Wednesday, 23 October 2013

மின்மினி பூச்சிகள் இரவில் எவ்வாறு.....!

மின்மினி பூச்சிகள் இரவில் எவ்வாறு ஒளிர்கின்றன??

மின்மினிப் பூச்சி பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம், நிறைய பேர் பார்த்திருப்போம். அது எப்படி இந்த பூச்சி மட்டும் இத்தனை பிரகாசமாக, இத்தனை அழகாக ஒளிர்கிறது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தாலும் பலருக்கு அது உளிரும் அழகை நேரில் பார்க்கும் போது மனது மயங்கி அந்த கேள்வியை மறந்து மறைந்து போகும்.

மின்மினிப் பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். தமிழில் கூறவேண்டும் என்றால் பறக்கும் நெருப்பு. சாதாரணமாக விளக்கு எரிந்து வெளிச்சம் கிடைக்கும்போது ஒருவித வெப்பம் உண்டாகும். ஆனால் இந்த மின்மினி பூச்சிகள் எரிந்து வெளிச்சம் கிடைக்கும்போது எவ்வித வெப்பமும் ஏற்படுவது கிடையாது.


Coleopteran என்ற குடும்பத்தைச் சேர்ந்த மின்மினிப் பூச்சிகளில் தற்போது உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது. மின்மினி பூச்சிகளின் முட்டை, புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவைதானாம். ஆச்சரியமாக இல்லை?

இப்பூச்சிகள் எப்படி ஒளிர்கின்றன என்று பார்ப்போம். இதன் ஒளிரும் நிகழ்வு ஒரு சிக்கல் நிறைந்த உயிர் இராசயனவியல் (biochemical) முறையாகும். இம்முறை உயிர் பொருள்கள் வெளியேற்றும் ஒளி (bioluminescence) என்று அழைக் கப்படுகிறது.

பொதுவாக எங்குமே எரிபொருள் எரிந்துதான் வெளிச்சம் கிடைக்கும். இங்கும் மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரிபொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin என்ற இரசாயன கூட்டுப் பொருள் ஆகும். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.

இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில்(enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற இரசாயனவியல் பொருள், மற்றும் மக்னீசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது.

இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதே யாகும். இப்படிதான், மின்மினிப் பூச்சிகள் ஒளிர்கின்றன.

பெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும் வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு வரும் குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கிவிடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும்.

இவை இரையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் இரசாயன பொருளை செலுத்திவிடும்.

பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின் மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து உறிஞ்சிவிடும் பிறகு வலம்வர போய்விடும். அப்போது அதன் உடலில் அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள் கூட ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.

மின் மினிப் பூச்சிகள் தங்களது துணையை தேடிக்கொள்ள இரவுகளில் சில குறிப்பான இடங்களில் கூடி வித்தியாசமான மின்னல்களுடன் தங்களின் விருப்பத்தையும் இருப்பிடத்தையும் தெரிவித்து தங்களுக்குரிய துணையை தேடிக் கொள்கின்றன.
நன்றிகள்.