Monday 4 November 2013

கூகிளுக்கும் தெரிந்திருக்காது இவரது அருமை.....!

நவம்பர் 4 அதிவேக மனிதக் கணினி, கணிதமேதை சகுந்தலா தேவி பிறந்த தினம் இன்று அப்பாவைப் பார்த்து மாயம் (Magic) ஆர்வம் இவருக்கு தொற்றிக்கொண்டது. ''அப்பா, எனக்கும் ஏதாச்சும் சொல்லித்தா!' என்றாள்.

அட்டைகளில் மாயம் சொல்லித் தந்தார் அப்பா. கொஞ்ச நேரம்தான், எல்லா அட்டைகளையும் மனப்பாடமாக ஒப்பித்தாள் தேவி. அப்போது அவள் வயது 3.

 'இனி மல்லர்கள் குட்டிக்கரணம் முதலியவை போட்டுக் காண்பிக்கும் இடம் (circus) வேண்டாம்’ என முடிவுசெய்த அப்பா, மகளைப் பல இடங்களுக்கு அழைத்துச்சென்று அவளின் அதிவேகக் கணக்குப் போடும் ஆற்றலைக் காட்டினார்.


''சின்னப் பெண்ணுக்கு இவ்வளவு அறிவா? கூப்பிடு சோதிதித்துப் (check) பார்த்து விடலாம்'' எனப் பெரிய பெரிய பல்கலைக்கழகங்கள் அழைத்தன. வீட்டின் வறுமையைப் போக்க, ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்து, பின் அதுவே வாழ்க்கை ஆகிப்போனது.

அமெரிக்காவின் டல்லாசு(ஸ்) நகரில் இருந்து அழைப்பு. இப்போது தேவிக்கு வயது 46. மூளை அதே வேகத்தில் வேலை செய்யுமா?

916748676920039158098660927585380162483106680144308622407126516427934657040867096593279205767480806790022783016354924852380335745316935111903596577547340075681688305620821016129132845564805780158806771

என்கிற இந்த 201 இலக்க எண்ணின் 23-வது வர்க்கமூலத்தைக் கேட்டார்கள். கணினி 13,000 கட்டளைகளுக்குப் பிறகு, ஒரு நிமிடத்தில் பதிலைச் சொல்லத் தயாரானபோது, 546372891 என 10 நொடிகள் முன்னமே தேவி சொல்லி விட்டார். 

அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் நீண்ட கரவொலி எழுப்பினர். லண்டன் மாநகரில் 7,686,369,774,870 மற்றும் 2,465,099,745,779 என இரு எண்களைப் பெருக்கச் சொன்னார்கள். 28 நொடிகளில் விடையைச் சொல்லி, கின்னசு(ஸ்) சாதனையில் இடம் பிடித்தார்.

அவர்தான் சகுந்தலா தேவி. தான் பள்ளிக்கல்வி பெறாவிட்டாலும் சுட்டிகளுக்காக கணிதத்தை எளிமையாகக் கதை வடிவில் சொல்லும் வகையில் பல நூல்களை எழுதினார்.

''கணிதம் என்பது பாடம் சம்பந்தப்பட்ட விசயம் இல்லை. நீங்கள் சாப்பிடுகிற சாப்பாடு, பிறந்த நாள், விளையாட்டு என எல்லாவற்றிலும் கணிதம் இருக்கிறது.

அதை சுட்டிகளுக்கு சொல்லித் தர வேண்டும். கணிதத்தைக் கதை போலச் சொல்லித் தர வேண்டும்'' என்ற சகுந்தலா தேவி, கடந்த ஏப்ரல் 21-ம் தேதி காலமானார். உலகின் அதிவேக மனிதக் கணினியை அன்போடு நினைவுகூர்வோம். 
நன்றிகள்.