Monday, 10 June 2013

கடாரத்தை ஆண்ட தமிழர்கள்...............!

மலேயா நாட்டிற்கு (மலேசியா) தமிழர்களை வெள்ளைக்காரர்கள் தான் அழைத்து வந்தார்கள் என்று எல்லோரும் நினைத்திருப்போம். ஆனால் பல நாற்றாண்டுகளுக்கு முன்பே நமது வீரசோழர்கள் வந்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ளவும். அது எப்படி என்ற கேள்வி தமிழகத்து தமிழர்களிடம் மட்டுமல்ல மலேய தமிழர்களிடமும் இருக்கிறது.


கெடா என்ற உடனே மின்னல் போல நமக்கு சோழ மன்னரான இராசேந்திர சோழன் நினைவில் வந்திருப்பார் என்ற நம்பிக்யோடு தொடர்கிறேன்.

அவருடைய பற்பல புனைப்பெயர்களில் ஒன்று கெடாரம் கொண்டான் என்பதும் ஒன்று. கெடாரம் கெடா மாநிலத்திற்கு அருகேயுள்ள ஓர் ஊர். அவ்வூரை படையெடுத்து வெற்றிக்கொண்டதால் அவருக்கு அந்த புனைப்பெயர் கொடுக்கப்பட்டது.

உலகத்திற்கு சோழர்கள் தான் கடல் வழியாக நாடுகளை வெற்றி கொள்ளலாம் என்று அறிமுகப்படுத்தினார்கள். மலேசியாவிற்கும் கடல் வழியாக வந்து, கடலும் ஆறும் சங்கமிக்கும் நீர்நிலை ஊடாக உள்ளே ஊடுருவி, அருகே உள்ள மலையின் மேல் ஏறி வந்து ஓர் சாம்ராச்சி (ஜ்) யத்தை அமைத்துள்ளனர். ஆக தமிழர்கள் சோழ காலத்திலேயே மலேயா நாட்டினுள் நுழைந்துள்ளார்கள்.

அவர்கள் இங்கு கட்டமைத்தது என்ன? சென்ற வருடம் நான் சென்று பார்த்த அனுபவங்களை இங்கு பகிர்கிறேன். புயா(ஜா)ங் பள்ளத்தாக்கு அல்லது லெம்பா புயாங் என்றழைக்கப்படும் அந்த இடத்திற்கு செல்ல சற்று கடுமையாக தான் இருந்தது. சொந்த வாகனம் எடுத்து சென்ற போதே சிரமம் என்றால், பேருந்திலோ அல்லது தொடர் வண்டியில் பயணம் செய்தால் சற்று சிரமம் என்றே கருதுகிறேன்.

காலை 9 மணிக்கு கோலாலம்பூரில் துவங்கிய எங்கள் பயணம் அப்பகுதிக்கு சென்றடையும் பொழுது மணி மதியம் மூன்றைக்கடந்தது. மலேசியாவின் தொல்பொருள் ஆராய்ச்சி துறை அப்பகுதியை தன்வசப்படுத்தியுள்ளது.

உள்ளே நுழைந்த பொழுது நாங்கள் பார்த்தது சிறிய ஓடங்கள். அந்த ஓடங்கள் வழியாக நம்மக்கள் உள்ளே நுழைந்திருக்கக்கூடும். கடலும் ஆறும் கலக்கும் அவ்விடத்தில் சிறுசிறு ஓடங்களில் பிரயாணித்தும், மலைகளில் ஏறி வந்தும் அந்த இடத்தை அடைந்துள்ளனர்.

அருங்காட்சியகத்தில் நுழைந்தவுடன் நிறைய விநாயகர் சிலைகளும், சிவ லிங்கங்களையும் காணமுடிந்தது. இவைகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பத்திரப்படுத்தியுள்ளனர். மேலும் தமிழர்கள் மட்டுமல்ல சீனர்களும் அவ்விடத்திற்கு வந்துள்ளனர்.

மேலும் அவர்கள் அக்காலத்தில் பயன்படுத்திய மணிகளும் இருந்தது. அம்மணிகளை பார்க்கும் பொழுது அரிக்கமேட்டில்(பாண்டிச்சேரி) கிடைத்த மணிகள் ஞாபகத்திற்கு வந்தது. அக்காலத்தில் பயன்படுத்திய பாத்திரங்கள், பொருள்கள் அனைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.

அதைவிட்டு வெளியே வந்து மேலேறி சென்றோம்.

அங்கு வட்ட வடிலான கல் ஒன்றை கண்டோம். அந்த கல்லைச்சுற்றிலும் நிறைய வெட்டுக்கள் போன்றிருந்தது. யோசித்து பார்க்கையில் அக்கல்லை ஒரு சக்கரம் போல பயண்படுத்தியிருக்க வேண்டும். மேலும் முன்னேறினோம். லிங்கத்தில் இருந்து உடைந்த துண்டுகள் காணப்பட்டது.

மொட்டையாக நின்ற ஒரு கட்டிடம். கல்லும் மண்ணும் மட்டுமே வைத்து கட்டிய அது இன்னமும் உறுதியாகவும் பலமாகவும் இருக்கிறது. கிபி 850இல் கட்டியது இன்னமும் உறுதியாக இருக்கிறது. மலைத்துப்போய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தோம். நான்கைந்து படிகள் ஏறினோம். அங்கே கிட்டத்தட்ட 50 அடி தூரத்திற்கு நடைமேடை. பிறகு சில படிகள்.

ஆனால் அங்குள்ள மேற்கூரை இடிக்கப்பட்டுள்ளது. நான் இதைப்பற்றி சில மலேசிய நண்பர்களிடம் பேசும்பொழுது அவர்கள் கூறியது அதிர்ச்சியளித்தது.

அங்கு நிறைய சிவன் மற்றும் விநாயக சிலைகள் கிடைக்கப்பெற்றதாகவும், மலேசிய அரசாங்கம் அவற்றையெல்லாம் அழித்துவிட்டதாகவும் கூறினர். கல்லும் மண்ணும் சேர்த்து கட்டிய அந்த அடித்தளம் இன்னமும் அழியாமல்(அழிக்கமுடியாமல்) இருந்து நம் வரலாற்றை உரக்க கூறிவருகிறது.

இது தொலைந்த அரசாங்கம் (தி லாஸ்ட் கிங்டம்) என்று தெரிவித்துள்ளார்கள். அதுவுமில்லாமல் வந்த தமிழர்களை விபாரத்திற்காக வந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். தமிழர்கள் இங்கு ஆட்சி செய்தார்கள் என்று மறைத்துள்ளார்கள் என்றும் சொல்லலாம்.

சோழ நாடு சோறுடைத்து என்பது போல், மலேசியாவில் அதிகம் அரிசி விளைவிக்கும் மாநிலமாக கெடா (கடாரம்) மாநிலம் திகழ்கிறது.
நன்றிகள்.