Sunday 9 September 2012

பணம் மட்டும் தான் வெற்றியின் அளவீடா ?

இன்று , ஒரு மனிதனின் வெற்றியும் தோல்வியும் பணத்தை வைத்தே அளவிடப்படுகின்றன.

பண்ட மாற்று முறைக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது தான் பணம். பண்ட மாற்றுமுறையில் ஓரளவிற்கு எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தது. ஒரு குறிப்பிட்ட பண்டம் மற்றும் உற்பத்தி செய்தால் போதும். அதை வைத்து மற்ற பொருட்களை வாங்கி விடலாம்.

ஆனால், அதற்காக அந்த குறிப்பிட்ட பண்டத்தை மட்டுமே அவர்கள் அளவுக்கு அதிகமாக சேர்த்து வைக்க வில்லை, பதுக்கவில்லை. இன்று பணம் என்ற ஒன்றை வைத்துதான் நாம் எல்லாவற்றையும் வாங்குகிறோம். 

இந்தப் பணத்தை நாம் பெற கடுமையாக உழைக்க வேண்டும் . ஒரு குறிப்பிட்ட பண்டத்தை விளைவித்தாலோ, உருவாக்கினாலோ அதை விற்று பணமாக மாற்றி தான் நாம் வேறு பொருள் வாங்க முடியும். பண்டத்தை அதிக நாள் சேர்த்து வைக்காத நாம் பணத்தை மட்டும் அதிகளவு, அதிகநாள் சேர்த்து வைப்பது எதற்காக? பணம் எல்லோருக்கும் தேவை தான். 

தேவையில்லை என்று சொல்ல முடியாது. இன்று, நாம் எந்த காரணத்திற்காக அதிகமான பணத்தைச் செலவு செய்கிறோம், ஒன்று மருத்துவம் சார்ந்த செலவு, இன்னொன்று கல்விக்கான செலவு.

சரியான உணவு பழக்கம் மற்றும் சரியான புரிதல் இருந்தால் மருத்துவத்துக்கும் கல்விக்கும் ஆகும் செலவை குறைக்க முடியும். உயிர் வாழத்தேவையான உணவுக்காக கூட நாம் அதிக பணம் செலவழிப்பதில்லை. இதையெல்லாம் விட இன்று வீண் ஆடம்பரங்களுக்குத் தான் அதிகம் செலவு செய்கிறோம்.


நாம் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை , நம்மை சுற்றி பலவேறு விதங்களில் சுற்றி வரும் விளம்பரங்கள் எளிதாக கொள்ளை அடிக்கின்றன. விளம்பரங்களில் வரும் பொருட்களை வாங்குவதற்காக மடாகவோ, கழுதையாகவோ உழைக்க ஆரம்பித்து விடுகிறோம்.

அடுத்தடுத்து நம் கண்ணில் படும் விளம்பரங்கள் நம்மை மாடகவே மாற்றி விடுகின்றன . மனிதனாக பிறந்து , மாடாக வாழ ஆரம்பித்து விட்டோம் . 

நமது உண்மையான, நிலையான மகிழ்ச்சிக்கு வீண் ஆடம்பரங்கள் என்றுமே துணை புரிந்ததில்லை. நம் மனதை இளகுவாக்குவதும், வாழ்க்கை என்பதே கொண்டாடபடுவதற்குத் தான் என்று உணர்த்துவதும் பயணங்கள் தான். ஆனால், நம் வாழ் நாளில் பயணத்துக்காக என்று எவ்வளவு செலவழிக்கிறோம்?.

மிகவும் குறைந்த அளவு தான். நம்மைப் பொருத்தவரை பயணங்களுக்கு ஆகும் செலவு வெட்டிச் செலவு. ஆனால், பயணங்கள் அற்புதமானவை. பல்வேறு விதமான மனிதர்கள், பழக்க வழக்கங்கள், இயற்கையின் அற்புதங்கள், நினைவுச் சின்னங்கள் என்று நாம் பயணங்களின் மூலம் அறிந்து கொள்வது ஏராளம்.

ஆக மொத்தம் நாம் வாழ அளவான பணம் இருந்தால் போதும். அளவான பணம் மட்டும் இருந்தால் கவலைகள் குறையும், நிம்மதி பெருகும். அதே சமயம், அளவான பணம் மட்டுமாவது இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் கொஞ்சம் பயணங்களுக்காக பயன்படட்டும்.

அதிகமாக சம்பாதிக்கும் பணத்தை பயணங்களுக்காகச் செலவழியுங்கள். ஒருவன், எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும், எவ்வளவு கெட்ட பழக்கங்கள் இருந்தாலும் அவனிடம் பணம் மட்டும் இருந்தால் இவை அனைத்தும் மறைந்து கொள்கின்றன.

அவன், நம் சமூகத்தின் உயர்ந்த மனிதனாக கருதப்படுகிறான்.
"பணம் பந்தியிலே ....!
குணம் குப்பையிலே ...!" .

பணமில்லாதவன் நிலைமை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பணம் சம்பாதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். பதுக்காமல் செலவழிக்கவும் தெரியவேண்டும். வாழ்க்கையில் பாதிக்கும் மேற்ப்பட்ட நாட்களை பணத்தைச் சேர்ப்பதிலேயே தொலைத்து விடுகிறோம்.

நம் வாழ்க்கை முடியும்போது எவ்வளவு சேர்த்து வைத்தோம் என்று இருக்கக் கூடாது . எவ்வளவு வாழ்ந்தோம் என்று தான் இருக்க வேண்டும் ..! வாழ்க்கை கொண்டாடுவதற்கே..!

நன்றிகள்.