Monday, 12 March 2012

தமிழ் யுனிகோடு முறையின் முன்னோடி .........!


நா.கோவிந்தசாமி என்ற முன்னோடி -ஆல்பர்ட், அமேரிக்கா

உலகில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழ்மொழியில் தான் அதிக அளவில் இணையத் தளங்கள். மனம் குதூகலிக்கிறது. இணையத்தில் முதலில் தமிழை வலம் வரச் செய்த பெருமை யாருக்குரியது தெரியுமா? தமிழை இணையத்தில் உதிக்க வைத்த பெருமை, சிங்கப்பூருக்குரியது. தமிழர்கள் வாழும் பல நாடுகளுக்குக் கிடைக்காத பெருமை சிங்கப்பூருக்குக் கிடைக்கக் காரணமாயிருந்தவரை இணைய உலகில் வலம் வரும் எவரும் மறந்துவிட முடியாது. அவர்- அமரர். நா.கோவிந்தசாமி!

1995ம் ஆண்டு அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது.

இந்த வலையகத்திற்கான தமிழ்ப் பகுதியை உருவாக்குவதில் பெரும்பங்காற்றியவர் அமரர் நா.கோவிந்தசாமி.நன்யான் தொழில் நுட்பக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு அந்த நாட்டைப் பற்றிய பல தகவல்களை இணையத்தில் இடம் பெறச் செய்ய நினைத்தபோது, தமிழிலும் அவற்றை வெளியிட முடிவு செய்தது. அந்தப் பணிகளை இவரிடம் ஒப்படைத்தது. இவரும் அதைத் திறம்படச் செய்து சிங்கப்பூர் அரசின் பாராட்டுக்குரியவரானார்.

அப்பணியில் பெற்ற அனுபவத்தை, அறிவைத் தொடர்ந்து பல பணிகளைச் செய்து வந்தார். அப்படி இடம்பெற்ற தமிழ்ப் பக்கங்கள்தான் இணையத்தில் இடம்பெற்ற முதல் தமிழ்ப் பக்கங்கள். அதுதான் இந்திய மொழிகளில் இணையத்தில் இடம் பெற்ற முதல் மொழி என்ற பெருமையைத் தமிழ் பெறக் காரணமாக அமைந்தது.

1997ம் ஆண்டு இன்று இணைய மாநாடுகளுக்கு முன்னோடியத் திகழ்ந்த தமிழ்நெட்97 மாநாட்டை பெரும் முயற்சி எடுத்து சிங்கப்பூரில் நடத்தினார்.அந்த மாநாட்டில் பல நாடுகளில் தமிழ் தொடர்பான பணிகளை ஆரவாரமின்றிச் செய்துவந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களையெல்லாம் அழைத்துப் பங்கேற்கச் செய்தார். ஆங்காங்கே பலபிரிவுகளாக பலரும் செய்து வந்த பணிகளைப் பற்றி ஒருவருக்கொருவர்.

ஓரிடத்தில் கலந்துரையாடக் காரணமாக இருந்தார். அதன் விளைவாக உலகில் பல பகுதிகளில் பல்வேறு பணிகளுக்குக் கணினி வழித் தமிழைப் பயன்படுத்தி வந்தவர்களிடையே ஒரு ஒருங்கிணைவும், சமூக உணர்வும் ஏற்பட்டன.

தமிழ்நெட் '97 மாநாட்டின் தொடர்ச்சியாகக் கணித்தமிழ் தொழில் நுட்பப் பிரச்சினைகள் குறித்து இணையத்தில் அஞ்சல் உரையாடல் தொடங்கப்பட்டு விவாதங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. முரசு மென்பொருள் தயாரிப்பாளர் முத்தெழிலன், சுவிட்சர்லாந்திலிருந்து 'மதுரைத் திட்டம்' என்கிற தமிழ்.

அறிவுக்களஞ்சியத்தைத் தொகுத்த கல்யாணசுந்தரம் உட்பட பலர் இந்த விவாதங்களில் கலந்து கொண்டார்கள்.கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த மின்னஞ்சல் உரையாடலில் அலசப்பட்ட விஷயங்களைத் தொகுத்து வெளியிட்டால் அது கண் முன் நடந்த வரலாற்றின் பதிவாக இருக்கும்.

திறமையும் எளிமையும் இணைவதை எப்போதாவதுதான் பார்க்கமுடியும். அப்படியோர் இணைவைப் பெற்றவர் அமரர் நா.கோவிந்தசாமி!மண்வாசம் - தமிழ்வாசம் நிறைந்த அவரது பண்புகளைப் பழகிய யாவரும் உணர்ந்திருக்கலாம்.

தமிழ் விசைப் பலகை (Key Board) உருவாக்கத்திலும், இணையத்தில் தமிழுக்குப் பெருமை கிடைத்ததிலும் அவருக்கு மிக முக்கியப் பங்குண்டு என்பதை எவரும் மறுத்துரைக்க இயலாது. அதற்காக அவர் இரவுபகல் பாராது கடினமாக உழைத்ததை இணைய நண்பர்கள் மிக அறிவார்கள். அந்த உழைப்பிலும், உயர்விலும் பண்புகளை இழக்காமல் தொடர்ந்து, நட்பை அகலப்படுத்திக் கொண்டு அவர் பலரிடம் பகிர்ந்து கொண்டதை அவரோடு அணுக்கமாய் இருந்தவர்கள் இன்றும் நினைவுகூர்கிறார்கள்.

தனது கண்டு பிடிப்பை, உழைப்பைப், பெயர் புகழுக்கு முன்னிறுத்தாமல் தமிழுலகத்திற்குக் கொடுத்துவிட்டு அடுத்தடுத்த கட்டங்களுக்கு பயணிப்பதிலேயே குறியாக இருந்தவர் அமரர் கோவிந்தசாமி.

தமிழ்நெட் 97ன் வளர்ச்சிதான் சென்னையில் நடைபெற்ற 'தமிழ் இணையம் 99' என்ற இணைய மாநாடு.அந்த மாநாட்டில் சிங்கப்பூரின் பிரதிநிதியாகப் பங்கேற்றுப் பல அரிய கருத்துகளை வழங்கினார் நா.கோவிந்தசாமி.

கணியன் என்ற எழுத்துருவைத்தான் முதன் முதலில் அமரர் 'நாகோ' அறிமுகப்படுத்தினார். அதே பெயரில் "கணியன்" என்ற இணைய இதழையும் இணையத்தில் உலவ விட்டு அதன் மூலம் இணைய நண்பர்களை ஈர்த்தார்.

நன்யான் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் தனது பெரும் நேரத்தைக் கணிப்பொறி, இணையம், .தமிழ் இலக்கியம் என்றுழைத்துப் பல பெருமைகளைத் தமிழுக்குத் தேடித் தந்தார்.

1965லிருந்து சிறுகதைகள் எழுதிய இவர், 1977ல் இலக்கியவட்டம் என்ற அமைப்பை ஏற்படுத்தி மிகச் சிறந்த கதைகள் எவை என்ற அலசல் ஆய்வின் மூலம் சேகரித்த கதைகளை 1981ல் அதைத் தொகுப்பாக வெளியிட்டார். அவரின் உள்ளொளி என்ற சிறுகதைத் தொகுப்பும் வேள்வி என்ற நாவலும் அவர் தமிழ் இலக்கியத்துக்கு விட்டுச் சென்ற அழியாச் சொத்துக்களாகும். கவிதைகளில் நாட்டம் கொண்ட இவர் கவிதைகளும் எழுதுவதில் வல்லவராக இருந்தார்.

இன்றைக்கு ஒருங்குறி எழுத்து குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறோம்; ஆனால் அன்றைக்கே அது குறித்து சிந்தித்தவர் கோவிந்தசாமி. சென்னையில் நடைபெற்ற இணைய மாநாட்டில் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் ஒருங்குறி முறையை வலியுறுத்தினார். 16பிட் யுனிகோடு முறையை எப்படிப் பயன்படுத்தினால் நன்மைபயக்கும் என்ற ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

ஒரு தகவலைத் தமிழில் பதிவு செய்ய விதவிதமான விசைப் பலகைகள் (Key Board). குறிப்பிட்ட மென்பொருளில் (Software) சிறிது காலம் பழகிய நண்பர் புதிய விசைப் பலகையில் தடவிக் கொண்டிருப்பது பரிதாபமான காட்சி. 'அ' என நினைத்து அடித்தால் 'ய' வரும்.( இந்தப் பரிதாபம் ஆங்கில மொழிக்கு இருக்கிறதா? எட்டு நுணுக்குகள் (8 Bits) கணனி முறையில் 256 முகவரிகள் (Points) உள்ளன. இவற்றில் ஒவ்வொரு point - லும் இன்னின்ன எழுத்து என்று முடிவு செய்து இருக்கிறார்கள். அதைத்தான் உலகம் முழுவதும் பயன்படுத்துகிறார்கள்.எனவே, ஆங்கில மொழிக்கு இல்லை இப்பிரச்சினை. நாம் பலவிதக் குறிய்யிடுகளையும் எழுத்துருக்களையும் வைத்துக் கொண்டு திணறிக் கொண்டிருக்கிறோம். தமிழிலேயே மின் அஞ்சல் அனுப்ப முடியும். ஆனால் எப்படிப் படிப்பது? உலகத் தமிழர்கள் உலகத் தமிழிணையப் பல்கலைக் கழக பக்கங்களைத் தமிழில் படிக்க வேண்டுமானால் அதற்கு ஒரு எழுத்துருவை இறக்கிப் படிக்க வேண்டும்!).

இதற்கு ஒருங்குறி முறைதான் தீர்வாக அமையும் என்று எண்ணி அது குறித்து ச்஢ந்தனையிலிருந்தார் நாகோ. அவர் கவனம் அதிலிருந்த நேரத்தில் காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்துச் சென்றுவிட்டது. 1999ம் ஆண்டு மே 26ம் தேதி தமது 52வது அகவையில் மறைந்தார். அது இணைய உலகிற்கு பெரும் இழப்பு.

ஏழாம் தமிழிணைய மாநாடு சிங்கப்பூரில் கூடும் இந்த நேரத்தில் முதல் மாநாடு சிங்கப்பூரில் நடைபெறவும், தமிழ் இணையத்தில் இடம் பெற சிங்கப்பூரைக் களனாகக் கொண்டு பணியாற்றவும் செய்த தமிழறிஞர் நா.கோவிந்தசாமியை நினைவு கூர்வது இணையத் தமிழர்கள் அனைவருடைய கடமை.

"தமிழன் இல்லாத நாடில்லை: தமிழனுக்கு என்று ஒரு நாடில்லை.." என்ற www.tamilnation.org - தமிழ் தேசியத்தின் தாரக மந்திரத்தை இந்த சந் தர்ப்பத்தில் நினைவுகூர்தல் பொருத்தம் என்று, கணியன் நம்புகிறது.

தமிழனுக்கு என்று நாடு கிடைப்பது, மற்றவர்களோடு போராடிப் பெறுவது, கல்வி நிலையில் தமிழுக்கு ஓர் உன்னதம் கிடைப்பது, ஆட்சியில் அமர்ந்துள்ள தமிழனைப் பொருத்தது. ஆட்சியில் அமர்ந்துள்ள தமிழன் மனது வைத்தால், தமிழ் உன்னதத்தை அடையும்."

நன்றிகள்.