Thursday 19 September 2013

தற்காலத் தமிழ் இலக்கண விளக்கம்.....!

அகராதியின் புதிய பதிப்பில் தற்காலத் தமிழ் இலக்கண விளக்கம்

சொல் தேர்வு

இந்த அகராதி தற்காலப் பொது எழுத்துத் தமிழுக்கு உரியது. பொது எழுத்துத் தமிழ் என்ன என்பதுபற்றித் தமிழை எழுதுவோரிடையே ஒரு தெளிவின்மை நிலவுகிறது. இக்காலத் தமிழில், தமிழ் வல்லுநர்களுக்கு மட்டும் அல்லாமல் மக்களுக்காகவும் எழுதப்படுபவற்றில் பயன்படுத்தப்படும் தமிழ் பொது எழுத்துத் தமிழாகும். பண்டிதரின் கட்டுரையும் பாமரரின் பேச்சும் இதன் எல்லைக்கு அப்பாற்பட்டவை.

மொழியைப் பற்றிச் சமூகத்தின் கண்ணோட்டம் எதிர்காலத்தில் மாறும்போது இவையும் இதன் எல்லைக்குள் வரலாம். பேச்சுத் தமிழை எழுத்துப்பெயர்ப்பு செய்து எழுதுவது பொது எழுத்துத் தமிழில் அடங்காது. புனைகதைகளில் பாத்திரங்களின் உரையாடலை அப்படியே எழுதுவதும், அண்மைக் காலக் கதைகளில் பேச்சுத் தமிழில் எழுதப்படும் ஆசிரியர் விவரணையும் (narrative) எழுத்துப்பெயர்ப்பில் அடங்கும்.

பொதுப் பேச்சுத் தமிழ் என்பது எல்லா வட்டாரங்களிலும் எல்லாச் சமூகங்களிலும் உள்ளவர்களுக்குப் பொதுவாக இருப்பது, பொது எழுத்துத் தமிழ் என்பது எல்லா வாசகர்களும் படித்துப் புரிந்துகொள்ளக்கூடியது. இதில் நடை வேறுபாடுகள் உண்டு, உரையாடலின் கருத்தோட்டத்தை ஒட்டிய நடையும் உண்டு, புலமைச் செறிவைக் காட்டும் நடையும் உண்டு.

பேச்சு நடை, புலமை நடை ஆகிய இரு துருவங்களையும் ஒட்டி அமைந்த சிறுபான்மை நடைகள் தவிர்ந்த மற்ற நடைகளில் அமைந்த தமிழையே பொதுத் தமிழ் என்கிறோம். வழக்கில் அருகிவரும் சொற்களும் பெருகிவரும் சொற்களும் தற்காலத் தமிழின் மாறிவரும் போக்கைக் காட்டுவதால் அவையும் இந்த அகராதியில் இடம்பெற்றிருக்கின்றன.

எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் நெருங்கிவரும் போக்கைக் காட்டும் வகையில், எழுத்துத் தமிழில் படிப்படியாக இடம்பெற்றுவரும் பேச்சுத் தமிழுக்கு உரிய சில சொற்களும் இருக்கின்றன. இதுபோலவே வட்டார வழக்குச் சொற்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வட்டாரங்களில் வழங்கி, ஊடகங்கள்மூலம் பிற வட்டாரத்தினரும் புரிந்துகொள்ளும் சொற்களும் இந்த அகராதியில் இடம்பெற்றுள்ளன.

பொதுத் தமிழ் வழக்கில் உள்ள ஆங்கிலச் சொற்களைப் பொறுத்தவரை, தமிழில் பொருளிலும் வடிவத்திலும் அல்லது இரண்டிலும் மாறுபடும் சில சொற்கள் மட்டும் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த அகராதியின் முதல் பதிப்பைவிட அதிகமாக இப்பதிப்பில் பொது எழுத்துத் தமிழில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பேச்சுத் தமிழ்ச் சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணம், இந்தப் பதிப்பில் பயன்படுத்தப் பட்டுள்ள தற்காலத் தமிழ் என்னும் கருத்தாக்கத்தின் விரிவு. நவீனத்துவத்தின் வெளிப்பாட்டுக் கருவி தற்காலத் தமிழ்.

இந்த விரிவு நகர்ப்புற நடுத்தர வகுப்பினர் பயன்படுத்தும் தமிழோடு அமைந்துவிடாமல் கிராமப்புறத்தில் வாழும் மக்களும் நவீனத் தமிழ்ச் சமூகத்தின் அங்கம் என்ற உண்மையை உள்ளடக்கியிருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கை முறையில் பயன்படுத்தப்படும் முக்கியமான சொற்கள் குறிப்பிட்ட ஒரு வட்டாரத்துக்கோ ஒரு சமூகத்துக்கோ உரியவையாக இல்லாமல் இருந்தால் அவையும் தேர்வு செய்யப் பட்டிருக்கின்றன.

புனைகதைகளின் சமூகப் பரப்பு விரிந்துவரும் இந்தக் காலகட்டத்தில், இத்தகைய சொற்கள் எழுதப்பட்டு, எழுத்துத் தமிழில் இடம்பெறும் வாய்ப்பு அதிகரித்துவருகிறது. குறிப்பிட்ட ஒரு கருத்து தற்கால வாழ்க்கையின் கூறாக இருந்தாலும், பொதுத் தமிழ் வழக்கில் அதற்குச் சொல் இல்லாமல் கிராம, நகர்ப்புறப் பேச்சு வழக்கில் அதற்கேற்ற சொல் இருக்கலாம்.

அத்தகைய சொற்களும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக உயிர்க்கோழி, உள்காயம், கல் தச்சர், கானா, குழாய் மாத்திரை, சவ்வுத்தாள், தெருக்குத்து, பெரிய எழுத்து, மீன்பாடி வண்டி போன்ற சொற்களைக் குறிப்பிடலாம்.

பொது எழுத்துத் தமிழின் வட்டார, சமூகப் பரப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் இலங்கைத் தமிழ்ச் சொற்களும் இந்தப் பதிப்பில் இடம்பெற்றுள்ளன. இச் சொற்கள் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் பேசப்படும் தமிழிலும் வழங்கி வருவன. தாயகத் தமிழின் சொல்தேர்வு போலவே, இலங்கைப் பேச்சு வழக்குகளில் மட்டுமே உள்ள சொற்கள் தேர்வு செய்யப்படவில்லை.

தேர்வு செய்துள்ள சொற்கள் இலங்கைப் பொதுத் தமிழ் வழக்கில் இருப்பவை. சில இலங்கையிலும் தமிழகத்திலும் வழங்கினாலும் எழுத்து வடிவத்தில் வேறுபட்டவை, இரண்டு பகுதிகளிலும் ஒரே சொல்லாக இருந்தாலும் அது பொருளில் வேறுபடுவதும் உண்டு. இவையெல்லாம் இலங்கை வழக்குச் சொற்களாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இலங்கை எழுத்துகள் தமிழ்நாட்டில் பரவலாகப் படிக்கப்படும்போது இந்தச் சொற்கள் பொது எழுத்துத் தமிழுக்கு வந்து சேரக்கூடிய வாய்ப்பு உண்டு. இதனால் இவை பின்னிணைப்பாகக் கொடுக்கப்படாமல் அகரவரிசைப்படி அகராதியில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

தற்காலத் தமிழின் ஒரு முக்கிய அம்சம் கலைச்சொல் உருவாக்கம். அறிவியல் துறைகளிலும், தொழில் துறைகளிலும், அரசுத் துறைகளிலும், பொழுதுபோக்குத் துறைகளிலும் இக்கலைச்சொற்கள் நாளும் உருவாக்கப்படுகின்றன. இக்கலைச்சொற்களில் துறை வல்லுநர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பயன்படுத்தும் சொற்கள் இருப்பதால் அவையும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

அரசு நிர்வாகம், விளையாட்டு முதலிய துறைகள் பொதுமக்களின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையன. ஆகவே, இத்துறைச் சொற்கள் கணிசமான அளவில் இப்பதிப்பில் இடம்பெற்றிருக்கின்றன. இலக்கணக் கலைச்சொற்கள் மொழியின் ஒரு பகுதியாகும். அதனால் இவையும் இடம்பெற்றுள்ளன. புதிய கலைச்சொற்களில் பல மொழிபெயர்ப்புச் சொற்கள். 

சில துறைகளில், ஒரு பொருளையோ கருத்தையோ குறிக்க ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் வழங்கிவருகின்றன. இவற்றில் பெருவழக்குடையவை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பான்மை வழக்கில் இரண்டு சொற்கள் இருந்தால் அவை இரண்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. பல துறைகளில் மரபுக் கலைச்சொற்களோடு புதிய கலைச்சொற்களும் வழக்கில் இருக்கின்றன.

இரண்டிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட சொற்கள் அகராதியில் இடம்பெற்றிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, அலையாத்திக் காடு, ஓதம் முதலான மரபுக் கலைச்சொற்களையும் பயிர் ஊக்கி, மண்புழு உரம், சமூகக் காடு முதலான புதிய கலைச்சொற்களையும் குறிப்பிடலாம்.

பொதுத் தமிழில் ஒரே பொருளைக் குறிப்பதற்குப் பல சொற்கள் வழங்கும்போது பெருவழக்காக இருக்கும் சொல்லின் கீழே விளக்கம் தரப்பட்டிருக்கும்; பிற சொற்களுக்குக் கீழே பெருவழக்குச் சொல் மட்டும் பொருளாகத் தரப்பட்டிருக்கும்.

உவகை, களிப்பு, சந்தோசம், மகிழ்ச்சி முதலியன இதற்கு நல்ல உதாரணங்கள். இவற்றில் மகிழ்ச்சி என்ற சொல் பெருவழக்கில் இருப்பதால், இந்தச் சொல்லின் கீழ் மட்டும் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதே சமயம், இந்தச் சொற்கள் அனைத்துக்கும் ஆங்கிலப் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் இருந்தால் பெருவழக்கில் உள்ள வடிவத்தின் கீழ் விளக்கம் தரப்பட்டிருக்கும்; வழக்குக் குறைவான வடிவத்தில் ‘காண்க’ என்னும் குறிப்பின் கீழ் பெருவழக்கு வடிவம் தரப்பட் டிருக்கும்.

வடிவ வேறுபாடு எழுத்து வேறுபாடாக இருக்கலாம்.

(எ-டு) அந்நியன்; அன்னியன்
கட்டடம்; கட்டிடம்
உடைமை; உடமை
நிலைமை; நிலை
அல்லது, உருபு வேறுபாடாக இருக்கலாம்.
(எ-டு) சகிதம்; சகிதமாக
மிக; மிகவும்
வரை2; வரையில்
அல்லது, கூட்டுச்சொற்களில் சொல் வேறுபாடாக இருக்கலாம்.
(எ-டு) கருணைக் கொடை; கருணைத்தொகை
சதைப்பற்று; சதைப்பிடிப்பு
சில வினைச்சொற்கள் காலம் காட்டாதவை. இவற்றுக்குத் தலைச்சொல் தனிப் பதிவாகவும் அது ஏற்கும் மற்ற வடிவங்கள் தனித்தனிப் பதிவுகளாகவும் தரப்பட்டிருக்கும். ஒவ்வொரு பதிவிலும் ‘பார்க்க’ என்ற குறிப்புக்குப் பின் தலைச்சொல் தரப்பட்டிருக்கும்.

(எ-டு) அன்று3 வி.மு. (உ.வ.) பார்க்க: அல்; see அல்.
உள்ள பெ.அ. பார்க்க: உள்1; see உள்1.
சில வினைச்சொற்களுக்கு மாற்று அடிச்சொல் உண்டு. இத்தகைய சொற்களுக்கு மாற்று அடிச்சொற்கள் தரப்படவில்லை. எடுத்துக்காட்டு: ‘ஆகு’ தரப்பட்டிருக்கும்; அதன் மாற்று அடிச்சொல்லான ‘ஆ’ தரப்பட்டிருக்காது.

தனித்து வராத ஐ, மின், மு போன்ற பெயரடைகள் தனிப் பதிவுகளாகவும், இவற்றின் சிறப்புப் பொருளைக் கொண்டிருக்கும் கூட்டுச்சொற்கள் தனித்தனிப் பதிவுகளாகவும் தரப்பட்டிருக்கும்.

(எ-டு) ஐ; ஐம்பொன்
மின்; மின்னணு
மு; முத்தமிழ்; முப்பரிமாணம்
சில பெயர்ச்சொற்களுக்கு முழு வடிவமும் குறு வடிவமும் தனித்தனிச் சொற்களாக இருக்கலாம். இவற்றுக்குப் பொருள் விளக்கம் முழு வடிவத்தில் தரப்பட்டிருக்கும். குறு வடிவத்தில் ‘காண்க’ என்ற குறிப்புடன் முழு வடிவம் தரப்பட்டிருக்கும்.

(எ-டு) கண்டத்தட்டு; தட்டு4
திரைப்படம்; படம்1
மூட்டைப்பூச்சி; மூட்டை2
பிற சொற்களோடு சேர்ந்து தொகையாக்கும் சில பெயர்ச்சொற்களின் வடிவத்துக்குப் பருப்பொருள் அல்லாத ஒரு பொதுப்பொருள் இருக்கும். இவற்றில் சேர்ந்து வரும் சொல்வடிவத்துக்கு மட்டும் பொருள் விளக்கம் தரப்பட்டிருக்கிறது. சேர்ந்துவரும் தொகைச்சொற்கள் தனிச் சொல்லாக உருப்பெற்றிருந்தாலன்றித் தனிப் பதிவுகளாகத் தரப்படவில்லை. 

எடுத்துக்காட்டு, வேப்பங்காய்.‘வேப்பம்’ என்பது பதிவு அல்ல. இது போன்ற பிற எடுத்துக்காட்டுகள்: பனம்பழம், இருப்புப்பாதை, குக்கிராமம். ‘அசுரன்’ என்ற பெயர்ச்சொல்லிலிருந்து பெறப்படும் ‘அசுர’ என்ற பெயரடை சில கூட்டுச்சொற்களில் மட்டுமே இணைந்துவந்தாலும் அது தனிப் பதிவாகத் தரப்பட்டிருக்கும்.

ஒரு சொல்லைத் தலைச்சொல்லாக அகராதியில் சேர்க்கச் சில விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டதுபோல, சொற்களைச் சேர்க்காமல் விடவும் சில விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, சிறப்புப் பெயர்கள் அகராதியில் இடம்பெறவில்லை. சாதிப் பெயர்கள் இருக்காது, ஆனால் தொழில் செய்வோர் பெயர்கள் இருக்கும்.

(எ-டு) ஆசாரி, கருமான், தச்சர், வண்ணான். பொதுப் பொருளில் வழங்கும் புராணப் பாத்திரங்களின் பெயர்களைத் தவிர (சகுனி, கும்பகர்ணன், துர்வாசர், ரம்பை), தனிநபர்களின் பெயர்கள் இருக்காது. பெரும்பாலோரால் வணங்கப்படும் கடவுளரின் பெயர்களைத் தவிர (சிவன், காளி, முருகன், பிள்ளையார்), மற்ற கடவுளரின் பெயர்கள் இருக்காது. தமிழர் வாழ்க்கையோடு வரலாற்றுத் தொடர்புடைய பெயர்களைத் தவிர (தோடர், குறவர், மலையாளம், ஆங்கிலம்), மற்ற இனப் பெயர்கள், மொழிப் பெயர்கள் இருக்காது.

தமிழர் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்திய வரலாற்று நிகழ்வுகளையும் (உப்புச் சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம்), தேசிய அடையாளங்களாக உள்ள பொருள்களின் பெயர்களையும் தவிர (அசோகச் சக்கரம், மூவர்ணக் கொடி), மற்ற அடையாளப் பெயர்கள் இருக்காது. இவற்றின் தேர்வுக்குப் புறவயமான அடிப்படைகளைக் காண்பது கடினம். முக்கியத்துவம் கருதிச் சில சொற்கள் சேர்க்கப்பட்டன, சில விடப்பட்டன.

பெரும்பாலான தலைச்சொற்கள் தனித்து நிற்கும் சொற்களே. இவை பெரும்பாலும் ஒரு சொல்லாக இருக்கும். சில இரண்டு சொற்கள் இணைந்த கூட்டுச்சொல்லாக இருக்கும். இவை இரண்டுக்கும் புறம்பாக, ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்ட சில தொடர்களும் மரபுத்தொடர்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

(எ-டு) அக்குவேறு ஆணிவேறாக
அப்படி இப்படி-என்று
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று
கழுத்தில் துண்டு போட்டு
குற்றுயிரும் குலையுயிருமாக
கூட்டுச்சொற்களும் தொடர்களும் குறிப்பிடும் பொருள், அவற்றில் உள்ள தனிச்தனிச் சொற்களின் மொத்தப் பொருள் அல்ல. இடுகுறித் தன்மையால் கொண்ட புதிய பொருள் காரணமாக இவை அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

கூட்டுச்சொற்கள் அல்லாத தனிச்சொற்களில் ‘கூட’ போன்ற சொல்லுருபுகளும், ‘நோக்கி’, ‘கணக்காக’ போன்று மூலச்சொல்லிலிருந்து பொருள் வேறுபட்ட வினையடைகளும் ‘-உம்’, ‘-ஏ’ போன்று ஒரு வாக்கியத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் சேரக்கூடிய இடைச்சொற்களும் அடங்கும், ‘-காரன்’, ‘-தனம்’ போன்று பிற சொற்களோடு சேர்ந்து புதிய சொற்களை உருவாக்கும் விகுதிகளும் அடங்கும்.

இந்த விகுதிகள் சேர்ந்த எல்லாப் பெயர்களையும், பெயர்களோடு வினைப்படுத்தும் வினை சேர்ந்து உருவாகும் அனைத்துக் கூட்டுவினைகளையும் தனித்தனிப் பதிவுகளாக அகராதியில் கொடுத்திருந்தால் சொற்களின் எண்ணிக்கை அகராதியில் பல மடங்காகக் கூடியிருக்கும்.

வழக்கு நிலை

அகராதியில் உள்ள சொற்கள் பயன்பாட்டில் ஒரே வழக்குநிலை கொண்டவை அல்ல. சில சொற்கள் வழக்கில் அருகிவருவன (எ-டு) ஆக்ஞை, உத்தரீயம், கேந்திரம்; சில பெருகிவரும் சொற்கள் (எ-டு) அடுமனை, அமர்வு, கட்டளைநிரல், கடல் உணவு, கருத்தியல், காலகட்டம், பயனாளி, பயிலரங்கம், மண்வாரி. அருகிவரும் சொற்கள் சில பத்தாண்டுகளுக்கு முந்தைய தமிழில் வழங்கி, இக்கால வழக்கில் குறைந்து வருவன.

பெருகிவரும் சொற்கள் புதிதாகப் படைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் சொற்கள். சில சொற்கள் சுட்டும் பொருள் (object) வழக்கில் இல்லாமல் போனாலும், அந்தப் பொருளைக் குறிக்கும் சொல் தற்காலத் தமிழ் வழக்கில் இருந்தால், அது தரப்பட்டிருக்கும் (எ-டு) தம்பிடி, காதம், சல்லி. துறை சார்ந்த கலைச்சொற்களும் இந்த அகராதியில் இடம்பெறும்போது [(எ-டு) அதிர்வெண், கணம்3, கமகம், சேர்மம், நிறப்பிரிகை, சவ்வூடு பரவல்] இவை வழங்கும் துறைகளின் பெயரும் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டிருக்கின்றன. இவை ஒரு துறையைச் சார்ந்த சொற்களாக இருந்தாலும், துறை சார்ந்தவர்களே அல்லாமல் பொதுமக்களுக்கும் பரவலாக இவை தெரிந்திருப்பதால் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இலக்கண விளக்கம்

தற்காலப் பொது எழுத்துத் தமிழின் இலக்கணம் இன்னும் முறையாக விவரிக்கப்படவில்லை. மொழியியல் ஆய்வுக் கட்டுரைகளும் நூல்களும் மொழியைக் கற்பிப்பதற்காக எழுதப்பட்ட இலக்கணக் குறிப்புகளும் விளக்கங்களும் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக எழுதப்பட்டவை. இவை தற்காலத் தமிழ் இலக்கணச் சிக்கல்களிலும் மாற்றங்களிலும் அதிகக் கவனம் செலுத்தவில்லை.

விரிவான தரவுகளின் அடிப்படையில் இவை எழுதப்படவும் இல்லை. எனவே, அகராதியைத் தொகுப்பவர்களே தற்காலத் தமிழின் இலக்கணம் தொடர்பான வினாக்களுக்கு விடை தேட வேண்டியிருக்கிறது. தமிழுக்கு மரபிலக்கணமும் இருக்கிறது; மொழியியல் பார்வையில், பெரும்பாலும் ஆங்கிலத்தில், எழுதப்பட்ட விவரணை இலக்கணமும் இருக்கிறது. இரண்டும் பயன்படுத்தும் வெவ்வேறான இலக்கணக் கலைச்சொற்களும் இருக்கின்றன.

இவற்றில் எந்த ஆராய்ச்சி முடிவுகளை ஏற்றுக்கொள்ளலாம், எந்தக் கலைச்சொற்களைக் கையாளலாம் என்பதெல்லாம் பிரச்சினைக்கு உரியவை. இரண்டுமே தற்காலத் தமிழ் இலக்கணத்தை முழுமையாக, முரண்பாடில்லாமல் விளக்கப் போதுமானவையாக இல்லை. இந்த அகராதியில், சொற்களுக்குப் பொருத்தமான இலக்கண விளக்கம் இரண்டு இலக்கண நெறிகளிலிருந்தும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அகராதியின் ஒரு முக்கியமான அம்சம் தலைச்சொற்களின் இலக்கண வகையைக் குறிப்பது. தலைச்சொல்லின் இலக்கண வகையை வரையறுக்க, சொல்லின் வடிவக் கூறுகளும் பயன்பாட்டுக் கூறுகளும் இந்த அகராதியில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் வரையறுக்கப்பட்ட ஐந்து அடிப்படைச் சொல்வகைகள் வருமாறு: பெயர், வினை, பெயரடை, வினையடை, இடைச்சொல். பெயர்களில் பிரதிப்பெயர் என்ற துணை வகையும் வினைகளில் துணை வினை என்ற துணை வகையும் தரப்பட்டிருக்கின்றன.

பெயர்

மரபிலக்கணத்திலும் மொழியியலிலும் வழங்கும் ஒரு கலைச்சொல் பெயர்ச்சொல் ஆகும். வடிவ அடிப்படையில் வேற்றுமை உருபு ஏற்பது பெயர்ச்சொல். சில பெயர்கள் குறிப்பிட்ட சில வேற்றுமை உருபுகளை மட்டும் [(எ-டு) இடம்3 ‘இடது புறம்’ என்ற பொருளில்] ஏற்கும். சில பெயர்கள் மற்றொரு பெயருக்கு அடையாக வரும்போது -ஆன என்ற உருபையும் (அழகான, பிரமாதமான, கச்சிதமான) வினைக்கு அடையாக வரும்போது -ஆக என்ற உருபையும் (சுருக்கமாக, விரிவாக, வேகமாக) ஏற்கும்.

ஆனால் எல்லாப் பெயர்களும் -ஆக, -ஆன என்னும் இரண்டு உருபுகளையும் ஏற்பதில்லை. சில -ஆன மட்டும் ஏற்கலாம் (எ-டு) அபாயம், நடுத்தரம்; சில -ஆக மட்டும் ஏற்கலாம் (எ-டு) பக்கபலம், பயன், சான்று, சின்னாபின்னம். சொல்லின் வகையைத் தொடர்ந்து அடைப்புக்குறிக்குள் இத்தகவல் தரப்பட்டிருக்கிறது. பல பொருள் கொண்ட பெயர்களில் சில, ஒரு பொருளில் மட்டும் -ஆக, -ஆன இரண்டையும் ஏற்கலாம் (எ-டு) கட்டுப்பாடு (1), கதம்பம் (2), பக்குவம் (1, 3), பட்டை1(1). மற்ற பொருளில் ‘-ஆன’ மட்டுமோ ‘-ஆக’ மட்டுமோ ஏற்கலாம்.

அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ள -ஆக, -ஆன என்பன பெயரிலிருந்து பிறக்கும் வினையடையையும் பெயரடையையும் இனம்காண உதவும். இருப்பினும், இந்த வடிவங்கள் பெயருடன் வருவதைப் பார்த்து மட்டும் அதன் பெயரடை வடிவத்தையோ வினையடை வடிவத்தையோ பெற முடியாது. 

‘இரு’ போன்ற வினையோடு வந்து இயல்பை விளக்கும் பொருளிலும், சிறப்புப் பெயருக்கு முன் இரண்டு பெயர்களின் சமன்பாட்டை விளக்கும் பொருளிலும் -ஆக, -ஆன எல்லாப் பெயரோடும் வரும். ‘ஆசிரியராக இருக்கிறார்’, ‘ஆசிரியராக நடிக்கிறார்’ என்பனவற்றில் ‘ஆசிரியராக’ வினையடை அல்ல. இந்த மாதிரியான அமைப்பில் பெரும்பாலான பெயர்கள் வரும்.

அதனால், இவற்றில் ‘ஆக’ என்பதை வினையடையை இனம்காட்டும் உருபாகக் கொள்ள முடியாது. இதே போல, ‘ஆசிரியரான நான்’ என்பதில் ‘ஆசிரியரான’ பெயரடை அல்ல. இந்தப் பொருள்களில் வினையடை போலவும் பெயரடை போலவும் வரும் பெயர்களை -ஆக, -ஆன இனம்காட்டும் என்று கொள்ள முடியாது. பெயரல்லாத சொற்களும் -ஆன வடிவத்தோடு சேர்ந்து வரலாம். எடுத்துக்காட்டு: மீதான, போதுமான.

சில பெயர்கள் எப்போதும் அல்லது பெரும்பாலும் -ஆக, -ஆன என்ற வடிவத்தோடு மட்டும் வினையடையாகவோ பெயரடையாகவோ வரும். அத்தகைய பெயர்கள் இந்த வடிவங்களோடு தனிப் பதிவுகளாகத் தரப்பட்டிருக்கின்றன. (எ-டு) குண்டுக்கட்டாக; கைத்தாங்கலாக; செம்மையாக; தங்கமான.

பெயர்களில் உட்பிரிவுகள் (sub-categories) உண்டு. இலக்கணத்தின் நோக்கத்தைப் பொறுத்து உட்பிரிவுகளின் எண்ணிக்கை வேறுபடும். இந்த அகராதியைப் பொறுத்தவரை, ஒரே ஒரு உட்பிரிவுதான் தரப்பட்டிருக்கிறது. அது பிரதிப்பெயர். பெயரைப் போல் தனித்து நின்று, அது சுட்டும் நிலைத்த பொருள் அல்லாமல், இன்னொரு பெயரோடு இயைபுபடுத்தி (anaphoric) வரும், அல்லது பேசப்படும் பொருள் இருக்கும் இடத்தோடு இயைபுபடுத்தி (demonstrative) வரும், அல்லது பேச்சில் சம்பந்தப்பட்டவர்களோடு இயைபுபடுத்தி (personal) வரும், அல்லது சுட்டும் பொருளை அறிவதற்காகக் கேள்வியாகக் கேட்டு (interrogative) வரும்.

மரபிலக்கணம் கூறும் சுட்டுப்பெயர், மூவிடப்பெயர், வினாப்பெயர் ஆகிய மூன்றும் பிரதிப்பெயரில் அடங்கும். இவற்றில் வேற்றுமை உருபு ஏற்கும் வடிவங்களும் [(எ-டு) என், உங்கள்] அடங்கும். சுட்டு, வினாப் பெயரடைகளைக் கொண்ட எல்லாப் பெயர்களும் பிரதிப்பெயர் ஆவதில்லை. ஏனென்றால், இவற்றில் சில பேசுபவரின் கருத்தில் உள்ள ஒன்றைக் குறிப்பவை; (எ-டு) அன்னது, அன்னார், இத்தனை (பேர்), இவ்வளவு (விலை).

பொதுப் பெயர்கள் எல்லாம் மற்றொரு பெயருக்கு அடையாக வரலாம் என்றாலும் [(எ-டு) சத்துணவு, பணிக்கொடை, பனிப்பொழிவு, இயற்கை உரம்] சில பெயர் வடிவங்கள் பெரும்பாலும் பெயரடையாகவோ [(எ-டு) ஆட்கொல்லி; இடது; களர்] அல்லது பெயரடையாக மட்டுமோ [(எ-டு) கீழை, மீன்பிடி, முழுமுதல்] வரும். சில பெயர்களுக்கு அவையே பெயரடையாக வருவதல்லாமல், தனிப் பெயரடை வடிவங்களும் உண்டு [(எ-டு) மின்னணு, மின்; வேளாண்மை, வேளாண்; மூன்று பரிமாணம், முப்பரிமாணம்].

இரட்டைப்பெயர்களில் உள்ள இரண்டு பெயர்களும் பொதுவாகத் தனித்தும் நிற்கும். சிலவற்றில் முதல் பெயர் தனித்து வராததுபோல் [(எ-டு) அக்கம்பக்கம்] இரண்டாவது பெயரும் தனித்து வராமல் இருக்கலாம். ‘நெளிவுசுளிவு’ என்னும் கூட்டுச்சொல்லில் வரும் ‘சுளிவு’ என்ற இரண்டாவது பெயர் தற்காலத் தமிழில் தனிப்பெயராக வழங்குவதில்லை. இரட்டைப்பெயர்களில் தனித்து வராத பெயர்கள் தலைச்சொற்களாகத் தரப்படவில்லை.

வினை

வினைகள் கால இடைநிலை ஏற்பவை. கால இடைநிலைகளுக்கு மாற்று வடிவங்கள் உண்டு. வினைகள் வெவ்வேறு மாற்று வடிவங்களை ஏற்கும். வினைகள் ஏற்கும் மாற்று வடிவத்தை அறிந்துகொள்ள அவற்றின் ‘செய’ என்ற எச்ச வடிவமும் ‘செய்து’ என்ற எச்ச வடிவமும் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன. சில வினைகள் இரண்டு எச்ச வடிவங்களையுமே ஏற்காமல் போகலாம். அப்போது வேறு எச்ச வடிவங்கள் தரப்பட்டிருக்கின்றன.

(எ-டு) மாட்டு2 வி. (மாட்டேன், மாட்டாய், மாட்டான், மாட்டாது, மாட்டாமல் போன்ற வடிவங்களில் மட்டும்)
பத்து1 வி. (பத்த, பத்தும், பத்தாது, பத்தாமல், பத்தாத ஆகிய வடிவங்களில் மட்டும்)
போது1 வி. (போத, போதும், போதாது, போதிய, போதாத, போதாமல் முதலிய வடிவங்களில்)
சில வினைகள் இறந்தகாலம் போன்று ஒரு கால இடைநிலை மட்டுமே ஏற்கலாம் (எ-டு) பய1, மோ. இந்தத் தகவலும் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது. ஒன்றிரண்டு வினைகள் ஒன்றுக்கு மேற்பட்ட கால இடைநிலையை ஏற்கலாம் (எ-டு) விடு1 (விட, விட்டு), விடு3 (விடுக்க, விடுத்து). சில வினைகள், எதிர்மறைப் பொருள் போன்ற சில குறிப்பிட்ட பொருளைத் தரும் வாக்கியங்களில் மட்டும் வரலாம். இந்தத் தகவல் சொல்லின் பொருளை விளக்கும் பகுதியில் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டிருக்கிறது (எ-டு) இட்டு நிரப்பு, ஊர்வாயை மூடு, பிடிகொடு, வாயில் நுழை.

மரபிலக்கணத்தில் சொல்லப்படும் தன்வினை, பிறவினை என்ற வினைப் பாகுபாடு இந்த அகராதியில் தரப்படவில்லை. இந்தப் பாகுபாடு அதன் வடிவத்தையோ [(எ-டு) அடங்கு, அடக்கு, மிரள், மிரட்டு] வினை எடுக்கும் கால இடைநிலையையோ [(எ-டு) மறைந்து, மறைத்து] சார்ந்தது. ஒரு வினையின் வகையை அதன் வடிவத்தையோ பொருளையோ வைத்துத் தெரிந்துகொள்ளலாம். ஆங்கில அகராதிகளில் செயப்படுபொருள் குன்றிய வினை, குன்றா வினை என்று பாகுபடுத்தித் தந்திருப்பதை இந்த அகராதி பின்பற்றவில்லை.

ஏனென்றால், தமிழில் செயப்படுபொருள் குன்றாவினை அமைந்துள்ள ஒரு வாக்கியத்தைச் செயப்படுபொருள் இல்லாமல் எழுதினால் அது பிழை வாக்கியம் ஆகாது (நான் அவனிடம் சொல்கிறேன்./ நான் பார்க்கிறேன்.). ஒரே வினை, செயப்படுபொருள் குன்றியவினை, செயப்படுபொருள் குன்றாவினை என்னும் இரண்டு நிலைகளிலும் வரும் (இவருடைய நூலை இங்கே விற்கிறார்கள்; இவருடைய நூல் நன்றாக விற்கிறது./ என் சட்டையைப் பிடித்தான்; என் சட்டை பிடிக்கிறது.). மேலும், குன்றாவினையின் பொருள் விளக்கம் ஒரு வினை செயப்படுபொருளை ஏற்பது என்பதைக் காட்டும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. (எ-டு) பார்1 வி. (பார்க்க, பார்த்து) அ. (கண்களால்...) 1: (உருவம் உடையவற்றை) கண்கள்மூலம் அறிதல் அல்லது உணர்தல்; காணுதல்;...

வினைகளின் பதிவு அவற்றின் அடிப்படை வடிவத்தில், அதாவது, ஏவல் வடிவத்தில், தரப்பட்டிருக்கும். சில வினைகள் அடிப்படை வடிவத்தில் தனித்து வருவதில்லை; ஒரு துணை வினையோடு சேர்ந்தே வரும். அவை துணை வினையோடு சேர்த்தே தரப்பட்டிருக்கின்றன (எ-டு) காத்திரு. சில வினைகள், துணை வினையோடு சேர்ந்து புதுச் சொல்போலத் தனிப்பொருளில் வரும். அவையும் துணை வினையோடு சேர்த்தே தரப்பட்டிருக்கின்றன (எ-டு) தட்டிக்கொடு, பார்த்துக்கொள், விட்டுக்கொடு.

வினைகளின் உட்பிரிவுகளில் துணை வினை மட்டுமே இந்த அகராதியில் எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது. துணை வினை என்பது வினை போலவே கால இடைநிலை ஏற்கும்; பால், இட விகுதிகளை ஏற்கும். துணை வினைகள் வினையின் எச்ச வடிவங்களோடு அல்லது பெயர்களோடு சேர்ந்தே வரும். அவை பெயரை வினையாக்குவது, செயல் முற்றுப்பெற்றதைக் காட்டுவது 

போன்ற இலக்கணப் பொருள்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு வினை இலக்கணப் பொருளில் துணை வினையாக வருகிறதா அல்லது முதன்மை வினையாக வருகிறதா என்று எல்லா வாக்கியங்களிலும் ஐயமின்றிச் சொல்ல முடியாது. ‘கண்ணீர்விடு’, ‘விற்றுக்கொடு’, ‘சாப்பிட்டுப்பார்’ என்பனவற்றில் இரண்டாவது வரும் வினை துணை வினை. ‘தண்ணீர் எடு’, ‘வாங்கிக் கொடு’ போன்ற எடுத்துக்காட்டுகளில் இரண்டாவதாக வரும் வினை முதன்மை வினை.

சார்புப் பொருளைக் குறிப்பதன் அடிப்படையிலும் தொடரின் நெகிழ்வுத் தன்மையின் அடிப்படையிலும் துணை வினைகள் இனம்காணப்பட்டுள்ளன. இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொல்ல முடியாது. முதன்மை வினைபோல் துணை வினையிலும் பலபொருள் ஒருசொல்லும் ஒருபொருள் பலசொல்லும் உண்டு. வினைகளின் பதிவைப் போலவே இவற்றின் பதிவும் அமைந்திருக்கும்.

பெயரோடு இணைந்து வரும் சில துணை வினைகள் பெயரிலிருந்து பிரித்துப் பொருள் தர முடியாதபடி ஒரே வினைவடிவமாக இருக்கும். இவை கூட்டு வினைகளாக அகராதியில் இடம்பெறுகின்றன (எ-டு) காயடி.

துணை வினைகளுக்கு இலக்கணப் பொருள் இருப்பதாலும் அவை சேரும் வினைகளின், பெயர்களின் எண்ணிக்கை ஏராளமாக இருப்பதாலும் துணை வினைகள் சேர்ந்த வினைகள் தனிப்பதிவுகளாகத் தரப்படவில்லை. கூட்டுச் சொல்லாகிப் பொருள் வேறுபாடு கொண்டவை மட்டும் தனிப் பதிவுகளாகத் தரப்பட்டுள்ளன (எ-டு) தட்டிக்கொடு. ‘படு’, ‘படுத்து’ என்பன பெயரை வினையாக்கும் ஒரு துணை வினையின் இணை. இவை இரண்டுமே எல்லா பெயர்ச்சொற்களோடும் சேர்ந்து வராது.

சில பெயர்களோடு ‘படு’ சேரும், ‘படுத்து’ சேராது (எ-டு) ஆசைப்படு. சில பெயர்களோடு ‘படுத்து’ சேரும், ‘படு’ சேராது (எ-டு) அகலப்படுத்து. சில பெயர்ச்சொற்கள் மட்டுமே இரண்டையும் ஏற்கும். அவை பதிவுகளாகத் தரப்பட்டிருக்கும் (எ-டு) கஷ்டப்படு, கஷ்டப்படுத்து; சந்தோஷப்படு, சந்தோஷப்படுத்து. இவற்றைத் தவிர ‘படு’, ‘படுத்து’ என்ற துணைகளோடு சேர்ந்த கூட்டுவினைகள் தனிப் பொருள் பெற்றிருந்தால் அவையும் தனிப் பதிவுகளாக இருக்கும் (எ-டு) ஆட்படு, கட்டுப்படு, கட்டுப்படுத்து, வெளிப்படு, வெளிப்படுத்து.

பெயரடை

பெயரடை என்பது பெயரெச்சம் என்ற மரபிலக்கணச் சொல்லிலிருந்து வேறுபட்டது. கால இடைநிலை இல்லாமலோ கால இடைநிலை காலத்தைக் காட்டாமலோ பெயரடை வரும். பல பெயரடைகள் அ, -ஆன போன்ற உருபுகள் ஏற்று நின்றும் [(எ--டு) ஆழ்ந்த, இத்தகைய, இப்படியான], உருபு எதுவும் இல்லாமலும் வரலாம்: -அம் என்ற ஈற்றில் முடியும் பெயர்களைப் போல -இயம் என்ற உருபில் முடியும் பெயர்கள் மகரம் கெட்டு [(எ-டு) கரிம, தேசிய] பெயரடையாக வரும்.

அன் என்ற விகுதியில் முடியும் பெயர்களும் னகரம் கெட்டு [(எ-டு) அசுர, ராட்சச] பெயரடையாக வரும். -ஆ என்னும் ஈற்றில் முடியும் பெயர்களின் உயிரெழுத்து அ- என்று குறுகி [(எ-டு) அமெரிக்க] பெயரடை ஆகும். இவைபோலப் பெயர் வடிவங்களிலிருந்து எளிதில் அனுமானிக்கக்கூடிய மாற்றங்களோடு அமையும் பெயரடைகள் இந்த அகராதியில் தனிப் பதிவு பெறவில்லை.

பெயரடைகள் பொதுவாகத் தனித்து நிற்கும். சில [(எ-டு) மின், வேளாண்] சார்ந்து நிற்பதும் உண்டு. வினையின் அடிச்சொற்கள் பெயரடையாக வருவது தற்காலத் தமிழில் கூட்டுச்சொற்களிலும் [(எ-டு) வளர்பிறை, மூடுபனி] கலைச்சொற்களிலும் [(எ-டு) கரைபொருள், ஊடுகதிர், வினைவிளைபொருள், வினைபடுபொருள்] காணப்படுகிறது. இவை தனித்து நின்று பெயரடையாகும் வழக்கு தற்காலத் தமிழில் இல்லை. அதனால் வினையடிகள் எதுவும் பெயரடையாக இந்த அகராதியில் பதிவு பெறவில்லை.

பெயர்கள் பெயரடையாக வரும் வழக்கு தற்காலத் தமிழிலும் தொடர்கிறது. இது பொது விதியாதலால் இவ்வாறு வரும் பெயர்களுக்குத் தனியே பெயரடை என்ற இலக்கணக் குறியீடு தரப்படவில்லை. காலம் காட்டாத குறிப்புப் பெயரெச்சங்கள் தற்காலத்தில் பெயர்களோடு சேர்ந்து அவற்றைப் பெயரடைகளாக ஆக்குகின்றன (எ-டு) அன்புள்ள.

இந்தக் கூட்டுச்சொற்கள் பெயரடை என்ற குறியீடு பெறுகின்றன. குறிப்புப் பெயரெச்சங்கள் வேற்றுமை உருபு ஏற்ற பெயரோடு ‘அன்புக்குரிய’ என்பதுபோல நிற்கும்போது, அந்த குறிப்புப் பெயரெச்சங்கள் மட்டும் பெயரடை என்ற இலக்கணக் குறியீடு பெறுகின்றன. இங்கு ‘உரிய’ என்பது பெயரடை. ஆகவே, ‘அன்புக்குரிய’ என்பது பதிவாக இருக்காது.

கால இடைநிலை ஏற்ற -ஆன, -ஆகும் என்ற வடிவங்கள், ஆகு என்ற வினைச்சொல் பதிவிலிருந்து பெறப்படும். தெரிநிலைப் பெயரெச்சமான -ஆன என்ற வடிவம் ‘எனக்கான செலவு’ என்று வரும்போது பெயரெச்சமாகவே கொள்ளப்படும். பண்புப் பெயர்களோடு சேர்ந்து பெயரடையாக்கும் -ஆன என்ற உருபு, தற்காலத்தில் இரண்டு பெயர்களை அல்லது உருபு ஏற்ற பெயர்களை இணைத்து ஒரே பெயர்த்தொடராகப் பயன்படுத்தும் வழக்கு பெருகி வருகிறது (எ-டு) கல்லும் முள்ளுமான பாதை, நல்லதும் கெட்டதுமான கதைகள், உன்னோடும் உன் மனைவியோடுமான சண்டையில்.

பெயரடையில் சுட்டுப் பெயரடை, எண்ணுப் பெயரடை, பண்புப் பெயரடை போன்ற உட்பிரிவுகள் தரப்படவில்லை.

வினையடை

சில வினையடைகளுக்கு (பெயரடைகளுக்கும்கூட) அடிப்படையாக இருக்கும் இரட்டித்து வரும் பெயர் தனித்து நிற்பதில்லை (எ-டு) முத்துமுத்தாக, முத்து முத்தான.

சில வினையடைகள் இடத்தைக் குறிக்கும் பெயர்களோடு -ஏ சேர்ந்து ‘மேலே, கிழக்கே’ என்று வரும். சில வினையடைகள் நடுவில், சுற்றிலும் என்று இட வேற்றுமை உருபோடு சேர்ந்து வரும். எந்த உருபும் இல்லாமலும் சில வினையடைகள் வரும் (எ-டு) கொஞ்சம்2, பெரும்பாலும், சீக்கிரம்/-ஆக, நேற்று2. சில வினையடைகள் கால இடைநிலை ஏற்ற எச்ச வடிவில் இருக்கும் (எ-டு) பார்த்து1, மூக்குமுட்ட.

ஒரு வாக்கியத்தில் ‘சற்று’ , ‘படு’ , ‘மிகவும்’ போன்ற சொற்கள், வினையடை அல்லது பெயரடைக்கு முன்பு வந்து, வினையடை அல்லது பெயரடை குறிக்கும் தன்மையை மிகுவிக்கின்றன. தனித்த பொருள் எதுவும் இல்லாமல், மிகுவிக்க மட்டுமே ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தப்படுவதால், இந்த வகைச் சொற்கள் அகராதியில் இடைச்சொற்களாகத் தரப்பட்டுள்ளன.

வினையடை வினையோடு சேர்ந்து ஒரு சொல்லாக வழங்குவது உண்டு. அவை கூட்டுவினையாகக் கொள்ளப்பட்டு பிரிக்கப்படாத பதிவுகளாக இந்த அகராதியில் தரப்பட்டிருக்கின்றன (எ-டு) மேற்கொள், உட்செலுத்து, உட்கொள், கீழ்ப்படு.

ஒரே சொல் எந்த வடிவ வேறுபாடும் இல்லாமல் பெயரடையாகவும் வினையடையாகவும் வரலாம். அதனுடைய செயல்பாட்டை வைத்தே பெயரடை என்றோ வினையடை என்றோ கணிக்கலாம் (எ-டு) நிறைய2(பேர்), நிறைய1 (ஊற்று). இந்த மாதிரிச் சொற்கள் தனித்தனிப் பதிவுகளாகத் தரப்பட்டிருக்கின்றன.

ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட சொல் வகையில் சேர்வது தமிழில் பரவலாகக் காணப்படும் ஒரு கூறு. ‘மேல்’ என்ற சொல் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்தச் சொல் இந்த அகராதியில் பெயராகவும், பெயரடையாகவும் (பெரும்பாலும் பெயரடையாக வரும் பெயர்), (-ஏ சேர்ந்து) வினையடையாகவும் இடைச்சொல்லாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதே மாதிரியான பல இலக்கணச் செயல்பாடுகளைக் கொண்ட சொற்கள் (multifunctional word) இந்த அகராதியில் தரப்பட்டுள்ளன.

ஒரு வடிவம் தனியாக நின்று வினையடையாகவும் ஒரு வினையெச்சம் வேற்றுமை உருபு ஏற்ற பெயரோடு சேர்ந்து இடைச்சொல்லாகவும் வருவதுண்டு. வினையடையையும் இடைச்சொல்லையும் இனங்காண தொடரமைப்பு மட்டுமல்ல, பொருளும் உதவும். வினையடியிலிருந்து பிறக்கும் இடைச்சொல் அதன் வினைப் பொருளை இழந்து நிற்கும். ‘என்னை நோக்கி இப்படி ஒரு குற்றச்சாட்டு வரும்’ என்ற வாக்கியத்தில் உள்ள ‘நோக்கி’ என்னும் வினையெச்சத்தில் வினையின் பொருள் இல்லை; அதனால் அது இடைச்சொல். ‘என்னை மீறி’ என்பதில் உள்ள வினையெச்சத்தில் ‘மீறு’ என்ற வினையின் பொருள் இருக்கிறது; அதனால் அது வினையடை.

இடைச்சொல்

பெயர், வினை, பெயரடை, வினையடை என்ற நான்கு சொல் வகைகளுக்குப் பிறகு முழுச் சொல்லாகக் கருத முடியாத, மற்றொரு சொல்லோடு சார்ந்தே பொருள்படுகிற சொற்கள் உண்டு. அவை இந்த அகராதியில் இடைச்சொல் என்று பெயரிடப்பட்டிருக்கின்றன. இங்கே இடைச்சொல் என்பதன் பொருள் மரபிலக்கணத்தில் உள்ள இடைச்சொல் என்பதன் பொருளிலிருந்து வேறுபட்டது. எனவே, இந்த அகராதியில் இடைச்சொல்லுக்குப் புதிய வரையறையும் விளக்கமும் தரப்பட்டிருக்கின்றன.

இடைச்சொல் என்பது ஒரு தொடரின் அல்லது சொல்லின் அமைப்பில் தன்னளவில் பெயர்ச்சொல், வினைச்சொல், பெயரடை, வினையடை ஆகிய அடிப்படைச் சொல் வகைகளாக இல்லாமல் வேறு சொல்லையோ தொடரையோ சார்ந்து, இலக்கண அடிப்படையில் மட்டுமே பொருள் தரும் சொல். இலக்கணச் செயல்பாட்டின் அடிப்படையில், இடைச்சொற்களை ஐந்து பிரிவுகளாகப் பாகுபடுத்தலாம். அவையாவன:

தொடராக்கும் இடைச்சொல்
வாக்கியத்தின் ஒரு பகுதி இலக்கண அமைதியோடு பொருள்படுவதற் காக அந்தப் பகுதியுடன் இணைக்கப்படும் சொல்.
மேல்5 (பேனா மேசையின் மேல் இருக்கிறது.)
அளவில் (அவன் பத்து மணி அளவில் வந்தான்.)
சொல்லாக்க இடைச்சொல்
ஒரு பெயர்ச்சொல்லோடு சேர்ந்து மற்றொரு சொல்லை உருவாக்கும் சொல்.
-அகம்2 (தையலகம்)
-ஆக1 (அழகாக)
-ஆர்ந்த (அன்பார்ந்த)
கூடுதல் பொருள் தரும் இடைச்சொல்
வலியுறுத்துதல், ஒப்பிடுதல், பிறர்மூலம் கிடைத்த தகவல் போன்ற கூடுதல் பொருளை உணர்த்த ஒரு சொல்லோடு சேர்ந்து வரும் சொல்.
-தான்3 (நான்தான் அவனுக்குப் பணம் கொடுத்தேன்.)
போல (அவன் புலிபோலப் பாய்ந்தான்.)
-ஆம்2 (அவன் நேற்று வீட்டுக்கு வந்தானாம்.)
இயைபு இடைச்சொல்
எதிர்மறை, காரணம், நிபந்தனை, சுட்டு போன்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்த அல்லது இணைக்கப் பயன்படுத்தும் சொல்.
ஆனால் (அவர் நேற்று வந்தார். ஆனால் என்னைப் பார்க்கவில்லை.)
ஆதலால் (அவர் வரவில்லை. ஆதலால் கூட்டம் நடக்கவில்லை.)
ஆனால் (நீ வந்தாயானால் பணம் தருவேன்.)
அதற்குள்(ளே) (இப்போதுதான் வந்தாய்; அதற்குள் புறப்படுகிறாயே.)
உணர்ச்சி இடைச்சொல்
வியப்பு போன்ற உணர்ச்சிகளைக் குறிக்கவோ ஒருவரை விளிக்கவோ ஒருவரை அல்லது ஒன்றைச் சுட்டவோ வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தப்படும் சொல்.
ஆகா (ஆகா! என்ன அற்புதமான பாட்டு.)
இதோ (இதோ இருக்கிறது பணம்.)
இந்தா (‘இந்தா இங்கே வா’ என்று பையனைக் கூப்பிட்டார்.)
இடைச்சொல்லின் இந்த உட்பிரிவுகள் அவற்றின் புதுமை கருதி இந்த அகராதியில் தனித்துக் காட்டப்படவில்லை.

மற்ற சொற்களுக்கு இருப்பது போலவே, இடைச்சொற்களுக்கும் பல பொருள் இருக்கலாம்; ஒரே பொருளை உணர்த்தும் பல இடைச்சொற்கள் இருக்கலாம். ஒரு இடைச்சொல்லுக்குப் பல பொருள் இருந்தாலும், அவை ஒரே தலைச்சொல்லின் கீழ்த் தரப்பட்டிருக்கும். ஏனென்றால், இடைச்சொல் என்பது இலக்கணப் பொருளை அல்லது ஒரு வாக்கியத்தில் இலக்கணச் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், எப்போதும் தனித்து வரும் இடைச்சொல்லும், வேறொரு சொல்லுடன் இணைந்தே வரும் இடைச்சொல்லும் தனித்தனிப் பதிவுகளாகத் தரப்பட்டிருக்கும்.

(எ-டு) தனித்து வருபவை சேர்ந்து வருபவை
ஆ2 -ஆ1
ஆம்3 -ஆம்2
-ஓ2 --ஓ1
தலைச்சொற்கள் பெரும்பாலும் தனித்து நிற்பவை. இடைச்சொற்களைப் பொறுத்தவரை தனித்து நிற்காத வடிவங்களும் பதிவுகளாகத் தரப்பட்டிருக்கின்றன.

பொருள் விளக்கம்

தற்காலத் தமிழ்ச் சொற்களுக்குத் தமிழில் பொருள் விளக்கம் செய்திருக்கும் முதல் அகராதி இதுவே. இது அரும்பதங்களுக்கு மட்டும் பொருள் தரும் அகராதி அல்ல. தற்காலத் தமிழில் உள்ள எல்லாச் சொற்களுக்கும் பொருள் விளக்கத்தை இந்த அகராதியில் காணலாம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு, தெரிந்த சொல்லுக்குப் பொருள் விளக்கம் தரத் தேவையில்லையே என்ற எண்ணம் எழலாம்.

ஆனால், விரைவான மாற்றங்களுக்கு உள்ளாகிவருகிற தமிழில் இருக்கும் எல்லாச் சொற்களும் எல்லோருக்கும் தெரிந்திருக்காது, ஒரு சொல்லின் எல்லாப் பொருளுமே எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்றும் சொல்ல முடியாது. பொருள் அறிந்துகொள்ள மட்டுமின்றித் தெரிந்த பொருளை எழுத்தில் பயன்படுத்திக்கொள்ளவும் இந்த அகராதி உதவும். தற்காலத் தமிழில் சொற்களின் பொருள் அமைந்துள்ள வகையையும் அவற்றின் பொருள் பரப்பையும் விளங்கிக்கொள்ளவும் இந்த அகராதி உதவும்.

ஒரு சொல்லின் பொருள் பரந்த எல்லை உடையது. சில சொற்களுக்கு அவற்றின் அடிப்படைப் பொருளுக்கு மேலாக உருவகப் பொருள்களும் வழக்கில் உண்டு. உருவகப் பொருளில் வரும் எடுத்துக்காட்டு வாக்கியங்கள் (உரு வ.) என்ற அடைப்புக்குறிக்குப் பின் தரப்பட்டிருக்கின்றன. பல சொற்களுக்குப் பண்பாட்டுப் பொருளும், உணர்ச்சிப் பொருளும் உண்டு. அகராதிப் பொருள் ஒரு சொல்லின் அடிப்படைப் பொருளே. அது பொருளின் உண்மை இயல்பை முன்னிலைப்படுத்தும். இந்த அகராதியிலும் இம்முறையே பின்பற்றப்பட் டிருக்கிறது.

ஒரு சொல்லின் அல்லது தொடரின் அடிப்படைப் பொருளிலிருந்து ஊகித்தறியும் பொருளும் (inferential meaning) உண்டு. முன்னதைப் பின்னதிலிருந்து பிரித்துக்காட்டுவது எளிது அல்ல. ‘கைகட்டி நில்’ என்ற தொடர், அதன் வெளிப்படைப் பொருளோடு ‘மரியாதையைக் காட்டி’ என்ற பொருளையும் தருகிறது. இந்தப் பொருள் ஊகப் பொருளா, அடிப்படைப் பொருளின் அங்கமா என்ற கேள்விக்கு ஊகப் பொருள் என்பது விடை. 

ஏனென்றால், இத்தொடர் சுட்டும் செயல் இல்லாமல் ‘மரியாதையைக் காட்டி’ என்ற பொருள் வராது. ‘வெற்றிலைபாக்கு வை’ என்ற தொடர் அதன் வெளிப்படைப் பொருளோடு ‘அழை’ என்ற பொருளையும் தருகிறது. இது ஊகப் பொருள்அல்ல. ஏனென்றால், இத்தொடர் சுட்டும் செயல் இல்லாமலேயே ‘அழை’ என்ற பொருள் வரும் (எ-டு) உனக்குத் தனியாக வெற்றிலைபாக்கு வைக்க வேண்டுமா?. ஊகப் பொருளை அடிப்படைப் பொருளின் பகுதியாகத் தருவது இந்த அகராதியில் முடிந்த அளவு தவிர்க்கப்பட்டிருக்கிறது.

ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் இருக்கும்போது வழக்கு மிகுதியை அடிப்படையாக வைத்துப் பொருள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. வழக்கு மிகுதி இந்த அகராதிக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தரவுமூலங்களின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த அடிப்படையில் ஒரு துறைக்கே உரிய பொருள், பொதுப் பொருளுக்குப் பின்னால் வரும். இப்படி வழக்கின் அடிப்படையில் வரிசையை முடிவு செய்ய இயலாமல் இருக்கும்போது, ஒரு சொல்லை நினைத்தவுடன் மனத்தில் தோன்றும் பொருள் முதலாவதாகக் கொடுக்கப்பட்டிருக்கும்.

சில சொற்களில், இந்த அடிப்படையிலிருந்து மாறுபட்டு, மற்ற பொருள்களுக்குக் காரணமாக இருக்கும் பொருள் முதலாவதாகத் தரப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, ‘ஞாயிறு’ என்ற சொல்லுக்கு ‘சூரியன்’ என்ற பொருளைவிட ‘வாரத்தின் முதல் நாள்’ என்ற பொருளே வழக்கு மிகுதியாக இருந்தாலும் ‘சூரியன்’ என்ற பொருளே முதலாவதாகத் தரப்பட்டிருக்கிறது. ஏனென்றால் சூரியனை அடிப்படையாகக் கொண்டே வாரத்தின் முதல் நாள் அமைகிறது.

ஒரு சொல்லுக்கு அதிக எண்ணிக்கையில் பொருள்கள் இருக்கும்போது அவற்றைச் சில பொதுக் கூறுகளின் அடிப்படையில் வகைப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, ‘போடு’ என்ற வினைச்சொல்லுக்கு உள்ள 54 பொருள்கள் 7 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு வகைப்படுத்துவது பொருள்களுக்கு இடையே உள்ள தொடர்பைக் காட்டுவதோடு, அகராதியைப் பயன்படுத்துவோரின் பொருள் தேடும் பணியை எளிதாக்குகிறது. ஒரு சொல்லின் பொருளைத் தேடுபவர் பொருள் பிரிவை முதலில் படித்துப்பார்த்து, தான் தேடும் பொருள் இந்தப் பிரிவுகளில் இருக்கலாம் என ஊகம் செய்து அந்தப் பிரிவின் கீழ் அதைக் கண்டுகொள்வது எளிதாகிறது.

ஒரு சொல்லின் பொருள் விளக்கம் என்பது பொருளின் முக்கியக் கூறுகளைக் கொண்டிருக்கும். ஆனால் அந்த விளக்கத்தை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடுதல் தகவல் தேவைப்படும். இந்தக் கூடுதல் தகவல்கள் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கொடுக்கப்பட்ட பொருள் சில இலக்கண வடிவங்களில் மட்டுமே வந்தால் அந்தச் செய்தியும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும்.

(எ-டு) கருத்து பெ. 5: (பெரும்பாலும் கருத்தில் என்னும் வடிவத்தில் மட்டும்) கவனத்தில் (கொள்ளுதல்); (bear in) mind.
சொல்லின் பொருள் அந்தச் சொல்லின் இலக்கண வகையைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதாவது, பெயர்ச்சொல்லின் பொருள் பெயராகவும் வினையடையின் பொருள் வினைக்கு அடையாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.

(எ-டு) அக்கம்பக்கம்1 பெ. (குறிப்பிட்ட இடத்தை) சுற்றி உள்ள பகுதி;
அக்கம்பக்கம்2 வி.அ. (‘பார்’, ‘திரும்பு’ ஆகிய வினைகளோடு) சுற்றுமுற்றும்;

இன்று1 பெ. இந்த நாள்;
இன்று2 வி.அ. இந்த நாளில்;

தினசரி1 பெ. நாளிதழ்; நாளேடு;
தினசரி2 வி.அ. ஒவ்வொரு நாளும்; தினந்தோறும்;
தினசரி3 பெ.அ. அன்றாட;

பரஸ்பரம்1 பெ. ... ஓர் உணர்வு, நடவடிக்கை, விளைவு போன்றவை சம்பந்தப்பட்ட இருவருக்கு அல்லது இரண்டுக்குப் பொதுவானதாக அமைவது;

பரஸ்பரம்2 வி.அ. ஒன்றின் விளைவு சம்பந்தப்பட்ட இருவரிடம் அல்லது அனைவரிடமும் சேரும்படி; (நாடு, நிறுவனம் முதலியவை) தங்களுக்காக;

பிறகு1 வி.அ. 1: தொடர்ந்து அடுத்ததாக; பின்பு;
பிறகு2 இ.சொ. 1: ‘குறிப்பிட்ட செயல் நிகழ்ந்ததும் அல்லது குறிப்பிட்ட நேரம் கழிந்ததும்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; இதனால், சொல் வரும் இடத்தில் இலக்கணம் பிறழாமல் பொருளை வாக்கியத்தில் பொருத்திப் பார்க்கலாம். ஆனால், எல்லாச் சொற்களுக்கும் இது பொருந்தாது. குறிப்பாக, இடைச்சொற்களுக்கு இது கடினம்.

மேலும், சில சொற்களுக்கு இந்த விதியின்படி பொருள் தரும்போது பொருளை விளக்கும் வாக்கிய அமைப்பு இயல்பாக இல்லாமல் போகலாம். இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வினைச்சொற்களுக்குப் பொருள் ‘தல்’ விகுதி சேர்த்துத் தரப்பட்டிருக்கிறது. பொருளை விவரிக்க தேவை இருக்கும்போது இந்த விதிமுறை பொருந்திவராது. ஆங்கிலப் பொருள் தரும்போது மொழிபெயர்ப்பு இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த விதிமுறை அதிக அளவில் தளர்த்தப்பட் டிருக்கிறது.

இடுகுறிப் பொருள் தன்மை கருதியே கூட்டுச்சொற்கள் தரப்பட்டிருக்கின்றன. அவற்றுக்குக் காரணப் பொருளும் இருக்கலாம். இந்தப் பொருள் அகராதியில் தரப்பட்டிருக்காது. ‘மாலைபோடு’ என்ற கூட்டுவினைக்கு ‘மாலை அணிவித்தல்’ என்ற பொருள் மாலை, போடு என்ற சொற்களின் பொருள்களிலிருந்து புரிந்துகொள்ளலாம் என்பதால் தரப்படவில்லை. 

ஆனால் ‘விரதம் மேற்கொள்ளுதல்’ என்ற பொருள் தரப்பட்டுள்ளது. ‘காதில் ஏறு’, ‘மண்டையில் ஏறு’ என்ற தொடர்களில் ‘ஏறு’ என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ள பொருளுக்கு அதிகப்படியாக மரபுப் பொருளும் உண்டு. மரபுப் பொருள் மட்டுமே இந்த அகராதியில் தரப்பட்டிருக்கும். அந்த வினைச்சொல்லின் எல்லாப் பொருளையும் கொண்டிருக்காமல் வினையிலிருந்து வரும் ஒரு பெயர்ச்சொல் ஒன்றிரண்டு பொருளை மட்டுமே கொண்டிருந்தால் அந்த ஒன்றிரண்டு பொருள் மட்டும் பெயர்ச்சொல்லுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்.

எடுத்துக்காட்டாக, ‘அதட்டல்’ என்ற பெயர்ச்சொல் ‘அதட்டு’ என்னும் வினைக்கு உள்ள இரண்டு பொருளிலும் வராமல் அதன் ஒரு பொருளில் மட்டும் வருவதால் அந்தப் பொருள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. வினைக்கு இருக்கிற எல்லாப் பொருளும் அந்த வினைப்பெயருக்கும் இருக்குமானால் அவற்றுள் பெயருக்கு எந்தப் பொருள் மிகுதியாக வழங்குகிறதோ அந்தப் பொருள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, ‘உறுமு’ என்னும் வினையின் மூன்று பொருளும் ‘உறுமல்’ என்னும் வினைப்பெயருக்கு உண்டு என்றாலும் மிகுதியாக வழங்கும் ஒரு பொருள் மட்டுமே தரப்பட்டிருக்கிறது. வினைக்குரிய பொருள் எதுவும் இல்லாமல் பெயருக்கு வேறு பொருள் இருந்தால் அந்தப் பொருள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும்.

-அன் விகுதியில் முடியும் பெயர்கள் ஆண்பாலைக் குறிக்கும். சில பெயர்களில் பெண்பாலைக் குறிக்கத் தனி விகுதிகள் உண்டு (எ-டு) தலைவன், தலைவி, வாசகன், வாசகி. சில பெயர்களில் பெண்பாலைக் குறிக்கும் வடிவங்கள் இல்லை (எ-டு) அந்நியன், நாத்திகன். இப்பெயர்கள் -அர் விகுதியில் முடியும்போது வழக்கில் ஆண்பாலையே குறிக்கும்; ஆனால் அவை அடையாக வரும்போது இருபாலாரையும் குறிக்கும் (எ-டு) தச்சர் சங்கத் தலைவி.

ஆனால் தற்காலத் தமிழின் -அர் விகுதி ஏற்ற சில பெயர்கள் பெண்பாலைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. ‘சரோஜா என் நீண்ட நாள் நண்பர்’ என்பதும் ‘திருப்பதி திருக்கோயில் (தேவஸ்தானம்) ஐம்பது பெண் நாவிதர்களை நியமித்திருக்கிறது’ என்பதும் தற்காலத் தமிழின் போக்கைக் காட்டுகின்றன. இந்தப் போக்கையும் இந்தப் பதிப்புச் சுட்டிக்காட்டுகிறது. ஆண்பாலையும் பெண்பாலையும் குறிக்கத் தனி விகுதிகளை உடைய பெயர்கள் இருக்கும்போது ஆணை முதன்மைப்படுத்திப் பொருள் தருவது தவிர்க்கப்படுகிறது.

தொடர்புள்ள பல பொருள் உடையதும் மிகுதியாகப் பயன்படுத்துவதுமான சொற்களுக்கு அதிகப்படியான பொருள்கள் சுட்டப்பட்டிருக்கின்றன (காண்க: போ1, பார்1).

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்

எடுத்துக்காட்டு வாக்கியங்கள் சொல்லைப் பயன்படுத்தும் மொழிச்சூழலை அறிந்துகொள்ளவும் சொல்லின் பொருள் வீச்சை உணர்ந்துகொள்ளவும் உதவும். இந்த எடுத்துக்காட்டு வாக்கியங்கள் தரவுமூலங்களில் உள்ளபடியே எடுக்கப்பட்ட மேற்கோள்கள் அல்ல. விரிவாக்கப்பட்ட இந்தப் புதிய பதிப்பில் கூடுதலாக எடுத்துக்காட்டு வாக்கியங்கள் தரப்பட்டிருக்கின்றன.

இதற்கு முதல் காரணம், குறிப்பிட்ட பொருளின் வீச்சைத் தெரிந்துகொள்ளக் கூடுதல் வாக்கியங்கள் உதவுகின்றன. இரண்டாவது, சொல்வங்கியின் அளவு அதிகரித்திருப்பதால் அதிக எண்ணிக்கையில் எடுத்துக்காட்டு வாக்கியங்களைச் சொல்வங்கியிலிருந்து பெற முடிந்திருக்கிறது. ஆனால் பதிவின் தேவைக்கு ஏற்ப வாக்கியங்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. சில எடுத்துக்காட்டுகளும் தொடர்களாகவே தரப்பட்டிருக்கின்றன.

ஆங்கிலப் பொருள்

இது தமிழ்-தமிழ் அகராதி என்றாலும் தமிழை இரண்டாவது மொழியாகப் பயில்வோருக்கும் உதவும்பொருட்டு, ஆங்கிலத்திலும் பொருள் தரப்பட்டிருக்கிறது. ஆங்கிலப் பொருள் சில முறைகளைப் பின்பற்றித் தரப்பட்டுள்ளது. தமிழ்ச் சொல்லுக்குத் தரப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் இருக்குமானால் தமிழ்ச் சொல்லின் பொருளைக் குறிக்கும் தகவல் ஆங்கிலப் பொருளில் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டிருக்கும். எடுத்துக் காட்டாக, ‘நகம்’ என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் (finger or toe) nail என்ற பொருள் தரப்பட்டிருக்கிறது; அடைப்புக்குறிக்குள் உள்ள செய்தி, nail என்பது ‘ஆணி’ என்பதைக் குறிக்காமல் விரல் நகத்தைக் குறிக்கும் என்று அறிந்து கொள்ள உதவும்.

தமிழ்ப் பண்பாட்டை விளக்கும் சொற்களுக்கு ஆங்கிலத்தில் அதிகப்படியான தகவல்கள் இருக்கும். இந்த அதிகப்படியான பொருள் கூறுகள் பெரும்பாலும் அடைப்புக்குறிக்குள் இருக்கும். சில பதிவுகளில் ஆங்கிலச் சொற்கள் இந்தியாவில் மட்டும் வழங்கப்படுபவையாக இருந்தால், முதலில் ஆங்கிலப் பொருள் விரித்துக் கூறப்பட்டு, அதைத் தொடர்ந்து இந்திய ஆங்கிலச் சொல் தரப்பட்டிருக்கும். (எ-டு) ஆட்சியர் பெ. ... ; highest official in the district for revenue collection, law and order, development programmes, etc.; (in South India) District Collector.

இடைச்சொல்லுக்கு இணையான ஆங்கில இலக்கணச் சொல் இல்லை. பொருத்தமான சொல் இல்லை என்றாலும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியைப் பின்பற்றி, இடைச்சொல் ஆங்கிலத்தில் particle என்று குறிக்கப்பட்டுள்ளது.

அகராதியின் நோக்கமும் தாக்கமும்

பொருள் விளக்கத்திலும் எடுத்துக்காட்டு வாக்கியங்களிலும் பயன்படுத்திய எல்லாச் சொற்களும் அகராதியில் தலைச்சொல்லாக இருக்கும். இந்த அகராதியில் பொருள் விளக்கத்திலும் எடுத்துக்காட்டுகளிலும் பயன்படுத்தியுள்ள எந்தச் சொல்லுக்கான பொருளுக்கும் வேறு அகராதியை நாட வேண்டியதில்லை.

தற்காலத் தமிழின் சொற்கள் பற்றித் தேவையான செய்திகளை இந்த அகராதி தர முயல்கிறது. இந்தச் செய்திகள் தமிழைத் துல்லியமாகப் பயன்படுத்த உதவும் என்று நம்புகிறோம். இந்த அகராதியின் முதல் பதிப்பு வெளிவந்தபின் அதைப் பயன்படுத்திச் சில அகராதிகள் வழிநூல்களாக வெளிவந்தன. இது தமிழைப் பயன்படுத்துவதில் அகராதியை நாடும் பழக்கம் தமிழரிடையே பரவுவதைக் காட்டுகிறது என்று நம்புகிறோம்.

முதல் பதிப்புக்குப் பின் சில வட்டார அகராதிகள் வெளிவந்துள்ளன. அவை முறையான அகராதிக்கலைக் கொள்கைகளையும் விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என்றாலும் அகராதிகளில் தமிழருக்கு ஏற்பட்டுவரும் ஆர்வத்தைக் காட்டுகிறது என்று நம்புகிறோம். அகராதியின் இந்தப் புதிய பதிப்பு, தமிழ்ச் சொற்களைப் பற்றிய—அதாவது சொற்களின் இலக்கண இயல்புகள், பொருள் அமைப்பு, மொழி வளர்ச்சியின் போக்கு ஆகியவை பற்றிய—ஆய்வுகளை மேற்கொள்ளத் தமிழ் மாணவர்களைத் தூண்டும் என்று நம்புகிறோம்.

இந்தப் பதிப்பைத் தயாரிக்கும்போது சொல்லின் வடிவம், சொல்லின் இலக்கண வகை போன்றவை குறித்த பிரச்சினைகளையும் அவற்றுக்குக் காணப்பட்ட தீர்வுகளையும் இந்த முன்னுரை பேசுகிறது. தற்காலத் தமிழில் உள்ள எல்லாப் பிரச்சினைகளையும் இந்த முன்னுரை சொல்லிவிட்டது என்று கூற முடியாது. இங்கு சுட்டிக்காட்டப்பட்ட சொல், இலக்கணம் பற்றிய பிரச்சினைக்குரிய தகவல்கள் இந்த அகராதியைப் பயன்படுத்துவோர்க்கு மட்டுமல்லாமல் தமிழ்மொழி ஆய்வாளர்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறோம்.
நன்றிகள்.