Wednesday, 16 July 2014

ஆடிப்பிறப்பு என்று கூறுவதே ஆடிமாதத்....!.

மாதப்பிறப்பு என்றாலே எம் மனதில் ஒரு உணர்வு ஏற்படும். இன்று மாதப்பிறப்பு என்று சில காரியங்களை செய்வதை தவிர்க்கிறோம். சில காரியங்களை செய்தால் அவை தொடரும் என்றும் நினைக்கிறோம். காலையில் ஆலயம் செல்வது, இறைவனை மனசாரத் தொழுவது, விரதம் இருப்பது, சில நல்ல காரியங்களைகூட இன்று, மாதப்பிறப்பு வேண்டாம் என்று சொல்வதும், ஒரு நோய் நொடி வருத்தமா.

இன்றைக்கு மருந்து எடுக்கப் போகவேண்டாம் ஒருநாள் போகட்டும், நாளைக்குப் போகலாம் என்பதும், இன்றும் நடைமுறையில் இருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சியிலும், அறிவு பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், இந்த மாதப்பிறப்பு அடிமனதில் உறுத்துகிறதுதான். 

தைமாதப்பிறப்பை சூரியனுக்கு பொங்கலிட்டுப் படைத்து நாமும் உண்டு பிறர்க்கும் கொடுத்து மிகவும் மகிழ்வுடன் வரவேற்று கொண்டாடி மகிழ்கிறோம். அந்த வரிசையில் சித்திரை வருடப்பிறப்பு. புத்தாடை அணிந்து, பொங்கலிட்டு, ஆலயம் சென்று, கைவிசேசம் கொடுத்து, வாங்கி மகிழ்ந்து அந்த மாதத்தை வரவேற்கிறோம்.

ஒவ்வொரு மாதப்பிறப்பும் அந்த மாதத்துக்குரிய சிறப்புக்களை எமக்கு ஞாபகப்படுத்தி எடுத்து வருகின்றன. சில மாதப்பிறப்புக்களை விழாக்களாக கொண்டாடி மகிழ்கிறோம். சில மாதப்பிறப்புக்கள் வருவதும் தெரியாது. போவதும் தெரியாது. 

தை சித்திரை போல, ஆடிமாதப்பிறப்பும் விசேசமானதுதான். தைமாதப்பிறப்பு, சித்திரைமாதப்பிறப்பு என்பதுபோல, ஆடிமாதப்பிறப்பு என்று சொல்லாமல், ஆடிப்பிறப்பு என்று கூறுவதே ஆடிமாதத்துக்குரிய தனிச் சிறப்பு. 

ஆடிப்பிறப்பென்றால் எமக்கு நினைவுக்கு வருவது நம் நாட்டின் பெருமைகுரியவரான நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் "ஆடிப்பிறப்புக்கு நாளைவிடுதலை" என்ற இனிமையான, மகிழ்ச்சிதரும் பாடலும் ஆடிக் கூழும் கொழுக்கட்டையும் தான். என்றைக்குத்தான் இதை மறக்க முடியும்.

ஈழத்தமிழ் மக்கள்  இதை என்றுமே மறக்க மாட்டார்கள். எத்தனை துன்பங்கள் வந்தாலும் இந்த ஆடிக்கூழ் அவரவர் இல்லங்களில் இயன்றவரை சிறு அளவிலேனும் இடம்பெற்றேயாகும். விதம் விதமான தின்பண்டங்கள் இன்று பலராலும் புதிது புதிதாக எம் உணவில் சேர்க்கப்பட்டாலும் இந்த  ஆடிக் கூழ் விசேசமானதுதான்.


வருடம் ஒருதடவை வரும் இந்த நாளை எம் தமிழ் ம்க்கள் விசேசமான ஒரு நாளாகத்தான் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் ஆலயம் செல்லும் மக்கள் சைவம் சாப்பிடுபவர்கள், அசைவத்தை தவிர்த்து, சைவமாக உணவருந்துவதும், ஆடிக்கூழ் காய்ச்சுவதும், கொழுக்கட்டை அவிப்பதும், அயலவர்க்கும், கூழ்காய்ச்ச இயலாதவர்க்கும் பலருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்பதும், இந்த ஆடிப்பிறப்பன்றுதான். 


எம் தாயகத்தை விட்டு புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் எம் மக்கள் எங்கள் தமிழ் பாரம்பரியங்களை மறக்காமல் இருப்பதுகூட பாராட்டுக்குரியது. அங்குள்ள மக்களில், பலர் எங்கள் சைவப் பழக்க வழக்கங்களை முடிந்தவரை ஏற்று நடப்பது பெருமைக்குரியது.

இதற்குக் காரணம் அதில் ஊன்றிப்போன பெற்றோர்தான். தம் பிள்ளைகளுக்கு அதைச் சொல்லிச் சொல்லி வளர்ப்பதும், இயன்றவரை செய்துகாட்டுவதும், அவர்களை கடைப்பிடிக்க வைப்பதும், மேல்நாட்டு நாகரிகத்தில் ஈடுபட்டாலுமே,  எங்கள் தமிழ் நாகரிகப் பண்புகளையும் மறக்காமல் எத்தனையோபேர் இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
பெற்றோர் இவற்றை பழக்கத்தில் கொண்டுவரும்போது பிள்ளைகளும் அதை நடைமுறைப்படுத்த இயன்றவரை முயல்வார்கள். வெளிநாடுகளில் இன்று சகல பொருட்களும் இறக்குமதியாகின்றன. வாழை இலை வேப்பிலைமுதல் பனங்கட்டி, பாசிப்பருப்பு ஈறாக சர்க்கரை எல்லாமே (இங்கு கிடைகா விட்டாலும்),  அங்கு கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தி தமிழ் பண்பை மறக்காதவர்கள் தம்மால் முடிந்தவர நேரத்தை ஒதுக்கி வீட்டில் விழாக்களையும் கொண்டாடுகிறார்கள்.

ஆடிப்பிறப்பை பற்றி புலம் பெயர்ந்த மக்களுடன் கதைத்தபோது, "ஆடிக்கூழ் கொழுக்கட்டை எல்லாம் செய்வோமே" என்று உற்சாகமாக கூறி மகிழ்கிறார்கள். 

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே

குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

நன்றிகள்.