Saturday 19 January 2013

தங்கள் அழகை கொஞ்சமாக இழந்து..........!


எந்த ஒரு செயலை  ஆரம்பித்தாலும், மங்களகரமாக ஆரம்பிக்க வேண்டும் என நம் பெரியோர்கள் கூறுவார்கள்.  அதாவது நம் தமிழர்களுக்கு மஞ்சள் என்பது இன்றியமையாதது.  உள்ளத் தூய்மைக்கும், உடல் தூய்மைக்கும் மற்றும் மங்களச் சிறப்புகளுக்கும் நன்கு பயன்பட்டு வரும் அரும்பொருள் மஞ்சள்.

புதிய ஆண்டு வியாபாரம் போன்றவை ஆரம்பிக்கும் பொழுதும் மஞ்சளைத் தான் பிரதானமாக அனைத்து பொருட்களிலும் இட்டு இறைவனை வணங்குகின்றோம். சமையலுக்கும் மஞ்சள்தூளை பயன்படுத்துகின்றோம். பெண்கள் மஞ்சளை அரைத்துப் பூசி நீராடுகின்றனர்.


மக்களின் மங்களச் சின்னமாகத் திகழும் மஞ்சள் உடலின் ஆரோக்கியத்தைச் சுட்டிக்காட்டவும், பலவித பிணிகளை குணமாக்கும் அற்புதமான மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது. பெண்கள் மஞ்சளைப் பூசுவதனால் பித்தம், வாதம், வாந்தி தோச(ஷ)ங்கள் அனைத்தும் நீங்குகிறது என்று மருத்துவ சாத்திரம் கூறுகிறது.

அதுமட்டுமின்றி மஞ்சளினால் முகத்தில் மினுமினுப்பு உண்டாகும். மற்றும் முகத்தில் தோன்றும் பருக்கள், தேமல்கள் போன்ற சரும வியாதிகளைப் போக்குவது மட்டுமின்றி தூக்கத்திலும் இனிய சுகம் காணலாம்.

தற்போதைய விஞ்ஞான ஆராய்ச்சியில் அமெரிக்காவின் டெக்சாசு(ஸ்) என்னும் பல்கலைக்கழகத்தின் எம்.டி.ஆண்டர்சண் புற்று நோய் மையம் நடத்திய ஆய்வில் மஞ்சளுக்கு தோல் புற்று நோயை எதிர்க்கும் ஆற்றல் உண்டு என்று கண்டுபிடிக்கப்ப்பட்டுள்ளது.

தோல் புற்று நோய்க்கு காரணமான “மெலனோமா” என்ற கலங்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தக் கூடிய ஆற்றல் மஞ்சளுக்குண்டு என்றும், புற்று நோய்க்கு காரணமான கலங்கள் (Cells) வளர்ச்சி பெறாமல் தானாகவே அழிந்துவிடக் கூடிய சூழ்நிலையை மஞ்சள் ஏற்படுத்துகிறது என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்ட அரிய உண்மையாகும்.


பல நூறு ரூபாய்கள் கொடுத்து அழகுசாதனப் பொருட்களை வாங்கி அவதிப்படுவதற்குப் பதில், நம் வீட்டுச் சமையலறையில் இருக்கும் மஞ்சளைப் பயன்படுத்தி அழகாகும் வழிகளைப் பார்ப்போமா..

1. காயாத மஞ்சள் கிழங்கை, அதன் இலையுடன் சேர்த்து அரைத்து பாசிப்பயறு மாவுடன் கலந்து தினமும் உடலில் தேய்த்துக் குளித்தால் தோல் சுருக்கம் வராது.

2. கழுத்து, கணுக்கால், முட்டி... போன்ற இடங்களில் கருப்பாக இருக்கிறதா? காயாத மஞ்சள் கிழங்கை அரைத்து, தயிருடன் கலந்து கருப்பாக இருக்கும் இடங்களில் தடவுங்கள். அரைமணி நேரம் ஊறிய பிறகு குளிக்க வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்துவர, கருமை  காணாமல் போய்விடும்.

3.  முகப்பரு பிரச்னையா? காயாத மஞ்சள் கிழங்குடன் வேப்பிலையை அரைத்துப் பூசி, 15 நிமிடங்கள் ஊற விட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் பரு சீழ் பிடிக்காது. வலி குறைவதோடு, விரைவிலேயே மறைந்துவிடும். முக்கியமாக, பரு உதிர்ந்த பிறகு வடு உண்டாகாது.

4.  முழு பாசிப்பயறு 100 கிராம்,  காசறை (கஸ்தூரி) மஞ்சள், கசகசா - தலா 10 கிராம், உலர்ந்த ரோயா(ஜா) மொட்டு, பூலாங்கிழங்கு - தலா 5 கிராம், எலுமிச்சை இலை, துளசி இலை, வேப்பிலை - மூன்றும் சேர்ந்து 2 கிராம் - இவற்றை மொத்தமாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் இதில் சிறிதளவு எடுத்துத் தயிரில் கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி 10 நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவுங்கள். மாசற்ற பொன்முகத்துக்குச் சொந்தக்காரர் நீங்கள்தான்!

5. மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், தடிமன், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.

6. மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.


7. மஞ்சளின் இருக்கும் குர்குமின் என்னும் உட்பொருள் மூளைக்கு அமிலத்தன்மை பரவாமல் தடுக்கிறது இது ஞாபக சக்தியை அதிகரிக்கும் அத்துடன் வயோதிபர்கள் மத்தியில் வரும் மூளை அழுகல் என்னும் நோயையும் தடுக்கிறது.

நல்ல பயன் பெறுவதற்கு குறைந்தது வாரத்தில் மூன்று நாட்களாவது உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

8. தமிழ் மருத்துவர்கள் மஞ்சளில் இருந்து பெறும் எண்ணெயை சிறந்த கிருமிக் கொல்லியாகப் பாவித்து வருகின்றனர். அவர்களின் கருத்துப்படி பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், புண் சுகமாகும்.

பெண்களுக்கு பிரசவத்தின் பின்னர் ஏற்படும் வயிற்று வலி, மாதவிடாய்ச் சிக்கலுக்கு மஞ்சள் பொடி சாப்பிடுவதால், நல்ல பலன் கிடைக்கிறது.

9. பெண்களின் பூப்பு காலத்தில் அவர்களின் உடலில் பலவேறு மாற்றங்கள் நிகழுகிறது பெண்களின் உடலமைப்பு வெளிப்புறமாக இருப்பதனால் அவர்களுக்கு பலவேறு நோய் தொற்றுகள் வர வாய்ப்பு உள்ளமையை அறிந்த பழந்தமிழர்கள் அவ்வாறு எந்த தீங்கும் வரகூடாது என எண்ணியே பண்பாட்டு முறையை ஆழப் புகுத்தினார்கள்.

எனவே இந்த நாளில் பெண்களுக்கு மஞ்சள் நீராட்டுவிழா எடுத்தார்கள் . இதனால் தோல் சம்பந்த மான பிணிகளும் மற்றும் பல்வேறு தொற்றுகளும் வராது தடுத்தனர் .

10.   பெண்கள் முகத்துக்கு மஞ்சள் பூசிக் குளிப்பதால்தான் அவர்களது முகத்தில் மீசை, தாடி வளர்வதில்லை’ என்ற நம்பிக்கை கிராமப்புறங்களில் உண்டு. இதனால் ஆண்கள் முகத்தில் மஞ்சள் பூசப் பயப்படுவார்கள்.

ஆனால், மஞ்சளுக்கும் முடி உதிரலுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் உண்மை. பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வது என்பது உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் (Hormone) வகைகளில் ஒன்றினால் ஏற்படுவது.


குறைந்த விலையில் கிடைக்கும் மஞ்சள் என்ற தாவர தங்கத்தை தற்போதைய நாகரீக பெண்கள் தவிர்த்துவிட்டு, அழகு சாதன நிலையங்களில் கிடைக்கும் விலையுயர்ந்த கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தி தங்கள் அழகை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர்.

அவர்கள் பயன்படுத்தும் அந்த அழகு சாதனங்களில் கூட மஞ்சள் கலந்துள்ளது என்பதே உண்மை. மேலும் இயற்கையான மஞ்சளை பூசுவதால் உண்டாகும் முக அழகு எவ்வளவு ஆயிரங்களை செலவழித்தாலும், அவர்களுக்கு கிடைக்காது என்ற உண்மை எப்போது புரியும் என்று தெரியவில்லை.
நன்றிகள்.