Thursday 31 January 2013

மொழியைப் பேசுவதற்கு இலக்கண...........!

ஒரு மொழியைப் பேசுவதற்கு இலக்கண அறிவு வேண்டுமா?


இலக்கணம் படித்துவிட்டுத்தான் மொழியைப் பேச வேண்டும் என்பதில்லை. மொழி பேசக்கூடிய இடத்தில் வாழ்ந்தாலே, வளர்ந்தாலே போதும். மொழி என்பது ஓசைகளின் கூட்டம்தான். பல்வேறு ஓசைகளைக் காதால் கேட்கும்போது, அவற்றை நினைவில் வைத்து, மீண்டும் அதே ஓசைகளை எழுப்பும்போது, அது மற்றவர்களுக்குப் புரிந்துவிட்டால் அது மொழி!

எந்த ஒரு மொழியும் ஓசைகளில் ஒழுங்குதான்; ஓசைகளின் அமைப்புத்தான். ஓசைகள் பிறக்கும், ஓசைகள் ஒலிக்கும், ஓசைகள் சேரும் நுட்பங்களை எடுத்துச் சொல்வதுதான் இலக்கணம்!

நுட்பங்களைத் தெரிந்துகொண்டு என்ன செய்வது?

நுட்பங்கள் தெரிந்தால் சரியாக எழுதலாம். நுட்பங்களை அறியாமலா உலகத்தார் இயங்குகின்றனர்.? சரியான நுட்பங்களை பொருத்தமான இடங்களில் உபயோகித்தாலே மொழி நுட்பங்களாகும்!

இரவு பகலும் பாடுபட்டேன் என்று மக்கள் பேசுகின்றார்கள். இதில் 'உம்’ என்னும் சாரியை உள்ளது. இது மறைந்து இரவுபகல் என்று வந்தால் அது தொகை. மொழியைக் கற்றவர்கள் இவற்றைக் கவனிக்கின்றார்கள்; மற்றவர்கள் கவனிப்பதில்லை. 

தமிழில் எத்தனை ஓசைகள் இருக்கின்றன?

இப்போது நீங்கள் கேள்வியைச் சரியாகக் கேட்கின்றீர்கள். தமிழில் முப்பது (30) முதன்மை ஓசைகள் இருக்கின்றன. இந்த ஓசையைத்தான் எழுத்து என்றனர். எழுத்து என்றால் ஓசை என்பது பொருள், ''அகர முதல எழுத்து எல்லாம்'' என்றால், ஓசைகள் எல்லாம் அகரமாகிய ஒலியை முதலாகப் பெற்றிருக்கின்றன என்று பொருள். அதாவது உலக மொழிகளில் ஓசைகளுக்கு எல்லாம் அகரம் முதல் ஒலியாக உள்ளது (வடமொழி, இந்தி, ஆங்கிலம் மற்ற பிற மொழிகளுக்கும்)

வேறு ஓசைகள் உண்டா?

உண்டு. மூன்று (3) சார்பு ஓசைகள் உள்ளன. அந்த ஓசைகள் மற்றவற்றைச் சார்ந்தே எழும்.

மொத்தமாக முப்பத்து மூன்று (33) ஓசைகள் என்று குறிப்பிட்டுவிட்டீர்கள். அவை என்னென்ன?

உயிர் எழுத்து (ஓசை) 12, மெய்யெழுத்து 18, சார்பு எழுத்து 3. ஓசை ஓசை என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்துவதற்குக் காரணம், ஒரு மொழியில் ஓசைகள்தாம் முக்கியமேதவிர வடிவங்கள் அல்ல என்பதை நிறுவிடத்தான். 'அ' என்னும் ஓசைதான் முக்கியம்; அதன் வடிவம் அன்று. வடிவங்கள் காலத்திற்குக் காலம் மாறுபட்டுள்ளன; ஓசைகள் மாறுபடுவதில்லை! திருவள்ளுவரை அழைத்து 'ஏரின் உழார்’ என்னும் குறளைப் படிக்கச் சொன்னால், அவருக்குப் புரியாது; அவர் காலத்தில் ஏயன்னாவிற்கு இந்த வடிவம் இல்லை.

இனி, எழுத்து என்பதை ஓசை என்று அடிக்கடி சுட்டிக்காட்ட வேண்டா. எழுத்து என்றே எழுதுவோம். உயிர் எழுத்துப் பன்னிரண்டை இரண்டாகப் பிரிக்கலாம். அவை குற்றெழுத்து, நெட்டெழுத்து ஆகியவையாம்.

அ, இ, உ, எ, ஒ ஆகியன குற்றெழுத்துக்கள்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழும் நெட்டெழுத்துக்கள். ஆக பன்னிரண்டு (5+7=12).

மெய்யெழுத்துக்கள் 18 ஆகும். இவற்றை வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்றாகப் பிரிக்கலாம்.

க், ச், ட், த், ப், ற் வல்லெழுத்து;

ங், ஞ், ண், ந், ம், ன் மெல்லெழுத்து;

ய், ர், ல், வ், ழ், ள் இடையெழுத்து.

கசடதபற வல்லினமாம் என்று குறிப்பிடுகின்றார்களே என்று கேட்கத் தோன்றும்.

க்+அ = க ; இது போல அகரச் சாரியையைச் சேர்த்துச் சொல்வதற்கு வசதி கருதி அப்படி அழைப்பதுண்டு.

ஆக மொத்தம் மெய்யெழுத்துகள் பதினெட்டு (6+6+6=18).

இதுவரை தமிழ் மொழியின் மேல் உள்ள முப்பது முதன்மை ஓசைகளைப்பற்றி அறிந்து கொண்டோம்.
நன்றிகள்.