Thursday 9 August 2012

விவாதமும்,தர்க்கமும்..............!

ஒருவர் கருத்து கூறும்பொழுது,அந்த கருத்தை உள்வாங்கிகொண்டு,அதில் சரியில்லாத விசயத்தை சுட்டிகாட்டுவதும், அதில் புரியாத விசயத்தை கருத்திட்டவரிடம் கேட்டு தெரிந்து கொள்வதும்.ஆரோக்கியமான ஆலோசனைகளை கூறி அந்த கருத்தை முழுமையடைய செய்வதே உண்மையான விவாதம் ஆகும்.

தர்க்கம் எனபது, சரியான கருத்துகளையும், ஆலோசனைகளையும் கூறும் நபரிடம், அதை பற்றி எந்த அனுபவ அறிவு இல்லாமல் இருந்தாலும் அல்லது அதை பற்றி முழுமையாக தெரிந்தாலும், அவர் கூறிய கருத்து சரியாக இருந்தால் அதை பலவீனமாக்க முரண்பாடான வாதங்களை முன்வைப்பது ஆகும்.

உதாரண கதை(தர்க்கம்) ஒரு ஊரில் செக்கில் எண்னெய் ஆட்டும் தொழிலாளி தன் வீட்டு வாசலில்,செக்கில் மாட்டின் மூலம் எண்ணெய் ஆட்டி கொண்டிருந்தார்.

வட்ட வடிவமான செக்கின் உரலை,கயிற்றின் மூலம் இணைக்கப்பட்ட மாடு செக்கை சுற்றி,சுற்றி வந்தது.அதன் கழுத்தில் அந்த தொழிலாளி மணியை கட்டிவிட்டு தன் கூடத்திற்குள் மற்ற வேலைகளை கவனித்தார்.

செக்கை மாடு சுத்தாமல் இருந்தால் மணியின் ஓசை கேட்காது,சுற்றினால் மணி ஓசை கேட்கும் அதற்க்காவே மாட்டின் கழுத்தில் மணிகட்டிருந்தார். அந்த வழியாக மெத்த படித்த நபர் வந்து கொண்டிருந்தார்.

அந்த தொழிலாளியின் புத்திசாலிதனத்தை கண்டு பொறாமை கொண்டு ஒன்றும் தெரியாதவர் போல் அவரிடம், அய்யா மாட்டின் கழுத்தில் ஏன் மணி கட்டி இருக்கிறீர்கள் என்றார்.

மணி கட்டியதற்க்கான் காரணத்தை தொழிலாளி விளக்கினார்.அதற்கு மெத்தபடித்தவர், மாடு செக்கை சுற்றுவற்கு அடையாளமாக மணி சத்தம் கேட்பதால் செக்கை கண்கானிக்காமல் மற்ற வேலைகலை பார்க்கிறீர்கள். 

மாடு செக்கை சுற்றாமலே நின்றுகொண்டு தலையாட்டினாலும் மணிசத்தம் கேட்குமே அப்பொழுது என்ன பண்ணுவீர்கள் என்றார்.அதற்கு அந்த தொழிலாளி, மாடு உங்கள் அளவுக்கு படிக்கவும் இல்லை, அதற்கு ஆறறிவும் இல்லை என்றாராம்.

இது போல் சிலபேர் இணையத்தளங்கள் மூலம் வரும் நல்ல பதிவுகளுக்கு, நல்ல ஆரோக்கியமான கருத்துகளைக் கூறாமல், வீண் தர்க்கமான கருத்துகளை கூறுகிறார்கள். அவர்களை கண்டுகொள்ளாமல் விடுவதே சிறந்தது.

நன்றிகள்.