Wednesday 15 February 2012

கல்வியை எப்படிப் பயன்படுத்த வேண்டும்.



கல்வி கற்றவர்கள், தாம் கற்றவற்றை வாழ்வில் பயன்படுத்த வேண்டும்.நம்மிடம் இருக்கும் அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்குகிறது கல்வி. நம்மிடம் இருந்த அறியாமை விலகி அறிவு விரிவானதால் கல்வியில் இன்பம் தோன்றுகிறது.

கல்வியின் வாயிலாகத் தாம் கற்ற அறநெறிகளை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றினால்தான் கற்ற கல்வியால் பயன் உண்டு. கற்றவர்கள் தாங்கள் கற்றவற்றைப் பின்பற்றி வாழவேண்டும். 

ஒருவன் எவ்வளவு சிறந்த முறையில் கல்வியைக் கற்றிருந்தாலும் எந்த இடத்தில் எப்படிப் பேச வேண்டுமோ அந்த இடத்தில் அப்படிப் பேசத் தெரியவில்லை என்றால் அவன் கற்ற கல்வியால் எந்தப் பயனும் இல்லை. 

கல்வி அறிவும் இடம் அறிந்து சிறப்பாகப் பேசும் ஆற்றலும் ஒருவனிடம் இருந்தால் அவனால் எளிதில் வெற்றிபெற முடியும். பொன்னால் செய்யப்பட்ட மலர் அழகாக இருக்கும். அழகுடைய அந்தப் பொன்மலரில் நறுமணமும் இணைந்து இருந்தால் எவ்வளவு உயர்வாகக் கருதப்படுமோ அதைப் போன்றே கல்வி அறிவுடன் சொல்லாற்றலும் பெற்றவன் மதிக்கப்படுவான்.

கற்றவற்றை அவையில், சிறந்த முறையில் எடுத்துக்கூற இயலாதவன் கல்வி அறிவு பெற்றவனாய் இருப்பது பயனற்றது அவையில் கருத்துகளை எடுத்துக் கூற இயலாமல் இருப்பவனின் கல்வியும், அவையில் அச்சம் இல்லாமல் கூறும் ஆரவாரச் சொல்லும், பிறருக்குக் கொடுக்காதவன் என்னும் பழி ஏற்படும் என்று உணராமல் பிறருக்கு வழங்காமல் வைத்து உண்பவனின் செல்வமும், வறுமை அடைந்தவனின் அழகும் இருப்பதை விடவும் இல்லாமல் போவதே நல்லது.

கல்வி கற்று இறவாப் படைப்புகளை வழங்கும். உலகில் பொய் உடல்கள் அழிகின்றன புகழுடல் அழிவதில்லை. ஆனால் வளம் பொருந்திய உலகில் கல்வியால் சாதனை படைத்தவர்களின் கல்விச் சிறப்பு படைப்புகள் அழிவதில்லை. அவை காலம் கடந்தும் நிலைத்த புகழுடன் விளங்குகின்றன.

நன்றிகள்.