Monday, 28 April 2014

படியளந்தார் பண்டைத் தமிழர்.....!

படியளந்தார் பண்டைத் தமிழர்! நாம் எப்படி இருக்கிறோம்..?

நமது முதியவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி மிக இயல்பாக' ஆண்டவன் படியளக்கிறான் ' என்று குறிப்பிடுவதுண்டு. கிராமங்களில் வேலைக்குப் போய்ச் சம்பாதித்து சற்று வசதியாக வாழ்பவர்களை 'உனக்கென்னப்பா ..முதலாளி படியளக்கிறார்......'

என்று நண்பர்கள் நையாண்டி செய்வதுண்டு. ஆணவத் தொனியில் பேசுபவர்களைப் பார்த்து 'என்னமோ நீ படியளக்கிற மாதிரியில்ல பேசுறே..' என்று வரிந்து கட்டுவதுண்டு.

படியளப்பது என்பது என்னவென்று நமது இந்த நவீன கால இளம் வயதுத் தோழர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. 'சமைக்கவே வேண்டாம். அப்படியே சாப்பிடுவேன் 'என்பது போன்ற 'விரைவு உணவு' (Fast Food) கலாசாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அவர்களுக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை.

கிராம் மற்றும் கிலோ கணக்குகளில் உழன்று கொண்டிருக்கின்ற இந்தக் கால இல்லத்தரசிகளுக்குக் கூட இது மறந்துபோய்க் கொண்டிருக்கின்ற விசயமாக இருக்கக் கூடும். அதனால் இந்த ' படியளப்பது' குறித்த சில விசயங்களை இங்கே பதிவு செய்து வைப்பது அவசியமாகிறது.


நெல், பயறு போன்ற தானியங்களை அளப்பதற்கு பண்டைய தமிழ் மக்கள் ஏறத்தாழ 20 வகையான அளவீடுகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அணு , சிட்டிகை, ஆழாக்கு, உழக்கு ,படி, மரக்கால், பதக்கு, களம், பொதி, கோட்டை என்பவை அவைகளில் முக்கியமானவைகளாக இருந்தன.

'படி' என்ற உருளை வடிவிலான அளவுக் கருவியில் நெல்லை நிரப்பினால் அதில் 14,400 நெல்மணிகள் இருந்தன. அரிசியானால் 38000 மணிகளும் பயறு ஆனால் 14,800 மும், மிளகு ஆனால் 12,800 மும் இருந்தன. இது ஒரு படி என்று அளக்கப்பட்டது.

இதற்கு அடுத்ததாக 'மரக்கால் ' என்ற அளவீட்டுக் கருவி இருந்தது. எட்டு படிகளைக் கொண்டது ஒரு மரக்கால். அதாவது ஒரு மரக்காலில் நெல்லை நிரப்பும்போது அதில் எட்டுப் படிகளில் அளக்கக் கூடிய நெல் நிரம்பும். இப்படித்தான் நமது முன்னோர்கள் தானியங்களை அளவீடு செய்து வந்தார்கள்.

இந்த பழங்கால அளவீட்டு முறை இப்போது அழிந்தொன்றும் போய் விடவில்லை. இன்றும் தென்னகக் கிராமங்களில் பழக்கத்தில் இருந்து வருகின்றது. பண்ணையார்களின் நிலங்களில் பயிர்த்தொழில் செய்து வருகின்ற விவசாயிகள் இந்த முறையில்தான் தங்களது குத்தகையைச் செலுத்தி வருகிறார்கள்.

இங்கே இந்த ' படியளப்பது ' பற்றிய விசயத்தை பதிவு செய்வதின் நோக்கமே இனிமேல்தான் வருகிறது.

என்ன அது..?

சமீபத்தில் கிராமம் ஒன்றில் இப்படிப் படியளக்கும் ஒரு நிகழ்வைக் காண நேர்ந்தது. அது ஆர்வமாக இருந்தது என்று மட்டும் சொல்வதை விட வியப்பூட்டுவதாகவும் இருந்தது என்றும் சொல்லவேண்டும். அந்த நிகழ்வை விளக்குகிறேன். கேளுங்கள்.

அந்த விவசாயி மரக்கால் கொண்டு , தான் விளைவித்த நெல்லை அளந்து கொடுத்தார். இந்த 'அளப்பு' ஒரு இசைப்பாட்டு போல சந்தத்தோடு இருந்தது என்பதுவும், எண்ணிக்கையை எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில் உரத்த குரலில் இருந்தது என்பதுவும் வேறு விசயங்கள். இங்கே நான் சொல்ல வருவது அதைப் பற்றியல்ல.

முதல் மரக்காலை 'ஒன்று' என்று எண்ணாமல் 'லாபம்' என்று அவர் சொன்னார். அடுத்து ரெண்டு,மூணு,நாலு,ஐந்து, ஆறு ,ஏழு..என்று எண்ணினார். எட்டாவது மரக்காலை எட்டு என்று அவர் எண்ணவில்லை. .'எட்டு மரக்கால்' என்று சொன்னார். அடுத்து 'ஒன்பது', 'பத்து' என்று தொடர்ந்து, பதினெட்டாவது மரக்கால் அளக்கும்போது 'பதினெட்டு மரக்கால்' என்று எண்ணினார்.

ஏன் ஒன்று என எண்ணாமல் லாபம் என்று சொன்னார்..?. ஏன் எட்டு என்று சொல்லாமல் எட்டு மரக்கால் என்று எண்ணினார்..?

இங்கேதான் நமது முன்னோர்கள் ஆதி காலம் முதலாகவே தம்மிடம் பன்முகச் சிந்தனையைக் கொண்டிருந்த சிறப்பை நாம் புரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது.

இந்த வருடத்து உழைப்பின் பயனாக வந்த முதல் மரக்கால் நெல்லை 'லாபம்' என்று சுபச் சொல்லால் குறிப்பிட்டு அந்த லாபம் அடுத்த ஆண்டும் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.

'எட்டு' என்ற எண் ஏனோ ராசியில்லாத எண்ணாக உலகம் முழுவதுமே புறக்கணிக்கப்பட்டு வருகிறது.' எட்டு குட்டிச் சுவர்' என்ற சொலவடை ஒன்று இன்றும் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது. இந்த விசயத்தைக் கருத்தில் கொண்டுதான் தங்களின் வாழ்வாதாரமான வேளாண் வருமானத்துக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்பட்டு விடாதவாறு 'எட்டு' என்று மட்டும் உச்சரிக்காமல் அதோடு நெல் நிறைந்த மரக்காலையும் சேர்த்துக்கொண்டு 'எட்டு மரக்கால்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்ததாக அளந்த நெல்லை சாக்குப்பைகளில் நிரப்பிக் கட்டும் இடைவெளிகளில் நெல்லை அளப்பவர் தான் வைத்திருந்த மரக்காலை தவறிக்கூட குப்புற வைத்துவிடாமல் நிமிர்ந்த நிலையிலேயே வைத்திருப்பதில் கவனமாக இருந்ததைக் கவனிக்க நேர்ந்தது.

ஏன் அப்படி..?

ஏனெனில் கவிழ்த்து வைப்பது ' முடிந்து விட்டது' என்பதின் அடையாளமாகக் கருதப்பட்டது. படியளப்பது எப்போதுமே தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் வினைச்செயல் அது.

இறுதியாக நெல் அளந்து முடிந்தது. இப்போதும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அளந்த மரக்காலை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைத்தபோது நெல் அளந்தவர் வெறும் மரக்காலைக் கொடுக்காமல் மரக்காலில் சிறிது நெல்லை அள்ளிப்போட்டு மரக்காலைக் கொடுத்தார்.

இந்தச் செயலுக்குப் பொருளென்ன..?

நெல் அளக்கும் மரக்கால் வெறுமையாக இருக்கக் கூடாது. 'அட்சய பாத்திரத்தில் இடப்படுகின்ற ஒரு பிடிச் சோறு வளர்ந்து ஒரு ஊரின் பசியைத் தீர்ப்பது போல அந்த மரக்காலில் இடப்படுகின்ற நெல் எப்போதும் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். அந்த மரக்கால் நெல்லை அளந்து கொண்டேயிருக்கவேண்டும் என்பது அந்த முன்னோர்களது விருப்பம். அந்த விருப்பத்தின் விளைவே இந்தச் செயலானது

இப்படியாக கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் அளந்த மரக்காலின் உரிமையாளருக்கும் கூட நன்மையே விளைய வேண்டும் என்ற நேர்மறை எண்ணங்களைத் [ Positive thinking] தம்மிடம் கொண்டு அதற்கேற்ற வகையில் தம் செயல்களை வகுத்துக்கொண்ட நம் முன்னோர்களின் அறிவுத் திறனை என்னவென்று வியப்பது..?

யாதும் ஊராக, யாவரும் கேளிராக, எல்லோரும் இன்புற்று வாழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர். நாம் எப்படி இருக்கிறோம்..
நன்றிகள்.