Sunday 6 January 2013

தமிழில் மென்பொருள் ஆர்வ................?!


பேராசிரியர் தெய்வ சுந்தரம் அவர்களின் முயற்சியால் நடந்து முடிந்தது கணினித் தமிழ் வளர்ச்சி மாநாடு . இயல், இசை, நாடகம் என்று முத்தமிழாக இருந்த நம் மொழி இப்போது கணினித் தமிழாக நான்காவது பரிமாணத்தை எட்டி உள்ளது . ஆனால் அது வளர்வதில் நிறைய சிக்கல்கள் உள்ளன . அதை பற்றி விழிப்புணர்வு கொடுக்கத் தான் இந்த மாநாடு கூட்டப் பட்டது . 

பேராசிரியர் பேசும் போது அவர் சொன்னது .... 


சிங்கப்பூர் , யப்பான் போன்ற நாடுகளுக்கு போனால் அவர்கள் நமக்கு கணினித் துறையிலும் அறிவியல் துறையிலும் எவ்வாறு தங்கள் இனமக்கள் வளர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை சான்றாக காட்டுகிறார்கள் . ஆனால் அந்நாட்டு மக்கள் இங்கு வந்தால் நாம் நமது பழம் பெருமைகளை மட்டும் தான் காட்ட முடிகிறது . பத்தாம் நூற்றாண்டு கோவில்களை காட்டுகிறோம்.

பண்டைய தமிழர்களின் சாதனையை காட்டும் நாம் தற்போது என்ன சாதித்தோம் என்று சிந்திக்க தவறி விட்டோம் . பழைய பெருமைகள் நமக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு புதுமைகள் படைதிடுவதும் முக்கியமே . ஆனால் நாம் கணினியில் போதுமான அளவிற்கு தமிழில் மென்பொருட்கள் செய்வதில்லை அல்லது ஆர்வம் காட்டவில்லை.

தமிழ் மொழியின் ஊடாக உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் அம்மொழிகள் சார்ந்த விடயங்களும் கொண்டு சேர்பதற்கான மென்பொருள் நாம் இன்னும் கண்டறியவில்லை . 

அலைபேசியில் ஒரு முனையில் ஆங்கிலம் பேசினால் மறு முனையில் யேர்மன் மொழியில் கேட்கும் தொழில் நுட்பத்தை யேர்மானியர்கள் பயன்படுத்து கின்றனர் . இவ்வாறு தமிழில் மென்பொருள் உருவாகப் படவேண்டும் . தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்க கணினித் தமிழில் நாம் வளர்ச்சி பெறுவது இன்றியமையாதது. இவ்வாறு இவர் வலியுறுத்தினார் . 

மேலும் மாநாட்டின் அமர்வுகளில் பின்கண்ட கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.

1. இன்றைய மின்னணுக் கருவிகளின் உலகில் அனைத்து மின்னணுக் கருவிகளிலும் தமிழ்மொழி இடம்பெறவேண்டும். இதுவே இன்றைய தமிழின் அடுத்த கட்ட வளர்ச்சியைத் தீர்மானிக்கும்.

2. தமிழர்கள் தாங்கள் பயன்படுத்தும் அனைத்து மின்னணுக் கருவிகளிலும் – செல்பேசி முதல் கணினிவரை – தமிழை முழுமையாகப் பயன்படுத்த முன்வரவேண்டும்.

3. மின்னணுக் கருவிகளில் தமிழ் இடம் பெறுவதற்குத் தேவையான தமிழ் மென்பொருள்களை உருவாக்கத் தமிழகத்தில் மென்பொருள் நிறுவனங்கள் முன்வரவேண்டும்.

4. தமிழ் மென்பொருள்களை உருவாக்கத் தேவையான தமிழ்க் கணினிமொழியியல், மொழித் தொழில்நுட்ப ஆய்வுகள் , படிப்புகள் தமிழகத்தின் உயர்கல்வி நிலையங்களில் தொடங்கப்படவேண்டும. இதுவே கணினித் தமிழ் வளர்ச்சிகான மனிதவளத்தை உருவாக்கும்.

5. மேற்கூறிய அனைத்துப் பணிகளுக்கும் தேவையான நடவடிக்கைகளை விரைவுபடுத்த, தமிழக அரசும் , தமிழ் வளர்ச்சித் துறையும் உதவிடவேண்டும்.

6. மின்தமிழ் வளர்ச்சிக்கான ஒரு தெளிவான திட்டத்தைத் தமிழக அரசு மேற்கொண்டு, தமிழின் வளர்ச்சியை அடுத்த உயர்நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும். இதற்கு தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள், மென்பொருள் நிறுவனங்கள் ஒத்துழைக்கவேண்டும்.

7. கணணித்துறையில் விற்பனர்களாகத் திகழ்பவர்கள் தாங்களாகவே முன்வந்து கணணித்துறையில் தமிழின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும், இல்லையேல் தாமாகவே தமிழைக் கணனியில் உபயோகிப்பதற்கான மென்பொருட்களை தாயாரித்து மக்கள் பாவனைக்காக வெளியிட வேண்டுகின்றேன். 

இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த பேராசிரியர் தெய்வ சுந்தரம் அவர்களை தமிழ் கூறும் நல்லுலகம் பாராட்டவும் வாழ்த்தவும் கடமை பட்டுள்ளது . இனி இளையோர்கள் இவரின் வழிகாட்டுதலில் தமிழை அடுத்த கட்டத்திற்கு எடுத்தச் செல்ல வேண்டும் என்பதே நமது கோரிக்கை .

கணினித் தமிழ் வளர்ச்சிப் பேரவையில் இணைந்து , செயலாற்ற விரும்புவர்கள் பின்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளலாம். 

பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம்
சென்னை 600020
ndsundaram@hotmail.com
அலைபேசி : 9789059414
நன்றிகள்.