Sunday 19 February 2012

நண்பர்களை தேர்வு செய்வது எப்படி?


நட்பு, தோழமை என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது.

நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நட‌ந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.


"நட்பு இல்லாத மனிதன் இவ்வுலகில் இல்லை' என்பதற்கு ஏற்றாற்போல், நட்பு நமது வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறது. எல்லோருக்கும் எல்லா பருவங்களிலும் நண்பர்கள் கிடைக்கின்றனர்.

சிலர் மட்டுமே, இதயத்தில் கடைசி வரை இடம் பிடிக்கின்றனர்."பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல', நாம் நண்பர்களோடு பழகும் போது அவர்களின் குணாதிசயங்கள் நம்முள் வந்துவிடுகிறது.

"அகத்தின் அழகை முகம் காட்டுவது போல' ஒருவரின் குணத்தை நண்பர்களின் நடத்தையில் காண முடியும்.

பெரும்பாலும் நமது வெற்றிக்கும் தோல்விக்கும் காரணமாக அமைவது நண்பர்களே, அத்தகைய நண்பர்கள் நல்லவர்களாக அமைவது மிகவும் முக்கியம்.


நல்ல நண்பர்கள் நம்மை எப்படி உயரவிடுவார்களோ, அதுபோல் தீய நண்பர்கள் நம்மை உயரத்தில் இருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவர்.

உங்களிடம் உள்ள தீய பழக்கங்களிலிருந்து மீட்டுக்கொணர்வது, ஆரோக்கியம், முன்னேற்றம் மற்றும் நாளைய வாழ்வில் நீங்கள் நன்றாக வர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனே உண்மையான நண்பன்.

உங்களுடைய லட்சியங்களை, உங்கள் நண்பன் ஆதாரிக்கிறானா? இல்லை தடைக்கல்லாக இருக்கிறானா? என்பதை பாருங்கள். உண்மையான நண்பன், உங்களது திறமைகளை முழுமையாக பயன்படுத்த ஊக்குவிப்பான்.

உங்களது வெற்றியின் போது வந்து கை குலுக்கிவிட்டு போகும் மனிதனாக இருக்க மாட்டான். பிற நண்பர்களைப்பற்றி உங்களிடம் தரக்குறைவாக பேசுவோரிடம் கவனமாய் இருங்கள்.


ஏனெனில், அவன் உங்களைப் பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசுவதற்கு வாய்ப்புண்டு. உதாரணமாக ஒரு கூடையில் உள்ள நல்ல பழங்களை, எவ்வாறு ஒரு அழுகின பழம் நாசமாக்குகிறதோ அது போல் நல்ல நண்பர்கள் கொண்ட குழுவை, ஒரு தீய நண்பன் கெடுத்துவிடுவான்.

போதை, திருட்டு, பாலியல், சமுக விரோத செயல் போன்ற தவறுகள், பெரும்பாலும் நண்பர்கள் மூலமே கற்றுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு ஒழுக்கத்தை மீறின செயல்களை பின்பற்றினால் தான் நட்பாய் இருப்பேன் என நிபந்தனை விதிப்பவரின் நட்பை விலக்கி விடுங்கள்.

தங்களிற்கு மனக்கவலை, பணநெருக்கடியான நேரங்களில் தமது உதவி தேவைக்கு மட்டும் வரும் நண்பர்கள் இருப்பர்.


நட்பின் முக்கிய தேவையே, உதவுவது தான். ஆனால், தேவை உள்ள நேரத்தில் மட்டும் வரும் நண்பர்கள் சுயநலவாதிகள். எனவே, நண்பர்களை தேர்வு செய்யும் போது.... தேவை கவனம்.

உங்கள் நண்பர்களிடம் பேசும் போது, உங்கள் மனம் நேர் சிந்தனையில் உள்ளதா அல்லது எதிர்சிந்தனையில் மாறுகிறதா என்று பாருங்கள். உங்களது மனதை எதிர்சிந்தனையில் மாற்றும் நட்பு தவறானது என்பதை உணருங்கள்.

நல்ல நண்பர்களோடு பழகும் போது உங்களின் நல்ல குணாதிசியங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும், எனவே அத்தகைய நண்பர்களை எப்போதும் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களோடு நெருங்கி பழகும் நண்பர்கள் நான்கு பேரை நினையுங்கள், அவர்கள் நல்லவர்களா அல்லது மோசமானவர்களா என இப்போது அளவிட்டு, தீய நண்பர்களை ஒதுக்குங்கள்.

தீய நண்பனோடு இருப்பதை விட நண்பன் இல்லாமல் இருப்பதே நல்லது. நீங்கள் நல்ல நட்பை எதிர்பார்ப்பதைப் போலவே, பிறரும் நல்ல நட்பை எதிர்பார்ப்பார்கள்.

எனவே நீங்கள் எப்போதும் நல்ல நண்பனாகவே இருக்க வேண்டும். தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களை நம்மால் தீர்மானிக்க முடியாது.

ஆனால் நட்பை நம்மாள் தீர்மானிக்க முடியும். கூடா நட்பு தூக்குமேடைக்கும், நல்ல நட்பு சிகரத்திற்கும் வழிகாட்டும், இவ்வாறு ஒருவனது வாழ்க்கையின் திசையை, மாற்றும் வல்லமை கொண்ட நட்பை தேர்ந்தெடுக்கும் போது கவனமும், எச்சரிக்கையும் தேவை.



நன்றிகள்.