Tuesday 24 September 2013

இக்கோயிலுக்கு வெட்டுவான் கோயில்.....!


வெட்டுவான் கோயில் இருக்கும் மலை, அரைமலை என்னும் பெயரால் முன்பு அழைக்கப்பட்டுள்ளது. மலைமீது ஒற்றைக் கற்கோயிலாக வெட்டுவான் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.

பாண்டிய மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் இது செதுக்கப்பட்டுள்ளது. அழகிய சிற்பங்களைக் கொண்ட இக்கோயில் முழுமையாக செதுக்கப் படவில்லை.

கோயில் பணி நிறைவடையாமல் விடுபட்ட நிலையில், தற்போது பிள்ளையார் சிலை ஒன்று பிரதிட்டை செய்யப்பட்டு வணங்கப்படுகிறது. ஒரு பாறையின் மேல், உட் பகுதியை வெட்டி, நடுவில் உள்ள பகுதியைக் குடைந்து இக்கோயில் உருவாக்கப்பட்டதால் இக்கோயிலுக்கு வெட்டுவான் கோயில் என்று பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த கோயிலை வெளியில் இருந்து பார்க்கும் போது வெறும் பாறை போல் தான் தெரியும். அதற்குள் இருக்கும் அழகான கோயிலை உள்ளே சென்றுதான் பார்க்க முடியும்.


வெட்டுவான் கோயிலில் இருக்கும் சிற்பங்கள் மிகவும் எழில் வாய்ந்தவையாக உள்ளன. இங்குள்ள பிரம்மா, திருமால், சிவன், தேவகன்னியர், பூத கணங்களின் சிலைகள் அனைத்தும் மிகவும் நுட்பத்தோடு, கலை உணர்வோடு செதுக்கப்பட்டுள்ளன.

இங்கு அமர்ந்திருப்பது வெறும் சிலைகள் என்று தோன்றவில்லை. உண்மையாகவே இறைவன் மனித உருவில் தோன்றி அமர்ந்து கொண்டிருப்பது போன்றே எண்ண தோன்றும்.

ஆங்காங்கே சில இடங்கள் முழுமை பெறாமல் இருக்கின்றன. முழுமை பெறாமல் இருக்கும் சிற்பங்களும், நம்மைப் பார்த்து ஏதோ ஒரு செய்தியை சொல்ல நினைப்பது போலவே இருக்கிறது. சிறிய சிறிய சிலைகள் கூட கலை நயத்தோடு, அழகு சொட்ட சொட்ட அமர்ந்திருக்கின்றன.
நன்றிகள்.