குணங்கள் கொண்டவை. வடமொழியில் இதிகாசங்களும் வேதங்களும் வளர்ந்தன. தமிழில் இலக்கியங்களும் நீதி நூல்களும் படைக்கப்பட்டன. பக்தி இலக்கியங்கள் தோன்றும்வரை இந்த நடைமுறை இருந்திருக்கிறது. வட மொழி வழக்கொழிந்து போனதற்கும் தமிழ் இன்றளவும் மக்கள் மொழியாக இருப்பதற்கும் இவையும் கூட காரணங்கள்  எனலாம்.

ஆனால் தமிழர்கள் தங்களுக்கு வைத்துள்ள பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இருக்க வேண்டும் என்பதில் கருத்து வேற்றுமைகள் உள்ளன. இந்து சமயத்தைச் சேர்ந்த தமிழர்கள் இந்துக் கடவுள்களின் மற்றும் மகான்களின் பெயர்களைத் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் வைப்பதால் அவை தமிழ்ச் சொற்களாக இருப்பதில்லை.

பெரும்பாலும் அவை வடமொழி சார்ந்தவை. ஆனால் அப்பெயர்களை வைப்பவர்கள் சமய இறையுணர்வு காரணமாகச் செயல்படுகிறார்களேயன்றி அவர்கள் தமிழ் உணர்வற்றவர்கள் என்று கொள்வது தவறான கற்பிதம். தமிழர்களான இசு(ஸ்)லாமியர்கள், கிறிசு (ஸ்)த்தவர்கள், சமணர்கள் போன்றோரும் தங்கள் இறைவழிபாட்டு பண்பினையொட்டி சமயப் பெயர்களைச் சூட்டுகிறார்கள்.

அப் பெயர்களும் அந்நிய மொழியிலிருந்து பெறப்பட்டவை. அவற்றுக்கும் மூலம் தமிழ் கிடையாது. கார்ல் மார்க்சு(ஸ்), சாக்ரடீசு(ஸ்), இங்கர்சால் போன்ற அறிஞர்களின் பெயர்களை விரும்பி வைத்துக் கொள்பவர்களும் உள்ளனர்.

அப்பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல. எனவே இந்துக்கள் மட்டும் தங்கள் இறை நம்பிக்கை அடிப்படையில் அமைந்த பெயர்களை அவை வடமொழி மூலம் கொண்டிருக்கின்றன என்கிற காரணத்தால் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறுவது எவ்வகையிலும் நியாயமானதல்ல.

அது போன்றே ஷ,ஜ,ஸ ஆகிய எழுத்துகள் வந்தால் அவற்றுக்குப் பதிலாக ச என்ற எழுத்தையும் ஹ வந்தால் அதற்குப் பதிலாக அ என்ற எழுத்தையும் போட்டு எழுதுகிற பழக்கம் தமிழ்ப் பற்றை நிரூபிப்பதாகக் கொள்வது. வடமொழியில் மட்டும் இன்றி இந்த எழுத்துகள் பாரசீகம், அரபு, ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பிய மொழிகளிலும் காணப்படுகின்றன.

எனவே பிறமொழிச் சொற்கள் கொண்டுள்ள ஒலியினை வரி வடிவத்தில் தமிழில் தர வேண்டும் என்றால் இந்த எழுத்துகளைக் கட்டாயமாக நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். இதை மொழி பெயர்ப்பு இலக்கியம் அசட்டை செய்ய இயலாது. ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என்று எழுதுவதால் என்ன பயன்? இவரல்ல அவர் என்கிற முடிவிற்கு வருவதைத் தவிர?

ஒருவரது பெயரையே ஒப்புக்கொள்ளாதவர்கள் அவருடைய படைப்புக்கு எத்தகைய நியாயத்தை வழங்கி விட முடியும்? நம் மொழிக்குப் பிறர் இத்தகைய சிதைவுகளைச் செய்தால் நாம் மனம் ஒப்புவோமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆங்கிலேயர்கள் நம் ஊர் பெயர்களைச் சிதைத்ததை நாம் மீட்டெடுக்க முயற்சிக்கிறோம். தனித்துவம் மிக்க ழ என்கிற தமிழ் எழுத்து ஆங்கிலத்தில் LA என்று எழுதப்படுவதைவிட zha என்று அதன் உச்சரிப்பு கெடாமல் வரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இதே ஆற்றலை நாம் மற்ற மொழிகளுக்கும் தர வேண்டுமல்லவா?

வடமொழி உள்ளிட்டு எந்த மொழி மீதும் வெறுப்பினை வளர்த்துக் கொள்ளக் கூடாது. மொழிகள் பரஸ்பரம் கொள்கிற பாதிப்புகள் நாகரிகத்தின் அடையாளம். "பிற மொழிகள் மீது பகைமை கொள்ளாதே பாப்பா" என்கிற வரியையும் பாப்பா பாட்டில் சேர்த்துப் படிக்க வேண்டும்.

ஆங்கிலத்தைப் பொறுத்தவரை அதன் மீதான எதிர்கொளல் சிந்தித்துச் செயல்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. ஆங்கிலத்தை விரும்பிக் கற்பவர்களாயும் அதைப் பயன்படுத்துபவர்களாயும் உள்ள தமிழர்களை ஆங்கில மோகிகள் என்று வர்ணிப்பது பிழை. மோகம் என்பது பயனற்ற அர்த்தமற்ற விளைவுக்கு இட்டுச் செல்கிற மனோபாவத்தைக் குறிக்கும்.

தேர்ச்சி பெறுவதென்பது காலத்தின் இன்றியமையாமை ஆகும். ஆங்கிலத்தில் இரண்டு தமிழர்கள் ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் உரையாடுவது தவறு என்று பேசப்பட்டு வருகிற காலம் இது. ஆங்கிலத்தில் உரையாடினால் தமிழ் மெல்லச் சாகும் என்று சொல்லுமளவுக்குத் தமிழ் பலவீனமான மொழி அல்ல.

தமிழர்களும் தமிழைத் தவிக்க விடுவதற்காக ஆங்கிலம் பேசுவதில்லை. தேவை கருதியும் தன்னம்பிக்கையின் அடையாளமுமாயும்தான் அவர்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள். அவர்கள் முழுதும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருப்பதில்லை என்பதையும், அது இயலாத ஒன்று என்பதையும் கூட கவனிக்க வேண்டும்.

இன்று தமிழர்களின் சமூக, பொருளாதார நிலை உயர்ந்திருக்கிறதென்றால் அதற்கு மிக முக்கிய காரணம் ஆங்கிலக் கல்வி. தமிழர்களின் வாழ்வில் வளம் சேர்ப்பது ஆங்கிலம்தான். தமிழர்களாகிய நாம் நம்மிடையே உள்ள பிற வளங்கள் என்ன என்பதைப் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும்.

நம்மிடம் இயற்கை வளங்கள் குறைவு. வற்றாத நதிகள் என்று எதுவும் இல்லை. குடிநீருக்கே பிற மாநிலங்களை யாசிக்க வேண்டிய நிலை. ஏற்றுமதி செய்யத்தக்க கனிமப் பொருட்களோ நுகர் பொருட்களோ கணிசமான அளவில் இங்கு கிடையாது. 

நாடு என்ப நாடாவளத்தன நாடல்ல, நாட வளம் தரும்நாடு என்றார் வள்ளுவர். நமக்கே இயற்கையாக வாய்க்கப்பெற்ற வளம்தான் நம்முடையது என்னும் பட்சத்தில் நம்மிடம் இருப்பதெல்லாம் மனித வளம்தான். நாம் மற்றவரிடமிருந்து எதையாவது பெறவேண்டுமென்றால் நாம் எதையாவது அவர்களுக்குக் கொடுக்க வேண்டுமல்லவா?

நம்மால் கொடுக்க முடிவது மனித வளத்தைத்தான். காலம் காலமாகத் தமிழர்களாகிய நாம் நம் உழைப்பைத்தான் மற்றவர்களுக்குக் கொடுத்து வந்திருக்கிறோம். பிஜி, ஆப்ரிக்கா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்குக் கூலி வேலை செய்பவர்களைத் தருபவர்களாக தமிழகம் இருந்திருக்கிறது.

ஆனால் இன்று அந்த அவல நிலை மாறி பிற நாடுகளுக்கு நாம் அறிவு சார்ந்த துறைகளில் வேலை செய்வதற்காக தமிழர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் ஆங்கில அறிவுதான். ஆங்கிலத்தில் நம்மவர்கள் பேசவும் எழுதவும் பெற்ற தேர்ச்சியின் விளைவே இது. இந்தத் தேர்ச்சியை நாம் எவ்வாறு பெற்றோம்? 

பல வருடங்களாக ஆங்கிலம் கற்றுப் பேசி எழுதிப் பெற்ற தேர்ச்சி இது. எனவே ஆங்கிலத்தில் பேச தேர்ச்சி பெற வேண்டுமென்றால் தமிழர்கள் பிற தமிழர்களிடம்தான் பேச வேண்டும். தமிழ் தெரியாதவர்களிடம் மட்டுமே ஆங்கிலம் பேச வேண்டுமென்றால் இந்தத் தேர்ச்சி வந்திருக்காது.


சிறு வயது முதல் ஆங்கிலம் படித்தாலும் ஆங்கிலமே பேசியிராதவர்கள்  இருபது வயதுக்கு மேல் வேலை நிமித்தமாக திடீரென சரளமாக ஆங்கிலத்தில் உரையாட முடியுமா?

மொழிப் பயிற்சி சிறு வயதிலிருந்தே வருவது நல்லது. நான் மம்மி என்று கூப்பிடுகிறேன். அதனால் நீ கவுன் அணிந்து முள் கரண்டியால் எனக்கு ரொட்டியை ஊட்டு என்றெல்லாமா அக்குழந்தை தன் தாயிடம் கேட்கிறது?

தமிழ் உணர்வுடன் பண்பாட்டுடன்தான் அக்குழந்தை பேசுகிறது. மம்மி என்பது அக்குழந்தையின் ஆங்கில மழலை. நீ எனக்கு அம்மா என்ற சொல்லைக் கற்றுக் கொடுத்தாய், நான் மம்மி என்ற சொல்லைக் கற்று வந்திருக்கிறேன் பார் என்று அது பெருமிதத்துடன் சொல்வதைத் தமிழுக்கு எதிரான செயலாகப் படம் பிடித்துக் காட்டுவதும் ஆங்கிலத்தை விட்டுத் தமிழில் பேசுகிற குழந்தைகளுக்கு அபராதம் போடுகிற ஆங்கில வழிக் கல்வி தரும் பள்ளி ஆசிரியர்களின் கொடூரமும் மொழி பற்றிய புரிதலின்மை என்கிற ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகும்.

மம்மி, டாடி என்பதெல்லாம் சரி, நீ அம்மா அப்பா என்றுதான் கூப்பிட வேண்டும் என்று அன்பாகக் கூறினால் அக்குழந்தை ஒரே நொடியில் தன்னை மாற்றிக் கொள்ளும். 

ஆங்கிலம் தமிழ்ச் சமூகம் வளர்ந்துள்ளது. ஆங்கிலம் போன்ற ஒரு மொழியின் வளத்தையும் உபயோகத்தையும் அம்மொழி தரும் வாய்ப்புகளையும் தமிழ் தரவேண்டுமென விரும்பும் நாம் ஆங்கிலத்தை ஒதுக்கி வைப்பது கூடாது.

இந்தியாவின் எதிர்காலத்தை தொலைநோக்குடன் பார்த்த காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார் போன்றோர் நம்மை அடிமைப்படுத்தியவன் ஆங்கிலேயன் என்ற ஒரு காரணத்திற்காக ஆங்கிலத்தைப் பகைத்துக் கொள்ளுமாறு போதிக்கவில்லை. தலித் மக்களுக்கு ஆங்கிலக் கல்வி அவர்களது பின்தங்கிய நிலைகளிலிருந்து விடுதலையை அளிக்கும் என்று நம்பினார் அம்பேத்கர்.

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான பாரதிக்கு மட்டும் ஏனோ அச்சிறப்பு மிக்க கண்ணோட்டம் வாய்க்கவில்லை. ஆங்கிலக் கல்வியையும் ஏன், தன்னிடம் ஆங்கிலம் பேச வந்த தமிழர்களையும் சினந்தார் பாரதி.

ஆங்கிலத் தேர்ச்சி மற்றும் பெற்றிராவிடில் பாரதி நவயுகத்தின் மகாகவியாக ஆகியிருக்க முடியாது என்பது நிச்சயம். ஷெல்லி, வால்ட் விட்மன் ஆகியோரின் நேரிடையான பாதிப்புகளுக்கு மட்டுமின்றி அவரது கவிதைகளில் இடம்பெற்ற முன்னோடியான சிந்தனைகளுக்கும் அவரது ஆங்கில அறிவே காரணம்.

கவிஞராக மட்டுமல்ல, ஒரு பத்திரிகையாளராக பாரதி ஆங்கில அறிவினால் அடைந்த பயன்களும் ஏராளம். ஆனால் பாரதி உட்பட அனைத்துத் தமிழர்களும் புத்திசாலிகள். அவர்கள் ஒருபோதும் மெய்யாக ஆங்கிலத்தைப் பகைத்துக் கொள்வதில்லை.

தலைவன் முதல் தொண்டன்வரை ஆங்கிலத்திற்கு எதிராகப் பொது வெளிகளில் பேசுகிற அனைவரும் ஆங்கிலம் மீது விருப்பு கொண்டவர்கள். தங்கள் பிள்ளைகள் நன்கு ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதில் உறுதியானவர்கள். ஒரு பக்கம் வாழ்க்கை வெற்றிக்குத் தேவையான ஆங்கில அறிவை அடையும் முயற்சி. இன்னொரு பக்கம் தமிழ் பின்தங்கிவிடக்கூடாது என்று எண்ணிச் செயல்படுகிற தவிப்பு. இவைதான் தமிழனின் இன்றைய நிலை.

தமிழ் அசாதாரணமானதும் அற்புதமானதுமான ஒரு மொழி என்பதில் சந்தேகம் இல்லை. இத்தனை ஆயிரம் வருடங்களாக அது எத்தனையோ இடர்களைக் கடந்து இன்றும் இளமையுடன் தோன்றுகிறது. உலக ஓட்டத்துடன் தமிழ்  தன்னைச் சளைக்காமல் இணைத்துக் கொள்கிறது.

எந்த மொழியில் புதிய சொல்லாக்கங்கள் ஏற்பட்டாலும் அதற்குத் தமிழில் தக்க ஒரு சொல்லை உருவாக்கிவிட முடிகிறது. ஆனால் இதனால் நாம் எதையோ இழக்கிறோமோ என்றும் தோன்றுகிறது.

ஆங்கில வழியில் வரும் சொற்கள் தான் தமிழில் மிகுதியாக இவ்வாறு மறு ஆக்கம் செய்யப்படுகின்றன. ஆங்கிலப் பதங்களுக்கு தமிழ்ச் சொற்களை உருவாக்குவது என்றில்லாமல் சுயமாக ஒரு கருத்துக்குத் தமிழில் சொல்லாக்கம் செய்வது என்பது அரிதாக உள்ளது.

அவ்வாறு சமீபத்தில் வெற்றிகரமாகப் பெறப்பட்ட ஒரு சொல் திருநங்கை. நேரிடையாக பல ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில் சொற்கள் உருவாக்கப்படுகின்றன. குதிரை பேரம், பங்குச் சந்தை வார்த்தைகளான கரடி, காளை, தொங்கு பாராளுமன்றம், ஓடு தடம், மென்பொருள், அலை வரிசை, கறுப்பு ஆடு, நீர்வீழ்ச்சி, தொலைக்காட்சி இப்படி ஏராளமான சொற்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அத்தனை நேரிடையாக இல்லாமல் பொருளை உள்வாங்கி உருவாக்கப்படும் சொற்களும் உள்ளன. நகை, முரண், புகைப்படம், பேருந்து, காசோலை, கணினி, வானொலி போன்ற பல சொற்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

அவ்வாறு இருவகையிலும் உருவாக்கப்பட்ட சொற்கள் கலைச் சொற்கள் போன்றவை. தமிழ் எழுத்து நடையில் இத்தகைய சொற்கள் நாளும் பெருகி வருவதைப் பார்க்க  முடிகிறது. இன்னும் சில  ஆண்டுகளில் இத்தகைய சொற்களின் வரத்து அதிகமாகி எழுத்து தமிழ் உருவாக்கப்பட்ட சொற்களின் கோவையாக விளங்கக்கூடும்.

பேச்சுத் தமிழுக்கும் எழுத்து தமிழுக்கும் மேலும் இடைவெளி இதனால் அதிகமாகும் என்பதோடு மட்டுமின்றி, இது நாள் வரை தமிழ் மொழி என்பது வாழ்விலிருந்து பெறப்பட்டது என்கிற வழக்கிலிருந்தும் மாறுபட்டதாகி தமிழுக்கு செயற்கைத் தன்மை வந்து சேரும். இது தமிழ் மட்டுமின்றி பிற இந்திய மொழிகளுக்கும்கூட பொருந்தும்.

இதற்கெல்லாம் காரணம் தமிழர்களாகிய நாம் உலகை ஆள்வதில் பங்கேற்பதில்லை என்பதுதான். பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் முன்னோடி அங்கம் ஏற்பதில்லை என்பதில் மட்டுமல்ல, அறிவு சார்ந்த இயக்கங்களையும் நாம் உருவாக்குவதில்லை.

தமிழில் இலக்கியம் தவிர புதிதாக எதுவும் படைக்கப்படுவதில்லை. கண்டுபிடிப்புகள், கருத்தாக்கங்கள் அனைத்தும் நமக்கு மேற்கிலிருந்து வருகின்றன. நாம் அவற்றை நம் மொழியில் செவ்வனே பொருத்திக் கொள்கிறோம். அதற்கேற்ப மாற்றுச் சொற்களை உருவாக்கிக் கொள்கிறோம்.

சுயமாக கண்டுபிடிப்புகளும் கருத்தாக்கங்களும் தமிழர்களால் செய்யப்பட்டு அவை தமிழில் பதிக்கப்படும் வரை இந்த வறுமை நீடிக்கும். அதுவரை கோடிக்கணக்கானவர்களின் அன்றாட மொழியாகத் தொடர்ந்தாலும் தமிழ், மொழி சார்ந்த பெருமையில்தான் திளைக்க வேண்டியிருக்கும்.

நோபல் பரிசு பெற்ற தமிழ் விஞ்ஞானிகளான சி.வி.ராமன், எஸ்.சந்திரசேகர், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் ஆய்வுகளைத் தமிழிலும் எழுதி வெளியிட்டிருந்தார்களேயானால் இந்த நிலைமை மாறியிருக்கும்.

இனிவரும் காலங்களில் பல்துறை சார்ந்த தமிழ் அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளை ஆங்கிலத்தில் வெளியிடுகிற அதே சமயத்தில் சற்றும் காலம் தாழ்த்தாது தமிழிலும் வெளியிட்டால் அது ஒரு முன் மாதிரியான முயற்சியாகத் தமிழை உலகத்திற்கு எடுத்துச் செல்கிற செயலாக இருக்கும்.

இவ்வாறு செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை, விருது என்றெல்லாம் எதுவும் தரப்பட வேண்டியதில்லை. இயல்பான தமிழ் உணர்வு எல்லா தமிழர்களிடமும் செயல்பட வேண்டும். 

தமிழை மற்ற மொழிகளுடன் குறிப்பாக, ஆங்கிலத்துடன் போட்டியிடும் மொழியாகப் பாவிப்பதனால் தான் பல பிரச்சினைகள் எழுகின்றன. வேலை வாய்ப்புக்கும் வெளி உலகத் தொடர்புக்கும் தமிழ்  உபயோகமாக இருக்குமா என்ற கோணத்தில் தமிழைப் பார்க்கக்கூடாது.

அவ்வாறு தமிழ் இல்லாத பட்சத்திலும் தமிழ் நம் மொழி, அதை நன்கு கற்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர வேண்டும். தமிழ்நாட்டிற்குள் மட்டும் செயல்படுகிற நீதிமன்றங்கள், அரசு நிர்வாகங்கள் ஆகியன தமிழில் இருக்க வேண்டும்.

வருங்கால சந்ததியினருக்கு தமிழின்பால் தன்னார்வத்தை தூண்டுமாறு இன்றைய தலைமுறையினர் செய்யவேண்டும். தமிழ் படிக்க வரும் மாணவர்களை வேதனைப்படுத்தக்கூடாது. கடினமான தமிழைப் படிப்பதைவிட பிரெஞ்சு, வடமொழி ஆகியவற்றைப் படித்தால் சுலபமாக புள்ளிகள் வாங்கிவிடலாம் என்ற யதார்த்தத்தை மாற்றும் வகையில் தமிழ் படிப்பும் சுலபமாக இருக்க வேண்டும்.

தமிழை வைத்து தமிழ் மாணவர்களையே மிரட்டினால் பின்னர் அதைப் படிக்க வேறுயார் வருவார்கள்? பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இன்று இருப்பது போல் வெறும் இலக்கிய, இலக்கணப் படிப்பாக மட்டும் தமிழ் இருக்கக் கூடாது.

தமிழ் அதிகாரப்பூர்வ செம்மொழியாகி விட்டபடியால் உலகெங்கிலுமுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதை அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்றில்லாது வசதி படைத்த தனியார்களும் செய்ய விரைந்து முன்வரலாம்.

தமிழைப் பரப்புவது என்பது தமிழைத் தமிழர்களின் எல்லைக்கு அப்பால் கொண்டு செல்வதாகும். முதலில் தமிழர்கள் தமிழை நன்கு கற்று தமிழையே தகவல் ஊடகமாகப் பயன் படுத்துவதனையே முக்கியம் என்று சொல்வேன்!.

தமிழைத் தமிழர் மட்டுமே படிப்பது, எழுதுவது என்றில்லாது தமிழைத் தமிழ் அல்லாதோரும் அறிந்து கொள்ளுமாறு செய்யவேண்டும். தமிழைத் தமிழ் அல்லாதோரும் கற்க வேண்டும் அல்லது தெரிந்துகொள்ள வேண்டுமென்பது இரண்டாம் நிலையே! அதுவே தமிழருக்கும் தமிழுக்கும் பெருமை!
நன்றிகள்.

Friday, 22 February 2013

தமிழில் கட்டுக்குலையாத கட்டமைப்பு.........!

தமிழில் ஒரு கட்டமைப்பு இருக்கிறது. எந்த மொழிக்கும் ஒரு வடிவமைப்பு இருக்கும். ஆயினும் தமிழில் கட்டுக்குலையாத கட்டமைப்பு - காரண காரியத்தோடு கூடிய கட்டமைப்பு இருக்கிறது. தமிழில் ஒரு சொல் உண்டு "கட்டழகி'. கட்டழகி என்பது பேச்சு வழக்குத்தான் என்றாலும், அதிலுள்ள நுட்பம் உணரத்தக்கது.

சிவப்பாக இருந்தால் போதுமா? உடல் திடமாக அமைந்து,

அவ்வவ்வுறுப்புகள் எந்த அளவினவாக இருக்க வேண்டுமோ அந்த அளவிலமைந்து முழுமையிலும் அழகுடைமையை "ஏர்', "எழில்', "சாயல்', "வனப்பு' என்ற நான்கு சொற்களால் தமிழர்கள் குறித்தனர். அவை இலக்கியச் சொற்கள். மிக நுட்பமான பொருள் வேறுபாடு உடையவை என்பதை உரையாசிரியர்கள் விளக்கத்திலிருந்து அறியலாம்.

÷ஏர் - "தளிரின்கண் தோன்றுவதோர் பொலிவுபோல, எல்லா உறுப்பினும் ஒப்பக் கிடந்து, கண்டார்க்கு இன்பத்தைத் தருவதோர் நிற வேறுபாடு. இது எல்லா வண்ணத்திற்கும் பொது'. இளம்பூரணர் கூறும் இவ்விளக்கங்கள் மிகவும் கூர்ந்து சிந்திக்கத்தக்கன. புது மணமக்களிடம் - அல்லது வறுமையில் உழன்று பிறகு புதுப்பணக்காரர் ஆனவரிடம் - தளதளவென்று, அவர் தம் இயல்பான நிறத்திலேயே ஓர் ஒளி தோன்றி, களையான முகத்துடன் காட்சியளிப்பதைப் பார்த்திருக்கலாம். தளிரும் பயிரும் பூரித்துவரும்போது தோன்றும் பொலிவு போன்ற ஓர் ஒளிவண்ணம் அது.

எழில் - அழகு. "அது மிக்கும் குறைந்தும் நீடியும் குறுகியும் உயர்ந்தும் மெலிதாகியும் வலிதாகியும் உள்ள உறுப்புகள் அவ்வளவிற் குறையாமல் அமைந்தவழி வருவதோர் அழகு. இவ் அழகினைப் பிரித்துச் சுட்டிக் காட்டல் இயலாது'. உறுப்புகள் அனைத்தும் அளவாக அமைவதால் ஏற்படும் மொத்த அழகையே "எழில்' என்றனர். அவை காண்பார்க்கு எழுச்சி தரும் அழகாகும். "அவள் எழிலுடையாள்' என்றால், காண்பதற்கு இனிமையுடையவள் என்பது பொருள். ஏர் முதலிய இவை அனைத்தும் முழுமையில் தோன்றும் அழகு பற்றியன.

சாயல் என்பது "மென்மை'. அது மயிலும் குயிலும் போல்வதோர் தன்மை. "மயில் போன்ற சாயலுடையாள்' என வருணிப்பதுண்டு. அதுவும் ஒரு முழுமையழகு. இச்சாயலழகை "ஐம்பொறிகளால் நுகரப்படும் மென்மை' என்று நச்சினார்க்கினியர் கூறுவார். உறுப்பு நலனிலும் சாயலழால் மட்டுமே மனங்கவர்வார் பலர். எனவே இவை சிறு வேறுபாடுடையன.

வனப்பு என்பதற்கு பேராசிரியர் "உறுப்புகள் அனைத்தும் திரண்டவழிப் பெறுவதோர் அழகு' என விளக்கம் தந்தார். சிலை, சிற்பம் முதலியனபோல மனங்கவரும் ஆளுமையைத் தருவதே வனப்பாகும். சிலர் எழிலுடையவராக இருப்பர். அவர்கள் உறுப்புகளின் வழி அமைந்த அழகுடையவர்; உறுப்புகளை மறந்துவிட்டு அதற்கப்பால், அவற்றின் கட்டமைப்பால் பெறுகிற அழகே வனப்பாகும். தமிழ்மொழியில் ஏர், எழில், சாயல், வனப்பு - எனும் நான்கு வகைப் பெயர்களும் ஒத்துவருமாறு சொற்களும் தொடர்களும் உள்ளன.

இதனை ஒவ்வொரு சொல்லை வைத்தும், தொடரைவைத்தும் நூற்றுக்கணக்கில் விளக்கலாம். எம்மொழிக்கும் இல்லாத "செவ்வியல் அழகுகள்' தமிழுக்கு உண்டு.

தமிழில் மகளிரை வடிவு, வடிவுக்கரசி எனப் பெயரிட்டு அழைப்பர். இந்த வடிவம்மையை, வடிவம்மாளை, வடிவாம்பாள் எனச் சிறிது மாற்றிவிட்டால், பிராமணருக்கு ஒரு மகிழ்ச்சி. தமிழ்மொழி வடிவமைப்புடையது; தமிழன்னை சொற்களின் கட்டமைப்பில், ஒரு வடிவுக்கரசியே. அம்பாளும் நம் அம்மையிலிருந்து வந்தவள்.

கட்டமைப்பும் ஓர் அழகு: "கட்டழகு' என்பது இத்தகைய வனப்பேயாகும். தமிழின் கட்டமைப்பு அழகானது. எளிமை நோக்கியது. பிற மொழிகள் பலவற்றினின்றும் வேறுபட்டது. சமஸ்கிருதத்தில் சந்த இனிமை அதன் பலவகை நீர்மைகளில் தலைமையானது. வருக்க எழுத்துக்களில் உச்சரிப்புக் கடினம். அதுவே அதற்கமைந்த தனித் தன்மையாகத் திகழ்கிறது. ஏற்ற இறக்கத்தோடு, உச்சரிப்புப் பிசகாமல் கூறப்படும் வடமொழிச் சுலோகங்களைத் தமிழில் எழுதி உச்சரிப்பது இருமொழிக்கும் கேடு; வட மொழிக்கே பெருங்கேடு.

ஆங்கிலம் நெளிவு சுளிவுமிக்க உரையாடலுக்கு ஏற்ற எவ்விதக் கருத்தையும் கூர்மையாகவும் திட்ப நுட்பத்தோடும் வெளிப்படுத்தவல்ல - கருத்துத் தொடர்பு மொழியாகிவிட்டது.

 தமிழ் கட்டமைப்புள்ள மொழி. அதன் "சாயல்' அழகு மிகமிக மென்மையானது. "கன்னித்தமிழ்' ஆதலாலேதான் தமிழுக்குக் "காப்பு'ணர்ச்சியும் தேவைப்படுகிறது.

தமிழச்சாதி: பொதுவாக மொழிகள் பல உறுப்புகளை விட்டுவிட்டு வரவரக் குறைந்து போகும் இயல்பினால் எளிமைப்படுவன. தமிழ் கூடுதலாக உறுப்புகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் எளிமை நோக்குவதே பெரும்பான்மையாகும். யார் என்பதிலிருந்து வரும் யார்க்கும் என்பதை "யாருக்கும்' என்று கூறுவதிலேதான் எளிமை தோன்றுகிறது.

"பார்'(பூமி) என்பதிலிருந்து, "பாருக்குள்ளே' என்றால் போதாதா? "பாருக்குள்ளே நல்ல நாடு' என்பதே நம் மரபாகும். "புளியம் பழம்' எனக் கூடுதலாக "அம்' சாரியை சேர்ப்பதிலே ஒரு தனி இன்பம்.

தமிழ்ச் சாதியை "விதியே விதியே தமிழச் சாதியை, என்செய நினைத்தனை?' என்று பாரதியார் பாடுவதுபோல், ஓர் அகரம் இடையிலே சேர்த்துத் "தமிழச்சாதி' என்றால்தான் நம் மனம் மகிழ்கிறது.

கட்டிடக் கலையும் கட்டமைப்பு மொழியும்: சிறு குழந்தைகளிடம் கட்டிடக் கலை விளையாட்டுக் கருவிப் பெட்டி ஒன்றைத் தந்து பாருங்கள். அதிலுள்ள பலவித அட்டைகளை வண்ண வண்ணமான சிறுசிறு கட்டைகளை, அவர்கள் அடுக்கி அடுக்கி, மாட மாளிகைபோல், கூட கோபுரம் போல் கட்டி அழித்து, மறுபடி வேறுவிதமாகக் கட்டி இவ்வாறு மகிழ்வர். இந்தக் கட்டிட விளையாட்டு அடுக்குகள்போல் தமிழின் சொற்களும் தன் உறுப்புகளும் விளங்குகின்றன.

அறிஞன், கலைஞன், கொடைஞன், வறிஞன், பகைஞன் இவ்வாறு "ஞ்' என்ற பெயரிடை நிலையுள்ள சொற்கள் நூற்றுக்கணக்காகும். பகுதி எனப்படும் முதனிலை மாற்றத்தால் மட்டும் இவை வெவ்வேறு சொற்களாக அமைகின்றன.

தமிழ்ச் சொற்கள் உருவாகும் நெறிமுறைகள்: "பார்க்கிறான், கேட்கிறான், போகிறான், படிக்கிறான், அழுகிறான், தொழுகிறான், எழுகிறான்' - இவற்றில் இடையில் வரும் ஒரே மாதிரியான "கிறு' என்ற இடைநிலையால் இவை ஒரு தன்மைப்படுகின்றன. பார்க்கின்றான், கேட்கின்றான், போகின்றான் என இவை அனைத்தையும் மாற்றினால் "கின்று' இடைநிலை எதிரொலிக்கும்.

பார்க்கின்றனன், கேட்கின்றனன், போகின்றனன் என இவற்றை மேலும் மாற்றினால் "கின்று' இடைநிலையுடன் "அன்' சாரியை ஒலியும் சேர்ந்திசைக்கும். பார்த்துக் கொண்டான், அறிந்து கொண்டான் போல்வனவற்றில் "கொள் - கொண்டான்' என்ற துணைவினைப் பயன்பாட்டால் அவை ஒரு தன்மைப்படுவதைச் சுட்டிக் காட்டலாம்.

பார்த்தேன், பார்க்கிறேன், பார்ப்பேன், பார்த்தல், பார்வை, பார், பார்த்து, இவ்வாறு "பார்' என்ற அடிச்சொல்லுடன் வெவ்வேறு உறுப்புகளைச் சொல் சிதைவு இல்லாமல் பிரித்து எடுக்கலாம். அவற்றின் பெயரையும் பயன்பாட்டையும் காரண-காரியத்தோடு விளக்கலாம். பொருளும் இலக்கணமும் விளங்கும்படி சொன்னால் பிள்ளைகள் மனத்தில் பதியும். 
நன்றிகள். 

Thursday, 21 February 2013

சர்வதேச தாய்மொழித் தினம்...!

மாசி மாதம் (பெப்ரவரி) 21 சர்வதேச தாய்மொழித் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. வங்காள மொழியை அரசகரும மொழியாக ஆக்கக் கோரிய போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக மாசி மாதம் 21 சர்வதேச அளவில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், சர்வதேச அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகளின் யுனெசுகோ அமைப்பு மாசி மாதம் 21,1999 ஆம் ஆண்டு சர்வதேச தாய் மொழித்தினமாக பிரகடனப்படுத்தியது. 2000 ஆம் ஆண்டு முதல் இத்தினம் உலகம் முழுவதும் சர்வதேச தாய்மொழித்தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த தினத்தில், உலகில் உள்ள 6000-7000 வரையான மொழிகளுள் ஒன்றாக உள்ள தமிழ்மொழியினைப் பேசிவரும் நாம், தமிழ் மொழியை இன்றைய சர்வதேச ரீதியான சவால்களுக்கு மத்தியில் எத்தகைய நோக்கில் முன் கொண்டு செல்லப்போகின்றோம் என்பது, ஆக்கபூர்வமான உரையாடலுக்குரிய விடயமாக அமைகின்றது. 

கடந்த நான்கு வருடங்களாக சர்வதேச தாய்மொழி தினத்தைக் கொண்டாடிவரும் மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத் திறன் செயற்பாட்டுக் குழுவினராகிய நாம் இன்றைய சூழலில் தமிழ் மொழி பற்றிய எமது கருத்துகளை ஆக்கபூர்வமான உரையாடலுகளுக்காகப் பகிர்ந்து கொள்ள முனைகின்றோம். 

இன்று உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் தாம் வாழும் நாடுகளின் சுதேச மொழிகளில் தமது இரண்டாவது தலைமுறையினரைப் பரிச்சயப்படுத்தி வரும் நிலையில்; இவ்விதம் உலகின் வித்தியாசமான மொழிகளின் ஆளுமைகளுடன் வளரும் தலைமுறையினருக்கான தொடர்பு மொழியாகத் தமிழை, உலகத்தமிழருக்கான இணைப்பு ஊடகமாக நாம் பயன்படுத்துவது ஆக்கபூர்வமான முன்னெடுப்பாக இருக்கும். 

இதனைச் சாத்தியமாக்குவதற்குரிய வகையிலேயே இன்றைய தகவல் தொழில்நுட்ப வலையமைப்பு "தமிழ் இணையம்" அமைந்துள்ளது. கணினித் தமிழுக்கூடாக உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் தொடர்ந்து தமிழர்களாக வாழ்வதற்கான சாத்தியப்பாடுகளை உருவாக்கிட முடியும். 

இத்தகைய செயற்பாடுகள் ஊடாக இதுவரை ஆங்கிலமூடாக மட்டும் ஒரு பரிமாணத்தில் தரிசித்து வந்த உலகப்பார்வையினை நாம் பலபரிமாணத்தில் தரிசித்திட முடியும். அதாவது நேரடியாக யே (ஜே)ர்மன் மொழியிலிருந்தும், பிரான்சிய மொழியிலிருந்தும், டச்சு மொழியிலிருந்தும்,நோர்வேய மொழியிலிருந்தும், மேலைத்தேச மொழிகளில் இருந்தும் தமிழுக்கு மொழிபெயர்ப்புகள் வரும்போது உலகம் பற்றிய பல பரிமாணங்களையும் நாம் தரிசிக்க முடியும். 

இதே போல் தமிழில் உள்ளதை உலகம் முழுவதும் பரவலாக்கவும் முடியும். இதனூடாக பலபரிமானங்களில் உலகப் பார்வையை வழங்கும் மொழியாகவும், உலகம் முழுவதும் பரவலாக்கிய மொழியாகவும் தமிழ் செழுமை அடையும் என்பது எமது எதிர்பார்ப்பு. 

இன்று சுதேசிய மொழிகள் அனைத்தும் தாய்மொழிகள் என்றே அழைக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் இந்த மொழிகள் அனைத்தும் ஆண்களின் மொழியாகவே அமைந்திருக்கின்றன. 

உதாரணத்திற்கு எமது தமிழ்மொழியினை எடுத்துக் கொண்டால், இம் மொழியில் கோபத்தினை, வெறுப்பினை வெளிக்காட்டுவதற்கான சொற்களாக பெண்களின் பாலுறுப்புக்களோடு தொடர்புபட்ட சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருவதனைக் காணலாம். 

இத்துடன், சாதியடிப்படையில் ஒடுக்குமுறைகளுக்குள்ளாகும் சமூகங்களின் சாதிப் பெயர்களும் தமிழில் கோபம் வெறுப்புக்கான மொழிகளாக அமைந்திருக்கின்றன. 

இதே போல ஆணாதிக்க அதிகார ஒடுக்குமுறைச்சிந்தனைகளை மொழியூடாகக் கட்டமைத்துள்ள நிலையினைக்களைந்து. ஆணுக்கும் பெண்ணுக்கும் அனைத்து மனிதர்களுக்கும் உரிய சமத்துவத்தை வழங்கும் ஆக்கபூர்வமான மொழியாகத் தமிழை மீளமைத்துக் கொள்ளுதலே ஆக்கபூர்வமான தமிழ்மொழியின் நிலைப்பிற்குச் செய்யும் பணியாக அமையும்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்ற வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை யில்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்! - மாகவி பாரதியார்
நன்றிகள்.

Wednesday, 20 February 2013

தமிழ் வாழும் செம்மையான ஆதிநாகரீகம்......!


தமிழ் தனித்தே ஒரு மொழி மட்டுமல்ல. அது வாழும் செம்மையான ஆதிநாகரீகம்.


தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமே என்று சொல்லிகொண்டிருக்கும் அதிமேதாவிகளின் பார்வைக்கு.

தமிழ் வெறும் மொழியல்ல, அது ஒரு கலாச்சாரம், அது ஒரு வாழ்க்கை வழி. எப்படி வாழவேண்டும் என்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வழிகாட்டிய திருக்குறளுக்கு நிகரான ஒரு நூலைக்காட்டுங்கள்.

அன்று தமிழ் வெறும் மொழியே என்று நான் ஒப்புக்கொள்கிறேன். என்றொருவன் தன் தாய்மொழியையும், கலாச்சாரத்தையும் விட்டுகொடுக்கிறானோ, அன்றே அவன் பிணத்திற்கு சமம்.  
நன்றிகள். 

Tuesday, 19 February 2013

தமிழிலக்கியங்களும் தமிழிசையும்..........!

உலகின் தொன்மை வாய்ந்த மொழிகளில் செவ்வியல் மொழி என்னும் பெருமையுடன் வாழும் மொழி தமிழ்மொழி ஆகும். தமிழ் மொழியில் தொல்காப்பியம் தொடங்கி புதுக்கவிதை வரையிலும் ஏராளமான இலக்கியங்கள் வாழ்ந்து வருகின்றன. இயல், இசை, நாடகம் என முத்தமிழாகப் போற்றப்படுவது தமிழ்மொழி ஆகும்.


இசைத்தமிழாகிய தமிழ் இசை தொல்காப்பியர் காலம் முதற்கொண்டு சிறப்புடன் திகழ்வதைக் காண முடிகிறது. தமிழ் இசையானது தனக்கே உரிய தனித்தன்மையுடன் விளங்குகின்ற அதே வேளையில் தமிழ் இலக்கியங்களில் இரண்டறக் கலந்திருப்பதை இவண் காணலாம்.

கலைஞர்களிடம் உள்ள அழகுணர்ச்சியின் வெளிப்பாடாகப் பிறப்பதே கலை ஆகும். கலைகளைப் படைக்கும் கலைஞன் அவற்றால் தான் மகிழ்வதோடு அக்கலையைச் சுவைப்பவர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறான். 

நுண்கலைகளில் ஒன்றாகச் சிறப்பிற்குரியதாகப் போற்றப்படுவது இசைக்கலை ஆகும். ஓசையை அடித்தளமாகக் கொண்டு, செவி நுகர் கனியாக அமைவது இசைக்கலை ஆகும்.

ஒலியைக் குறிப்பிடத்தக்கவை என்றும் (குயிலின் கூவல்) குறிப்பிட்டுக் காட்ட இயலாத குழப்ப ஒலிகள் (சந்தை இரைச்சல்) என இரண்டாகப் பிரிக்கலாம். இசைக் கலையில் நுட்பமான முறையில் ஒலியைப் பிரித்து உணர வேண்டியுள்ளது. ஒலியின் நுட்பத்தைப் பகுத்தறியும் ஆற்றல் உடையோர்க்கே வாய்ப்பதான இசைக்கலை ஓர் அரிய கலை எனலாம்.

இசைக்கலையின் அமைப்பு:

எழுத்துக்களை உருவாக்கிச் சொற்களைப் பொருள் தருமாறு அமைப்பது போல் ஒலியின் பகுதிகளைச் சுவை தருமாறு இணைத்து இசை உருவங்களான பணிகளை உருவாக்கி இசைக் கலையைப் படைக்கிறான் மனிதன்.

ஏழு இசைகள் என்பது இந்தியா எங்கும் பரவலாகக் காணப்படும் ஒன்றாக விளங்குகிறது. சங்கப் பாடல்களில் ஏழிசைப் பற்றிய குறிப்புகள் உண்டு. மேற்கத்திய இசையைக் காட்டிலும் கிழக்கத்திய இசை மிகச் சிறப்பானதாகவும் முழுமை பெற்றதாகவும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

தமிழிசையும் கருநாடக இசையும்:

இசையானது எல்லா உயிர்களையும் ஈர்க்கும் தன்மை படைத்ததாக விளங்குவதோடு மனித சமுதாயத்தின் உயர்ந்த பண்பாட்டு விழுமியத்திற்குச் சான்றாக விளங்குகிறது. "இசை என்பது மொழி, இனம், நாடு கடந்த பொதுமை உடையது. எந்நாடும் உரிமை கொள்ளத்தக்கதாகும்.

பொதுமை நிலை கொண்ட இசையை ஒரு மொழிக்கு மட்டும் உரியது என்றோ ஒரு மொழியே இசை என்றோ கட்டுப்படுத்துதல் அத்துணைச் சிறப்பும் முறைமையும் உடையதன்று.

ஆனால் இனம் காரணமாக அஃதாவது மொழிவழி அமைந்த இனத்தவர் காரணமாக இசையை உரிமைப்படுத்தலாம் என்னும் வெற்றிச்செல்வன் அவர்கள் கூற்று நோக்கத்தக்கது. ஆகவே இசைக்கு மொழி இல்லை என்றாலும் மொழிக்கு இசை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழிசையின் சிறப்பும் தொன்மையும்

தமிழ் மக்கள் பழங்காலத்தில் இருந்தே தங்கள் அறிவுத்திறனால் இசையமைப்பு முறையை அமைத்திருந்தனர். இதனைத் தொல்காப்பியக் குறிப்புகளிலிருந்தும் சங்க இலக்கியப் பாடல்களில் இருந்தும் அறியமுடிகிறது.

தமிழில் இருந்து அழிந்துபோன இசை நூல்களாகச் சிற்றிசை, பேரிசை, இசைநீல், இசை நுணுக்கம், இசை விளக்கம், பஞ்சமா பிரதீயம், பண் அமைதி, பண் வரி விளக்கம் பாட்டும் பண்ணும், இசைக் கூறு முதலானவை இருந்ததை அறிய முடிகிறது.

பழந்தமிழ் மக்கள் சுரங்களையும், சுருதிகளையும் ராகம் உண்டாக்கும் விதிகளையும் நன்கு உணர்ந்து பன்னிரண்டாயிரம் ராகங்களைப் பாடி வந்தார்கள் என்று பழந்தமிழ் இசை நூல்கள் கூறுகின்றன.

இசை அமைப்பு, பண் அமைப்பு, தாள அமைப்பு, வண்ணங்களை இனிமையாகப் பாடுதல் ஆகியவற்றில் பண்டைத் தமிழர் தனித்திறமை பெற்றவராகத் திகழ்ந்தனர்.

கருநாடக இசை - விளக்கம்:

பக்தி மணம் கமழும் நாயன்மார்கள், ஆழ்வார்களின் இசைப்பாடல்கள் வட நாட்டினரையும் வெகுவாகக் கவர்ந்தன. வடமொழித் திறமை உடைய சாரங்கதேவர் கி.பி.1210 - 1241 வரையுள்ள காலத்தில் தமிழகம் வந்து தேவாரப் பண்களை அறிந்து தமது வடமொழி சங்கீத ரத்னாகர் என்னும் நூலில் தேவாரப் பண்கள் சிலவற்றைப் போற்றி வைத்துள்ளார்.

சாரங்க தேவர் எழுதிய சங்கீத ரத்னாகரத்தில் கர்னாடக இசையின் மூலக்கரு அமைந்திருப்பதாகக் கருதலாம். வடமொழியில் வல்ல சாரங்க தேவர் சங்கீத ரத்னாகரத்தை வடமொழியில் எழுதினார்.

அந்நூலிலுள்ள இசையமைப்பு முறை தேவாரம், திவ்விய பிரபந்தத்தில் உள்ள தமிழிசைப் பண்ணமைப்பு முறையை ஆதாரமாகக் கொண்டது. சங்கீத ரத்னாகரத்தின் வாயிலாகத் தமிழிசை வடநாடுகளுக்கு அறிமுகமானதாகக் கூறலாம்.

மேலும் கருநாடக இசை பற்றிக் குறிப்பிடும்போது, "தமிழரிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்ப்பண்களையும் கிளைப்பண்களையும் வகுத்தும் பழந்தமிழ்க் குறியீடுகளையும் பண்ணுப் பெயர்களையும் வடசொல்லாக மாற்றியும் "கருநாடக சங்கீதம் எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர்" என்று வெற்றிச்செல்வன் தம்முடைய இசையியல் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தொல்காப்பியமும் தமிழிசையும்:

கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியர், இன்றைய மொழியியலின் அடிப்படை அலகான ஒலியின் நுட்பத்தை அறிவியல் பூர்வமாக உணர்ந்து இலக்கணம் வகுத்தவர். உயிர், உயிர்மெய், மெய் ஆகிய எழுத்துக்கள் அளபெடுப்பதை இசை நீட்டம் எனக் குறிப்பிடும் தொல்காப்பியர் அதனைக் குறிப்பிடும்போது.

இசையோடு சிவனிய நரம்பின் மறைய என்மனார் புலவர் (தொல்.1:33 2-3) என்று கூறுகிறார். இதிலுள்ள "நரம்பின் மறைய" எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது இசையைப் பற்றியும் "யாழ்" போன்ற இசைக் கருவியையும் உள்ளடக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இசை என்ற சொல் தொல்காப்பியத்தில் 24 இடங்களில் வந்துள்ளது. இவை அனைத்தும் இசைக்கலையுடன் ஒரு வகையில் தொடர்பு உள்ளதாகவே அமைந்துள்ளது.

தொல்காப்பியர் குறிப்பிடும் பாட்டு, வண்ணம் ஆகிய சொற்கள் இசையோடு தொடர்புடைய ஆழ்ந்த பொருள் பொதிந்த சொற்களாகவே அமைந்துள்ளன. தொல்காப்பியர் வண்ணத்தை 20 வகையாகப் பிரித்துப் பெயர்களைச் சுட்டி நூற்பா இயற்றியுள்ளார்.

இவ்வண்ணங்களை வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம், இயைபு வண்ணம் என இசைத்தன்மையை உயர்த்தும் வகையில் அமைத்துள்ளார். தொல்காப்பியர் பாடல்களை அவற்றின் அமைப்பு, கருத்து மற்றும் இசைத்தன்மையைக் கொண்டு பாகுபாடு செய்துள்ளார். கலிப்பாவும், பரிபாடலும் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்தன, பரிபாட்டு என்பது "இசைப்பா" என்கிறார் பேராசிரியர்.

பிசியைப் போன்ற இயல்புடையதாகப் பண்ணத்தி என்னும் இசைப்பாடல் இருப்பதைத் தொல்காப்பியத்தின் வழி அறியலாம். ஊடல்தீர்க்கும் வாயில்களாகத் தொல்காப்பியர் குறிப்பிடும் பாணன், கூத்தன், பாடினி, விறலி ஆகியோர் இசையிலும் கூத்திலும் திறமை உடையவர்கள் என்பதைச் சங்க இலக்கியத்தின் வாயிலாக அறிய முடிகிறது. ஐவகைப் பண்களையும் இசைக்கருவிகளையும் தொல்காப்பியர் விரிவாகக் கூறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும்.

சங்க இலக்கியங்களும் தமிழிசையும்:

இசை உணர்வின் எழுச்சியால் இசைப்பாடல்கள் தோன்றுகின்றன. சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பண்டைத் தமிழரின் இசைப்புலமையை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. பரிபாடலுக்கு இசைவகுத்தோர் பதின்மர் ஆவர். மறையோர் பாடல், உழிஞை பாடல், தமிஞ்சிப் பாடல், விறற்களப் பாடல், வெறியாட்டப் பாடல், துணங்கைப் பாடல், வேதப் பாடல், வள்ளைப் பாடல் ஆகியன இசைப்பாடல்கள் என்பன குறிப்பிடத்தக்கது.

சங்ககாலப் பண்ணும் இசைக் கருவியும்:

சங்க காலத்தில் ஆண்கள், பெண்கள், மட்டுமல்லாது பாணர், பாடினியர், ஆடல் மகளிர் போன்றறோர் பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களைப் பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் துணையோடு சிறப்பாகப் பாடி உள்ளனர். ஆம்பல் பண், காஞ்சிப் பண் காமரம், குறிஞ்சிப் பண், செவ்வாழி பண், நைவனம், பஞ்சுரம், படுமலைப்பண், பாலைப்பண், மருதப்பண், விளரிப்பண் ஆகிய பண்கள் முழுமையாகவும் அவற்றின் பிரிவுகளாகவும் இசைக்கப்பட்டுள்ளன.

சங்க காலத் தமிழர் பண்களைப் பல்வேறு இசைக் கருவிகள் துணையோடு இசைத்துப் பாடியுள்ளனர். யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு, வயிர், தண்ணுமை, முழவு, முரசு, பறை, கிணை, துடி, தடாரி, பாண்டில் மற்றும் இன்னியம் முதலான இசைக்கருவிகள் இருந்துள்ளன.

சங்கம் மருவிய நூல்களும் தமிழிசையும்:

நீதி நூல்கள் பதினெட்டும் தமிழிசையின் நுட்பத்தைச் சிறப்பாக எடுத்துரைப்பனவாக அமைந்துள்ளன. சிறந்த பண்ணிசைக் கருவியான யாழைப் பற்றிக் குறிப்பிடும்போது, "குழலினிது யாழினிது என்ப" (குறள்:66) பண்ணமையா யாழின் கீழ்ப்பாடல் பெரிதின்னா" (இன்னா. 31.1) என நீதி நூல்கள் குறிப்பிடுகின்றன. "குழலினினியமரத் தோவை நற்கின்னா" (இன்னா.35.2) "சொற்குறி கொண்டு துடிபண் உறுத்துவ போல்" (பழமொழி: 28:1-2) போன்ற பாடல் வரிகள் சங்கம் மருவிய காலத் தமிழிசைச் சிறப்பை உணர்த்துவன ஆகும்.

"செவ்வழி யாழ் பாண் மகனே" (திணை மாலை 124-1) "பாலையாழ் பாண் மகனே" (திணை மாலை 133:1); "தூதாய்த் திரியும் பாண்மகனே" (ஐந்திணை 22:1-2) போன்ற பாடல் வரிகள் இசைக் கலைஞர்களைப் பற்றிக் கூறுவதைக் காண முடிகிறது. ஆரவாரம் நிறைந்த சங்க கால இசை மரபானது. சமண பௌத்த தாக்கம் நிறைந்த சங்கம் மருவிய காலத்தில் அடக்கத்தோடு ஆடம்பரமின்றி அமைதியாக இலங்கியது.

காப்பியங்களும் தமிழிசையும்:

கி.பி. 2-ஆம் நூற்றாண்டிலிருந்து 12- ஆம் நூற்றாண்டு வரையிலான காலக் கட்டத்தில் சிலப்பதிகாரம் முதல் கம்பராமாயணம் வரையில் காப்பியங்கள் பல தோன்றியுள்ளன. இசையானது மனித வாழ்க்கையின் ஒரு கூறு ஆகும். காப்பியங்கள் பலவும் பழந்தமிழ் இசைச் சுரங்கங்களாகவே அமைந்துள்ளன. அவற்றுள்ளும சிலப்பதிகாரம் இசைச் செய்திகளை மிகவும் அதிகமாகத் தருகிறது. அடுத்த நிலையில் பெருங்கதை இசை மலிந்த காப்பியமாகக் காட்சி அளிக்கிறது.

சிலப்பதிகாரமும் தமிழிசையும்:

சிலப்பதிகாரம் தமிழிசைக் காப்பியமாகும். இசை ஆசிரியரின், தன்னுமை ஆசிரியரின் அமைதி பற்றி இளங்கோ அடிகள் கூறுகிறார். தன்னுமைக் கருவியின் பயன்பாட்டுச் சிறப்பை ஆக்கல், அடக்கல், மீத்திறம் படாமை என இளங்கோ அடிகள் கூறுகிறார். யாழின் அமைப்பு, யாழிசை அமைப்பு, யாழாசிரியரின் திறமை முதலியன கூறப்படுகின்றன.

வரிப்பாடல், தெய்வம் சுட்டிய வரிப்பாடல், குடைப்பாடல் முதலியன இசையின் நுட்பத்தைப் புலப்படுத்துவன. புகாரில் இசை வல்லுநர்கள் இருந்ததை, "அரும்பெறன் மரபில் பெரும்பாண் இருக்கையும் (சிலப்:535-37) என்ற அடியாலும் வீணை இசைக் கருவி இருந்ததை, "மங்களம் இழப்ப வீணை மண்மிசைத்" (சிலப்.6:18-23) என்ற அடியாலும் உணர முடிகிறது.

உலகின் தொன்மை வாய்ந்த மனித இனங்களுள் தமிழினத்தின் தனிச்சிறப்பாகத் தமிழ் இலக்கியங்களும் தமிழிசையும் அமைந்துள்ளன. தமிழ் இலக்கியங்கள் காலந்தோறும் வளர்ச்சி அடைந்து வருவதைப் போலவே தமிழிசையும் இரண்டாயிரமாண்டு பழமையுடன் சிறந்து விளங்கி வருகிறது. 

தமிழிலக்கியத்தின் அமைப்புகளில் வடமொழி ஆதிக்கம் செலுத்தும்போது எல்லாம் அதனை மீறி இலக்கியம் வளர்ந்தது போல் தமிழிசையில் வடமொழி, தெலுங்கு போன்ற மொழிகள் ஆதிக்கம் செலுத்த முனைந்தபோது அவற்றை எதிர்த்து வளர்ந்து வந்துள்ளது.

தமிழிலக்கியங்களும் தமிழ் இசையும் தமிழரின் பண்பாட்டு அடையாளம், வரலாற்றுக் கருவூலம், எதிர்காலத் தமிழ்ச் சமுதாயத்தின் அழியாச் செல்வம் என்றால் அது மிகையாகாது.
நன்றிகள்.

Sunday, 17 February 2013

தமிழ் அழியும் மொழியா.............?!


உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது.


அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன.

இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும்.

இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.

ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது.

கல்வெட்டில் இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.

மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது.

எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது.

இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது.

ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. 

எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும்.


இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா சு(ஸ்)மித் யோ(ஜோ)னசி(ஸி)ன் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.

தமிழரோடு தமிழில் பேசுவோம்...
தமிழன் என்று சொல்வோம்....
தலை நிமிர்ந்து நிற்போம்.....
"தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..."
நன்றிகள்.

உலகில் அதிக சொற்கள்............!

உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி :


உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது? ஆங்கிலமா? என்று பலரும் கேட்கிறார்கள். இங்கிலாந்தில் இருக்கும் ஒரு பல்கலைக்கழக (Oxford) அகரமுதலி ஒரு பக்கத்தில் இந்த கேள்வியை எழுப்பி விடையும் தந்துள்ளனர்.

20 தொகுதி கொண்ட இங்கிலாந்தில் இருக்கும் ஒரு பல்கலைக்கழக அகரமுதலியில் 171,476 சொற்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 250,000 சொற்களுக்குக் குறையாமல் இருக்குமாம்.

சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால் முக்கால் மில்லியன் (750,000) இருக்கலாம். ஆனால் தமிழில் 12,000 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியில் ஏறத்தாழ 500,000 தமிழ்ச்சொற்கள் உள்ளன.

இந்த அகர முதலியில் மொத்தம் 31 தொகுதிகள். 37 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கப்பட்ட தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்டம் (Tamil etymological Dictionary project) அண்மையில் முழுமையடைந்தது.

பாவாணர் தொடங்கிய இத்திட்டம். பேராசிரியர் இரா.மதிவாணன் தலைமையில் இப்போது முழுமை பெற்றுள்ளது,உலகில் வேறெந்த மொழிகளுக்காவது இத்தனை (ஏறத்தாழ 500,000) சொற்களின் சொற்பிறப்பியலோடு அகராதிகள் இருப்பதாகத் தெரியவில்லை.
நன்றிகள்.

Saturday, 16 February 2013

தமிழ்மொழியின் தனித்தன்மை..........!

தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி

1) தமிழ் குமரிநாட்டில் தோன்றிய உலகத்தின் முதன்மொழி.

2) ஒரு தனிமொழி அல்லது உலக முதமொழியின் ஆக்கத்தினை அல்லது படிநிலை உருவாக்கத்தைத் தமிழ் மொழியே காட்ட வல்லதாக உள்ளது.

3) தமிழ்ச் சொற்கள் இல்லாத மொழிகள் உலகிலேயே ஒன்றுகூட இல்லை.

4) அறிவியல் அல்லது தருக்க (Logical) அமைப்புடையது தமிழ்மொழி.

5) உயர்ந்தனிச் செம்மொழிகள் ( Classical Language ) எனத்தகுதி பெற்றவை ஒருசில மொழிகளே. அவற்றுள் தமிழ் மட்டுமே உலகவழக்கு அற்றுப்போகாமல் முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் போர்த்தும் அப்பெற்றியதாய், இருவழக்கும் பெற்று என்றும் குன்றாத சீரிளமைத் திரத்தோடு நின்று கன்னித்தமிழொன்று வாழ்கின்றது.

6) தமிழ் தனது செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியைவிட பண்பட்டதாயும் சரியானதாயும் ; பேச்சு வழக்கு செய்யுள் வழக்கு ஆகிய இரண்டிலும் கடன்பெற்றுள்ள சொற்செல்வங்களுடன் விளங்கும் இலத்தீன் மொழியைவிடச் சொல்வளம் உள்ளதாயும் விளங்குகிறது என்று குறிப்பிடுவது அளவுகடந்து கூறுவதாகாது. (வின்சுலோ)

7) அது (தமிழ்), இனிமை என்று பொருள்படுதற்கு ஏற்ப அதனிட்த்தில் கேட்டாரைத் தன்வயமாக்கும் இனிமை பொருந்தியிருப்பதற்கு ஐயமில்லை. (வின்சுலோ)

8) ஆற்றல் மிக்கதாகவும், சில சொற்களால் கருத்தைத் தெரிவிப்பதாகவும் விளங்குவதில் தமிழ்மொழியை எந்த மொழியும் மிஞ்சமுடியாது. உள்ளத்தின் பெற்றியை எடுத்துக் காட்டுவதில் வேறெந்த மொழியும் தமிழைவிட இயைந்ததாக இல்லை. (பெர்சிவல்)

9) எந்நாட்டினரும் பெருமைக் கொள்ளக்கூடிய இலக்கியம், தமிழ் இலக்கியம். தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தைத் தருவது. (எப்.டபிள்யு. கெல்லட்)

10) தமிழ் போன்ற தமிழிய மொழிகளை நன்றாகக் ஐரோப்பியர் ஒருவர் அத்தகைய வியத்தகு மொழியை வளர்த்துள்ள மக்கள் இனத்தை மதிப்போடு கருதாமல் இருக்க முடியாது.

11) தமிழ், தான் ஏற்றிருக்கும் சமற்கிருதச் சொற்களில் பெரும்பகுதியை, ஏன் அவை அனைத்தையுமே அறவே கைவிட்டு, அவ்வாறு கைவிடுதாலொன்றிலேயே பெருநிலைமைப் பெற்றுவிடும். (அறிஞர் கார்ல்டுவெல்)

12) பயிலுவதற்கும் அறிவதற்கும் மிக இலேசுடையதாய் , பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், “சாகாக் கல்வியை” எளிதில் அறிவிப்பதாய் அறிவிப்பதாய் அமைந்த்து தமிழ்மொழி.

13) தமிழ்மொழி ஒரு திறவி (சாவி) போன்றது. அதைக் கொண்டு உலகம் என்னும் பெரிய பூட்டைத் திறக்கலாம். இன்னும் சரியாகச் சொன்னால், தமிழ் ஒரு மாபெரும் மலையைப் போன்றது; அதில் முதலில் ஏறுவதற்குக் கொஞ்சம் கடினமாக இருக்கும், ஆனால் அதன் உச்சியை அடைந்துவிட்டால் ஒரு புதிய உலகத்தையே பார்க்கலாம். (ஆறாம் உ.த மாநாட்டில் அமெரிக்க அறிஞர்)

14) தொன்மை, முன்மை, ஒன்மை (ஒளிமை), எண்மை (எளிமை), இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை எனப் பதினாறு வளங்களும் நிறைவாக உடையது. (மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள்)

15) எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் மட்டுமல்ல வாழ்க்கையின் இலக்கணமான பொருளிலக்கணமும் முறைப்படக் கொண்டு, அகம்-புறம் என இருதிறத்தும் அறம், பொருள், இன்பம், வீடு என வகைப்பட்டு அவற்றை அறிவு-பகுத்தறிவு-மெய்யறிவு-வாலறிவு எனத் தம் அறிவு முதிர்ச்சிக்கு ஏற்பக் கொண்டு ஒழுகி வந்த பொய்யாமை ஏன்ற சமயத்தை அல்லது வாழ்க்கை நெறியை முக்காலப் பொருத்தமாய் உலகினுக்கு தந்தது தமிழேயாகும். (மெய்ப்பொருள் ஞாயிறு பாவலர் அ.பு திருமாலனார்)

16) உலக ஒற்றுமை அல்லது மாந்தநேயம் என்று உலகியம் பேசும் அறிஞர்கள்; தனித்தூய தமிழைக் கடைப்போக ஆராய்ந்து பார்ப்பார்கள் ஆயிடின் தமிழே உலகப்பொதுமொழியாய் – தாய்மொழியாய் – உயிரியக்க உறவுமொழியாய் – மாந்தநேய மாண்புவழியாய் – சமய நெறியாய் – ஓருலக இனத்தின் இனப் பெயராய் விளங்கும் நடுநிலையான உண்மையைத் தெளிவர். உலகமக்கள் யாவரும் ஒருமூத்தவர் என்பதறிந்து அகங்களிப்பர் – அகங்கலப்பர் – இகல் மறப்பர். 
நன்றிகள்.

Friday, 15 February 2013

தமிழ் மொழியை வளர்ப்பது, கொலை..........!

தமிழ் மொழியை வளர்ப்பது யார்?...தமிழ் மொழியை கொலை செய்வது யார்?


ஊடகங்களில் தமிழ் கொலை செய்யப் படுகிறதா.. எனும் எனது இடுகை மூலம் பலரும் தமது மனங்களிலே இருந்த உள்ளக் குமுறல்களை கருத்துக்களாக வெளியிட்டு இருந்தனர். காத்திரமான பல கருத்துக்கள் வந்திருந்தன. 

அந்தக்கருத்துக்களை பார்த்தபோது இந்த விடயம் தொடர்பாக இன்னுமோர் இடுகையின் மூலம் சில விடயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று ஒரு எண்ணம் என் மனதிலே தோன்றியது. இதனால் இன்னும் பல ஆக்கபூர்வமான கருத்துக்களை பெறமுடியும் என்று நினைக்கிறேன்.

இந்த இடுகையின் மூலம் எந்த ஒரு ஊடகத்தையோ, ஊடகவியலாளரையோ குற்றம் சுமத்துவது என் நோக்கமல்ல. இன்று தமிழ் மொழிக் கொலை என்று வந்தாலே எல்லோரும் குற்றம் சாட்டுவது குறிப்பாக இலத்திரனியல் ஊடகங்களையே.

தமிழ் மொழியினை கொலை செய்கின்ற ஊடகங்கள் இருக்கின்ற வேளை தமிழ் மொழியினை வளர்ப்பதிலே பல தமிழ் ஊடக நிறுவனங்களும், தமிழ் ஊடகவியலாளரும் பாடு படுகின்றார்கள் என்பதனை எவரும் மறுக்க முடியாது.

ஒரு சிலர் செய்கின்ற தவறுக்காக எல்லோரையும் குற்றம் சொல்வது சரியல்ல. தமிழ் கொலை செய்கின்ற ஊடகங்களும் ஊடகவியலாளரும் திருந்த வேண்டும். என்பதோடு நாகரிக மோகத்தில் தமிழ் மொழியோடு வேற்று மொழிகளை கலப்பதனையுமே நான் தவறு என்று சொல்கிறேன்.

வானொலி, தொலைக்காட்ட்சி போன்றவற்றிலே அறிவிப்பாளர்கள் விடுகின்ற மொழி உச்சரிப்பு, வேற்றுமொழிக் கலப்பு தொடர்பாகவே பலரும் பேசி இருந்தனர். இந்த இடத்திலே ஒன்றைக் குறிப்பிட வேண்டும் நானும் ஒரு ஊடகவியலாளன்தான், ஒரு அறிவிப்பாளன்.

நான் தமிழ் மொழி தவறாக உச்சரிப்பதனையும், ஆங்கில வார்த்தைகள் தேவையற்று அதிகம் பயன் படுத்துவதனையும் முற்றாக வெறுப்பவன். தமிழை தமிழாக பயன் படுத்த நினைப்பவன்

ஒரு சிலர் குறிப்பிட்டிருந்தார்கள் நாமும் நாகரிகத்துக்கு ஏற்றாற்போல் மாற வேண்டுமென்று. நான் மாற வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் எமது தமிழ் பாரம்பரியங்களையும், தமிழ் மொழியின் சிறப்பினையும் நாகரிகமென்ற போர்வையில் சாகடிப்பதா.

நான் வேற்று மொழிகளை முற்றாக புறக்கணிக்க வேண்டுமென்று சொல்லவில்லை. ஆங்கில மொழியினை பயன் படுத்த வேண்டிய இடங்களுக்கு பயன்படுத்தத்தான் வேண்டும். அதற்காக தேவையற்ற விதத்தில் அதிகமாக பயன்படுத்தலாமா.

இன்று ஆங்கில மொழியினை தமிழ் மொழியோடு பயன் படுத்துவது அதிகரித்து வருகின்றது. அன்று ஒரு பத்து வீதமாக இருந்தது என்று வைத்துக் கொள்வோம் இன்று இருபது வீதமாக அதிகரித்து விட்டது என்றால் எதிர் காலத்தில் தமிழோடு ஆங்கில மொழி பயன்பாடு அறுபது வீதமாக அதிகரித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்.

அந்த மொழியினை தமிழ் மொழி என்பதா அல்லது வேறு ஒரு மொழி என்பதா? போகிற போக்கில் நடக்காமல் விடலாம் என்று சொல்ல முடியாது. தமிழ் மொழி மறைகின்ற நிலைக்கு தமிழர்களாகிய நாம் பங்காளிகளாக இருக்கலாமா.

சில ஆங்கில சொற்களை நாங்கள் பயன்படுத்தியே ஆகவேண்டும். இருந்தாலும் எமது தமிழ் மொழியிலே பல இனிய சொற்கள் இருக்கின்றன. ஒரு சிலரின் குற்றச் சாட்டு சில தமிழ் சொற்கள் எல்லோருக்கும் தெரியாது அதனால் ஆங்கில சொற்களை பயன்படுத்துகிறோம் என்று. இக் கருத்தினை முற்று முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்று இலங்கையின் ஊடகங்களிலே தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி.. இன்னும் பல.. இனிய தமிழ் சொற்கள் பாவிக்கப்படுகின்றன.

இந்த சொற்களை பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை எல்லோரும் இன்று ஏற்றுக் கொள்கின்றனர். இந்த சொற்களின் அறிமுகம் எப்போது வந்தது?. 

ஆரம்பகாலத்தில் இருந்து ஊடகங்களிலே பயன்படுத்தப்பட்டு வந்ததா என்றால் இல்லை. அதிகமானவர்களுக்கு அன்று இந்த சொற்கள் தமிழிலே இருக்கின்றது என்பதே தெரியாது. என்னையும் சேர்த்து.

ஊடகங்களால் முடியாதது எதுவும் இல்லை. தமிழை வளர்ப்பதிலே பல ஊடகவியலாளர்கள் பாடுபட்டிருக்கின்றார்கள். அதன் பயனாகவே இன்று இந்தச் சொற்கள் மக்களால் பயன்படுத்தப் படுகின்றன.

அன்று தொட்டு இன்றுவரை பல ஊடகவியலாளர்கள் தமிழ் மொழி வளர்ச்சியில் பங்காற்றி வருகின்றனர். நான் மேலே குறிப்பிட்ட தொடருந்து, சிற்றுந்து, உலங்குவானூர்தி, துவிச்சக்கர வண்டி, மிதி வண்டி, காலுந்து, வெதுப்பி, குளிர்களி..

அப்போது ஒரு சிலர் மக்களுக்கு விளங்கவில்லை என்று எதிர்த்தனர். ஆனால் இன்று எல்லாராலும் இந்தச் சொற்கள் பயன் படுத்தப் படுகின்றன.

ஊடகங்களிலே இது போன்ற பாவனையில் இல்லாத சொற்களை அறிமுகம் செய்கின்றபோது காலப்போக்கில் பாவனைக்கு கொண்டு வர முடியும். 

அதற்காக எல்லாச் சொற்களையும் வேற்று மொழிச் சொற்களையும் தமிழ் படுத்த முடியாது என்பதனையும் ஏற்றுக் கொள்கிறேன். அவற்றை ஒரு பக்கம் வைத்துவிட்டு தேவையற்ற வேற்றுமொழி கலப்பை தவிர்க்க வேண்டும் என்பதே எனது கருத்து.

என் நாம் இன்று வலைப்பதிவுகளிலே இடுகை, அமுக்கவும் போன்ற இனிய சொற்களை பாவிக்கின்றோமே. இன்று இணையமும் கூட ஒரு வகையில் தமிழை வளர்க்கின்றது என்று சொல்லலாம்.

அடுத்து வானொலி, தொலைக்காட்சிகளிலே தமிழ் கொலை செய்யப்படுகின்றன என்ற விடயத்துக்கு வருகின்றேன். நவின உலகத்துக்கு ஏற்றாற்போல் இன்று எல்லாமே மாறி வருகின்றன.

இதற்கு வானொலி தொலைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல. கடுமையான போட்டித்தன்மைகளுக்கு மத்தியிலே தாம் நிலைத்திருக்க வேண்டுமானால். காலத்துக்கேற்ற சில மாற்றங்களையும் இன் நிறுவனங்கள் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.

இதற்காக இவர்கள் நினைத்த எதனையும் செய்யலாமா இன்று சிலர் தாம் நினைத்தபடி மாறுதல் என்ற பெயரில் தமிழ் கொலை செய்து கொண்டு இருக்கின்றனர்.

வானொலி, தொலைக்காட்சிகளின் போட்டித்தன்மை காரணமாக நிலைத்திருக்க வேண்டுமானால் சில ஊடக நிறுவனங்கள் மாற்றங்களை செய்யத்தான் வேண்டும். இன்று பல ஊடக நிறுவனங்கள் பேச்சுத்தமிழை பயன்படுத்துகின்றன.

பேச்சுத்தமிழில் பேசுகின்றபோது எல்லோருக்கும் இலகுவாக விளங்கிக் கொள்ளமுடியும். இது ஒரு புறமிருக்க இதனை ஒரு சாட்டாக வைத்து வேற்று மொழி கலந்து பேசுவதை சில அறிவிப்பாளர்கள் கடைப்பிடிப்பதுதான் கவலைக்குரிய விடயம்.

சில அறிவிப்பாளர்கள் விடுகின்ற தவறுகளை சொல்வதென்றால் அதற்கென ஒரு வலைப்பதிவு தொடக்கி எழுதிக்கொண்டே போகலாம்.

அறிவிப்பாளர்கள் எல்லோரும் பிழை விடுவதில்லை, தமிழை கொலை செய்வதில்லை சில அறிவிப்பாளர்கள் இருக்கின்றார்கள் லகர ழகர ளகர தெரியாமல் திண்டாடுகின்றனர். அது மட்டுமல்ல சில தமிழ் சொற்கள் அவர்களின் வாயில் இருந்து வருவதற்கு கடினமாகவே உள்ளது.

சில அறிவிப்பாளர்கள் இனிய தமிழை மறந்து அளவுக்கு அதிகமாக ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்துவது என். இவர்களுக்கு தமிழ் தெரியாதா. தமிழ் தெரியவில்லை என்றால் ஏன் தமிழ் அறிவிப்பாளராக வந்தார்கள்.

ஆங்கில அறிவிப்பாளராக போயிருக்கலாம்தானே. இவர்கள் விடுகின்ற தவறுகளும் ஓட்டு மொத்த அறிவிப்பாளர்களையும் பாதிக்கும் என்பதை இவர்கள் உணர்ந்து திருந்துவதே நல்லது (திருந்துவார்களா)

இன்று பல ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளரும் தமிழ் மொழி வளர்ச்சியிலே பங்காற்றி வருகின்றார்கள் என்பதை எவராலும் மறுக்கமுடியாது.

மக்களால் பயன் படுத்தப்படாமல் இருக்கின்ற தமிழ் சொற்களை மக்களுக்கு அறிமுகம் செய்து வேற்று மொழிக்கலப்பை தடுக்க ஊடகங்களால் முடியும் என்பதே உண்மை.

எது எப்படி இருப்பினும் தமிழை தமிழாக பயன் படுத்த வேண்டும். தாய் மொழியினை தமிழாகக் கொண்ட எல்லோரும் தமிழ் மொழி வளர்ச்சியிலே பங்கெடுக்க வேண்டும். என்பதே என் கருத்தாகும்.
நன்றிகள்.

Thursday, 14 February 2013

யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகிலுள்ள......!
கச்சத்தீவு யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவாகும். இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளது. 1974ம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது.

இத்தீவின் பரப்பளவு 285 ஏக்கர்(1.15 சதுர கிலோ மீட்டராகும்). இந்த தீவில் மனிதர்கள் யாரும் தற்போது வசிக்கவில்லை. புகழ்பெற்ற அந்தோணியார் கோவில் ஒன்று இங்கு உள்ளது.

கச்சதீவு இந்திய உரிமை என்பதற்கு சான்று:

1972-ல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929 மற்றும் 1933-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899-ல் ஏ.யே(ஜெ). சு(ஸ்)டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.

அதில், ராமேசுவரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; பண்ணையார் (ஜமீன்) ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேசுவரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது. இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவுக்கு உள்ள உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.

இது இலங்கை நல்ல உறவை பராமரிக்க வேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டது. இந்த கை விளைவாக, தமிழ் இந்திய மீனவர்கள் தங்கள் உரிமைகளை இழந்தனர்.

இன்னும் நூற்றுக்கணக்கான காணாமல் போயுள்ளனர் தவிர, இதுவரை, 500 இந்திய மீனவர்கள், கொல்லப்பட்டனர் 3000 மீனவர்கள் நிரந்தரமாக முடக்கப்படும் மற்றும் ஆயிரம் பேர் காயமடைந்தனர் என்று. மேலும் பல தமிழர்களை சட்டவிரோதமாக இலங்கை சிறையில் தடுத்து மிராட்டியும் மற்றும் சித்திரவதை செய்தும் வருகின்றன.

நம் அப்பாவி இந்திய தமிழ் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை செய்த கொடுமைகளை சொல்லி விட முடிய வில்லை

கச்சத்தீவு வரலாறு:

ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன.

தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622-1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் பண்ணையார் முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கிழக்கிந்திய கம்பெனியார்பண்ணையார்தாரிணியாக்கினர்.

அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார். கச்சத்தீவு இராமநாதபுரம் பன்னையாரிற்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடணத்தில் கூறியிருந்ததை இலங்கை அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரீசு(ஸ்) என்பவர் (1936-40ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் இருந்தவர்) கூறி பதிவு செய்துள்ளார்.
நன்றிகள்.

ஏகபத்தினி விரத்தை ஐந்து அறிவு.......!

ஆறறிவுடைய மனிதகுலத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஏகபத்தினி விரத்தை ஐந்து அறிவுடைய பறவைகளும், விலங்குகளும் கடைப் பிடிக்கின்றன.

இப்படியான தவறுகளினாலேயே மகளிர்குலம் வன்புணர்ச்சிக்கு ஆளாவது நடைபெறுகின்றது, அனைத்து மக்களுமே ஏகபத்தினி விரத்தை கடைப்பிடித்தால் உலகிலே பெண்கள் மிகுந்த சுதந்திரமாக பாலியல் தொல்லைகள் அற்று வாழ வழிவகுக்கும்!.
மனிதர்களிடையே அண்ணன்-தங்கை போன்ற நெருங்கிய இரத்த உறவுகளில் பாலுறவு தவிர்க்கப்பட்டுள்ளது. இதைப்போன்றே சிலவகையான பறவை, எலி, பல்லி இனங்களிலும் நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் பாலுறவு தவிர்க்கப்படுகிறது என்பது ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது.

கறுப்புக்கால்களை உடைய “கிட்டிவேக்” என்னும் கடற்கரைவாழ் பறவை நெருங்கிய இரத்த உறவுகளில் பாலுறவு வைத்துக் கொள்வதில்லை என்பதை  BMC பரிணாம உயிரியல் (Evolutionary Biology) என்னும் ஆய்வு இதழ் ஒரு கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

மனிதர்களிடையே ஒருதாரமணத்தை பின்பற்றுபவர்கள், பலதாரமணத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என்றெல்லாம் பாகுபாடு இருப்பது நமக்கெல்லாம் தெரியும். இதைப்போலவே, பறவைகளில்கூட ஒரே நேரத்தில் பல பறவைகளுடன் பாலுறவு கொள்ளுதல் அல்லது ஒரு சமயத்தில் ஒரு பறவையுடன் மட்டுமே பாலுறவு கொள்ளுதல் என்ற கோட்பாடுகள் கடைபிடிக்கப்படுவதுண்டு.

கறுப்புக்கால்களை உடைய கிட்டிவேக் (kittiwake) என்னும் கடற்கரையோரமாக வாழக்கூடிய பறவை மிகத்தீவிரமான ஏகபத்தினி விரதன். இவை நெருங்கிய இரத்த உறவுகளில் பாலுறவு கொள்வதில்லை என்பதுதான் BMC பரிணாம உயிரியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின் சாரம். பல ஆய்வர்கள் கூட்டாக நடத்திய ஆய்வில் இருந்து பல தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

கிட்டிவேக் (Kittiwake) பறவைகள் நெருங்கிய இரத்த உறவுகளில் பாலுறவு கொள்வதில்லை என்பதும் அவ்வாறு பாலுறவு கொள்ள நேரிட்டால் உயிர்பிழைக்கும் குஞ்சுகளின் எண்ணிக்கை குறைந்துபோகிறது என்பதும் சுவையான செய்தி.

கிட்டிவேக் பறவைகள் தங்களுடைய இரத்த உறவுகளை எத்தனை பெரிய பறவைக்கூட்டத்திலும் கண்டுபிடித்துவிடுகின்றன. அப்படி தவறுதலாக ஏதேனும் பாலுறவு ஏற்பட்டாலும்கூட முட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை அல்லது பொரித்த குஞ்சுகளும் இறந்துபோய்விடுகின்றன. 

குஞ்சுகளைப் பொரித்தவுடன் அவற்றின் பெற்றோர் நெருங்கிய இரத்த உறவில் வந்த குஞ்சு இது என்று இனங்கண்டுகொள்வது மட்டுமன்றி, குஞ்சுகளை வெறுக்கத் தொடங்குகின்றன.

இந்த வகை குஞ்சுகள் நோய், உண்ணி இவற்றால் எளிதில் தாக்கப்படுகின்றன. இவற்றின் வளர்ச்சியும் மெதுவாக இருப்பதால் மற்ற பறவைகளுடன் போட்டியிட்டு வாழமுடிவதில்லை.

கிட்டிவேக் பறவைகள் வாழ்க்கை முழுவதும் சேர்ந்தே வாழுகின்றன என்பதும் மணமுறிவு எக்காலத்திலும் ஏற்படுவதில்லை என்பதும் வியப்பான செய்தி. உடல் வாசனையைக் கொண்டு நெருங்கிய இரத்த உறவுகளை இந்த கிட்டிவேக் பறவைகள் அடையாளம் காண்கிறதா என்பதைப்பற்றி ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
நன்றிகள்.

Tuesday, 12 February 2013

தமிழ் வளருமா பிறமொழி துணையின்றி....?


கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் தமிழில் இருந்து பிறமொழிச் சொற்கள் பேரளவில் நீக்கப்பட்டுவிட்டன. தமிழைத் தூயதமிழாகப் பயன்படுத்த வேண்டும் என்ற முயற்சி பெருமளவில் நடைபெற்று வருகின்றது. மனநிறைவளிக்கும் வகையில் வெற்றியும் கிடைத்திருக்கின்றது.

நல்லதமிழ் வளர்ச்சியில் சில செய்தி இதழ்கள், நூலாசிரியர்கள், தமிழ் தொலைக்காட்சி போன்ற மின்னியல் ஊடகங்கள், கணினித் துறையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் மிக ஆர்வத்தோடு பங்காற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் தமிழறிஞர் மணவை முசு (ஸ்) த்தாப்பா உருவாக்கியுள்ள 6 இலக்க (இலட்சம்) தமிழ்க் கலைச்சொற்கள் நல்லதமிழாக உள்ளன. சொல்லாய்வு அறிஞர் ப.அருளி தலைமையில் 135 அறிவியல் துறைகளுக்காக உருவாகியுள்ள அருங்கலைச்சொல் பேரகரமுதலி பிறமொழிக் கலப்பின்றி வெளிவந்துள்ளது.

தமிழ்க் கணினி இணைய வல்லுநர்கள் வியத்தகு வகையில் புதுப்புது கலைச்சொற்களை உருவாக்கியும் பயன்படுத்தியும் வருகின்றனர். தமிழ்நாட்டைக் காட்டிலும் மலேசியாவில் நாம் பயன்படுத்தும் தமிழ் மிகக் தூய்மையாக உள்ளது.

அன்னிய மொழி கலக்காமல் தமிழ் வெற்றிபெற்று வருவதற்கு இப்படிப்பட்ட ஆக்கப்பணிகள் பலவற்றைச் சான்றுகளாகக் குறிப்பிடலாம்.

தமிழ் தமிழாக இருக்க பிறமொழி எழுத்துகளையும் சொற்களையும் அறவே நீக்கிவிட வேண்டும். பிறமொழிச் சொல்லைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய இக்கட்டு நேர்ந்தாலோ அல்லது மொழிபெயர்க்க இயலாமல் போனாலோ தமிழ் மரபுக்கு ஏற்ப திரித்து எழுத வேண்டும்.

சொல்லுக்கு முதலில் வராத எழுத்துகளை எழுத நேர்ந்தால் முதலெழுத்து மாற்றப்பட வேண்டும். ஏற்கனவே தமிழில் இருக்கும் சொற்களையே பயன்படுத்த வேண்டும். மாறாக, வலிந்து பிறமொழிச் சொற்களைத் திணிக்கக் கூடாது. இவ்வாறு சில எளிய வழிகளைப் பேணிவந்தால் தமிழ் தமிழாகவே இருக்கும்.

முடிந்த முடிபு

மற்றைய மொழிகளைப் போல் தமிழ் பயனீட்டாளர் மொழியன்று. பயனீட்டாளர் மொழிதான் பிறமொழிகளிலிருந்து கடன்பெற்று பிழைக்க வேண்டும். ஆனால், தமிழோ உற்பத்தி மொழி. எந்தச் சூழலிலும் புதுப்புது சொற்களைப் புனைவதற்கு ஏற்ற மொழி.

எனவே, கிரந்தம், சமற்கிருதம், பிராகிருதம், மணிப்பிரவாளம் மட்டுமல்ல ஆங்கிலம் முதலான வேறு எந்தவொரு மொழியின் தயவும் துணையும் தமிழுக்குத் தேவையே இல்லை.

தமிழ் தமிழாக இருப்பதற்கு தமிழர்கள் தமிழராக இருந்து உரிய பணிகளை முன்னெடுப்பதே முக்கியம்.
நன்றிகள்.

ஒரு, ஓர்; இரு, ஈர் என்னும்.............!

ஒரு, ஓர்; இரு, ஈர் என்னும் அமைப்பினைப் போல பெரிய, பேர் என்னும் சொல்லமைப்பு உண்டு.


உயிர் எழுத்துக்கு முன் 'பேர்' வரும்; உயிர்மெய் எழுத்துக்கு முன் 'பெரிய' வரும்.

பேர் + அவை= பேரவை

வேறு சில உதாரணங்கள் : பேரணி, பேராசிரியர், பேராறு, பேராழி, பேராசை, பேரியக்கம், பேரிரைச்சல், பேரீச்சம் பழம், பேருலகம், பேருந்து, பேருலை, பேரூராட்சி, பேரூக்கம்.

'பெரிய' உதாரணங்கள் : பெரிய மலை, பெரிய காடு, பெரிய தாடி, பெரிய நாடு, பெரிய பாலம், பெரிய வாகனம்.

'இயக்குநர்', 'இயக்குனர்' என்று சிலர் இப்படியும் சிலர் அப்படியும் எழுதுகின்றார்களே- எது சரி?

நீங்கள் தனிச் சொல்லைப்பற்றிக் கேட்கத் தொடங்கி விட்டீர்கள், சரி. எழுத்திலக்கணத்தையும் சொல்லிலக்கணத்தையும் இத்துடன் நிறுத்தி, தனிச்சொற்களில் கவனம் செலுத்துவோம்.

ஆங்காங்கே தேவையான இடங்களில் தேவையான இலக்கணங்களை மீண்டும் நினைவுகொள்வோம்.

'இயக்குநர்' என்பதே சரி, 'இயக்கு' என்னும் வினைச்சொல்லைப் பெயர்ச்சொல் ஆக்குவதற்கு 'நர்’ விகுதி சேர்க்க வேண்டும்.

ஓட்டு=ஓட்டுநர், ஆளு(ள்+உ)+நர்= ஆளுநர், பெறு+நர்=பெறுநர்,

அனுப்புநர்= அனுப்பு+நர்,பயிற்று+நர்=பயிற்றுநர், வல்லு(ல்+உ)+நர்=வல்லுநர்.

வந்தனர், ஆடினர், பாடினர்,அழைத்தனர் ஆகிய சொற்களில் வரும் 'ன' பன்மையைக் குறிக்கும்.

அஃறிணையாக இருந்தால் வந்தன, ஆடின, பாடின,அழைத்தன என வரும். இங்கே 'ஆடிநர்', 'ஆடிந' என்று எழுதுவது தவறு.

அணுகுண்டா-அணுக்குண்டா- எது சரி?

அணுவினால் ஆகிய குண்டு என்பதால் அணுக்குண்டே சரி; ஒற்றெழுத்து மிகுக்க வேண்டும்.

தங்கக் காசு - தங்கத்தினால் ஆகிய காசு

வெள்ளிக்கொலுசு - வெள்ளியால் ஆகிய கொலுசு

வேறு சில உதாரணங்கள் :

இரும்பு வாளி - இரும்பினால் ஆகிய வாளி

தோல் செருப்பு - தோலால் ஆகிய செருப்பு

இவை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.

தொகை என்றால் என்ன?

இது மக்கள் தொகையுமன்று; பணத்தொகையும் அன்று.

தொகை என்றால் மறைதல், தொகுதல், தொக்கி நிற்றல் என்று பொருள்.

எது மறைதல்?

வேற்றுமை உருபுகள் மறைதல்!

வேற்றுமை என்றால் என்ன?

பொருளை (அர்த்தத்ததை) வேறு படுத்துதல் என்று பொருள்.

1. காவலர் அடித்தார்

2..காவலர் ஐ அடித்தனர்

இந்த இரண்டு சொற்றொடர்களும் வேறு வேறு பொருளைத் தருகின்றன.

'ஐ’ என்னும் உருபைச் சேர்த்தால் பொருள் மாற்றம் உண்டாகிறது.

பொருள் வேற்றுமையை உண்டாக்கும் உருபுகளுக்கு வேற்றுமை உருபுகள் என்று பெயர்.

அவை, ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகும். இவை முறையே 2,3,4,5,6,7- ஆம் வேற்றுமை உருபுகள்.

இந்த உருபுகள் வெளிப்பட்டும் வரலாம்; மறைந்தும் வரலாம்.

கற்சிலை என்றால் தொகை; கல்லால் செய்யப்பட்ட சிலை என்றால் விரிவு.

உருபும் பயனும் உடன்தொக்க தொகை என்று சொன்னீர்களே?

ஆம். வேற்றுமை உருபும் அதன் பயனும் சேர்ந்து மறைந்துவிட்டால் 'உடன் தொக்க தொகை' என்று பெயர். அதாவது கல்லால் ஆகிய சிலை என்பதில் ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும், அதன் பயன் 'ஆகிய' மறைந்து 'கற்சிலை' என்று நின்றது.

இப்போது ஒரு புதிய சொல் வந்திருக்கிறதே மடிக்கணினி என்று- அது மடிக்கணினியா-மடிகணினியா?

இரண்டும் சரிதாம்; ஆனால், வேறு வேறு பொருள். மடியின் கண் ( மீது ) வைத்துப் பார்த்தால் ஒற்றெழுத்து மிகுக்க வேண்டும் (மடிக்கணினி).

ஒற்றெழுத்தினை மிகுக்காமல் எழுதினால் மடிக்கப்படும் கணினி என்று பொருள். உங்களுக்கு எந்தக் கணினி வேண்டும்?

மடித்த, மடிக்கிற, மடிக்கும் கணினி என்று வினைத் தொகையாகவும் கருதலாம்.

மடிக்கணினி = மடியின் கண் வைத்துப் பார்க்கப்படும் கணினி

மடிகணினி = மடித்த, மடிக்கிற மடிக்கும் கணினி

முன்னது ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை; பின்னது வினைத்தொகை.

வினைத்தொகை என்றால் என்ன?

காலம் காட்டும் இடைநிலைகள் விகுதிகள் மறைந்து வந்தால் வினைத்தொகை என்று பெயர்.

வினை மறைகிறதா, காலம் மறைகிறதா?

வினைச் சொல்லின் முக்கியத் தொழில் காலம் காட்டுதல், காலம் மறைவதால், அதே வேளை முக்காலத்துக்கும் பொருந்துவதால் வினைத் தொகை.

மடித்த, மடிக்கிற, மடிக்கும் என்பன மடி (த, கிற, உம் என்பன மறைந்து) என நின்று முக்காலத்துக்கும் பொருந்தி நடக்கும். இந்த அமைப்புத் தமிழ் மொழியில் ஒரு திறமையான, சுவையான, சிறப்பான பகுதி.

வினைத்தொகை என்பது மொழியைச் சுருக்கிப் பேசவும் எழுதவும் அமைந்த நுணுக்கமான அமைப்பு. பின்வரும் சொல்லாட்சிகளைக் கூர்மையாக நோக்குங்கள்.

திருவளர்செல்வி, திருவளர்செல்வன், திருநிறைசெல்வி, திருநிறைசெல்வன்,

நிறைகுடம், வளர்பிறை, தேய்பிறை, பழமுதிர்சோலை (பழம்+உதிர்சோலை), தொடர் சொற்பொழிவு,

எரிவாயு, விடுகதை, குடிதண்ணீர், சுடுகாடு, ஊறுகாய், ஏவுகணை, தாவுகுரங்கு, ஆடுஅரங்கு, ஓடுதளம்,

குறைதீர்கூட்டம், ஏற்றுகாதை, கடிநாய், வெடிகுண்டு, வெட்டுஅரிவாள், கொல்யானை.

மிக மிக முக்கியமான செய்தி : இவற்றில் ஒற்றெழுத்துக்கள் மிகா.

இவை ஒவ்வொன்றும் முக்காலத்துக்கும் பொருந்தும். வளர்ந்த, வளர்கின்ற,வளரும் செல்வி=இதே போன்று மற்றவற்றிற்கும் எண்ணுக.

கட்டடமா,கட்டிடமா-எது சரி?

அறிஞர்கள் பலர் பல ஆண்டுகளாகத் தமிழகத்தைத் திருத்திவரும் செய்தி இது; ஆனால் திருந்தியபாடில்லை!

கட்டடம் (BUILDING) சரி; கட்டு+இடம் = கட்டிடம்.. அதாவது, கட்டுவதற்கு உரிய இடம்.

உங்களுக்கு கட்டுவதற்கு உரிய இடம் வேண்டுமா?கட்டடம் வேண்டுமா?

தேநீரா- தேனீரா - எது சரி?

இரண்டும் சரிதாம்; பொருள் தான் வேறு!

தே+நீர் = தேநீர் (தேயிலையின் சுருக்கம் தே); தேன்+நீர் = தேனீர் (தேன் கலநத நீர்)! உங்களுக்கு எந்நீர் வேண்டும்?
நன்றிகள்.