Friday, 12 July 2013

வாழ செந்தமிழை வாழவைப்போம்...................!

இனம் வாழ, நாம் வாழ செந்தமிழை வாழவைப்போம்! 

பிஞ்சாய் பிரபஞ்சம் தொட்டு வளரத் துவங்கிய நாள் தொட்டு ”எங்க அம்மானு சொல்லு, அப்பானு சொல்லு, அக்கானு சொல்லு” என மொழி தாய்ப்பாலோடு புகட்டப்பட்டது. 

குடும்பத்தில் அனைவரும் காலம் காலமாய் வழிவழியாய் பேசும் தமிழ் மொழியே தாய்மொழி என உணர்த்தப்பட்டது, வயது கூடக்கூட இதற்கு இதுதான் வார்த்தை என புரிய ஆரம்பித்தது. பள்ளிக்கூடம் பேசிய மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தது, கூடவே பேச்சு வழக்கில் இருந்த வார்த்தைகளை தட்டிச் சீர்படுத்தி இது தான் முறையான வார்த்தை என அடையாளம் காட்டியது. அதே காலகட்டத்தில் பள்ளியில் கூடுதல் மொழியாக ஆங்கிலம் போதிக்கப்பட்டது.


முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தேசத்தை ஆண்டிருந்தாலும், அது பெரும்பான்மையான குடும்பங்களில் உள்ள பெரியவர்களுக்குத் தெரியாத மொழி. ஆரம்பத்தில் மிகக் கடினமாக இருந்தாலும், கட்டாயத்தின் பேரில் கற்பிக்கப்பட, கற்றுக் கொண்டேயாக வேண்டிய நிர்பந்தத்தில், சிலருக்கு எளிதாக கைவந்தது, பலருக்கு அதுவே பள்ளியைவிட்டு ஓட வைத்தது.

முதல் தலைமுறையாக மாற்று மொழி கற்போருக்கு அது மிகக்கடினமான ஒரு தண்டனையாகவே இருந்தது. என்னதான் மற்ற மொழி கற்றாலும் சிந்திப்பது என் அம்மா அமுதோடு ஊட்டிய தாய்மொழியான தமிழ் மொழியிலேயே என இருந்தது. எந்த மாற்று மொழி வார்த்தையை வாசித்தாலும், அது தமிழாக மொழி மாற்றம் அடைந்து எண்ணத்தில் புகுந்தது. 

திரும்ப ஆங்கிலத்தில் பேச வேண்டிவந்தாலும், பேச வேண்டிய வார்த்தை எண்ணத்தில் தாய் மொழியிலேயே உருவாகி உள்ளுக்குள்ளே மொழி மாற்றமடைந்து, ஆங்கில வார்த்தையாக பிரசவம் அடைந்தது. இது தாய்மொழியில் சிந்திக்கும் அனைவருக்கும் பொது.


எதன் பொருட்டோ காலப்போக்கில் தாய்மொழிக்கான அங்கீகாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கத் துணிந்தோம், ஆக்கிரமித்த ஆங்கிலம் இந்த தேசத்தில் எந்த மொழியை விடவும் தமிழை அதிகம் கபளீகரம் செய்தது மறுக்க முடியாத உண்மை. 

சந்தித்துக் கொள்ளும் இரு இந்தியர்களில், வலிந்து ஆங்கிலத்தில் பேசிக் கொள்ள முயற்சித்தால் அவர்கள் இருவரும் தமிழர்கள் என அடையாளம் கண்டுகொள்ளலாம் என்ற அளவில் தாய்மொழி புறந்தள்ளப்பட்டு வரும் அவலமும் மறுக்கமுடியாத ஒன்று. 

பொருளாதாரம், வளர்ச்சி, அறிவு, அறிவியல், மருத்துவம் என்பது போல் ஏதோ ஒன்றின் பொருட்டு ஆங்கிலத்தில் ஏற்பட்ட ஈர்ப்பு, தாய்மொழியான தமிழை ஒரு குறிப்பிட்ட இடத்தோடு கட்டிப்போட்டதாகவே உணர்கின்றேன். 

பச்சையாகச் சொன்னால், தமிழகம் தவிர்த்து வேறு பகுதிகளில், வேறு தேசங்களில் வாழும் தமிழர்களிடம் வாழும் தமிழ்கூட தமிழகத்தில் வாழும்(!!!) தமிழர்களிடம் இருக்கிறதா என்பதே ஐயமாக இருக்கின்றது. 

அறிவை விருத்தி செய்ய வேண்டிய பள்ளிகளில் முதலில் தாய்மொழியை இழந்தோம். தமிழகத்தில் பெரும்பான்மையான மாணவர்கள் படிக்கும் பள்ளிகள், இன்று தனியார் பள்ளிகள் என்பதாக மாறிக்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வியையே முழுக்கக் கொண்டு, தமிழ் தவிர்த்த பிற மொழியை இரண்டாம் மொழியை எடுக்கலாம் என்ற நிலையை அரசாங்கம் அனுமதித்த போது தமிழ் மொழி தாறுமாறாக கிழித்து வீசியெறியப்பட்டது. 

அப்படி வீசியெறியப்பட்டு சீரழிக்கப்பட்ட மொழி, அதன் பின் அரசாங்கம் என்ன வெற்றுச் சட்டம் போட்டாலும் அரியனை ஏற முடியாமல் தவிக்கின்றது. இன்றைய குழந்தைகளை பள்ளிகளும், வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிகளுமே முழுக்க முழுக்க ஆக்கிரமித்துக்கொண்டு விட்டது. 

வீடுகளில் மற்றவர்களுடன் கலந்து பேசுவதை தொலைக்காட்சிப் பெட்டிகள் மௌனிக்கச் செய்துவிட, பள்ளிகள் கட்டாயம் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்த, வேறு வழியில்லாமல், தாய்மொழியை விட்டு விரும்பியோ, விரும்பாமலோ ஆங்கில மொழியிலேயே சிந்திக்க நிர்பந்திக்கப்படும் அவல நிலைக்கு நாமே ஆளாக்கிய குற்றவாளிகளாக மாறிவிட்டோம். 

”சோறு” என்றால் புளிக்கிறது ”ரைஸ்” அதுவும் ”வொய்ட் ரைஸ்” என்றால் மணக்கிறது என்பது தான் இன்றைய தமிழனின் நாகரிகமாக அடையாளப் படுத்தும் போது வேதனையோடுதான் மனதிற்குள் புழுங்க வேண்டி வருகிறது. 

இந்த பைத்தியகாரத்தனமான நாகரிக முகமூடிகளை பிய்த்தெறிந்து வெளிவர வேண்டிய நெருக்கடியான காலகட்டத்திற்கு தமிழ் மொழியும், இனமும் இன்று தள்ளப்பட்டிருக்கிறது.

வழிவழியாய் வந்த தாய்மொழியைப் படிப்படியாய் இழக்கும் சமூகம், கொஞ்சம் கொஞ்சமாய் தன் அடையாளத்தையும் இழக்கவே செய்யும். மொழியை வளர்க்க மறக்கும் மனிதன் தன் இனத்தை விட்டு படிப்படியாக விலகவே செய்வான். ஒன்றுபட்டிருந்த இனம் காலப்போக்கில் சிதறுண்டு போகும். காலப்போக்கில் தன் இனம் அழிவது குறித்து கவலைகளற்று போகும் சூழ்நிலை வந்துவிடும்.

சமீபத்தில் இந்த தமிழ் இனத்தை அழித்தொழித்த ஒரு கொடும் செயலில், ஒட்டுமொத்த தமிழகத்தில் ஒற்றை இலக்க சதவிகிதத்திற்கும் குறைவாக மட்டுமே வலி கொண்டது, கிளர்ந்தெழுந்தது, கதறி அழுதது. அந்த வலிக்கும், கிளர்ச்சிக்கும், அழுகைக்கும் அடிப்படையாக இருந்தது அவனும், நானும் தமிழன் என்ற ஒரே பற்றுக்கோடுதான். 

மொழியை இழந்தவன் இந்த பற்றுக்கோடு பற்றிய அக்கறை அற்றவனாக மாறி, இனத்திலிருந்து தனிமைப் பட்டுப்போவான். ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், விருந்தோம்பலையும் ஆதிகாலம் முதலே கற்றுக்கொடுத்து வந்த மூத்த மொழி தமிழ் மொழி, மூத்த இனம் தமிழ் இனம்.

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி வழி வந்த நாம், மிக அவசரமாக, அவசியமாகச் செய்ய வேண்டியது, நம் பிள்ளைகளுக்கு தாய் மொழி தமிழ் மேல் சிதறாத ஆர்வத்தை தூண்டுவது. அதுவே மொழியை, மொழி சார்ந்தவனை, இனத்தை காப்பாற்றும். இனம் வாழ, நாம் வாழ செந்தமிழை வாழவைப்போம், அதற்காகச் செயல்படுவோம்.